ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3

பா.ஜெயசீலன்

ஏழு சாமுராய் விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு சாமுராய்கள் பற்றி சென்ற கட்டுரையில் விடுபட்டுவிட்ட சில முக்கிய விஷயங்கள் முதலில். ஏற்கனவே சொன்னதை போல சாமுராய்கள் போர் செய்வதற்கு என்றே புணர்ந்து பிள்ளை ஈன்ற கூடியவர்கள். 4 வயதில் குழந்தைகளுக்கு தொடங்கும் அடிப்படை சண்டை பயிற்சி அந்த குழந்தைகளின் 14 வயதில் போர்க்களத்தில் அடிப்படை வேலைகளை (ஆயுதங்களை சுமந்து செல்லுதல் போன்றவை) செய்வதற்கு தயார்படுத்திவிடும். 16 வயதில் சாமுராய்களின் குழந்தைகள் போர்க்களத்திற்கு சண்டை செய்ய தயாராகிவிடுவார்கள். சாமுராய்களின் குழந்தைகள் பிறந்த நாள்தொட்டு சாமுராய்களின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ பயிற்றுவிக்கப்படுவார்கள். சாமுராய்களின் நடத்தை/வாழ்வியல் முறைகள்(code of conduct) Bushido எனப்படுகிறது. சாமுராய் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று Bushido விதிகள் தெளிவாக சொல்கிறது. சொந்த சாதி திருமணம், Damiyo எஜமானருக்கு கேள்விகளற்ற விசுவாசம், எந்த சூழ்நிலையிலும் பின்வாங்குதலோ/சரணடைதலோ கூடாது, சதா 24/7 உயிரை விடுவதற்கு தயாராகிருக்கும் மனநிலையோடு இருத்தல் என்று அதிரி புதிரியான சட்டதிட்டங்களை கொண்டதுதான் Bushido. Bushidoவின் முக்கிய ஏழு வாழ்வியல் விதிகளாக நீதி(morality), துணிவு(courage), கனிவு(benevolence), மரியாதை(respect),நேர்மை(honesty), கெளரவம்(honor), விசுவாசம்(loyalty) போன்றவை இருக்கின்றன.

கீதாசாரத்தை கேட்டால் தோன்றுவதை போல் மேலோட்டமாக பார்த்தால் நல்ல கருத்தாதானே சொல்லியிருக்காங்க என்று தோன்றலாம். ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் தான் அதன் அயோக்கியத்தனம் தெரியும். உதாரணத்திற்கு நீதியையும், கனிவையையும் Bushido வலியுறுத்தும் அதே வேளையில்தான் சாமுராய்கள் தங்களுக்கு கீழிருக்கும் சாதியினரை நினைத்த நேரத்தில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் அனுமதிக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். ஒருவகையில் Bushido விதிகள் சாமுராய்களை மூளை சலவை செய்து, சாமுராய்களை பற்றிய போலி கற்பிதங்களை/பெருமைகளை ஊட்டி, அவர்களை தாங்கள் அடியாளாகயிருக்கும் Damiyo எஜமானருக்காக எந்த நேரத்திலும் தங்களை பலியிட்டு கொள்ளும் இளிச்சவாய தியாக தீபங்களாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தன. சாமுராய்களின் இந்த காட்டுத்தனமான மாட்டு மூளையால் பல்லாயிரக்கணக்கான சாமுராய்கள் தங்களது உயிரை தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் விட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது. உதாரணத்திற்கு சாமுராய்களின் எஜமானர் தன்னிடம் வேலை பார்க்கும் 10 சாமுராய்களை கூட்டி, அந்த ஊருல 1000 பேரு வந்துட்டு இருகாங்க, போயிட்டு எல்லாத்தயும் கொன்னுட்டுவாங்க என்று சொன்னால், இந்த 10 சாமுராய்களும் ok ஜி..சிறப்பா பண்ணிரலாம் ஜி என்று குதிரை ஏறி கிளம்பி சென்று வெட்டுப்பட்டு செத்தார்கள். ஒரு சாமுராய்யை  திடீரென்று எதிரிகள் சுற்றிவளைத்து மாட்டிக்கொண்டால் மான் கராத்தே போடாமல்(Bushido படி பின்வாங்குதல் தப்பு என்பதால்) வயிற்றை அறுத்துக்கொண்டு செத்தார்கள்.

சாமுராய்கள் தங்களுக்கு தாங்களாகவே வயிற்றை அறுத்து கொண்டு மகிழ்ச்சியாக சாகும் சடங்கிற்கு பெயர் Sepukku. ஜப்பானிய படங்களை ரசித்து ருசித்து என்ஜாய் பண்ணி பார்த்து அதையே சில்பான்ஸ் பண்ணி தமிழில் எடுக்கும், உலகையே கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்ப்பேன் என்று அடம்பிடித்து 24/7 கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் மாறுவேட போட்டியில் சாமுராய் வேடம் போட்ட கோமாளிபோல இருக்கும் ஒரு கதாபாத்திரம் சம்மந்தம் இல்லாமல் Sepukku பண்ணி மட்டையாகும் காட்சி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சாமுராய்களின் Bushido எந்தெந்த நேரங்களில் ஒரு சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறது. தோல்வி உறுதியாகும் பொழுது, எதிரியிடம் பிடிபடும் சூழல் வரும்பொழுது, சாமுராய் வேலைசெய்துவந்த எஜமானர் இறக்கும்/கொல்லப்படும்போது, சாமுராயின் எஜமானர் ஒரு சாமுராய்யை சாதி நீக்கம்/பணி நீக்கம் செய்யும்பொழுது போன்றான சூழ்நிலைகளின் போது  சாமுராய்கள் தங்களது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு (நம் ஊரில் பிறரை கவுரவ கொலைகள் செய்யும் சைக்கோ மண்டையன்களுக்கு தங்களையே கொன்று கொள்ளும் சாமுராய்  மண்டையன்கள் எவ்ளோவோ பரவாயில்லை) Sepukku செய்துகொள்வார்கள். ஒரு சாமுராய் தனது எதிரியிடம் பிடிபட்ட பின்னரும் கூட தான் Sepukku செய்து கொள்ள விரும்புவதாய் சொன்னால் அவர்கள் அதை அனுமதிப்பார்கள். அதே போல தனக்கு தானே Sepukku செய்து கொள்ள முடியாத காயம்பட்ட நிலையில் ஒரு சாமுராயிருந்தால், அவர் பிறரின் உதவியோடு sepukku செய்து கொள்வார். ஜப்பானுக்கு வந்த ஐரோப்பியர்கள் இதையெல்லாம் பார்த்து,கேள்விப்பட்டு இந்த முட்டாள்தனங்களை பார்த்து டெரராகி போனார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியர் (போர்த்துகீசியர் என்று நினைக்கிறன்) இந்த சாமுராய் மண்டையன்களின் கோமாளித்தனங்களை பார்த்துவிட்டு இப்படி மரணத்திற்காக அலையும், மரணத்தை, மனித உயிரை  இவ்வளவு எளிமையாக எடுத்து கொள்ளும் இன்னொரு இனக்குழுவை உலகில் தான் வேறெங்கிலும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

சாமுராய்கள் மத்தியில் மிகவும் கீழானவர்களாக Ronin சாமுராய்கள் பார்க்க பட்டார்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் எஜமானர் அற்ற/இழந்த சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டும் என்பது bushido விதி. அப்படி செய்துகொண்டு அவர்கள் சாகாமல் இன்னமும் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதே மற்ற சாமுராய்கள் Ronin சாமுராய்களை சாதி விலக்கு செய்ய முக்கிய காரணம். கடைசியாக Ronin சாமுராய்கள் பற்றி. ஒரு சாமுராய் தனது Bushido சட்டத்தை மீறி நடந்து விட்டால் அந்த சாமுராயின் எஜமானர் Daimyo அந்த சாமுராய்யை நிரந்தரமாகவோ/தற்காலிகமாகவோ விளக்கி வைத்துவிடுவார். கிட்டத்தட்ட நாட்டாமை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதை போன்றது. அது ஒரு சாமுராய்க்கு மிக பெரிய அவமானம். ஒரு Daimyo விலக்கிவிட்ட சாமுராய்யை வேறுயாரும் சேர்த்து கொள்ளமாட்டார்கள். இந்நிலையில் அந்த சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டியதுதான். சிலநேரங்களில் Daimyo விடம் முரண்பட்டு போடா மயிராண்டி என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்ற சாமுராய்களும் உண்டு. அவ்வாறு பிரிந்து சென்ற சாமுராய்கள் ஒரு படையை திரட்டி Daimyoகளை ஓடவிட்டு அடித்த நிகழ்வுகளும் ஜப்பானிய வரலாற்றில் உண்டு. பொதுவாக இப்படி சாதிநீக்கம் செய்யப்பட்டு Sepukku செய்து கொள்ளாமல் சுற்றி திரிந்த சாமுராய்களுக்கு தங்களது சாதி திமிரையும் விட முடியாமல், வேறு வேலைகளும் செய்ய தெரியாமல் கொள்ளையர்களாகவும், பணக்காரர்களின் காவல்காரர்களாவும், பணத்திற்கு வேலை செய்யும் அடி ஆள்களாகவும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டியது Ronin சாமுராய்கள், சாமுராய்களால் சாதி விலக்கு செய்யப்பட்டாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து என்பது மற்ற சாதியினரைவிட மேலானதாகவே கருதப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்களது வியாபாரத்திற்கு ஜப்பானிய நிலவுடைமை முறை சிக்கலாகயிருப்பதை உணர்ந்து அதை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார்கள். அதற்கு ஏற்றத்தை போல ஜப்பானை கிட்டத்தட்ட 300 ஆண்டுகாலம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுவரை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட Shogunகள் மேற்கத்தியர்களை உள்ளே விட்டால் தங்கள் கலாச்சாரம் கெட்டுவிடும் என்று கூறி தங்களை உலகிலிருந்து துண்டித்து கொண்டு பழமையில் முழுகினார்கள். போர்களற்ற ஒற்றை தலைமையிலான ஆட்சியில் ஜப்பானில் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டது. அமைதியான சமூக சூழலில் தாழ்த்தப்பட்ட சாதியான வியாபாரிகள் செழித்தார்கள். அக்கினி சட்டியில் பிறந்தவர்கள் என்று கோமாளித்தனமாக பேசி திரிந்த சாமுராய்கள் சோற்றிற்கே வழியில்லாமல் தெருவில் திரிய வேண்டிய நிலைவந்தது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து 3 அதி நவீன ஆயுத கப்பலோடு வந்த Mathew Perry என்ற அமெரிக்க தளபதி ஜப்பானிய ராஜா உடனான அமைதி உடன்படிக்கையில், ஜப்பானில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி வசூலிக்கும் அனுமதியைப் பெற்றார்.

அதோடு இன்னமும் வில், அம்பு, வேல் கம்பு, திருப்பாச்சி அருவா என்று எந்த நவீனமும், தொழிநுட்பமும் தெரியாமல் நம் ஊரின் ஆதிக்க சாதி கோமாளிகளை போல சுற்றி கொண்டிருந்த அக்கினி சட்டி சாமுராய்களை துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு தூக்கிப்போட்டு மிதித்தார். 19ஆம் நூற்றாண்டிலும் சாமுராய்கள் அந்த சண்டைகளில் Sepukku செய்தார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு மங்கூஸ் மண்டயன்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம். ஒருவழியாக சாமுராய் மண்டயன்களை அடக்கி ஒடுக்கி ஜப்பானை அரசியல் சாசன மன்னராட்சி(constitutional monarchy) முறையாக மாற்றி நிலவுடமை சமூக முறையையும், அதன் நிர்வாக முறையையும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது.

இதன் மூலம் பெரும் நன்மையடைந்த சாதி வியாபார சாதிகள். அடுத்த நன்மை அடைந்த சாதிகள் வேளாண்சாதிகள். இதன்மூலம் கிட்டத்தட்ட 1000 ஆண்டு காலம் தாங்கள் அனுபவித்து வந்த சமூக அந்தஸ்தையும், தங்களது அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் சாமுராய் சாதிகள் இழந்தன. போர் வீரர்களாக இருந்த அவர்கள் ஜப்பானிய அதிகாரவர்க்கமாக, அதிகாரத்தோடு தொடர்புடையவர்களாக(bureaucrat)  மாறிப்போனார்கள். இந்த காலத்தில் அப்படி bureaucrat ஆக இருந்த சாமுராய்கள் நல்ல வசதியான வியாபார சாதியினரோடு திருமண உறவு வைத்துக்கொண்டார்கள். அந்த புள்ளியில் நம்மூரில் நாடார் சாதி எழுந்துவந்ததைப் போல வியாபார சாதியினரும் தங்களது சாதிய அந்தஸ்தை கூட்டிக்கொண்டவர்களாய் ஆனார்கள். இதுபோன்ற ஒரு கால பின்னணியில்தான் அகிராவின் சாமுராய் சாதி அப்பாவிற்கும், வியாபார சாதி அம்மாவிற்கும் நடந்த திருமணத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். என்னதான் சாமுராய்கள் ஜப்பானிய சமூகத்தில் அதிகாரவர்க்கமாக, ஆளும் வர்க்கத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாண்டவர் பூமி ராஜ்கிரணை போல தங்களது கடந்த காலத்தின் மீது ஏக்கமிருந்தது. நினைத்த நேரத்தில் கொல்லவும், நினைத்த நேரத்தில் வண்புணரவும் தங்களுக்கிருந்த அதிகாரத்தின் மீது ஏக்கம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டாம் உலகப்போரில் வாண்டடாக போய் தலையை குடுத்து( இரண்டாம் உலகப்போரில் பின்விளைவுகளை யோசிக்காமல் காட்டுத்தனமாக செயல்பட்ட ஜப்பானிய  அரசின், ராணுவத்தின் உயர்பதவிகளில் இருந்த சாமுராய்களின் ரோல் என்ன என்பது முக்கியத்துவம் பெறுகிறது..இதைப்பற்றி எனக்கு தெரியவில்லை..ஆனால் ஜப்பானின் காட்டுத்தனமான செயல்பாடுகளுக்கு பின்னால்  மாட்டு மூளை சாமுராய்கள் செயல்பட்டிருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது) நாயடி பேயடி வாங்கி லச்சக்கணக்கான மக்களை காவுகொடுத்து ஜப்பான் திக்கி திணறி எழ முயன்று கொண்டிருக்க, உலக நாடுகள் அப்பா என்னா அடியா ஜப்பானுக்கு என்று பரிதாபப்பட்டு முடிக்காத காலத்தில் 1954ல் சாமுராய் அகிரா எழுதி, இயக்கிய seven samurai வருகிறது. seven samurai திரைப்படத்தின் கதை நடக்கும் காலம் 16ஆம் நூற்றாண்டு. முதல் சுற்று ஜப்பானிய நிலவுடைமை முறை முடிவுற்று ஜப்பானில் மிகப்பெரிய அதிகார போட்டி நடந்துகொண்டிருந்த காலம் அது. ஓவ்வொரு Damiyoகலும்  தங்களுக்குள் அடித்துக்கொண்டிருந்த காலம் அது. தொடர் சண்டைகளால் ஏரளமான Damiyoகள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த சாமுராய்கள் Ronin சாமுராய்களாய் மாறி சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. அதில் பெரும்பான்மையினர் கொள்ளைக்காரர்களாய் மாறி விவசாயிகளையும், வியாபாரிகளையும் தெறிக்க விட்டுக்கொண்டிருந்த 16ஆம் நூற்றாண்டில் நடக்கும் செவன்  சாமுராய் கதையில் சாமுராய் அகிரா, சாமுராய்களின் அதுவும் Ronin சாமுராய்களின் Bushidoவை முன்வைத்து சாமுராய்கள் எவ்வளவு தங்கமானவர்கள், எவ்வளவு வீரமானவர்கள் என்று ஜப்பானியர்களுக்கு நினைவுபடுத்தி பாடம்/படம் எடுக்கிறார்.

சாமுராய்களை பற்றிச்சொல்லவே இந்த கட்டுரை சரியாய் போச்சு…விமர்சனம் அடுத்தக்கட்டுரையில்…

பா. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.