திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

பா.ஜ.கவின் சார்பாக ஊடகங்களுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடும் பொறுப்பில் இருக்கும் திருப்பதி நாராயணன் பெரும்பாலும் தன்னைத்தானே அனுப்ப தனக்கே உத்தரவிட்டுகொள்வார். இதனால் ஏனைய பா.ஜ.க ஊடக பேச்சாளர்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்று கேள்வி. ஆனால் தமிழ் நாட்டில் தனது பண்ணையார் உடல் மொழியாலும் அராஜக நடவடிகைகளாலும் அதிகமான வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானவர் திருப்பதி நாராயணன். அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண் தெய்வங்கள் தொடர்பான ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக புதிய தலைமுறை கார்திகேயன்மேல் காவி பயங்கரவாத கும்பல் மேற்கொண்டுவரும் தாக்குதல் தற்செயலானதல்ல. இது தொடர்பாக திருப்பதி நாராயணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் ’கார்த்திகேயன் வேறு கார்த்திகைச் செல்வன் வேறு, நாம் கார்த்திகேயனை திட்டவேண்டுமே தவிர கார்த்திகைச் செல்வனை திட்டக் கூடாது’ என்று பயிற்சி கொடுக்கிறார். கார்க்திகேயனுக்கும் கார்த்திகைச் செல்வனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தக் கும்பல்தான் இந்து மதத்தைக் காப்பாற்ற கிளம்பியிருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் , ‘ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது’ என்று.

இந்த விவகாரத்தில் திருப்பதி நாராயணனின் கருத்து ‘’ தவறான,குரூரமான, கேவலமான ஹிந்து மதத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்தோ, கிருஸ்துவ தெய்வங்கள் குறித்தோ பேசிவிட்டு ரோட்டில் நடக்க முடியாது. உங்கள் நண்பரை அல்லது உங்களுக்கு தெரிந்தவரை ஒரு கவிதை எழுதி விட்டு ரோட்டில் நடந்து போக சொல்லுங்கள். வெட்டி போட்டு விடுவார்கள். ’’ என்பதுதான். ராமகோபாலனிலிருந்து ஹெச்.ராஜாவரை முகமது நபிகள் பற்றியும் அவரது துணைவியார் பற்றியும் இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றியும் எவ்வளவு ஆபாசமாக இழிவாக கேவலமாக பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரஙகள் இருக்கின்றன. நாராயணன் ஆசைப்படுவதுபோல யாரும் யாரையும் வெட்டிபோட்டுவிடவில்லை. ஏன் கவிஞர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்திற்குள் இருந்தே ’’இத்தனை நபிகளில். ஏன் ஒரு பெண் நபி இல்லை?’ என்று கேட்டதற்காக சில அடிப்படைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.. அவரை யாரும் வெட்டிப்போட்டுவிடவில்லை. கிறிஸ்தவ மதம் மீது இங்கு எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கபட்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் யாரும் வெட்டிபோட்டுவிடவில்லை. மாறாக நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டுகொன்ன்றவர்கள் இந்த்துவா வெறியர்களதான். நாராயணன் தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது.

திருப்பதி நாராயணன் ‘சமூக வலைத்தளங்களில் நம் நண்பர்கள் / கட்சியினர் மிகவும் வேகமாக, உணர்ச்சிப்பெருக்கோடு தங்களின் ஆதங்கங்களை, கோபத்தை பதிவு செய்து இந்த விமர்சனத்தை கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கார்த்திகேயனை தொடர்ந்து கண்டித்து கொண்டிருப்பது நமது தெய்வங்களை பழித்து பேசுபவர்களை இனியும் நாம் சகித்து கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தியுள்ளது’’ என்று சங்கிகளை உற்சாகபடுத்துகிறார். மாதவிலக்கான பெண்களை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும் கூற்றுக்கு எதிராக பெண் தெயவங்கள் அந்த மூன்று நாட்களும் பெண் தெய்வங்கள் எங்கே இருப்பார்கள்? என இந்துமதத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார். அதை இந்து மதத்தைச் சேர்ந்த கார்திகேயன் கேள்வி கேட்கிறார். அதுவும் இவர்கள் கேட்பது இஸ்லாமிய , கிறிஸ்துவ பெண்களுக்கு கோயிலில் நுழைய உரிமை கேட்டு போராடவில்லை. இந்துக்களான இவர்கள் இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதில் மதப்பிரச்சினை எங்கே வந்தது? இந்த லட்சணத்தில் திருப்பதி நாராயணன் சொல்கிறார்.

‘எஸ் வி சேகர் விவகாரத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டபிறகும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டு, அவர் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியவர்கள் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் கவிதையை, சொற்களை, எழுத்துக்களை போற்றி பாதுகாக்க முற்படுவது முறையாகாது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று முற்போக்குகள் ஏற்றுக்கொள்வார்களேயானால், அந்த பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோவது வக்கிர சிந்தனையே என்பதை உணர வேண்டும்.தமிழகத்தில் நாத்திக சிந்தனையாளர்கள் 0.01 விழுக்காடே உள்ளனர் என்கிற நிலையில், பெண் தெய்வங்களை அவமானப்படுத்தும் யாரையும், எந்த கருத்துக்களையும் ஹிந்து பெண்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.’

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்? அதற்குப் பெயர் நாத்திகமா? எஸ்.வி சேகர் ‘ ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் யாரிடமாவது படுத்துதான் சலுகை பெறுகிறார்கள்’ என்று சொன்னதும் இந்துப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் ஒன்றா? என்ன உளறுகிறோம் என்றுகூட தெரியாத பேத்தல்.

மேலும் உடல் சார்ந்து விஷயங்கள் எதுவும் இந்துக் கடவுள்கள் மரபில் பேசபட்டதே இல்லையா? நமது கோயில் பிரகாரங்களில் காணப்படும் நிர்வாண சிலைகள் மற்றும் ஆண் பெண் உறவுக் காட்சிகள் உடல் சார்ந்த அனைத்தையும் இந்துமதம் புனிதமாக கருதுகிறது என்பதையே காட்டுகிறது. நமது புராணங்களை சங்கிகள் கொஞ்ச நேரம் புரட்டிப்பார்க்க வேண்டும். யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் கீழ்கண்ட விஷயஙகளை சுட்டிக்காட்டுகிறார்.

‘சக்தி பீடங்களில் தலையாயது அஸ்ஸாமில் இருக்கும் ‘காமாக்யா’. ஆண்டுக்கு ஒருமுறை (அதாவது ஜூன் மாதம் மூன்றாம் வாரம்) இங்கே தேவிக்கு மூன்று நாட்கள் ‘தீட்டு’ ஆகிறதாம். போலவே -செங்கனூர் பகவதியம்மனுக்கு மாதாமாதம் ‘தீட்டு’ ஆவதாக ஐதீகம். இந்த தீட்டுத்துணிக்கு மார்க்கெட்டில் செம டிமாண்டாம். இதை வைத்து பூஜை செய்பவருக்கு சகல சம்பத்துகளும் கிடைக்குமென்று நம்பிக்கை.சக்தி வழிபாடான ‘சாக்தம்’, பெண்களின் மாதாந்திர உடல் செயல்பான ‘தீட்டு’வை, புனிதமான நடைமுறையாக கருதுகிறது.’

இந்துமதத்ததைப் பற்றியோ அதற்குள் இருக்கும் கலாச்சார பன்முகத்தனமை பற்றியோ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி சங்கிகள் இந்துமதத்தை மற்றவர்கள் அவமதிப்பதாக அலறுகிறார்கள்.

எந்த தர்க்கமும் இல்லாமல் ‘ இந்து மதத்தை அவமதிக்கிறார்கள் என்று போலியான காரணங்களை உருவாக்கி கூச்சல் போடுவது என்பது கருத்து சுதந்திரத்தையும் ஊடகங்களையும் ஒடுக்குவதற்கான தொடர் நிகழ்வு. ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து ஒரு மேற்கோளை பயன்படுத்தியதற்காக எவ்வளவு களேபரத்தை உண்டாக்கினார்கள் என்று பார்த்தோம். ஊடகங்களில் சங்கிகளுக்கு மண்டியிடாத ஊடகவியாலளர்களை மிரட்டுவது , அந்த நிறுவன நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றவைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களில் பணியாற்றும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளார்களை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டமிட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படுகிகின்றன. ஜென் ராம், குணசேகரன், நெல்சன் சேவியர், செந்தில், கார்த்திகைச் செல்வன் வரிசையில் இப்போது கார்த்திகேயன் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.கவை கடுமையாக விமர்சிக்கும் என்னைபோன்றவர்களை விவாதங்களில் தவிர்க்கும்படி அழுத்தங்கள் ஊடகங்களுக்கு தரப்படுகின்றன. நாள் முழுக்க சங்கிகளின் ஊது குழலாக பெரும்பாலான ஊடகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அதற்காக நடுநிலையான ஊடகவியலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும்[’ பா.ஜ.கவிற்குகோபம் வராத எந்த தலைப்பை விவாதிக்கலாம், அதற்கு யாரை அழைக்கக் கூடாது , பா.ஜ.க தரப்பில் இருந்து அதற்கு என்ன எதிர்வினை வரும்’’ என்பதுதான் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகத்திலும் விவாதிக்கப்படுகிறது. இதைவிட துயரமான நிலை வேறொன்றும் இல்லை. எமெர்ஜென்சியைவிட மோசமான காலம் இது. எமெர்ஜென்சியைக்கண்டு பயப்படாத ஊடகங்கள் இன்று திருப்பதி நாராயணன் போன்ற ஒரு மூன்றாம்தர பேச்சாளரைக் கண்டு அஞ்சுகின்றன. சங்கிகள் இந்த ஊடகங்களின் மீது எவ்வளவு தாக்குதலை தொடுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களைப் போய் மறுபடி மறுபடி தாஜா செய்கின்றன.

திருப்பதி நாராயணன் சார்… இந்தப் பதிவை படித்துவிட்டு எல்லா தொலைக்காட்சிக்கும் போன் செய்து ” இனி மனுஷ்ய புத்திரனை அழைக்காதீர்கள் ‘’ என்று உத்தரவு போடாதீர்கள்.. என்ன இருந்தாலும் நாம் ‘ ஸ்டுடியோ தோழர்கள்’ இல்லையா?

மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.