சந்திரமோகன்

சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்ட A.பள்ளிப்பட்டி கிராமத்தை சார்ந்த விவசாயி தொடுத்த வழக்கில், சமீபத்தில் NHAI – PD தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அமல்படுத்தும் பிரிவின் திட்ட இயக்குநர் மோகன் அவர்கள் அளித்த பதில் மனுவில்/ Counter பின்வரும் விவரங்கள் தெரிவித்து இருந்தார்; பல்வேறு செய்தி தாள்களும் இதனை வெளியிட்டுள்ளன.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரகத்தின் சார்பில், இத் திட்டம் பற்றி விவாதிக்க மே 7, 2018 ல் கூடிய நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு EAC Expert Appraisal Committee கூட்டம் பின்வரும் “குறிப்பாக பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகள் Specific ToR Terms of Reference ” பற்றி அறிவித்தது. மே 8, 2018 அன்று விளக்கமாக சுற்றறிக்கை ஒன்றையும், NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம், வனத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசாங்கம் என அனைவருக்கும் அனுப்பி இருந்தது.
அதன் முக்கியமான பின்வரும் பகுதிகளை NHAI திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பதில் மனுவில் தெரிவித்து இருந்தார். பசுமை சாலைத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாகும் நிபந்தனைகள் :-
1) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதைகளை மாற்றி அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.
2 )கல்வராயன் மலை வனப்பகுதியை தவிர்க்கும் வகையில், செங்கம் மற்றும் சேலத்திற்கு இடையிலான alignment வழியை மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
3) நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் தவிர்க்க வேண்டும்.
4) முன்மொழியப்பட்டுள்ள alignment பாதையில் வனவிலங்கு வழித் தடங்கள், 10 கி.மீ.க்குள் வனவிலங்குகள் சரணாலயங்கள் அமையவில்லை என தடையில்லா சான்றிதழ் NOC யை, வனவிலங்குகள் தலைமை வார்டனிடம் பெற வேண்டும்.
இந்த நான்கு முக்கியமான நிபந்தனைகளில், தமிழக அரசாங்கம் செய்யும்/செய்கிற தவறுகள் என்னென்ன? விரிவாக பரிசீலிப்போம்! நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக சர்வே தொடர்கிறது :-
மத்திய அரசாங்கம், NHAI தான் Green Corridor பசுமை சாலைத் திட்டத்தை அமல்படுத்துகிறது என்ற போதிலும், நிலம் கையகப்படுத்தி தர வேண்டிய கடமை மட்டும் மாநில அரசு சார்ந்தது ஆகும்.
இதில் தமிழக அரசாங்கம் செய்யும் தவறுகள் என்னென்ன? MoEF & CC வின் ECA சொல்லியுள்ள முதலிரண்டு நிபந்தனைகள்
1) பாதைகளை மாற்றியமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.
2) செங்கம் சேலம் இடையில் கல்ராயன் வனப்பகுதியை தவிர்க்க வேண்டும்.
ஆனால், கடந்த மாதம் இந்த சுற்றறிக்கை கிடைத்த பின்னர் தான், அதன் உள்ளடக்கம், உத்தரவுகள் பற்றி கவலைப் படாமல், தமிழக அரசாங்கம் தாசில்தார்கள் (நிலம் எடுப்பு), வருவாய் துறை அலுவலர்கள், நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆகியோரை வைத்து, கவலையேப் படாமல் வனப் பகுதிகளில் ‘சர்வே’ என்ற பெயரில் முட்டுக் கற்களை Marking Stones பதித்தது.
நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ECA தவிர்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ள, செங்கம் சேலத்திற்கு இடைப்பட்ட சின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில்/ ரிசர்வ் பாரஸ்டுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர்.
தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவிரோதம் அல்லவா?
அது மட்டுமல்ல! சுற்றுச் சூழலியலாளர்கள் பலரும் கவனப்படுத்தியுள்ள, பல்லுயிர் பெருக்கம் மற்றும் அருகிவரும் வனவிலங்குகள் நிறைந்த பகுதியான, (கல்ராயன் மலையை ஒட்டிய) மஞ்சவாடி வனப் பகுதிகளிலும், [இந்த உத்தரவு வந்த பிறகும்] முட்டுக் கற்களை பதித்து உள்ளனர்.
நீர் நிலைகளை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனை மிதிக்கப்படுகிறது!
1) சேலம் மாவட்டத்தின் முக்கியமான ஆறு திருமணிமுத்தாறு ஆகும். இது சேர்வராயன் மலையில் தோன்றி, மலையிருந்து ஆச்சங்குட்டப்பட்டி அருகில் ஒரு குட்டையில் இறங்கி ஆறாக உருவெடுக்கிறது. தற்போதைய பசுமை வழிச் சாலையின் அலைன்மெண்ட் பாதையின் முட்டுக் கற்கள், இந்த நீராதார குட்டையின் நடுவிலேயே போடப்பட்டுள்ளது.
2) மஞ்சவாடி கணவாய் பகுதியில் கானுயிர்கள்/ வன விலங்குகளின் முக்கியமான நீராதாரமாக உள்ள செங்குட்டைஏரியின் நடுவில் முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.
3) சேர்வராயன் மலையில் தோன்றி உருவாகும் வாணியாறு அணையிலிருந்து பாசன வசதிகள் பெறும் அரூர் அருகில் இரண்டு ஏரிகளின் [லிங்காபுரம் ஏரி, முத்தானூர் ஏரி] குறுக்கே பசுமை வழிச் சாலைக்கான முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.
இப்படியாக நீர்நிலைகளை பாதிக்கும் விவரங்கள் ஏராளமானவையாகும்.
வனவிலங்குகள் வழித்தடம் சரணாலயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன!
1) வன விலங்குகள் [மான்கள், காட்டு எருதுகள், காட்டு பன்றிகள், முயல்கள், நரிகள் இன்னபிற ] நீர் குடிப்பதற்கு இறங்கி வந்து பயன்படுத்தும், 18 ஏக்கர் பரப்பில் உள்ள (மஞ்சவாடி கணவாய்) செங்குட்டை ஏரியின் நெடுக்கு வாட்டில் சாலை செல்வதற்கான முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.
2) தருமபுரி மாவட்ட வாணியாறு அணை ஒரு அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயமாகும். பல்வேறு வகையான குருவிகள், ஆயிரக்கணக்கான வவ்வால்கள், மயில்கள், கொக்குகள் நிறைந்தது ஆகும். இந்த பழம் திண்ணி வவ்வால்கள் சாப்பிட்டு போட்ட கொட்டைகள் தான், இந்த பிராந்தியம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான நாவல்/நாகப் பழ மரங்களை உருவாக்கியுள்ளன.
இந்த வாணியாறு அணையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் செல்லுமாறு அலைன்மெண்ட் செல்கிறது. [100 % ஏற்றுமதி சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பசுமை விரைவுசாலை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு விடையை அடேங்கப்பா அந்த சாமியிடம் தான் கேட்க வேண்டும்.]
3) பல்லாயிரக்கணக்கான வவ்வால்களின் தாயகமான புகழ் பெற்ற சேலம்- அக்ரஹார நாட்டா மங்கலம் வவ்வால் தோப்புக்கு 2 கி.மீ தொலைவில், மின்னாம்பள்ளி அருகில் விரைவுச் சாலை செல்லுமாறு வழித் தடம் அமைக்க பட்டுள்ளது.
வனச் சட்டங்கள் சொல்வது என்ன?
1) 5 ஹெக்டேருக்கு கூடுதலாக வன நிலம் கையகப்படுத்தப் பட்டால், மத்திய அரசின் வனத்துறை MoEF செயலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
2) 100 ஹெக்டெருக்கு மேல் கையகப்படுத்தினால், வனத்துறையின் பிராந்திய அலுவலகத்தால் அப்பகுதியானது நேரடி ஆய்வுக்கு உட்பட வேண்டும். Green Corridor பசுமை சாலைத் திட்டத்திற்காக எடுக்கப் படவுள்ள வனங்கள் 120 ஹெக்டேர் ஆகும்.
3) விரிவான EIA சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமல், அதன் மீது பொது விசாரணை இல்லாமல் திட்டம் அடுத்த கட்டம் செல்ல முடியாது. விரிந்த கள ஆய்வுகள், ஆயிரக்கணக்கான பக்க அறிக்கை தயாரிக்க 3 மாதங்கள் தேவைப்படும்.
ஆக சட்டங்களும், விதிமுறைகளும், மத்திய வனத்துறை அமைச்சரகத்தின் வழிகாட்டுதல்களும் இப்படி எல்லாம் இருக்க “இன்றைக்கே சர்வே செய்து, நாளைக்கே சாலை போட்டு விட வேண்டும்” என்ற வெறியுடன் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் செயல்படுவது ஏன்? கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே, விவசாயிகளை வதைக்கிறதா?
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.