சந்திரமோகன்

சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையில், ஒரு முக்கியமான அம்சம், சேலம் மாநகரம் அருகிலுள்ள #ஜருகுமலைகுகைபாதைகள்_Tunnels ஆகும். NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை Feasibility Report கூறும் பட்ஜெட் அடிப்படையில் 277.3 கி.மீ நீள 8 வழி சாலைக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை நான்கு வகையான சாலைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 2.50 கி.மீ (1000 மீ + 750 மீ + 750 மீ) நீளம் உள்ள சுமார் 45 மீ × 15 மீ × 2500 மீ = 16,87,500 கன மீட்டர் என்றளவில் குடையப்படும் மூன்று குகைப் பாதைகளுக்கு ரூ.312.35 கோடி முதல் ரூ.375 கோடி வரை செலவு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கை விவரப் படங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. ஜருகு மலையை குடைவது இயற்கைக்கு பேரழிவு என்பது ஒருபுறமிருக்க… வேறு வழியில் alignment அமைக்க முடியும் என்றபோதிலும் கூட …யாருக்கு ஒப்பந்தம் தர தேவையில்லாமல் மலைகளை குடைகிறார்கள்? என்ற கேள்விக்கு, “அடப்பாவி- சாமி” தான் பதில் சொல்ல வேண்டும்.
சாலை வசதியற்ற ஜருகு மலை!
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், அவர் குடியிருக்கும் சேலம் மாநகரத்தின் தென்புறத்தில் சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலை ஜருகு மலையாகும். மேலூர், கீழுர் என இரண்டு கிராமங்களில், மலையாளி எனப்படும் 1200 பழங்குடியினர் வசிக்கும் இக் கிராமத்திற்கு நடந்து செல்ல இரண்டு வழிகள் உள்ளது. எருமாபாளையம் ஊராட்சி தர்கா வழியாக 4.5 கி.மீ நடந்து ஏற வேண்டும். அல்லது பனமரத்துப்பட்டி வழியாக 4.5 கி.மீ நடந்து ஏற வேண்டும். தார் சாலைகள் இன்று வரையும் கிடையாது.
அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. உயர்நிலைப் பள்ளி படிப்புக்கு மாணவர்கள் தினசரி கீழே இறங்கி வரவேண்டும். 2007 ல் தான் ஜருகு மலைக்கு மின் இணைப்பு கிடைத்தது. கடந்த ஆண்டில் தான் நிலவாரப்பட்டியிலிருந்து மேலே செல்ல மண் சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பண்புகள் மிக்க மூலிகை செடிகள் துவங்கி கொளஞ்சி, கொய்யா என பல்வேறு நாட்டு பழ மரங்கள் நிறைந்த ஜருகு மலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட கிடையாது. பிரசவ கால கர்ப்பிணிப் பெண்கள் வாழ்வா, சாவா எனப் போராட்டம் நடத்தி தான் குழந்தைகள் பெற வேண்டியுள்ளது; கர்ப்பிணிகள், நோயாளிகளை தூளியில் /தொட்டிலில் வைத்து தான் இறக்கி கொண்டு வருகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளை கண்களை மறைக்கிறது!
ஜருகுமலைக்கு தார்ச்சாலை போட, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசிடம், முதலமைச்சரிடம் நிதி இல்லை ; மனதும் இல்லை. ஆனால், அதே ஜருகு மலையில் 2.5 கி.மீ குகை பாதைகளுக்கு 375 கோடி ரூபாய் ஒதுக்கீடு மத்திய அரசால் முடிகிறது. அதை முதலமைச்சர் எப்பாடு பட்டாவது கொண்டு வர துடிக்கிறார்! #என்ன_குரூரம்!
சுற்றுச்சூழலுக்கு பதட்டம் உருவாக்கும் வகையில், 2500×45×15 க.மீ பாறைகளை அகற்றப்படவுள்ளது ! ? ஜருகு மலை நீரோடைகளிலிருந்து எருமாபாளையம் ஏரிக்கு தண்ணீர் வருமா? பழங்குடியினர் மலைக்கு செல்லும் அணுகு பாதைகள் இருக்குமா? எனப் பல கேள்விகள் இதனுடன் எழுகின்றன.
ஜருகுமலை வனத்தில் / ரிசர்வ் பாரஸ்டில் அழிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான மரங்கள், செடிகொடிகள் இயற்கைக்கு , மூலிகைகளுக்கு, பல்லுயிர் பெருக்கத்திற்கு, மலையின் உறுதி தன்மைக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிறிதளவும் கூட கவலைப் படாமல்…ஜிண்டால் – அதானி – அம்பானி திரிவேணி குழுமங்கள் வளர்வதற்காகவே 8 வழி சாலை அமைக்கப்படுகிறது.
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.