டி. அருள் எழிலன்
ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஆளும் அதிமுக அரசாக இல்லை. பாஜகவின் பொம்மை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், அரசு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையுமே பாஜக தன் கட்டுப்பாட்டில் நேரடியாக எடுக்க திவீரம் காட்டுகிறது.
ஓகி மரணங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நீட் மரணங்கள் என கெட்டதாக நடக்கும் அத்தனை விஷயங்களிலும் பழி மாநில அரசு மீது சுமத்தப்படுகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையை என தன் கட்டுப்பாட்டில் வைத்து நேரடியாக பாஜக ஆள்வதை ஜெயலலிதா மரணத்திற்குப் பிந்தைய தமிழகத்தில் நிலையில் நாம் காண்கிறோம்.
இந்நிலையில்தான், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நடத்தும் ‘வட்டமேஜை’ நிகழ்ச்சியை பாஜகவினரும், இந்துத்துவ சக்திகளும் பாதியில் பிரச்சனை செய்து நிறுத்தியிருக்கிறார்கள். வட்ட மேஜை வடிவிலான நிகழ்ச்சியை நெறியாள்கை செய்வது எளிதான காரியம் அல்ல, காரணம் அதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் பொது மக்கள் அல்ல. அரசியல் பிரமுகர்கள் வெவ்வேறு தளங்களில் தங்களின் ஆதரவாளர்களை உற்பத்தி செய்து வைத்திருக்கும் இவர்களின் தொண்டர்களோ, அபிமானிகளோதான் இந் நிகழ்வின் பார்வையாளர்களாக வருகிறார்கள்.
ஆனாலும் கார்த்திகைச் செல்வன் இவைகளை சமாளித்து இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். கோவையில் விவாதிக்க அவர் எடுத்துக் கொண்ட தலைப்பு முக்கியமானது. தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் ஏன் நடக்கிறது என்பதுதான். அதில் ஆளும் அதிமுக, பாஜக தவிற அத்தனை தரப்பினருமே இந்த இரு கட்சிகளையும் விமர்சனம் செய்து பேசுவதற்கான வாய்ப்புள்ள இந்த விவாத நிகழ்வில் திரைப்பட இயக்குநர் அமீர் பேசும் போது கோவை சசிகுமார் படுகொலையையொட்டி நடந்த வன்முறைகள் பற்றி பேசத்துவங்கியதும் பாஜகவினர் , இந்துத்துவ அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள். அமீரை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உள்ளிட்டோர் பாதுகாப்பாக அரங்கத்தை விட்டு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களை தட்டிக் கேட்டு அப்புறப்படுத்தாத போலீசார் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நெருக்கடி கொடுத்து நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மீதும், புதிய தலைமுறை மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளது தமிழக அரசு. இதுவரை அரசுக்கு எதிராக செயல்படும் ஊடக நிறுவனங்களை தமிழ் நாடு அரசு கேபிள் நெட்வோர்க்கில் இருந்து நீக்கி மிரட்டும் தமிழக அரசு. இப்போது நேரடியாக போலீசை வைத்தே ஊடகங்களை அச்சுறுத்துகிறது.
வெறுமனே அட்ஜஸ்ட் பண்ணி மட்டும் நடந்து கொண்டால் போதாது ஆளும் பொம்மை அரசின் ஊதுகுழலாக ஊடகங்கள் மாற வேண்டும் என்ற செய்தியைத்தான் ஓபிஎஸ்- இபிஎஸ் அரசு இதன் மூலம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது.
புதிய தலைமுறை மீதும், அமீர் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேஜை நிகழ்வுக்கான கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
டி. அருள் எழிலன் பத்திரிகையாளர்; ஆவணப்பட இயக்குநர்.