‘கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம்.
கருணாநிதி அவர்கள் தமது 95 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த ஆண்டை எட்டிப் பிடிக்க இருக்கிறார். வழக்கமான வயது முதுமையின் காரணமாகவும், இன்றுள்ள உலகியல் சுற்றுச் சூழலினாலும், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு சிறந்த சிகிச்சை பெற்று மீண்டு கொண்டிருக்கிறார்.
கருணாநிதி உடல்நலத்தின் மீதான கவலை, ஆர்வம் உலகெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்களின் நல்லெண்ணம் விழைவைப் பெற்று நல்ல வண்ணம் சீராகி வருகிறது. வைதீக மூடநம்பிக்கைகளைத் திணிக்காதீர். கட்சி, ஜாதி, மதம், மாநிலம், கொள்கை இவற்றையெல்லாம் தாண்டி அந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்துடன், கருணாநிதி உடல்நலம் தேறிவர வேண்டுமென்று விழையும் நல்ல உள்ளங்கள் கோடானு கோடி.
திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாற்றுக் கட்சி, மாற்று கருத்துடையவர்களையும் அன்புடன் வரவேற்று மருத்துவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, கருணாநிதியின் உடல்நலம் சீராகி வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நமது கொள்கை எதிரிகள் வைதீக மூடநம்பிக்கைக்கு கருணாநிதியால் ஏற்க முடியாததை நுழைத்துவிடும் சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் முயற்சியில் ஈடுபட்டு விடுவார்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாவரும் வழிவகுத்து விடக்கூடாது. அதற்கு பகுத்தறிவு இயக்கமான தி.மு.க. தலைவரின் விருப்பங்கள், கொள்கைகள், விழைவுகளுக்கு முற்றிலும் மாறான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடக்கூடாது என்று அந்த அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.