அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 25,417 பேர் கொண்ட அந்தப் பட்டியலில், மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான இடங்களை நகர்ப்புற மாவட்டங்களே கைப்பற்றியுள்ளன.
மருத்துவக் கல்வி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 2939 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1390 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1344 பேரும் மருத்துவக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர். இந்த இரு மாவட்டங்களும் சென்னை மாவட்டத்தின் நீட்சி என்பதாலும், இவற்றின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வருவதாலும் இவற்றையும் சென்னையாகவே கருத வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னையிலிருந்து மட்டும் 5646 மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர். கலந்தாய்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களில் 21 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், வேலூர், மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து 12,585 பேர் கலந்தாய்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் 50 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த மாவட்டங்களில் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ, எந்தெந்த மாவட்டத் தலைநகரங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ அந்த மாவட்டங்களில் இருந்து தான் அதிகம் பேர் மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தின் பின்தங்கிய ஊரக மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அனுப்பும் மாவட்டங்கள் பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நீலகிரி (148 பேர்), திருவாரூர் (204 பேர்), பெரம்பலூர் (211 ), நாகப்பட்டினம் (297), அரியலூர் (316), கரூர் (343), இராமநாதபுரம் (350), சிவகங்கை (373), தேனி (414), புதுக்கோட்டை (423 பேர்) ஆகிய 10 ஊரக மாவட்டங்களிலும் சேர்த்து கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் எண்ணிக்கை 3019 மட்டும் தான். இது கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் வெறும் 12.11% மட்டும் தான். முதல் 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 50% இடங்களையும், கடைசி 10 மாவட்டங்களின் மாணவர்கள் 12.11% இடங்களையும் பெறுவதிலிருந்தே நகர்ப்புறங்களுக்கும் ஊரகப்பகுதிகளுக்கும் உள்ள இடைவெளியை உணர முடியும்.
இந்த எண்ணிக்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே. இவர்களில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் சேர்த்து சுமார் 5,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்புகளில் 90 விழுக்காட்டை நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதில் மாணவர்களின் தவறு எதுவும் இல்லை. மாநிலப் பாடத்திட்டத்திட்டத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத வகையில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படுவதும், அத்தேர்வுக்கு தயாராவதற்கான தரமான பயிற்சி ஊரக மாணவர்களுக்கு கிடைக்காததும் தான் இதற்குக் காரணமாகும்.
மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும், கலந்தாய்வில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ள மாணவர்களில் 12 பேர் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப் பட்டிருப்பதாக கூறப்படும் போதிலும், நீட் தேர்வில் இழைக்கப்படும் சமூக அநீதிகளுக்கு அது மட்டுமே தீர்வு ஆகி விடாது. பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டாலும் கூட நீட் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறுவது, பயிற்சிக் கட்டணம் செலுத்துவது போன்றவை ஏழை ஊரக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.
நீட் தேர்வு என்ற பெயரில் இழைக்கப்படும் அனைத்து சமூக அநீதிகளுக்கும் ஒரே தீர்வு அத்தேர்வை ரத்து செய்வது மட்டும் தான். நீட் தேர்வு செல்லுமா, செல்லாதா? என்பது தொடர்பாக இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்; குறைந்தபட்சம் தமிழகத்திற்கு விலக்கு பெற முடியும். எனவே, அதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும்.
பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இது.