உமா தேவியின் “கண்ணம்மா”!

ப. ஜெயசீலன்

நான் திரைப்பாடல்களை விரும்பி கூர்ந்து கேட்பவன் என்றாலும் அதில் நான் ஒரு expert கிடையாது. கண்ணம்மா பாடல் குறித்த எனது தனிப்பட்ட பார்வையிது.

பொதுவில் ஆங்கில பாடல்கள் என்பது கவித்துவத்தை(poetry) பிரதானப்படுத்தாது இசைப்பாடலை(lyrical) முன்னினலைப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்த பாடல்கள் உருவாக்கும் உணர்வெழுச்சி என்பது அந்த பாடலின் உள்ளடக்கம் சார்ந்தும், பாடுபொருள் சார்ந்தும், ஒரு குறிப்பிட்ட உணர்வின், சூழலை ஆராய்வதன் மூலமும், விவரிப்பதன் மூலமும் உருவாக்குவது. தமிழ் சூழலில் திரைப்பாடல்கள் என்பவை குறிப்பாக காதல் பாடல்கள் என்பவை நேரடியான கவித்துவத்தை பிரதானப்படுத்தும் தன்மையுடையவை. கவிஞர் வாலியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. வாலியின் பாடல்கட்டும் முறை என்பது மேற்கத்திய பாணி பாடல்கட்டும் முறை. ஒரு சூழ்நிலையை, உணர்வை மெதுவாக எளிய விவரணைகளின் மூலமும், எளிய உவமைகளின் மூலமும் கட்டியெழுப்புவது. உதாரணத்திற்கு “அன்புள்ள மான்விழியே” என்ற பாடலை சொல்லலாம். இந்த பாடலின் approach என்பது “you look beautiful tonight” போன்ற ஆங்கில பாடல்களின் கட்டமைப்பை கொண்டிருக்கிறது. அதாவது விவரணைகளின் மூலமாக வரிகளை இசைப்பாடலாக மாற்றும் அழகான கவித்துவமான லாவகம். ஆனால் அவை பாடல்களில் கவிதையை attempt செய்வது இல்லை. இது போன்ற பாடல்களின் தீவிர ரசிகன் நான்.

பாடல் வரிகளை lyrical என்னும் இடத்திலிருந்து நேரடியாக poetry என்னும் தளத்திற்கு நகர்த்தியவர், அதை வெகுஜன மக்கள் connect ஆகும் வகையில் எழுதியவராக கவிஞர் வைரமுத்துவை சொல்லலாம். “என்மேல் விழுந்த மழை துளியே” முதல் வரியிலிருந்தே கவிதையாகத்தான் விரிகிறது. அதை வெறும் lyrics என்னும் வகைமைக்குள் அடைப்பது கடினம். இதுபோன்று அவர் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார். தமிழ் திரைப்பாடல்களின் ஜாம்பவானாக அவர் தன்னை நிறுவிக்கொண்டுள்ளார். அவரின் பல பாடல்கள் எனக்கு கவித்துவ orgasm அளித்திருக்கின்றன. காதல் பாடல்கள் டூயட், ஆண் பாடுவது, பெண்பாடுவது என்று மூன்று முறைகளில் கையாளப்படுகிறது. வைரமுத்து இந்த மூன்று வகைமைக்குள்ளும் அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார். இதில் எனக்கு எப்பொழுதும் சுவாரஸ்யமாகபடுவது ஆண் பாடல் ஆசிரியர்கள் பெண்களின் உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான். “காசநோய் காரிகளும் கண்ணுறங்கும் நேரத்தில ஆசநோய் வந்த மக அரநிமிஷம் தூங்கலையே” என்ற வரியை வைரமுத்துவின் பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆளுமைக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

பெண் கவிஞர்கள் ஆண்களின் உணர்வுகளை உள்வாங்கி எழுதினால் எப்படியிருக்கும் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. கவிஞர் தாமரையின் வரவு தமிழ் பாடல்வரிகளின் கையாளும் முறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. பெண்களின் பார்வையில் ஆண்களின், அவர்களின் காதலை, பெண்களின் காதலை கேட்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. “நீ ஒரு மல்லிச்சரமே, நீ இலை சிந்தும் மரமே, என் புது வெள்ளி குடமே” என்று ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து பாடுவதாய் அமைந்த பச்சை கிளி முத்துச்சரம் பாடலை தாமரையின் பாடல்களில் உள்ள sensibilitiesகு ஒரு உதாரணமாய் சொல்லலாம். எனக்கு அந்த பெண் பார்வை மிகவும் அழகியல் சார்ந்ததாய் இருக்கிறது. தாமரை கவுதம் படங்களில் எழுதிய பாடல்கள் பல முழுமையாக women sensibilities அழகியல் கையாளப்பட்ட உணர்வுகளை தரக்கூடியவை. கண்களால் கைது செய் படத்தில் “தீக்குருவி” பாடலில் தேன்மொழி எழுதிய “இடையோர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா” என்று ஆண் பாடுவதாய் அமைந்த வரிகள் ஆண்களின் காதலை பேசும் பெண்களின் அழகியலுக்கு மற்றும் ஒரு உதாரணம்.

“எங்க போன ராசா” என்று குட்டிரேவதி எழுதிய “மரியான்” பட பாடல் வரிகள் கையாளப்பட்ட முறை சர்வேதேச தரம் வாய்ந்தது. மிக நுட்பமாக lyrical sense கொண்டு மேற்கத்திய பாடல் வரிகளின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட பாடல் வரிகள். “சாயங்காலம் ஆச்சே கஞ்சு ஆறிப்போச்சே நெஞ்சு ஏறி வாயேன் என்ன செய்ய ராசா உன்மத்தம் ஆச்சே” என்று இசையோடு உருகும் ரேவதியின் வரிகள் lyrical என்பதே சில நேரங்களில் poetry தரும் அனுபவத்தை தரவல்லது என்று நிறுவுகிறது. கலை வெளிப்பாட்டில் ஒருபோதும் பெண்களை ஆண்களால் நெருங்க முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் வெளிப்பாடு மிகவும் உண்மையாகவும் பாசங்கற்றும் வெளிப்படும் தமையுடையதாய் இருக்கிறது. மேற் சொன்ன உதாரணங்களின் வரிசையில் அற்புதமான பாடல் ஆசிரியராக உமா தேவி வெளிப்பட்டுள்ளார். “அனல் காயும் பறையோசை நம் வாழ்வின் கீதம் ஆகிடுமே” என்று மெட்ராஸில் அவர் எழுதிய வரிகள் அதி அற்புதமான கவித்துவ மற்றும் அரசியல் அனுபவத்தை தர கூடியவை. அவர் தொடர்ந்து மிக நுட்பமான காதல், அரசியல் பேசும் பாடல்களை மிக அசாத்தியமான கவித்துவதோடு எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியான காலாவில் அவர் எழுதியுள்ள கண்ணம்மா பாடல் என்னை உருகவைத்து கோப்பையில் ஏந்தி நிற்கிறது.

ஒரு திருமணமான ஆண் தனது 60 வயதில் தனது இளமைக்கால காதலியை மீண்டும் சந்திக்கும் சூழலில் அமைந்த “கண்ணம்மா” பாடலில் உமா ஆண்களின் சார்பில் நின்றும் பெண்களின் சார்பில் நின்றும் மாறி மாறி உருகுகிறார். “ஊட்டாத தாயின் கனக்கின்ற பால் போல் என்காதல் கிடக்கின்றதே” என்று ஒரு ஆண் தனது காதலியை எண்ணி பாடுவதாய் அவர் எழுதியுள்ள வரிகள் அசாத்தியமானவை. கவித்துவ தருணமாக, காதலின் ஏக்கத்தை விவரிக்கும் உவமையாக நம்மை உலுக்கும் வரிகள். exquisite women artistic expression என்பதற்கான உதாரணமாக இந்த வரிகளை சொல்லலாம்.கலை/இலக்கிய தளத்தில் பெண்களின் பங்கேற்பு அசாத்தியமான பங்களிப்பையும், புதிய பார்வைகளையும், புதிய கோணங்களையும் அளிக்கும் என்பதற்கான சாட்சியாகிருக்கும் பெண் பாடலாசிரியர்கள் நமது பிரியத்திற்கும், மரியாதைக்கும் உரியவர்கள். கவிஞர் உமா தேவிக்கு வாழ்த்துக்களும், அன்பும்.

காயங்கள் ஆற்றும் தலைகோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே…..கண்ணம்மா கண்ணம்மா…

ப.ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.