பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்

சந்திரமோகன்

சந்திர மோகன்

“விவசாயிகளை, விவசாயத்தை, பொதுமக்களை, சுற்றுச்சூழலை பாதிக்கும் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை (8 way Express Greenfield Corridor) வேண்டாம் ” என ஒரு போராட்டத்தை, நான்கு இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் கடந்த ஜூலை 6 ந் தேதியன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்த முடிவு செய்து அனுமதி கேட்டு கடிதம் தரப்பட்டும் இருந்தது. இத் திட்டத்திற்கு ஒரு அடையாள எதிர்ப்பாக நகல் அரசாணை எரிப்பு ஆர்ப்பாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. காவல்துறை அனுமதி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

தோழர். P.சண்முகம், பொது செயலாளர், த.நா.விவசாயிகள் சங்கம் – Cpim தலைமையில், பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் CPIM, CPI, CPIML & SUCI(C) தோழர்கள் அணிதிரண்டு முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தோம். சுற்றி வளைத்த காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலிருந்த ஜெராக்ஸ் பேப்பர்களை பறிப்பது, அவற்றின் மீது Water pocket canon மூலமாக தண்ணீர் பீச்சியடிப்பது என பரபரப்பு ஏற்படுத்தி, பெரும்பான்மையான விவசாயிகளுக்கு குழப்பம் & அச்சத்தை ஏற்படுத்தி கலைத்து விட்டு, 44 பேர்களை மட்டும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தது.

எளிதில் பிணையில் வரமுடியாத பிரிவு 7 (1) CLA அடிப்படையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், திட்டமிட்டதாகவும் பொய் வழக்கை புனைந்தது. தவறான பிரிவு சேர்க்கப்பட்டதால், FIR ல் தோழர்கள் கையெழுத்திட மறுத்தனர். “இதே மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்திய அரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டகாரர்களை விடுவித்த தமிழக காவல்துறை சேலம் மற்றும் திருவண்ணாமலை போராட்டக்காரர்கள் மீது மட்டும் ஏன் பொய் வழக்கு போட வேண்டும்? ” என்ற கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை.

தனியார் மண்டபத்திலேயே நேரம் அதிகமாக, இரவு ஆகிவிட்டது ; ஊடகங்கள் குவிந்து விட்டன. உளவுத் துறையின் ஆலோசனை பெற்று “அரசாணை பொது சொத்து, அதை எரித்ததால்” இப் பிரிவு சேர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.” எங்கள் காசு போட்டு ஜெராக்ஸ் எடுத்து வந்த பேப்பர்களை எரிக்க முயற்சித்தால், அந்த நடவடிக்கையில் எங்கு பொதுச் சொத்துக்கு சேதம், சதி எல்லாம் வருகிறது ?” என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத அதிகாரிகள் “மேலிடத்து உத்தரவு ” (காவல்துறை அமைச்சர் முதல்வர் தான்! ) என்ற உண்மையை உரைத்து விட்டு, பொய் வழக்கு போடும் குற்ற உணர்வே இல்லாமல் காவல்துறையினர், எங்களை ரிமாண்ட் செய்யும் நீதித்துறை நடவடிக்கையில் இறங்கினர். இது மேலிடத்து உத்தரவு என்று சொன்ன போதும், சிறைக்குள் சந்தித்த குற்றம் புரிந்த சிறைவாசிகள் பலரும் சொன்ன செய்தி காவல்துறை சட்டங்களை, நியாயங்களை கைவிடுகின்றன என்பது தான்!

“சின்னச் சின்ன குற்றங்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்ட எங்கள் மீது திருந்துவதற்கு வாய்ப்பு எதுவும் வழங்காமல், “ரவுடிகளை ஒழிப்பது” என்ற பெயரால், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளியுள்ளனர்.” “இந்திய தண்டனை சட்டங்கள் IPC கடுமையாக இருக்கும் பொழுது பொய் வழக்குகளை ஏன் காவல்துறை நாடுகிறது? ” என்பது நீதித்துறையும், மனித உரிமை ஆணையமும் அக்கறை கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

சிறைக்குள் …

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர், நீதித்துறை முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் என்ற உத்தரவுபடி, நள்ளிரவில் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். சேலம் மத்திய சிறையின், கடந்த 2001ம் ஆண்டு சில நாட்கள் சிறைவாசம் அனுபவத்தை ஒப்பிடும்போது, நிச்சயமாக நிறைய மாற்றங்கள் பார்க்க முடிந்தது. அதே சிறை, அதே செல்கள், அதே கழிப்பறைகள், குளியல் தொட்டிகள் தான் எனினும், வழங்கப்படும் உணவில், மருத்துவ சோதனை, மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முன்னேற்றம் இருந்தது.

மிகவும் குறிப்பிட வேண்டியது:-

ஒன்றிரண்டு விதிவிலக்கான வார்டன்கள் தவிர, அனைவரிடமும் (வார்டன்கள் துவங்கி சூப்பிரடெண்டட் வரை) மனித முகங்களை பார்க்க நேரிட்டது. கெடுபிடிகளை தவிர்த்து மனித உறவுகளை (Human Relations) பேண, தற்போதுள்ள சேலம் மத்திய சிறை நிர்வாகம் முயற்சிப்பது போல தெரிகிறது. இது கடந்த கால மோசமான நிலைமையோடு ஒரு ஒப்பீடு தான்! அரசியல் சிறைவாசிகள், மறியல் வழக்கு சார்ந்தவர்கள் என்பதாலும் ஒரு நிதானமான அணுகுமுறை இருப்பது வழக்கமானது தான்!

எட்டு வழி சாலைக்கு சிறைக்குள்ளும் எதிர்ப்பு!

பசுமைசாலை திட்டத்தை எதிர்த்ததால் தான் சிறைபட்டிருக்கிறோம் என்பதை அறிந்த சிறைவாசிகள் (Prisoners) முதல், சீருடைவாசிகள் வரை தார்மீக ஆதரவை வெளிப்படையாக காட்டினர். விவசாய சமூகத்தைச் சார்ந்த எவரொருவரும் வேறு எப்படி நினைக்க முடியும் ? ஒன்றிரண்டு சிறை அதிகாரிகள் மட்டும், “இத்தகைய போராட்டங்கள் அதிகரித்தால் நக்சல்பாரி இயக்கம் வளர்ந்து விடும்” என அரசாங்கம் கருதுவதாக, அரசாங்க நிலைப்பட்டை தெரிவித்தனர்.

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்

நான்கு நாட்கள் சிறையின் 8 மற்றும் 7 வது தொகுதிகளில் இருக்க நேர்ந்தது. நல்லது, கெட்டது என பலவற்றையும் பார்க்க, கேட்க நேரிட்டது. தமிழக அரசாங்கம் சிறைகளை எவ்வளவு மோசமாக கருதுகிறது, அணுகுகிறது என அறிந்து கொள்ள முடிகிறது.

நிதி ஒதுக்கீடும் பணியாட்கள் ஒதுக்கீடும் இல்லாத அவலநிலையில்…

இந்தியாவின் நவீன அதிவிரைவு சாலைகளில், சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை, இரண்டாம் இடத்தில் உள்ளது. NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சாத்தியக் கூறு அறிக்கை / Feasibility Report அடிப்படையில், இந்த சாலைக்காக ரூ.10,000 கோடி முதல் ரூ.13,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் & வனத்துறை அமைச்சகம் MoEF & CC இதுவரையிலும் சுற்றுச்சூழல் ஒப்புதல் /EC வழங்கப்படாத திட்டத்திற்கு, குறிப்பான பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகளில் (Specific Terms of Reference /Specific ToR) 1)சாத்தியமான வேறு வழிகளை alignment கண்டறிய சொல்லி இருக்கும் நிலையில், 2) செங்கம் – சேலம் இடையே கல்ராயன் வனப்பகுதி பாதிக்காத வகையில் மாற்று வழியை Realignment உருவாக்க சொல்லி இருக்கும் நிலையில்…

ஏராளமான பணத்தை கட்சிகாரர்கள், அதிகாரிகளிடம் வழங்கி, “விவசாயிகள் தங்கள் நிலத்தை/ சொத்துக்களை இத் திட்டத்திற்கு வழங்கி விட்டார்கள்” என்ற நிலையை உருவாக்க சாம, பேத,தான, தண்ட என அனைத்து வழிமுறைகளையும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் கையாள்கிறது.

ஆனால் … முதலமைச்சர் சிறை மேம்பாட்டுக்கு என எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

1) சேலம் மத்திய சிறையில், பல கழிப்பறைகளில் கதவுகள் இல்லை.

2) கட்டியுள்ள 7 கழிப்பறைகள் முடிக்கப்படாமல் உள்ளன.

3) குடிநீர் உள்ளது ; ஆனால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை.

4) காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை; 800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். (40 சிறைவாசிகளுக்கு ஒரு Cook என இருக்க வேண்டும்.). தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.

5)தூய்மை பணிகளுக்கு என ஒரு பணியாளர் கூட இல்லை. எந்தவிதமான சுத்தப்படுத்தும் கருவிகளும் இல்லை. “சிறைவாசிகளே கூட்டுகிறார்கள்” என்பதில் குற்றம் காண என்ன இருக்கிறது என்ற அதிகார வர்க்கத்தின் குரலுக்கு அப்பால், #வெறுங்கால்களை பிரஸ் போல் பயன்படுத்தி, மணலை போட்டு கழிவறை பேசின்களை சுத்தம் செய்யும் அவலங்களை மனித உரிமை ஆணையமும், த.நா. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக் குழுவும் வந்து பார்வை இட வேண்டும். Green Corridor பற்றி பேசும் முதல்வர் இவை பற்றியும் கவலைப்பட வேண்டும்.

6)நாடு முழுவதும் 8 மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டம் பொருந்தும். சுமார் 150 தண்டனை கைதிகளில், 100 பேர் வரை சிறை வளாகத்தில் உள்ள Factory யில் பணியாற்றி வருகின்றனர். அவர்களது 8 மணி நேர உழைப்புக்கு கூலி ரூ.18 மட்டுமே!

இளையோர் சீர்திருத்த பள்ளி :-

மிகப்பெரிய மனித உரிமை மீறல் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைய குற்றவாளிகளை, மத்திய சிறையின் ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பதாகும்.சங்ககிரி இளையோர் சீர்திருத்தப் பள்ளி கட்டிடம் இடிந்து விட்டது என்ற பெயரால் பல மாதங்களாக, 50 க்கும் மேற்பட்ட இளையோர் எவ்வித நடமாடும் சுதந்திரமும் இல்லாமல், ஒரு தளத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். HSC அதி பாதுகாப்பு செல் போல அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். காரணங்கள் எதுவாக இருப்பினும், இது தவறானது. அவர்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

8 வழி சாலை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் இவை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்னும் பல செய்திகள் உள்ளன. வேறொரு தருணத்தில் பார்ப்போம். சிறைவாசம் பெற்ற 44 பேர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் ஆவார். 80 வயது தாண்டிய தோழர்களும் இருந்தனர். அவர்களது உணர்வு, உறுதி மதிக்கத்தக்கதாகும்.

சிறைவாசம் பற்றி சிறிதளவும் கவலைப்படாத இடதுசாரி பட்டாளம், எண்ணிக்கையில் அதிகமான மக்களை திரட்ட உறுதி பூண்டது. நாங்கள் சிறையிலிருந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் “விடுதலை செய்” எனத் தோழர்கள் போராடிய செய்தியும், நான்காம் நாள் சிறைவாசலில் தந்த உற்சாகமான வரவேற்பும் கம்யூனிஸ்ட் போராட்டஉறுதியை உயர்த்தியது!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.