சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்:
தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ்
சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிலமே என் உயிர், நிலமே என் வாழ்க்கை என அந்த எளிய மனிதர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இரக்கமும், மனிதாபிமானமும் அற்றவர்களின் செவிகளில் இந்த உயிரின் வேதனைக் குரல் கேட்காமல் போகலாம் அல்லது முக்கியமற்றுப் போகலாம்.
பூச்சி மருந்தைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் சிந்தித்து இருப்பார்? அனாதரவாக விடப்பட்டதாக எப்படியெல்லாம் உணர்ந்திருப்பார்?
எட்டுவழிச்சாலை அவரது மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?
அரசியல் செயல்பாட்டாளர் சந்திரமோகன்:
எட்டுவழிச் சாலை திட்டத்தால் முதல் உயிர்பலி. விவசாயி சேகர் துயர மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பசுமை வழி சாலைக்காக, எதிர்ப்பையும் மீறி, மேல் வணக்கம்பாடியைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டது.
இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார். இந்நிலையில் திடீரென அவரது விளை நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து சேகர் உயிரிழந்துள்ளார்.
எட்டுவழிச் சாலையும் வேண்டாம்; விவசாயிகள் உயிர்ப்பலியும் வேண்டாம்.
Stop Green Corridor 8way Project!