இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. இளந்தமிழகம் இந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது.மேலும் பல கூட்டங்களுக்கு பொருத்தமானதுதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலி செய்யும்படி விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள். ‘புலிகள் சொன்னால் ஏதோ காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று யாழ்பாணம் நகரை மக்கள் காலி செய்கிறார்கள்; அனைவரும் காட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். இந்த நூலுக்கு ‘ வனமேகு காதை’ என பொருத்தமான அடைமொழி இட்டிருக்கிறார் நாவலாசிரியர். கிட்டத்தட்ட இந்த இடப்பெயர்வின் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலிசெய்யும் மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழி தன் காதலை இந்தக் கதை முடிவதற்குள் தனது சீனியர் டாக்டர் மதிக்குமாரிடம் சொல்லிவிடுவாளா ? தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும்? அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள்? ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக புலம்பெயர்கிறார்கள். இவர்களோடு நாம் மனரீதியில் பயணம் செய்கிறோம். ஒருவேளை அதில் உங்கள் அப்பா இருக்கலாம்; அத்தை இருக்கலாம், சகோதரன் இருக்கலாம். யார் கண்டது ?

யாழ்நகரை வெற்றி கொள்கிறது இராணுவம்; யாழ் கோட்டையில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம்? யார் பெயரை தட்டிக் கொள்வது ? இராணுவமா ! அரசியல் தலைமையா! இவையெல்லாம் இந்த நாவலில் பேசப்படுகிறது.

சிங்கள அரசியல்வாதி ஆரிய ரத்னா இந்த வெற்றியைக் கொண்டாட குயின்ஸ் ஹோட்டலில் விருந்து வைக்கிறார். இதில் இராணுவ மேஜர் நுவான், சட்டத்தரணி காரிய விக்ரமசிங்க , நீதிபதி,எஸ்.பி, பத்திரிக்கையாளர் கமால , மகளிர் அணித்தலைவி சந்திரா களுநாயக்கா கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் கேளிக்கை, சல்லாபத்திற்கிடையே இலங்கை அரசியல் பேசப்படுகிறது; புலிகள் வீழ்ச்சி பேசப்படுகிறது. மிக நுட்பமாக தகவல்களை தந்திருக்கிறார். ” பாத்திரங்கள் என்னோடு மெய் பேசுவதுபோல மனிதர்கள் ஒருபோதும் பேசுவது இல்லை ” என்று ஆசிரியர் சொல்லுவது உண்மைதானோ என்னவோ !

இந்த விருந்திற்காகும் செலவை ஒரு மத்தியதர சிங்கள குடும்பத்திலிருந்து வந்த விஜயதாசா செய்கிறான்; ஆரிய ரத்னா செய்ய வைக்கிறார். அவனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் தான் செய்து வரும் மரக்காலை ( மரம் அறுக்கும் ஆலை!) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும்! இவன் தன் மைத்துனன் மனைவியோடு உறவு கொள்ளும் அத்தியாயம் நாவலில் வரும் ஒரு ரசிக்கத்தக்க பகுதி.

இந்த நாவல் தமிழ் மக்களின் அவலம் குறித்த நாவல். ஆனால் இதில் என் மனதைக் கொள்ளை கொண்டது சிங்களக் குடும்பம்தான். தன் பேரன் சுனில் இராணுவத்தில் சேருவதை சீயா(தாத்தா) ரத்னாயக்கவால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை துவக்கை தூக்குவது என்பதே காசுக்காக கொலை செய்வதுதான். அறம் சார்ந்த வழியில் இருந்து கிஞ்சிற்றும் விலக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வளவுக்காரர்களை ( அப்படி என்றால் யார்?) எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மகன் விஜயதாசாவைக் கெடுத்தது அவர்கள்தான். தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க போராடுகிறார்கள் ; அதில் தவறு ஏதும் இல்லை என்பது அவர் கருத்து. மன்னர் காலத்தில் இருந்து தன் குடும்ப தொடர்ச்சியை அவரால் பகுத்தாராய முடிகிறது. தன் குடும்பம் தழைத்து இருப்பதற்கு காரணம் கடனாக புகையிலை, சுருட்டைத் தந்து விற்கச் செய்த தமிழ்க் குடும்பம்தான். அவர் மூத்த மகன் முன்பொரு காலம் புரட்சியில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் இன்னமும் அவசியமானவை. இடதுசாரி அரசியல் குறித்த சாதகமான பார்வை நாவலில் வருகிறது..

சிங்கள சுனிலுக்கு ஏறக்குறைய சம கால தமிழ்ச் சிறுவன் கதிர். இவனுக்கு வரலாறெல்லாம் தன் தாத்தா நாகமணி மூலம் சோற்றோடும், கதையோடும், பேச்சோடும் சொல்லப்படுகிறது. தன் நிலத்தை இடப்பெயர்வில் வரும் மக்களுக்கு கொடுத்து தங்க வைப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த சுணக்கமும் இல்லை. தன் மருமகள் முணுமுணுப்பைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மனிதாபிமானம்தான் அவருக்கு அளவுகோள்.

கதை , சிறுவன் கதிர் ‘ இடம் வலம் இடம் வலம் இடம் வலம் ‘ என்று சொல்லுவதில் கதை தொடங்குகிறது என்றால் சிங்கள இராணுவச் சிப்பாயாக இருக்கும் சுனில் ‘ லெப்ட், ரைட். லெப்ட் ,ரைட் என்று நடப்பதில் முடிகிறது. வன்னிக்காட்டில் கதை தொடர்ந்து நடக்குமோ ? ஒருக்காலத்தில் பரஸ்பரம் ஆதரவோடு இருந்த ரத்னாயக்க – நாகமணி வாரிசுகள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுமோ !

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நாவலின் கட்டுக்கோப்பும் அழகியலும் இவருடைய மற்ற நாவல்களை படிக்க தூண்டுகிறது.

அகல் வெளியீடு, 348 டிடிகே சாலை,சென்னை-14 / பக்கம் 336/ விலை ரூ.300/முதல் பதிப்பு ஜனவரி 18.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.