அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன.
எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு:
“கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!
நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் –
- கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.
2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.
- மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?
-
பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.
-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?
-
இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.
-
நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.
-
தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாக இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.
-
கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர் தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.
-
நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.
-
நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.
-
உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.”
விமர்சகர் ராஜன் குறை, தியாகு மீது வைத்த விமர்சனம்:
“கலைஞர் குறித்த விவாதத்தில் தோழர் தியாகு விரிந்த வரலாற்றுப் பார்வையில் சில விமர்சனங்களைக் கூறியது தவறில்லை. விமர்சனத்தை சினத்தால் எதிர்கொள்ளாமல், சினம் காத்து விமர்சனப்பார்வையை வலுப்படுத்தும் விதமாகவே உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.
தோழர் தியாகு மார்க்ஸின் “மூலதனம்” நூலை மொழிபெயர்த்தவர். அரசியல் தத்துவப் பயிற்சி உள்ளவர். அவரைப் போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கும் பரிசீலனைகள் என்னவென்று பட்டியல் இட விரும்புகிறேன்.
- இருபதாம் நூற்றாண்டில் உருவான தேசங்களில், கணிசமான மக்கள் தொகை கொண்ட தேசங்கள் எதிலாவது சமத்துவம், அதிகாரப் பரவல் போன்ற அரசியல் இலட்சியங்கள் முழுமையடைந்துள்ளனவா? அதற்கான சாத்தியமாவது தெளிவாகத் தென்படுகிறதா?
-
இடது சாரி புரட்சி நிகழ்ந்த தேசங்களில் தனிநபர் ஆளுமைக் கலாசாரம், வழிபாடு தவிர்க்கப்பட்டுள்ளதா? சீன அதிபர் ஆயுட்கால அதிபராக அறிவிக்கப்பட்டிருப்பது எதைக்குறிக்கிறது? அறிவிக்கப்படாத ஆயுட்கால அதிபராகத் தோற்றம் தரும் விளாடிமீர் புடினின் ரஷ்யாவில் நடப்பது என்ன?
-
பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கம், அதிகாரப் பகிர்வு போன்றவற்றை சுதந்திரவாதம், பொதுவுடமை இரண்டிற்குமான இலட்சியங்கள் என்று கொண்டால் இன்று உலக நாடுகளில் இவை எப்படி உள்ளன? எங்குமே இந்த இலட்சியங்கள் எட்டப்படவில்லை என்றால் முதலீட்டிய கால அரசியலை எப்படி புரிந்துகொள்வது?
-
கலைஞர் போன்ற ஒரு முழு இறையாண்மை பெறாத மக்கள் தொகுதியின் தலைவரின் செயல்பாடுகளை எப்படிப்பட்ட சட்டகத்தில் வைத்து விமர்சனம் செய்யவேண்டுமே? உலகில் எங்குமே எட்டப்படாத இலட்சியங்களின் அடிப்படையிலா? அல்லது வெகுஜன அரசியலுக்கு உரிய சமரசங்கள் அடங்கிய சாத்தியங்களின் அடிப்படையிலா?”
இந்நிலையில் தன்னைப் பற்றிய அவதூறுகளுக்கும் விமர்சனத்தின் மீது வைக்கப்பட்ட எதிர்வினைகளுக்கும் தியாகு தெரிவித்துள்ள கருத்து:
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் // பரந்து கெடுக்க உலகியற்றியான்” என்பது குறள்நெறி. மனிதர்கள் யாவரும் சரிநிகர். நான் யாரிடமும் எந்தப்பிச்சையும் கேட்டதில்லை. எனக்கு யாரும் எந்தப்பிச்சையும் இட்டதுமில்லை. தண்டனைக் குறைப்பு என்பது சட்டப்படியான உரிமை. இந்த உரிமயை ஏற்றுச் செய்வது அரசின் கடமை. நன்றிக் கடன் என்பதெல்லாம் அடிமைச் சிந்தனை. கலைஞர் சட்டப்படி எனக்குச் செய்த உதவிக்கு நன்றி. ஆனால் அதற்காக என் அரசியலை நான் மாற்றிக்கொள்ள முடியாது. கலைஞருக்கு நான் ஓர் உதவி செய்தால் அவர் தன அரசியலைக் கைவி்ட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? நான் தனிப்பட்ட யாருக்கும் நன்றிக் கடன்பட்டவன் அல்ல. என் பெற்றோருக்கே நன்றிக் கடன்பட்டவன் அல்ல என்னும் போது கலைஞருக்கு நன்றி என்ற பேரால் அவரது அரசியலை மறுத்துப் பேசக் கூடாது என்பது எப்படி நியாயம்? ஒன்று உறுதி: நான் என் தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவன். இறையன்பர்கள் இறைவனுக்கு மட்டுமே நன்றிக் கடன் பட்டவர்கள் அல்லவா? அதே போலத்தான். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.”