பா. ஜெயசீலன்
முன்குறிப்பு
செவென் சாமுராய் திரைப்படத்தை பற்றிய எனது சமூக அரசியல் பார்வையை பற்றி பகுதி 4ல் பேச தொடங்குவதற்கு முன்பு முதல் 3 பகுதிகளில் ஜப்பானின் சமூக சாதிய அமைப்பு, திரைப்படம் நிகழும் காலம், அகிராவின் சாதிய பின்னணி பற்றி விளக்கியுள்ளேன். அவைகளை படிக்காமல் நேரடியாக பகுதி 4ல் தொடங்கி திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை படிப்பவர்களுக்கு நான் ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்குவதை போல தோன்ற வாய்ப்புள்ளது…
முந்தைய பகுதிகளைப் படிக்க:
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 1
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 2
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 4
செவென் சாமுராயின் இரண்டாம் பகுதி என்பது கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் ஊருக்கு ronin சாமுராய்களை தேடி வந்த கிராமத்தினர் சந்தித்த பிரச்சனைகளை பற்றியும், ஒருவழியாக அவர்கள் 7 ronin சாமுராய்களுடன் கிராமத்திற்கு திரும்புவதை பற்றியும் விரிகிறது. திரைக்கதையின் இந்த பகுதியிலும், இறுதி பகுதியான மூன்றாம் பகுதியிலும் அகிரா எந்த சமரசமும் இன்றி மிக நேரடியாக ஜப்பானிய நிலவுடமை சாதிய முறையை அங்கீகரிக்கிறார், வலியுறுத்துகிறார், அதன் புனித தன்மையை ஆதிக்க சாதியான தனது சொந்த சாதி சாமுராய்களின் பக்கம் நின்று நிறுவ முயல்கிறார்.
கிராமத்தினர் அந்த சிறிய நகர் அல்லது ஊருக்கு நுழைந்தவுடன் அகிரா மிக சிரத்தையுடன் அந்த ஊரின் தெருக்களில் ஜப்பானின் ஓவ்வொரு தொழில்முறை சாதியினரும் அவர்களது சாதிக்கு உண்டான property உடன் காட்சிப்படுத்துகிறார். அவர்களுக்கு மத்தியில் மிக நேர்த்தியாக உடையணிந்து, கச்சிதமான முக அமைப்போடு, மிகுந்த கம்பீரத்தோடும், செருக்கோடும் சாமுராய்கள் காட்சி படுத்தப்படுகிறார்கள். சாமுராய்கள் தோன்றும் காட்சிகளில் அகிரா தனது shotகளின் மூலமும், அங்கு பயன்படுத்தப்படும் பின்னணி இசைகொண்டும் சாமுராய்களுக்கு நாயகத்தன்மையை கட்டமைக்கிறார். இந்த யுக்தியின் தமிழ் வடிவம்தான் கண்ணு பட போகுதய்யா சின்ன கௌண்டரே, போற்றி பாடடி பெண்ணே, திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கிட்டு வாடா போன்ற பாடல்கள் என்று கொள்ளலாம். சாமுராய்களை அவர் நாயகத்தன்மையோடு காட்சிப்படுத்துவதோடு நில்லாமல் கிராமத்திலிருந்து வந்த வேளாண் சாதிகள் அந்த சாமுராய்களை முகம் எடுத்து பார்ப்பதையே அஞ்சுவதையும், சாமுராய்களை 7,8 ஆண்குறிகளோடு பிறந்த அசகாய சூரர்கள் என்னும் தொனியில் வியந்து பார்ப்பதையும் அகிரா காட்சிப்படுத்துகிறார்.
சில சாமுராய்களின் முன்பு அவர்கள் மண்டியிட்டு தங்களது கிராமத்திற்கு வந்து உதவ வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தாங்கள் அவர்களுக்கு உணவிடுவதாகவும் கூற அதற்க்கு அந்த சாமுராய்கள் ஓத்தா டேய் கேவலம் ஒரு விவசாயி நீ சாமுராய் எனக்கு வேல தறியா, சோற்றிற்கு வழியில்லாத ronin சாமுராயயாக இருந்தாலும் நான் சாமுராய்டா. ஓங்கி அப்பரத்துக்குள்ளாற ஓடிரு என்னும் தோரனையில் சீறுகிறார். இந்த வசனத்தை நீங்கள் ஜப்பானிய நிலவுடமை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் குறிப்பாக burakumin சாதியை சேர்ந்தவர்களின் சார்பாக நின்று யோசித்து பாருங்கள். எவ்வளவு பொறுக்கித்தனமான வசனம் இது?. இந்த வசனத்தை ஜப்பானிய நிலவுடமை சாதிய சமூக அமைப்பின்மேல் விமர்சனம் உள்ள ஒருவரால் எழுதியிருக்க முடியுமா?
ஒருவழியாக அந்த கிராமத்தினர் தங்களது முதல் சாமுராய்யை அடைகிறார்கள். Kambei Shimada என்ற கதாபாத்திரம் செவென் சாமுராயின் மைய கதாபாத்திரம் எனலாம். இங்கிருந்து அந்த கதாபாத்திரத்தை கம்பி என்று அழைக்கலாம். அந்த கதாபாத்திரத்தை அகிரா மிக கவனமாகவும், திறமையாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்திருக்கிறார். கம்பி அறிமுக காட்சியில் கடைபிடிக்கும் நிதானமும், புத்திசாலித்தனமும், யுக்தியும்,பிறருக்கு உதவும் பண்பும் வெளிப்படுத்தப்படுகிறது. குழந்தையையை மீட்கும் அந்த காட்சியில் கம்பி சட்டென்று அந்த குடிசைக்குள் நுழைய, அந்த காட்சியில் அகிரா இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக தனது திறமை(skill)யை நிறுவுகிறார். அந்த குடிசைக்குள் என்ன நடக்கிறதோ என்று அங்கிருக்கும் கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களும் பதட்டம் கொள்ள, சில நொடிகள் கழித்து குழந்தையை கடத்திய திருடன் மட்டும் கத்தி காயத்தோடு வெளியில் வந்து விழுந்து சாக, கம்பி இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்னும் பாவனையில் குழந்தையோடு வெளிப்படுகிறார். இந்த ஒரே காட்சியில் அகிரா சாமுராயான கம்பி கதாபாத்திரத்தின் மூலம் சாமுராய்களை எந்த சாகசத்தையும் செய்யும் திறன் பெற்ற ஒரு mythological figures என்னும் அளவுக்கு வலிமையாக நிறுவுகிறார்.
இதே காட்சியில் படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமும், செவென் சாமுராய் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் கதாபாத்திரமான Kikuchiyo அறிமுகமாகிறது. இவரை கிக்கு என்று அழைக்கலாம். அகிரா கம்பிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளாரோ அதே அளவுக்கான முக்கியத்துவத்தை கிக்குவுக்கும் கொடுத்துள்ளார். சாமுராய் உடையணிந்து, சாமுராய் வாளுடன் அறிமுகமாகும் கிக்கு நேர்த்தியாக உடையணியாமல், தலை வாராமல், சவரம் செய்யாமல், manners இல்லாமல், நடை உடை பாவனைகளில் ஒரு போக்கிரித்தன்மையும், கோமாளித்தன்மையும் கொண்டவனாக கிட்டத்தட்ட பிதாமகன் சித்தன் அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். அவனது நடவடிக்கைகளையும், செயல்களையும் கம்பி கதாபாத்திரம் ஒரு எள்ளல் சிரிப்போடு தொடர்ந்து ஊதாசீனப்படுத்துகிறது. பார்வையாளனுக்கு அகிரா மிக நுட்பமாக கிக்கு ஒரு சாமுராயாக இருக்க மாட்டான், இருக்க முடியாது, அவன் சாமுராய்களின் கம்பீரத்தை, கண்ணியத்தை கொண்டிருக்கவில்லை என்று தொடக்கம் முதலே நிறுவுகிறார். ஒரு காட்சியில் கிக்கு தான் சாமுராய் சாதியை சேர்ந்தவன் தான் என்று நிறுவ தனது சாதி சான்றிதழை(முதல் மூன்று கட்டுரைகளில் ஜப்பானில் ஒருவரின் சாதியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன்) காட்ட, கம்பி அதை பார்த்து கீ கீ கீ என்று சிரிக்கிறார். ஏனென்றால் அந்த சான்றிதழ் ஒரு சாமுராய் சிறுவனுடையது. ஜப்பானிய சாதிய முறையில் சாமுராய்கள் மட்டுமே கல்விக்கற்கும் அனுமதி பெற்றவர்கள். சாமுராயல்லாத கிக்கு படிக்க தெரியாதவன் என்பதால் தான் திருடி வைத்துள்ள சாதி சான்றிதழ் ஒரு சிறுவனுடையது என்று கூட தெரியாமல் இருக்கிறான். அதை வைத்து சாமுராய் அகிரா வாழைப்பழ காமெடி செய்கிறார். எதோ ஒரு படத்தில் சுந்தர ராஜன், சத்யராஜிடம் நீ உண்மையிலேயே வெள்ளாள கௌண்டனா? ஏன்னா ஊருல அவன் அவன் நான் கவுண்டனு சொல்லிட்டு அலையுறாங்க என்று காமெடி பண்ணியிருப்பார். அதே காமெடியைத்தான் அகிராவும் செய்கிறார். அதாவது பிற சாதியினருக்கு சாமுராய் சாதியில் தான் பிறவில்லையே என்கின்ற ஏக்கம் இருந்ததை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
கிராமத்தினர் சாமுராய்களோடு தங்கியிருக்கும் ஊர் விடுதியில் burakumin சாதியை சேர்ந்தவர்கள் என்று நமக்கு தோன்ற கூடிய சில கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த கதாபாத்திரங்கள் எப்பொழுதும் குடித்துக்கொண்டும், சூதாடிக்கொண்டும், மேல் சட்டைகூட அணியாமல் அழுக்காகவும் ,வம்பு பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களின் மேல் நமக்கு எந்த நல்லெண்ணமும் ஏற்படாதவகையில், இன்னும் சொன்னால் நாம் எரிச்சலடையும் வகையில் சாமுராய் அகிரா அந்த கதாபாத்திரங்களை செதுக்குகிறார்.சாமுராய்களை பார்த்தால் ஐயோ officer என்று பம்பும் வேளாண் சாதி கிராமத்தினர் இந்த burakumin கதாபாத்திரங்களிடமும், ஒரு காட்சியில் ஒரு உணவு பதார்த்தத்தை விற்க வரும் வியாபாரியிடமும்(வியாபார சாதியினர் வேளாண் சாதியினரை விட கீழானவர்கள்), ஒரு காட்சியில் burakumin சாதியில் வரும் இசை கலைஞர் ஒருவரிடமும் அதிகாரத்தோடும், ஆதிக்கத்தனத்தோடும் பேசுகிறார்கள்.
பொதுவாக உலகம் முழுவதும் பழமைவாதிகளும், சாதிவெறியர்களும், இனவெறியர்களும் எப்பொழுதும் hypocrites ஆகவே இருப்பார்கள். அதாவது அவர்களிடம் ஒரு போலித்தனமும், அதை நியப்படுத்தும் தன்மையும் இருக்கும். அவர்களுடைய கொள்கைகளுக்கு அவர்கள் ஒருபோதும் உண்மையாக இருக்கமாட்டார்கள். உதாரணத்திற்கு வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்தும் வட இந்தியர்கள் தங்கள்து கடைகளில் beef madras, beef vindalo எல்லாம் சமைத்து விற்பார்கள். ஆனால் அவர்கள் beef சாப்பிடமாட்டார்கள். சமைக்கும் பொழுது அதை ருசி கூட பார்க்க மாட்டார்கள். கேட்டால் மாடு சாமி என்பார்கள். ஒத்தா வாரம் 20 கிலோ சாமிய சமைச்சு வித்து காசு பாக்குறியே அது சரியா என்று கேட்க தோண்றும். நான் படித்துக்கொண்டிருந்த பொழுது வெவ்வேறு இந்திய உணவகங்களில் வேலை செய்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். இன்னொரு உதாரணம் என்றால் ஊர்பஞ்சாயத்தாக தலித் வந்தால் கொந்தளிக்கும் சாதி ஹிந்துக்குள் ஜனாதிபதியாக தலித் வந்தால் மூடிக்கொண்டு சும்மா இருப்பார்கள். இதைத்தான் hypocrites என்கிறோம்.
சாமுராய்களை ஜப்பானிய சாமுராயா பாரம்பரிய வழி வந்த அசகாய சூரர்களாக, சாமுராய்களின் வாழ்வியல் முறைகளை, அறத்தை கடைபிடிப்பவர்களாக அறிமுகப்படுத்தும், நிறுவும் அகிரா சாமுராய்களின் முக்கிய அறமான ஒரு சாமுராய் ronin சாமுராயாக மாறும் நிலையில் sepukku செய்துகொள்ளவேண்டும் என்ற விதியை கமுக்கமாக கடந்து செல்கிறார். மாறாக ronin சாமுராய்களை அடியாள்கள் என்னும் நிலையிலிருந்து பற்றற்ற, பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவக்கூடிய முனிவர்கள், ஞானிகள் என்னும் அளவில் elevate செய்கிறார். இன்னொரு காட்சியில் கம்பி இன்னொரு சாமுராயுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் ஒரு சண்டையிலிருந்து எஸ்ஸானதை சிரித்துக்கொண்டே சொல்ல சூப்பர் strategy என்று கம்பி பாராட்டுகிறார். இதுவும் சாமுராயின் அறத்திற்கு எதிரானது. சாமுராய்கள் பின்வாங்கவே கூடாது என்பதும், அப்படிப்பட்ட நிலை வந்தால் sepukku செய்துகொள்ளவேண்டும் என்பது சாமுராய் அறம். இது போன்ற terrorரான அறங்களை/பண்பாட்டை அகிரா புறம்தள்ளுகிறார். ஆனால் எல்லா சாதிகளை விட சாமுராய்கள் கெத்து என்ற நிலவுடமை முறை பண்பாட்டு முறையை வலிமையாக நிறுவ முயல்கிறார்.
ஒருவழியாக தினுசு தினுசான ஏழு சாமுராய்கள் தயாராக கம்பி எல்லோரையும் அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு கிளம்புகிறார். இதோடு திரைக்கதையின் இரண்டாம் பகுதி முடிகிறது.
– தொடரும்
பா. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
எழுத்தாளர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தால் அவரின் எழுத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
LikeLike