மனுஷ்ய புத்திரன்
சென்னையில் கவிக்கோ மன்றம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியின் இன்னொரு அத்தியாயம். ஏற்கனவே பொதுகூட்டங்கள் நடத்துவதற்கு கடும் கெடுபிடிகள் இருக்கின்றன. இப்போது அரங்க கூட்டங்கள்மீதும் கைவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் கூட்டம் நடத்துவதற்காக இருந்த பல இடங்கள் படிப்படியாக குறைந்துவிட்டன.
கவிக்கோ மன்றம் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் சிறு அமைப்புகளும் கூட்டம் நடத்துவதற்கான சகல வசதிகளும் கொண்ட மிகவும் நேர்த்தியான அரங்கம். ஒலி-ஒளி அமைப்பில் கவிக்கோ மன்றம் அளவுக்கு சிறப்பான அரங்கம் சென்னையில் அரிது. மேலும் யார் அரங்கு கேட்டாலும் மிகுந்த நட்புணர்வுடன் கொடுப்பார்கள். வருடம் முழுக்க அங்கு ஏதாவது ஒரு கூட்டம் நடந்துகொண்டே இருக்குமளவு சென்னையின் அறிவுலக அடையாளமாக கவிக்கோ மன்றம் திகழ்கிறது. அதன் உரிமையாளர் முஸ்தபா மிகுந்த ஜனநாயக பண்பும் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் மிக்கவர். எல்லா தரப்பினருக்கும் பயன்படும் ஒரு சிறந்த அரங்கமாக அதை அவர் மிகுந்த கனவுடன் உருவாக்கி நடத்தி வருகிறார். கட்டண விஷயங்களில் கூடகறார்தன்மை அற்ற நெகிழ்வான முறையையே கவிக்கோ மன்றம் கடைபிடித்து வந்திருக்கிறது.
உயிர்மை கடந்த மூன்றாண்டுகளாக தனது பெரும்பாலான கூட்டங்களை கவிக்கோ மன்றத்திலேயே நடத்தி வந்திருக்கிறது. கவிக்கோ மன்றத்திற்கு நெருக்கடிகள் தரப்ப்பட்டால் அது தமிழ் இலக்கிய களத்திற்கும் மாற்று சிந்தனையாளர்களுக்கும் பெரும் இழப்பாக இருக்கும். மேலும் இது ஒரு மோசமான முன்னுதாரணமாகி எலலா அரங்க கூட்டங்களையும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வருவதற்கு காரணமாகி விடும்.
கவிக்கோ மன்றம் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிககான ஒரு களம். எனவே தமிழக அரசு கவிக்கோ மன்றத்தின் மீதான வழக்கை கைவிட வேண்டும். பேசுகிற மனிதர்களின் வாயை மட்டுமல்ல, பேசுகிற இடங்களின் வாயில்களையும் அடைக்க நினைத்தால் அது நீண்ட நாட்கள் நீடிக்காது. எல்லாவற்றையும் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.