ப. ஜெயசீலன்
பகுதி -1
சுப்ரமணியபுரம், பருத்திவீரன், நான் கடவுள் போன்ற படங்கள் குறித்து எனக்கு தீவிரமான எதிர்மறை விமர்சனங்கள் உண்டு. அந்த படங்கள் உள்ளடக்கம் சார்ந்து மிக ஆபத்தான, மிக பிற்போக்குத்தனமான, மிக கோமாளித்தனமான புரிதலை முன்வைக்கும் திரைப்படங்கள் என்பது எனது பார்வை. தேவ் டி என்ற ஹிந்தி திரைப்படத்தை பார்த்து நான் அனுராக் கஷ்யப்பின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த சமயமது. அந்த கால கட்டத்தில் அனுராக் கஷ்யப் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர்கள் சசி குமார், அமீர், பாலா போன்றவர்களுடன் ஒப்பிட்டால் தான் எடுத்த படங்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்னும் ரீதியில் பேசியிருந்தார். எனக்கு மிகவும் ஏமாற்றமாகவும், வியப்பாகவும் இருந்தது. தேவ் டி போன்ற ஒரு படத்தை எடுத்தவருக்கு சுப்ரமணியபுரம் எப்படி பிடிக்கிறது என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. நான் சிறுவயதில் பார்த்து ரசித்த இன்னொரு சில்லறைத்தனமான படமான நாயகன் டைம்ஸ் இதழ் வெளியிட்ட சென்ற நூற்றாண்டின் சிறந்த 100 படங்கள் வரிசையில் இடம்பிடித்த போதும், விருமாண்டி திரைப்படம் தென் கொரியாவில் விருது வாங்கியபோதும் எனக்கு அதே ஏமாற்றமும், வியப்பும் ஏற்பட்டது.
உண்மையில் ஒரு திரைப்படத்தை அணுகுவதும், அதை புரிந்து கொள்வதும் மிகவும் சிக்கலான காரியம். அந்த திரைப்படங்கள் வேறொரு மக்களின் வாழ்வியலை கொண்டதாயிருந்தால் இன்னும் சிக்கல். நமக்கு தெரியாத ஒரு வாழ்வியலை முழுக்க முழுக்க அந்த திரைப்படத்தின் இயக்குனரை நம்பி அணுகவேண்டிய தேவையிருக்கும். அந்த இயக்குனர் அவர் சார்ந்த கலாச்சார பின்னணியில், யார்பக்கம் நின்று தனது கதையாடலை திரைமொழியில் நிகழ்த்துகிறாரோ அதே பக்கம் நாமும் நின்று அந்த கதையை பின்தொடர நிர்பந்திக்கப்படுகிறோம். உதாரணத்திற்கு தேவர்மகன் பார்க்கும் பொழுது சிவாஜி ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டிருக்க, கீழே சற்று தள்ளி தரையில் அமர்ந்து கடம் வாசிக்கும் பெரியவர்களை பார்க்கும் பொழுது எனக்கு “***தா கலைஞர்களை மதிக்க தெரியாத சில்லரைப்பசங்களை ஹீரோ மாதிரி காமிக்கிறான் பாரு மயிராண்டி” என்று எனக்கு தோன்றியது. ஏனென்றால் சிவாஜி ஏன் ஊஞ்சலில் தள்ளி உட்கார்ந்து ஆட்டி கொண்டிருக்கிறார், அவருடைய வயதை விட மூத்தவர் ஏன் தரையில் உட்கார்ந்து கடம் வாசிக்கிறார் என்கின்ற கலாச்சார பிண்ணனி எனக்கு தெரியும். அதனால் அந்த திரைப்படத்தின் இயக்குனரிடமிருந்து சட்டென்று விலகி ஒரு பார்வையாளனாக என்னால் அந்த திரைப்படம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே கேள்வி எழுப்ப முடிகிறது. ஆனால் இதே காட்சியை நீங்கள் கனடாவில் திரையிட்டு காண்பித்தால், அங்கிருக்கும் பார்வையாளன் “ஓ இவங்க ஊர்ல ஊர் பெரியவறு சாயந்திரம் ஆன ஊஞ்சல ஒக்காந்து மியூசிக் கேப்பாரு போலருக்கு,,சூப்பர் ஜி” என்று மனதுக்குள் நினைத்து கொள்வார். தேவர் மகன் குறித்தான கனடிய பார்வையாளனின் பார்வையும், தமிழகத்திலிருக்கும் சாதி ஹிந்துக்கள்/ தலித்துகள் தேவர் மகன் குறித்து கொண்டிருக்கும் பார்வையும் வெவ்வேறானவையாயிருக்கும்.
இதன் பின்னணியில்தான் அனுராக் கஷ்யப்பிற்கு சுப்ரமணியபுரம் பிடிக்கிறது. தமிழகத்தின் சமூக கட்டமைப்போ, கலாச்சார பின்னணியோ, சாதிய நடைமுறைகளோ அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சுப்ரமணியபுரம் பார்த்தபொழுது ஒரு பார்வையாளனாக தன்னை முழுவதுமாக சசிகுமாரிடம் ஒப்படைத்திருப்பார். அவருடைய அந்த திரைப்பட அனுபவம் என்பது சுப்ரமணியபுரத்தின் செய்நேர்த்தி மற்றும் presentation மட்டுமே சார்ந்தது. தனிப்பட்ட முறையில் ஒரு கலைப்படைப்பை craftsmanship மற்றும் presentation மட்டுமே வைத்து அளவிடுவது என்னால் ஏற்று கொள்ள கூடியது அல்ல. தேவர்மகனை என்னால் ஒருபோதும் நல்ல படமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கலை படைப்பை அணுக/மதிப்பிட பல்வேறு முறைகள் உள்ளன. மிக நேர்த்தியான ஒரு படைப்பு மிக அயோக்கியத்தனமான ஒரு கருத்தியலை முன்வைக்கலாம்(தேவர்மகன்). மிகுந்த அழகியல் சார்ந்த ஒரு படைப்பு ஒரு ஆபாசமான போலித்தனத்தை நிறுவ முயலலாம்(சேரியில் வாழும் ஆயுதயெழுத்து மாதவனின் வீட்டு ஜன்னலில் தெரியும் லண்டன் தேம்ஸ் போன்று படம்பிடிக்கபட்ட கூவம்). நீங்கள் ஒரு கலைப்படைப்பை எந்த அளவுகோலின் பொருட்டு அணுகுகிறீர்கள் என்பதும் நீங்கள் என்னமாதிரியான அரசியல்/சித்தாந்த பின்புலத்தில் இயங்குகிறீர்கள் அல்லது புரிதலோடு இருக்கிறீர்கள் என்பதை பொருத்தும் ஒரு கலைப்படைப்பு உங்களுக்குத்தரும் அனுபவம் மாறும்.
நாம் நம்பும் பல்வேறு விஷயங்கள் நாம் கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டவை. நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்(1996) போது கிரிக்கெட் பார்க்க தொடங்கினேன். நான் பார்க்க தொடங்கியபோதே டெண்டுல்கர் little master ஆகத்தான் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். எந்த கேள்விகளுமின்றி அவரை சிறந்த பேட்ஸ்மேன் என்று என்னை நம்ப செய்ய ஏற்கனவே ஒரு space கட்டமைக்கப்பட்டிருந்தது. நானும் அவரை இதுவரை இருந்த பேட்ஸ்மேன்களிலேயே இவர்தான் சிறந்த ஆட்டக்காரர் என்று நம்பினேன். இந்தியா தோத்தா மயிராபோச்சு டெண்டுல்கர் சதமடித்தால் போதும் என்று இருந்திருக்கிறேன். இப்பொழுது அதை பற்றி யோசித்து பார்க்கையில் எனக்கு பெரும் அபத்தமாக இருக்கிறது. நான் இப்பொழுது கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் என்பது வேறு விஷயம். புற காரணிகளும், social conditioning, social conformity போன்றவை நம்முடைய மனதில் எவ்வளவு வலுவான ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்று நாம் யோசித்தால் மிகவும் வியப்பாகயிருக்கும். இவைகள்தான் நம்முடைய சினிமா சார்ந்த ரசனைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அம்பேத்கரை பற்றியும், அவருடைய சித்தாந்தங்கள் பற்றியும் மெல்ல எனக்கு அறிமுகம் ஏற்பட்டபோது அதுவரையிலும் நான் உலகை பற்றி கொண்டிருந்த பார்வை முற்றிலுமாக மாறி போனது. என்மீதான அம்பேத்கரின் தாக்கம் என்பது எனது தினசரி வாழ்வின் ஒவ்வொரு தேர்வுகளிலும், முடிவுகளிலும், நிலைகளிலும், பார்வைகளிலும் எதிரொலிக்க தொடங்கியது/தொடர்கிறது. இதன் விளைவாக எனக்கு அது வரை பிடித்திருந்த பல விஷயங்கள் பிடிக்காமல் போயின. குறிப்பாக எனது ரசனை சார்ந்த விஷயங்களில் பிரதான இடம்பிடித்திருந்த திரைப்படங்கள் குறித்தான பார்வையில் தீவிரமான ஒரு புரிதலும், பார்வையும் ஏற்பட்டது. அம்பேத்கரின் அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்றாக நான் உணர்வது “mindfulness”. அதாவது மிகுந்த சுயவிழிப்போடு இருப்பது. உங்களிடம் சொல்லப்பட்டவை, நிறுவப்பட்டவை, வலியுறுத்தப்பட்டவை எதையையும் நம்பாமல், நீங்களாக உண்மையை/விடுதலையை நோக்கிய தேடுதலை மிகுந்த கவனத்தோடு முன்னெடுப்பது. இதனை நான் அம்பேத்கரின் அறிமுகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அதனை கடைபிடிக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டுள்ளேன்.
god father-1 படத்தின் முதல் காட்சி/முதல் வசனம். உலகில் உள்ள திரைப்பட ரசிகர்கள் சிலாகிக்கும் காட்சி மற்றும் வசனம்.
போனாசேரா என்ற கதாபாத்திரம் டான் கார்லியோனேவிடம் சொல்கிறது
“நான் அமெரிக்காவை நம்புகிறேன். எனது இந்த சொத்து சுகம் அமெரிக்காவிடமிருந்து அடைந்தது. எனது மகளை அமெரிக்க முறைப்படி தான் வளர்த்தேன். அவளுக்கு எல்லா சுதந்திரத்தையும் அளித்தேன். ஆனால் நமது குடும்பத்தின் கவுரவத்தை பேணி காக்க சொல்லியிருந்தேன். அவள் ஒரு பையனோடு தோழமைகொண்டிருந்தாள். அவன் இத்தாலியன் அல்ல. அவனோடு திரைப்படங்களுக்கு சென்றாள். இரவில் அவனோடு நேரம்செலவழிக்க தொடங்கினாள்.” என்று தொடங்கி அந்த பையன் தனது மகளை வேறு சில நண்பர்களோடு சேர்ந்து சிதைத்து விட்டான் என்றும், அமெரிக்க சட்டங்கள் தனக்கான நீதியை வழங்காது என்றும், அதனால் டான் கார்லியோனோவிடம் அந்த பையனை கொன்றுவிடுமாறு கேட்கிறது.
எனக்கு இந்த காட்சியை பார்க்கும் பொழுது கொங்கு ஈஸ்வரன் ராமதாஸிடம் பேசிக்கொண்டிருப்பதை போலிருந்தது. அதாவது சுருக்கமாக சொன்னால் பொண்ண செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டேன், அவள் வேற சாதி பய்யங்கூட சுத்தனா. அவன் நாடக காதல் பண்ணி ஏமாத்தி கடைசில சாதி புத்திய காமிச்சுட்டான் என்கின்ற ரீதியில் அந்த வசனம் பொறுக்கித்தனமாக இருந்தது.
அமெரிக்காவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இத்தாலிய நிழலுக தாதாக்களின் வீழ்ச்சியும், புதிதாக முளைத்தெழுந்த பிராங்க் லூகாஸ் போன்ற கருப்பின நிழலுலக தாதாக்களின் எழுச்சியும் நிகழ்ந்து கொண்டிருந்த 1970களின் கால கட்டத்தில் வெளிவந்த காட்பாதர் -1 (1972) படத்தின் உள்ளடக்கம் என்பது இத்தாலிய அடையாளத்தையும், பெருமிதத்தையும் இறுக பற்றிக்கொள்ளும் தேவையை வலியுறுத்துவது. அவன் அவன் வீட்டு புள்ளைங்கள பாத்து பத்திரமா வைக்காம நவீன அமெரிக்க அடையாளத்தை நோக்கி போனால் பிறகு ஜீன்ஸ் tshirt போட்டுக்கொண்டு வந்து நாடக காதல் செய்துவிடுவார்கள் பிறகு டான் கார்லியானோவிடம்தான் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்று திறமையான நடிகர்களை(அல்பசினோ போன்ற இத்தாலிய நடிகர்களை), தொழிற்நுட்ப கலைஞர்களை வைத்து, இத்தாலிய இயக்குனர் இயக்கி, இத்தாலியர்களாலும், யூதர்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் நிரம்பிய காலத்தில் வெளிவந்த காட்பாதர் வெள்ளையினத்தவருக்கு பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை(தேவர் மகன் குற்றபரம்பரையினருக்கு பிடித்ததைப்போல). ஆனால் காட்பாதர் நமக்கும் ஏன் பிடித்த படமாகிப்போனது? ஏன் காட் பாதர் படம் முன்வைக்கும் அல்லது நிறுவ முயலும் விழுமியங்களை நாம் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொண்டோம்? அல்லது அது ஒரு கிளாசிக் என்று நாமும் நம்பும்படி ஆனதெப்படி?
சுஹாசினி, அமீரின் யோகி பட வெளியீட்டின் போது என்று நினைக்கிறன். ஒரு தகவலை சொன்னார். ஏதோ ஒரு ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துபவர்கள் தென்னிந்திய படங்களை திரையிட விரும்பி சுஹாசினியை தொடர்பு கொண்டு ஏதாவது நல்ல படங்களிருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதாகவும் அதற்கு தான் யோகியை பரிந்துரைத்ததாகவும் சொன்னார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது தென்னிந்திய படங்களுக்கான தொடர்ப்பு புள்ளியாக சுஹாசினியால்தான் இருக்கமுடிகிறது. ஒவ்வொரு நாட்டிலும் சுஹாசினியை போன்ற தொடர்ப்பு புள்ளிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் அவர்களை எந்த படங்கள் பிரதிநித்துவ படுத்தவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். உதாரணத்திற்கு டைம்ஸ் இதழ் உலகின் 100 சிறந்த படங்களை தேர்வு செய்ய சென்ற நூற்றாண்டில் வந்த எல்லா படங்களையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கரகாட்டக்காரன் பார்த்து ரொம்ப commercialலா இருக்கு என்று ஒதுங்கியிருக்க மாட்டார்கள். அதற்கு வாய்ப்புமில்லை. மாறாக ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும் அவர்களுக்கிருந்த தொடர்ப்பு புள்ளிகளின் உதவியை நாடியிருப்பார்கள். கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வந்த படங்களிலேயே சிறந்த படம் நாயகன் தான் என்று சொல்லிருக்க கூடிய லகுடப்பாண்டியின் பின்னணியை நான் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்பட தேவையில்லை. இப்பொழுது இந்திய சினிமாவை புரிந்து கொள்ள ஜப்பானிலிருக்கும் யாரவது ஒரு அப்பாவி மிஸ்க்கின் முயன்றால் மணிரத்னம் “இந்தியாவை””இந்திய கலாச்சாரத்தை” பிரதிநித்துவப்படுத்தும் ஒரு மாஸ்டர் டைரக்டராக அறிமுகமாவார். இப்படித்தான் ஒரு பிம்பம் வடிவம்கொள்ளத்தொடங்குகிறது.
இந்த பின்னணியில் உலகின் உன்னத காவியங்களில் ஒன்றாக முன்னிறுத்தப்படும் “seven samurai” திரைப்படம் குறித்தும், உலகின் கிட்டத்தட்ட எல்லா இயக்குனர்களும் (நம் ஊர் மிஸ்க்கின் முதற்கொண்டு) தங்களுடைய இன்ஸ்பிரஷனாக கருதும் அகிரா குரோசோவ குறித்தும்(seven samurai திரைப்படத்தின் உள்ளடக்கம் மட்டும் முன்வைத்து) தமிழக சமூக கலாச்சார பின்னணியில் விமர்சன நோக்கில் அணுகுவதே இந்த கட்டுரையின் நோக்கம். நான் ஒரு ஆய்வாளானோ, தீவிர தன்மை கொண்ட திரைவிமர்சகனோ கிடையாது. ஆனால் படைப்புகளின் அகமும், புறமும் நிலவும் சமூக அரசியல் காரணிகளையும், எப்படி ஒரு பிம்பம் social conformity அடிப்படையில் எல்லோராலும் கேள்விகளற்று ஒத்துக்கொள்ளப்படுகிறது என்பதைக் குறித்தும், ஜனநாயகத்திற்கு, நீதிக்கு எதிராக ஒரு படைப்பு நிகழ்த்தப்படும்பொழுது அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களே அந்த படைப்பாளியையும், படைப்பையும் கொண்டாடுபவர்களாவும் எப்படி ஆகிறார்கள், அல்லது ஆக்கப்படுகிறார்கள் என்பதை பற்றியும், கலையை அணுகுவதில் mindfulness ஏன் தேவை, அம்பேத்கரியம் போன்ற முற்போக்கு சிந்தனைகள் ஒரு கலையை அணுகுவதில் உங்களுக்கு என்ன மாதிரியான உதவியை அளிக்கும் என்று ஆராய்வதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அகிரா குரோசோவாவின் seven samurai உள்ளடக்க அரசியல் சார்ந்து எந்த வகையில் கமலின் தேவர்மகனுக்கு இணையான ஒரு அய்யோக்கியத்தமான, சில்லறை தனமான படம் என்று விமர்சிக்கும் நோக்கிலும் இந்த கட்டுரை.
இதற்கென நான் ஜப்பானின் வரலாறு, சமூகம், அகிராவின் குடும்ப பின்னணி, அவர்காலத்தில் இயங்கிய பிற முக்கிய இயக்குனர்கள் என நிறைய படிக்கவும், பார்க்கவும் தேவையிருக்கிறது. இது மாதக்கணக்கில் நேரம் எடுக்கும் வேலை. ஆனால் அந்தளவு எனக்கு பொறுமையில்லை. நான் குறைந்தபட்சம் seven samurai பேசும் சில்லறைத்தனமான அரசியல் குறித்து ஒரு புதிய ஒளியை பாய்ச்சுவதே எனது நோக்கம். அதன் மூலம் நீங்கள் அடுத்தமுறை seven samurai பார்க்கும்பொழுது உங்களுக்கு வேறொரு அனுபவமும், கலையின் அரசியலும் புரியும் என்று நம்புகிறேன். so நேரம் கிடைக்கும் பொழுது எழுதி 4 அல்லது 5 பகுதிக்குள் நிறைவு செய்வேன்.
ப. ஜெயசீலன், சமூகம்;அரசியல்;சினிமா குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..
Love your writing and and the perspectives you bring. I agree with you most of the times.
LikeLike