எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை சென்னையில், சனியன்று நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல் பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து.
“கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அறிவிப்பு வந்த சில மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை இருநூறுக்கும் சற்று அதிகமானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன் விடுதலைக்கு தகுதியான, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த 1500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இன்னமும் சிறையில் உள்ளனர். சிறை என்பது ஒரு சீர்திருத்தம் நடைபெறும் இடம்தானே தவிர, வாழ்நாள் முழுவதும் குற்றவாளியை அடைத்து வைக்கும் இடம் இல்லை ” என்று தியாகு குறிப்பிட்டார்.
நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் கடந்த காலங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இது குறித்து சட்டத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பேரா. அ. மார்க்ஸ், தியாகு ஆகிய இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.