தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி செயல்பட்டு சூழலியல் மாசை ஏற்படுத்தியதற்காக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பாணை வெளியிட்டது. 100 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் இறுதி நாளில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி, பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். ஸ்டைர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்த குழுமத் தலைவர் அனில் அகர்வாலுக்கு எதிராகவும், வேதாந்த குழுமத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. வேதாந்த குழுமத்தின் மதிப்பு பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பங்குச்சந்தையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற பேச்சும் எழுந்தது.
வேதாந்தா குழுமத்துக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரம் மேலோங்கிவந்த நிலையில், லண்டன் சென்ற யோகா பயிற்சியாளரும் தொழிலதிபருமான ராம்தேவ், அனில் அகர்வாலை சந்தித்ததாகவும் இந்திய பொருளாதாரத்துக்கு அவருடைய பங்களிப்பு மிக சிறப்பான ஒன்று எனவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். மற்றொரு பதிவில் உலக அளவிலான சூழ்ச்சியால் ஸ்டைர்லைட் போராட்டம் அப்பாவி மக்களால் முன்னெடுக்கப் பட்டதாகவும் நாட்டின் முன்னேற்றத்தில் தொழிற்சாலைகள் கோயில்கள் போன்றவை என்றும் அவை மூடப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
சர்சைக்குரிய மற்றொரு சாமியாரான ஜக்கி வாசுதேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் நிறுவனங்கள் மூடப்படுவது பொருளாதார தற்கொலை என ஸ்டைர்லைட் ஆலைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இந்தியா தாமிரத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறது; நாமே தாமிரத்தை தயாரிக்கவில்லை என்றால், சீனாவிடமிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். சூழலியல் முறைகேடுகளை சட்டரீதியாகத்தான் எதிர்கொள்ளவேண்டும். பெரும் நிறுவனங்களை மூடுவது பொருளாதார தற்கொலை’ என ஜக்கி வாசுதேவ் தெரிவிக்கிறார்.
ராம்தேவ், ஜக்கி ஆகியோரின் பெருநிறுவன ஆதரவு ட்விட்டுக்கு பலர் கடுமையான எதிர்வினைகளை தெரிவித்து வருகிறார்கள். 13 அப்பாவி மக்கள் காவல்துறையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குறித்து எந்த கரிசனமும் இந்த காப்பர் சாமியாருக்கு இல்லையே என சாடியுள்ளார் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்,