சென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்!

சந்திரமோகன்

சந்திர மோகன்

“சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைக்கு அழிக்கப்பட உள்ள அடர்ந்த வன நிலங்களின் குறைந்த பட்ச அளவு 120 ஹெக்டேர் [300 ஏக்கர்], நீளம் 10 கி.மீ முதல் 13 கி.மீ வரை இருக்கும்” என NHAI திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுவாஞ்சூர், ஆரணி அருகே நம்பேடு, போளூர் அருகே அலியாள மங்கலம், செங்கம் அருகே ராவண்டவாடி (கவுத்தி மலை பகுதி), மஞ்சவாடி (சேர்வராயன் மலை), சேலம் அருகேயுள்ள ஜருகு மலை ஆகிய பகுதிகளில் அடர்ந்த வனங்கள், காட்டு மரங்கள், வன விலங்குகள், அரிய உயிரினங்கள் அழிக்கப்பட உள்ளன. தமிழக வனத்துறை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. சேர்வராயன் மலைப்பகுதியில் ஏற்படவுள்ள அழிவு பற்றி மட்டும் பார்ப்போம்:-

சேர்வராயன் மலையின் கிழக்கு புறத்தில் மஞ்சவாடி கணவாய் பகுதியில், சுமார் 1.78 கி.மீ நீளத்தில் மலைப் பகுதியில், சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் “வால்” போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதை பிளந்து கொண்டு தான் பசுமை சாலை செல்கிறது.

இதனால் சுற்றுச்சூழல் இயற்கைக்கு என்ன பாதிப்பு?

கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரமுள்ள இந்த வனப் பகுதி, காட்டு மரங்கள், புற்கள் (Grass), செடிகொடிகள், பிரண்டைகள் ஆகியவற்றை கொண்டுள்ள, காடுவாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வனமாகும். ஈட்டி, கருங்காலி, வேப்ப மரங்கள், நாக மரங்கள் துவங்கி 5 ஆண்டுகள் வளர்ச்சியுள்ள தேக்கு, சந்தன மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். சாலை நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். வனத்திலுள்ள மரங்கள் தான் நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கின்றன ; சுற்றுச் சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடு & கார்பன் மோனோ ஆக்சைடு போன்றவற்றை உறிஞ்சிக் கொண்டு, ஆக்சிஜனை/ சுத்தமான காற்றை நமக்கு வழங்குகின்றன.

மூங்கில் தோப்புகள் அழிவதால்….

இத்தகைய உயரம் குறைந்த இடத்தில் தான் மூங்கில்கள் பெருமளவில் விளைகிறது. மூங்கிலின் அடிப்பகுதி பெருமளவில் கார்பன்டையாக்சைடு உறிஞ்சும் ஆற்றல் மிக்கது; ஆழமான வேர்கள் இல்லாததால் குறைவான நீரையே எடுத்துக் கொள்ளும் ; அதே சமயம் சுற்றிலும் ஈரப் பதத்தை பாதுகாக்கும். மூங்கில் அரிசி மற்றும் குருத்து மூங்கில் உணவாக பயன்படுகிறது. இன்றளவும் கூட அப்பகுதியில் உள்ள மலையாளிகள் /பழங்குடியினர் மூங்கில் அரிசியை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். [மூங்கில் குருத்துக்கள் யானைகளுக்கும் கூட உணவாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னர், பன்னர்கட்டா – ஒசூர்-தொப்பூர் மஞ்சவாடி கல்ராயன் மலை என விரிந்திருந்த யானை வழித் தடம், சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையால் தடுக்கப்பட்டு விட்டது, வேறு ஒரு செய்தியாகும்]…

செங்குட்டை ஏரியின் அழிவால்…..

இன்றும் கூட/கோடையிலும் தண்ணீர் உள்ளது. சேர்வராயன் மலையின் மான்கள், கேழா மான்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள், செந் நாய்கள், குள்ள நரிகள்,காட்டு முயல்கள், கீரிகள் என அனைத்து வன விலங்குகள் வந்து தாகம் தணிக்கும் ஏரி இந்த செங்குட்டை ஏரியாகும்.

அருகி வரக்கூடிய endangered உயிரினங்களான எறும்புத் திண்ணிகள், மூங்கிலத்தான் @ மூங்கில் அணில்கள், உடும்புகள், தேவாங்குகள் போன்றவை உயிர் வாழும் பகுதியுமாகும். கூட்டம் கூட்டமாக மயில்களை இங்கு பார்க்க முடியும்; பலவகை குருவிகள், காடை கவுதாரிகள், காட்டுக் கோழிகள் ஆகியவன வாழும் பூமியாகும். இயற்கையின் ஒரு சங்கிலி அறுந்தால் மற்றொரு சங்கிலியும் அழியும்! ஒரு நெடுஞ்சாலைக்காக வனங்கள் அழிக்கப்பட்டால்……

1)மஞ்சவாடி வனம் புற்கள் நிறைந்த பகுதியாகும். இந்த புற்தரைகள் மலைப் பகுதியின் ஈரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன; மற்றொரு வகையில் புல் தாவரங்களை, மருத்துவ குணம் மிக்க பெரண்டைகளை உண்டு வாழும் விலங்குகள், இவை அழிக்கப்பட்ட உடனே இரை தேடி வனத்திற்கு வெளியே வந்து மனிதர்களிடம் இரையாகும். புற்கள் Grass இல்லாமல் பல விலங்குகள் உயிர் வாழ முடியாது.

2)கரையான், எறும்பு புற்றுகள் அழிக்கப்பட்டால், அதை உணவாக கொள்ளும் பாம்புகள், பல்லிகள், ஓணான்கள் இரை தேடி வெளியே வந்து மனிதர்களிடம் சிக்கி அழியும் அல்லது உணவில்லாமல் மெல்லச் சாகும்.

3)பறவைகளின் உணவகம், வாழ்விடம் மரங்கள் தான். அவைகள் அழிக்கப்பட்டால் பறவைகள் வெளியேறும்; உணவில்லாமல் தவிக்கும், அழியும்.

4)மற்றொரு புறம் மரங்கள் அழிக்கப்பட்டால் மனித குலத்துக்கு கேடு. சுற்றுச் சூழலில் ஆக்ஸிஜன் அளவு குறையும்; வெப்பம் அதிகரிக்கும்; நிலத்தடி நீர் மட்டம் சரியும்.

ஒரு வனத்தின் அழிப்புக்கு ஈடு செய்ய 50ஆண்டுகள் வேண்டும்! சுற்றுச்சூழல் சமநிலையை Eco system த்தை அவ்வளவு சீக்கிரமாக மீட்க முடியாது. ஒரு சங்கிலி அழிந்தால் உயிர் சங்கிலி அறுந்து போகும்! மஞ்சவாடி கணவாயில் அமைக்கும் நெடுஞ்சாலைக்கு இத்தகைய தாக்கம்/அழிக்கும் ஆற்றல் இருக்கும்போது, ஜருகு மலையில், கவுத்தி மலை வனத்தில், ராவண்டவாடி, அலியாள மங்கலம், நம்பேடு, சிறுவாஞ்சூர் வனங்களில் ஆங்காங்கே உள்ள குறிப்பான வன உயிரினங்கள் சமன்பாடுகளில் எத்தகைய அழிவு ஏற்படும்?

“இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும்” என்றார் எங்கெல்ஸ். வனங்களை காடுகளை அழிப்பது மற்றொரு பேரழிவு. பசுமை வழிசாலைஅழிவுப்பாதை!

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.