குடும்பம்தான் பெண்களுக்கு பாதுகாப்பா? இமையம் கருத்துக்கு ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்வினை

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

குடும்பம் என்ற அமைப்பில் எவ்வளவோ பலவீனம் இருந்தாலும், அதுதான் நம்மைப்போன்ற நாடுகளில் பெண்களுக்கு மிச்சமுள்ள பாதுகாப்பு அமைப்பு. குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
– எழுத்தாளர் இமையம், ஒரு நேர்காணலில்…!

இதில் உண்மை இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும் வன்முறையானதாக இருந்தாலும் “நமது சமூகத்தில்” குடும்பங்களே பெண்களுக்கான குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. வன்முறை என்று பார்க்கிற போது, தனித்து வாழும் பெண் எதிர்கொள்கிற வன்முறை, குடும்ப அமைப்பிற்குள் வாழும் பெண்ணின் வன்முறைக்கு நிகரானதாகவோ அல்லது அதிகமானதாகவோதான் இருக்கிறதே ஒழிய குறைவானதாக இல்லை. இங்கு மட்டும் என்றில்லை, முன்னேறிய நாடுகளிலும் கூட இதுதான் நிலைமை.

தனிமனித சுதந்திரத்தின் பொருட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை, உற்றுக் கவனிக்கும் மற்ற பெண்கள், அத்தகைய முடிவைத் தாங்கள் எடுக்காமல் இருப்பார்கள் என்பதே எனது அவதானம். நம் சூழலில் பல பெண்ணியலாளர்கள் இந்த எதார்த்தத்தைப் புரிந்த புத்திசாலிகள்.

தனித்து வாழ முயலும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலில் பிரதானமானது பொருளியல் தேவை. குறுகிய காலத்திற்குள் சோர்வை நோக்கித் தள்ளும் சூழலே இங்கிருக்கிறது. இரண்டாவது எந்த தனிமனிதர்களுக்கும் தேவைப்படுகிற “அரவணைப்பு”. இதனுள் காதல், காமம் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதைக்கடந்த புரிதலும் அதனுள்ளேதான் இருக்கிறது. இந்த அரவணைப்பு எனும் கருத்து “security” என்பதோடு ஆழமாகப் பிணைந்தது. புற பாதுகாப்பு அல்ல நான் சொல்வது. ஒட்டு மொத்த வாழ்வு குறித்த அச்சமின்மையையே சொல்கிறேன்.

குடும்ப அமைப்பிற்குள் இருக்கும் ஒரு பெண் இத்தகைய அரவணைப்பைப் பெறுவதை அந்த நிறுவனம் ஓரளவுக்கு உறுதி செய்கிறது. கண்காணிக்கிறது. அதில் முழு அளவிலான காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒருவித நிச்சயம் உண்டு. இந்த விவகாரங்களில் தேர்ச்சியுள்ள ஒரு பெண், தனது இணையை “manipulate” செய்வதன் வழியாக, தான் பெறும் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதன் வழியாக, வீட்டை விட்டு வெளியேறாமலேயே தேவைப்படும் சுதந்திரத்தை எட்டுகிறாள். அதன் உபவிளைவாக அவளால் ஒருவித அதிகாரத்தையும் நிறுவமுடிகிறது. இதுதான் ஆண் X பெண் எனும் எதிர்நிலை தகர்ந்து போகிற இடம். இந்த அதிகாரத்தின் வழியாக அத்தகைய மன உறவுகளிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தையும் அவள் இல்லாமலாக்குகிறாள். ஆக ஒரு கட்டத்தில் அவளே சுரண்டுபவளாகவும் பரிணாமம் அடைகிறாள்.

குடும்பம் என்கிற அமைப்பின் ஆதாரப் பிரச்சினையே அதுதான். அங்கு சமத்துவத்துக்கு வாய்ப்பில்லை. யாரால் தந்திரமாக இருக்க முடிகிறதோ, யாரால் தனது இணையை நுணுக்கமாக manipulate செய்யமுடிகிறதோ அவர்களது கை உயர்கிறது. யாராவது ஒருவர் விட்டுத்தர வேண்டியிருக்கிறது. பூசல்கள் முளைக்கும் இடமும் அதுதான். எல்லாவற்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகுபவர்கள் இதில் தோற்பார்கள். குடும்பம் என்பது “சராசரித்தனத்தை” நிபந்தனையாக வைக்கும் அமைப்பு. அதுகுறித்த புரிதல் இருப்பவர்கள் தங்களது சுயத்துக்கு பங்கம் வராமல், தேவைப்படும் இடங்களில் விட்டுக்கொடுத்து அதை நகர்த்துகிறார்கள். அதனுடன் பொருந்த முடியாதவர்கள் ஒன்று வெளியேறுகிறார்கள் அல்லது தங்களது அடிமைத்தனத்தை ஒத்துக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என இரண்டு தரப்புமே உண்டு.

உணர்வின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேறுகிற பெண்கள், ஒருவித அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதன் தொடக்க காலத்தில் அது தரும் எல்லையற்ற சுதந்திரம் களிப்பை நோக்கி உந்துகிறது. ஆனால் அதன் உபவிளைவாக வரும் “நிச்சயமின்மை” ஒரு பூதத்தைப் போல் அவர்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் அரவணைப்புக்காக ஏங்கத் தொடங்குகிறார்கள். குடும்பம் எனும் அமைப்பின் வன்முறையற்ற, அதே நேரம் குடும்பம் எனும் அமைப்பு தரும் கதகதப்பைப் பெற விழைகிறார்கள். அது அத்தனை எளிதானது அல்ல என்பதே எதார்த்தம். ஏனெனில் வன்முறையும் அரவணைப்பும் சேர்ந்தே குடும்பம் எனும் அமைப்பாக உருக்கொள்கிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் இல்லாமல் அதன் சாதகங்களை அனுபவிக்க முடியாது என்பதே அதன் அபத்தம்.

குடும்ப அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு சுரண்டுபவர்களாக மாறும் ஒரு பகுதி பெண்களைப் போல, வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் ஒரு பகுதி உதிரிகளாக மாறுகிறார்கள். குடும்ப அமைப்பிற்குள் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டிருந்த போது, அதுவே அவர்களது சமூக அமைப்பாகவும் இருந்தது. அதனால் குடும்பத்தை விட்டு வெளியேறும் அத்தகைய பெண் தான் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்டதாக நினைக்கிறாள். அதனால்தான் தமது தான்தோன்றித்தனத்தை இந்த சமூகத்தின் முன்னால் கலகமாக முன்வைக்கிறாள். அதன் வழியாக ஒன்று தனது பதட்டங்களை மறைத்துக் கொள்ள முயல்கிறாள், அல்லது தனது முந்தையை இணையைப் பழி வாங்குவதாக திருப்தி அடைகிறாள். சமூக ஊடகங்களில் நாம் கேட்கும் பெரும்பான்மை கலக ஊளைகளுக்குப் பின்னால் இருப்பது இந்த அற்பத்தனமே.

இத்தகைய இடத்துக்கு நகரும் ஒருத்திக்கு தனது முந்தைய இணையைப் பழி வாங்குவதும் சமூகத்தைப் பழி வாங்குவதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். ஆனால் இது அவளுக்குள் ஆழமான பிளவை ஊக்குவிக்கிறது. அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று அவள் தீவிரமாக யோசிக்கிற போது, “நமக்கு இப்போது தேவை நம்மைப் புரிந்துகொள்கிற, அல்லது நமக்கு அடங்கிப்போகிற ஒரு ஆண்தான்” என்கிற முடிவை நோக்கி அவளை நகர்த்துகிறது. அதன் பொருட்டு அவள் எல்லாவற்றையும் பணயம் வைக்க முனைகிறாள். அவள் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் ஒரு ஆண் என்பவனின் தேவை பிரதானமானதாக இருக்கிறது. அந்த ஆணுக்கான நிபந்தனை அவன் பாதுப்புணர்வைத் தருபவனாக இருக்கவேண்டும் என்பதே. அன்பெல்லாம் இரண்டாபட்சம்தான். இப்படித்தான் ஒரு வட்டம் நிறைவடைகிறது. தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது.

இப்போது இமையம் சொல்லியிருப்பதை மீண்டும் படித்துப் பாருங்கள். அவர் செல்போன் குறித்து சொல்லியிருப்பது பற்றி பிறகு பேசலாம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.