தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்

நித்தியானந்த் ஜெயராமன்

பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு 0.0579 சதவிகிதம் என்று அனுமானித்ததன் மூலம், ஆர்செனிக் உமிழ்வுகளின் அளவையும் மிகக்குறைவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட்டின் இறக்குமதி தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், 2009-இல் இருந்து 2010 வரை அந்நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட்ட, செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு, 0.12 முதல் 0.64 சதவிகிதம் வரை இருந்துள்ளது என்பதே. இந்தக் குறைந்த தரத்திலான தாதுவை வாங்குவதற்காக, ஏற்றுமதியாளர் 4.8 கோடிகள் விலைக்குறைப்பு செய்தார் என்றும் அந்தத் தரவு தெரிவிக்கிறது.

போதுமான அளவு பசுமை வளையங்கள் அமைக்காதது, தேவையான அளவைவிடக் குறைந்த உயரத்தில் புகைபோக்கிகளை அமைத்தது, போன்ற தரங்குறைந்த மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளும், அதிக அளவிலான ஆர்செனிக் உமிழ்வுகளும், இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீவிரமான நச்சுத்தன்மை மிக்க சூழலை உருவாக்கியிருக்கும் என்று இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை ஆதரவுக் குழு கூறியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யின் கெமிக்கல் எஞ்சினியரிங் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர். டி. சுவாமிநாதன் அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துப்படி, ஸ்டெர்லைட்டின் சல்ப்யூரிக் ஆசிட் ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரத்திலான புகைபோக்கிகளின் விளைவாக, அந்த ஆலையில் இருந்து 1.6 கி.மீ தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 125 மைக்ரோகிராம்/மீட்டர் க்யூப் ஆக இருக்கும். காற்றின் திசையைப் பொறுத்து, டி.வீரபாண்டியபுரம், மேலவிட்டான், பண்டாரப்பட்டி போன்ற கிராமங்களும் பாதிக்கப்படும். உருக்கு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள புகைபோக்கிகளின் உயரம், 60 மீட்டராக உள்ளது. ஆனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி அது 102.8 மீட்டராக இருக்க வேண்டும். இந்தப் புகைபோக்கிகளில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகளின் விளைவாக, அங்கிருந்து 811 மீட்டர் தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 104 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் என்ற அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் காற்றுத் தரத்தின் நிர்ணயங்களின் படி, சல்பர்-டை-ஆக்ஸைடின் அளவு 80 மைக்ரோகிராம்/மீட்டர் கியுப் என்ற அளவிலேயே இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அளவுகளுமே இதை விட அதிகமாக உள்ளன.

ஆர்செனிக்கால் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதும் இல்லாமல், அதன் மூலம் இலாபமும் ஈட்டியுள்ளது ஸ்டெர்லைட். பசுமை வளையங்கள், காற்று மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவை அமைப்பதற்கு குறிப்பிட்ட அளவு நிலம் தேவைப்படும். மாசுக் கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்புகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததன் மூலம் இன்னும் செலவைக் குறைத்துள்ளது அந்நிறுவனம்.

வருடத்திற்கு 400,000 டன் உற்பத்தி செய்யும் உருக்கு ஆலைக்கு, 2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியின்படி, திடக்கழிவு கிடங்கிற்கு 65 ஹெக்டேர் நிலம், காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்கு 1.5 ஹெக்டேர் நிலம் என, மொத்தம் 172.17 ஹெக்டேர் நிலம், இந்நிறுவனத்தின் கைவசம் இருக்க வேண்டும். ஆனால் அதனிடம் இருப்பதோ 102.31 ஹெக்டேர் மட்டும் தான். சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கும் பொழுது, தன்னிடம் இருப்பதாக கூறிய நிலத்தின் அளவை விட இது மிகக் குறைவு.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைச் சுற்றி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும் அடர்ந்த தாவரச் செறிவே பசுமை வளையங்கள் எனப்படும். நன்கு உருவாக்கப்படும் பசுமை வளையங்கள், தொழிற்சாலைகளின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, ஸ்டெர்லைட் போன்ற பெரிதான, நச்சுப்படுத்தும் தொழிற்சாலைகள், 500 மீட்டர் அகலத்துடனான பசுமை வளையங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தனக்காக அதை 25 மீட்டராக குறைத்துக் கொண்டுள்ளது ஸ்டெர்லைட். அதற்கான நிலம் தன்னிடம் இல்லை என்பதால் இதைக்கூட நிறைவேற்றவில்லை அந்நிறுவனம்.

2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச் சூழல் அனுமதியில், 172.17 ஹெக்டேர் நிலத்தில், 43 ஹெக்டேருக்கு பசுமை வளையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கையில் இருந்ததோ 102.31 ஹெக்டேர்கள் தான். ஆதலால் அந்நிறுவனம் அதை அமைக்க தவறி விட்டது.

மேலும் தகவல்களுக்கு : நித்தியானந்த் ஜெயராமன் – 9444082401

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.