ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பாகம்- 2

ப. ஜெயசீலன்

1993ல் அகிரா அளித்துள்ள இந்த நீண்ட பேட்டி ஒரு மனிதராகவும், இயக்குனராகவும் அவரை புரிந்துகொள்ள உதவக்கூடியது. ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் எனது தந்தை மதிப்புமிக்க ராணுவ அதிகாரியாக இருந்தாலும் தனது குழந்தைகளை திரைப்படத்திற்கு அழைத்து செல்லும் பழக்கம் கொண்டிருந்தார் என்று அகிரா சொல்கிறார். ஒரு ராணுவ அதிகாரி திரைப்படத்திற்கு தனது குழந்தைகளை அழைத்து செல்வதில் என்ன பெரிய ஆச்சரியம் என்று நமக்கு தோன்றலாம். மிக எளிமையான ஒரு பதிலாக அகிரா சொன்னது தோன்றினாலும் அந்த பதிலுக்கு பின் ஜப்பானின் நிலவுடைமை சமூக முறை(japan feudal society) நிலவிய 12ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரையான சமூக கட்டமைப்பை புரிந்துகொள்வது அவசியமாகிறது.

நம்முடைய சமூகத்தில் பார்ப்பனர்கள் குறிப்பாக கலைத்துறையில்/திரைப்படத்துறையில் உள்ளவர்கள் தங்களுடைய பேச்சின்/பேட்டியின் இடையில் “நாங்க ஒரு ஆச்சாரமான ஐயர் குடும்பம்” “i come from a orthodox brahmin family” “i’m from a conservative brahmin family” போன்ற பதங்களை ஒரு பெருமித தொனியோடு சொல்வதை நாம் கவனித்திருப்போம். பழமையான, பிற்போக்குத்தனமான என்ற பொருள் தரும் orthodox, conservative போன்ற சொற்களில் பெருமையடைய ஒன்றுமில்லை. பிறகு பார்ப்பனர்கள் ஏன் அந்த பதங்களை பெருமிதத்தோடு சொல்கிறார்கள்? அவர்கள் அதை சொல்வதின் அர்த்தம்,வர்ண கோட்பாட்டின் படி சாதிய படிநிலையில் உயரத்தில் நிற்கும் தங்களுக்கு பிறர் எவரும் சமமாகமுடியாது என்கின்ற நம்பிக்கையை தனது குடும்பம் கொண்டிருந்தாலும், தான் பார்ப்பனர்களுக்கு குறிப்பாக பார்ப்பன பெண்களுக்கு விதிக்கபடாதா செயல்களான ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபடுகிறேன் என்பதே. இன்னும் தெளிவாக சொன்னால் ஆடினாலும்,பாடினாலும் தனது சாதிய பெருமையை நிறுவும், பற்றிக்கொள்ளும் assertiveness மனநிலைதான் அவர்களை அப்படி சொல்ல வைக்கிறது. அதே போன்றதொரு மனநிலையில்தான் அகிரா அந்த பதிலை அளிக்கிறார்.

ஜப்பானிய நிலவுடைமை சமூகமுறை என்பது நமது முதுகு தண்டு சில்லிட்டு போகும் அளவிற்கு நம்முடைய சாதிய முறையோடு ஒத்துப்போக கூடியது. நிலவுடைமை சமூக முறை என்பது மன்னர் நேரடியாக ஆட்சி செலுத்தாமல் குறுநில மன்னர்களை ஒவ்வொரு பகுதிக்கும் நியமித்து அவர்களை அந்த பகுதியின் நிர்வாகத்தை கவனிக்க சொல்வது. பிரதிபலனாக மன்னருக்கு தேவையான வரியை செலுத்தி விடுவதோடு, தேவைப்படும் நேரங்களில் படை திரட்டி அளிப்பதும் அந்த குறுநில மன்னரின் வேலை. ஜப்பானிய feudal societyயை ஒத்துதான் European feudal society யும். கூகிள் செய்து படிக்கவும்.

ஜப்பானிய நிலவுடைமை சமூகமும் நம்முடைய சாதிய படிநிலைகளை போல கூம்பு வடிவத்தை கொண்டது. அந்த சமூகத்தின் உயரத்தில் ஜப்பானின் மன்னர் இருந்தார். ஜப்பானிய மன்னரின் இருப்பு என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் ஜப்பானிய மன்னர் என்பவர் ஜப்பானின் மதகுருவாகவும் பார்க்கப்பட்டார். ஜப்பானிய மன்னர் வம்சம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று ஜப்பானிய மக்கள் நம்பியதால் மன்னரின் இருப்பை யாராலும் கேள்விக்கு உட்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது என்கின்ற நிலை. நிலவுடைமை முறை சமூகத்தின் உச்சத்தில் மன்னர் இருந்தாலும் அவருக்கென்று எந்த அதிகாரமோ, நிர்வாக அமைப்போ, ராணுவமோ இல்லை. மன்னரின் பதவி என்பது முழுக்க முழுக்க அலங்காரத்திற்கான, சடங்கிற்கான பதவி மட்டுமே. நிஜத்தில் ஜப்பானை ஆண்டது shogun மற்றும் daimyo தான். shogun என்பவர்கள் யார்?

shogun என்பது மன்னரால் நியமிக்கப்படும் ஒரு பதவி. யார் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்? மிக சிறப்பாக செயல்படும் பலம்மிக்க daimyo விலிருந்து. daimyo எப்படி பலம்பெற முடியும்? ஏனென்றால் அவர்களுக்கு அடுத்த இடத்திலிருக்கும் சாமுராய்கள் daimyo விடம் மிக மிக விசுவாசமான படைவீரர்களாக இருப்பார்கள். சாமுராய்கள் என்பதன் பொருள் ஜப்பானிய மொழியில் சேவகம் செய்பவர் என்று பொருள். வெறும் 7 சதவிகிதம் மட்டுமே இருந்த சாமுராய்கள் நிலவுடமை முறை சமூக அமைப்பில் ஜப்பானை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சாமுராய்களுக்குள் பல்வேறு சாதிய படிநிலைகள் இருந்தன. ஒவ்வொரு சாமுராய் சாதியும் தங்கள் சாதிகளுக்குள்ளேதான் திருமணம் செய்யமுடியும், செய்ய வேண்டும். சாமுராய்களுக்குள் உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட shimin சாதி சாமுராய்கள்தான் daimyo வாக இருந்தார்கள். இருக்கின்ற daimyoவில் வலிமையானவர் எவரோ அவர்தான் ஜப்பானிய படை தலைவர் பதவியான shogunஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சாமுராய்கள் தாங்கள் பணிபுரிந்த daimyo களிடம் முரட்டுத்தனமான விசுவாசத்தை கடைபிடிக்க தலைமுறை தலைமுறையாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கென்று சொந்த புத்தியோ, சிந்தனையோ, கருத்தோ கிடையாது. daimyo சாமுராயிடம் நீயே ஒரு குழி தோண்டி போய் படுத்துக்கோ என்றால் அதையும் தயங்காமல் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். சாமுராய்கள் தங்களது daimyo வசிக்கும் பகுதிக்குள் மாட மளிகை கட்டி வசித்தார்கள். சாமுராய்கள் மட்டுமே எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நடமாடும் உரிமை பெற்றிருந்தார்கள். தனது எஜமானரை பகைத்து கொண்ட அல்லது கோபப்படுத்திய சாமுராய் சாதி விலக்கிற்கு உள்ளாவர். அப்படி கொஞ்சம் சொந்த மூளையை பயன்படுத்தி அடித்து துரத்தப்படும் சாமுராய்களின் பெயர் ronin சாமுராய்கள்.இவர்கள் சாமுராய்களிலேயே கீழானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இரத்தின சுருக்கமாக சொல்லவேண்டுமானால் சாமுராய்கள் ஜப்பானில் அக்கினி சட்டியிலிருந்து பிறந்தவர்கள்.

கிட்டத்தட்ட 90 சதவிகதமாக இருந்த விவசாயிகள், மீனவர்கள், கைவினை பொருட்கள் செய்பவர்கள் எல்லோரும் ஜப்பானிய சமூகத்தின் இரண்டாம் இடுக்கிலிருந்தார்கள். சாமுராய்கள் இவர்களை ஆதிக்கம் செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு சாமுராய் நினைத்த நேரத்தில் இந்த வேளாண்குடி மக்களை வெட்டி வீழ்த்த அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. சாமுராய்கள் இந்த வேளாண்குடி பெண்களை நினைத்த நேரத்தில், புணர அவர்களுக்கு அதிகாரமிருந்தது. அதே நேரத்தில் வேளாண்குடியை சேர்ந்த ஆண், சாமுராய் பெண்களை கரெக்ட் செய்ய முயன்றால் தலையை வெட்டி ரயில் தண்டவாளத்தில் போட்டுவிடுவார்கள்.

விசித்திரமாக நம் ஊரில் கெத்து காட்டும் நாட்டு கொட்டை செட்டியார் போன்ற வியாபார சாதிகள் ஜப்பானில் இழிசாதியாக பார்க்கப்பட்டன. சீனத்து கன்பியூசியஸ் மூலம் ஜப்பானுக்குள் வந்த புத்தமதம் எந்த உடல் உழைப்பையும் செலுத்தாமல் அடுத்தவன் உழைப்பை காசாக்கும் வியாபாரிகளை இழிவாக பார்த்ததன் விளைவாக வியாபாரிகள் ஜப்பானிய சூத்திர சாதிகள் ஆனார்கள். அவர்களது குடியிருப்புகள் ஊருக்கு வெளியே இருந்தது. ஜப்பானிய சமூகம் அவர்களை வெறுத்து ஒதுக்கியது. இருந்தாலும் வியாபாரத்திலிருந்ததால் இந்த சாதியினரிடம் பணப்புழக்கம் அதிகமிருந்தது. அதனை கொண்டு அவர்களுக்கு அதிகாரவர்க்கத்தோடு ஒரு இணக்கமும், தொடர்ப்புமிருந்தது.

இவை எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் நெருக்கமாக பட்ட ஒன்று ஜப்பானிய நிலவுடமை முறை சமூகத்தில் உண்டு. அதாவது ஜப்பானிய தலித்துகள். எப்படி பார்ப்பனிய ஹிந்து மதம் நான்கு வர்ணங்களுக்கு வெளியே சிலரை நிறுத்தி avarna என்று ஒதுக்கியதோ அதே போல ஜப்பானிய சமூகமும் அவர்களுடைய சமூகத்தில் ஒரு பிரிவினரை தங்களது சமூக அமைப்பிலேயே சேர்க்காமல் ஒதுக்கியது. அவர்களின் பெயர் Burakumin(புற நகர் மக்கள்(கிட்டத்தட்ட சேரி மக்கள் என்னும் பொருளில்). அவர்கள் ஏன் Burakumin ஆனார்கள்?

(இந்த 10 நிமிட காணொளியை நிச்சயம் பார்க்கவும் )அவர்கள் தீட்டாக கூடிய செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள். அம்பேத்கர் எழுதிய The untouchables who are they? why they became untouchables என்னும் நூலில் “அசுத்தம் அல்லது தீட்டு” என்பதை குறித்து மிக நுட்பமாக, விரிவாக மானுடவியல் வரலாறு சார்ந்து விளக்கி ஆராய்வார். ஏன் பெண்களின் மாதவிடாய், குழந்தைப்பேறு, விலங்குகளின் இறைச்சி, தோல் சார்ந்த தொழில்கள், துப்புறவு தொழில்கள் போன்றவை உலகின் பல்வேறு பண்டைய சமூகங்களில் அசுத்தமானவைகளாக கருதப்பட்டன, அது போன்ற தொழில்களை யார் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள், பின்பு எப்படி ஐரோப்பிய சமூகங்களில் அவை மறைந்தன, இந்திய சமூகத்தில் அந்த சமூக வேறுபாடுகள் மறையாமல் பார்ப்பனிய ஹிந்து மதம் எப்படி தடுத்தது, தடுத்து அந்த முறைக்கு சாதிய ரீதியான கோட்பாட்டு வலிமையை ஹிந்து மதம் எப்படி ஏற்படுத்தியது என்று மிக அற்புதமாக ஒரு நாவலை போல விவரிப்பார்.

புத்தமதம் வருவதற்கு முன்பு ஜப்பானில் shinto என்னும் இயற்கையை வழிபடும் மதமிருந்தது. எல்லா பண்டைய சமூகங்களை போலவே ஜப்பானிய சமூகத்திலும் சில பல விஷயங்கள் அவர்களின் மதத்தின் அடிப்படையில் kegare(தீட்டு) என்று கருதப்பட்டன. விலங்கு மாமிசத்தை விற்பவர்கள்(தின்பது தீட்டல்ல), விலங்கு தோல் சார்ந்த தொழில் செய்பவர்கள், மரண சடங்கு செய்பவர்கள், மரண தண்டனை நிறைவேற்றுவார்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், நடிகர்கள், துப்பரவு பணியாளர்கள் இவர்கள் எல்லோரும் ஜப்பானிய சமூகத்தால் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு மிக கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். அதாவது ஜப்பானிய சமூகம் இவர்களின் சேவையை, உழைப்பை பயன்படுத்திக்கொண்டது, தேவையாக ஏற்றுக்கொண்டது. ஆனால் சமூக அந்தஸ்தில் அவர்களை மனிதர்களாகவே ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் ஜப்பானுக்கு புத்தமதம் வருகிறது. நமது ஊரில் பார்ப்பனிய ஹிந்து மதத்திற்கு எதிராக கலகம் செய்த புத்தம் ஜப்பானில் பார்ப்பனிய ஹிந்து மதம் செய்த வேலையை செய்தது.

Confucius கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட புத்தமதம் ஜப்பானிய சாதிய முறையை உள்வாங்கி அதை கோட்பாட்டு ரீதியாக வலிமைப்படுத்தியது. இதை உண்மையில் ஒரு நகைமுரணாகவே நான் உணர்ந்தேன். பார்ப்பனிய மதத்திற்கு எதிரான வலிமையான ஆயுதமாக அம்பேத்கர் முன்னெடுத்த புத்தம் ஜப்பானில் ஒரு பார்ப்பனிய மதமாக செயல்படுவது ஒரு ஆச்சர்யமே. நமது ஊரில் ஒருவரின் சாதியை கண்டுபிடிக்க பல யுக்திகள் கடைபிடிக்கப்படுவதைப்போல ஜப்பானில் ஒரு வலுவான யுக்தி உள்ளது. ஜப்பானிய நிலவுடைமை முறை சமூகம் யார் எங்கு யாரோடு வசித்து என்னென்ன தொழில் செய்ய வேண்டும் என்று தெளிவாக வரையறுத்திருந்தது. அதனால் ஒருவன் தான் வாழ்ந்துவரும் இடத்தை சொன்னாலே அவனது ஜாதியை கண்டுபிடித்து விடமுடியும். ஜப்பானில் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக இந்த tracking முறை உள்ளது. உதாரணத்திற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்பு கபாலி அம்பேத்கர் காலனியில் பிறந்திருந்தால் அவனது எல்லா சான்றிதழ்களிலும் கபாலி அம்பேத்கர் காலனி என்றே பதிவாகும். அடுத்த 1000 ஆண்டுகள் கழித்து கபாலியின் வம்சாவளியில் காலா பிறந்தால் அந்த குழந்தையும் காலா அம்பேத்கர் காலனி என்று சுட்டப்படும். அம்பேத்கர் காலனி இப்பொழுது இல்லாமல் கூட போய் இருக்கலாம். ஆனால் அந்த lineage தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம் இன்றும் கூட ஜப்பானில் burakumin மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். உண்மையில் சொன்னால் ஜப்பானில் மிக சிறுபான்மையினராக இருக்கும் அவர்களின் நிலை இந்திய தலித்துகளை விட மோசமாகயிருக்கிறது.

எதற்கு இந்த நீண்ட வரலாறு? seven samurai கதாபாத்திரங்களை நீங்கள் புரிந்துகொள்ள இந்த வரலாறு அவசியம். இன்னொரு காரணமும் உண்டு. அகிரா குரோசோவாவின் அப்பா ஒரு சாமுராய் வம்சாவளி அதாவது சாமுராய் சாதி. அகிரா குரசோசோவாவின் அம்மா ஒரு வாணிப சாதி. அகிரா ஒரு cross product. பொதுவாக நமது ஊரில் சாதிமறுப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு identity crisis வரும். அந்த குழந்தை வளரும் சூழல், வளர்ப்பு முறை, கடந்து வரும் பாதை எல்லாம் சார்ந்து அந்த குழந்தை தனது அடையாளத்தை முன்னெடுக்கும். நான் பார்த்த வரை சாதிமறுப்பு திருமணத்தில் ஒருவர் தலித்தாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தலித் அடையாளத்தையே முன்னெடுக்கும். ஏனென்றால் நமது சமூகம் அந்த குழந்தைக்கு ஏற்படுத்தும் சூழலும், தேவையும் அப்படி. ஆனால் அகிராவின் காலத்தில் சாமுராய் அடையாளம் என்பது நிறைய அனுகூலங்கள் அளிக்கக்கூடியது, பல வாய்ப்புகளை ஏற்படுத்த கூடியது. மேலும் அவர் என்ன மாதிரியான சூழலில் வளர்ந்தார் என்று நமக்கு தெரியாது. அகிராவுக்கும் அங்கு யாராவது காடுவெட்டி குருவைப்போல வீர சாமுராய் சத்ரிய குல கதைகள் சொல்லியிருக்கலாம் அல்லது அவரது அப்பா மூளையை தொலைத்து அடியாள் வேலை பார்த்த தங்களது குல பெருமைகளை எடுத்து சொல்லியிருக்கலாம். நமக்கு தெரியாது. ஆனால் அகிரா தனது படங்களிலும், தனது பேச்சிலும் தன்னை சாமுராயாகவே வெளிப்படுத்துகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

சாமுராய் அகிரா 7 சாமுராயில் எப்படி திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா என்று டைட்டில் song வைத்தார் என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம்.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர். த டைம்ஸ் தமிழில் சினிமாவின் பின்னணியில் உள்ள சமூக-அரசியல் தாக்கங்களை எழுதிவருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.