வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அ. முத்துகிருஷ்ணன்

அ. முத்துகிருஷ்ணன்

LMES குழுவினர் ஸ்டெர்லைட்-மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள், அதை பற்றிய தகவலை அறிகிற நேரம் தூத்துக்குடியில் கடுமையான பணிச்சுமை காரணமாக உடனடியாக பார்க்க இயலவில்லை, இன்று காலை தான் அந்த காணொளியை பார்த்தேன்.

1. கோரிக்கை :
இந்த காணொளியின் அறிவியல் தான் அனைவரையும் மிரட்டுகிறது. SAMPLE COLLECTION, வேதியியல் ஆய்வகங்களில் பரிசோதனைகள், முடிவுகள் என்கிற திரையில் எண்களும் கிராபிக்சும் வண்ணங்களில் பளிச்சிடும் போது ரமணா படம் பார்க்கும் எபெக்ட் ஏற்படுகிறது. இந்த காணொளியில் செய்யப்பட்ட ஆய்வு புள்ளிவிபரங்கள் முக்கியமானவை, இந்த முழுமையான ஆய்வக அறிக்கைகளை LMES குழுவினர் வெளிப்படையாக வெளியிட வேண்டும், அதற்கு அவர்கள் தயாரா??

2. சந்தேகம் :

அது மட்டும் அல்ல இதில் காட்டப்படுவது போல் நாம் வாங்கும் குடி தண்ணீர் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் சேகரிக்கப்படும் மாதிரிகளை எந்த முறையான ஆய்வகமும் ஏற்பதில்லை என்பது நடைமுறைகளை அறிந்தவர்கள் அறிவார்கள். தூத்துக்குடியைப் பற்றிய முக்கிய விஞ்ஞானபூர்வமான ஆய்வை மேற்கொள்ள கிளம்பியவர்கள் ஏன் இதற்கான முறையான கண்ணாடி குடுவைகளை கொண்டு செல்லவில்லை. ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வரும் மாதிரிகளை ஆய்வு செய்யும் அந்த உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் எது??

3. உடல் நலக்கேடுகள் :

இந்த காணொளியில் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் மாதிரிகளை பற்றி புள்ளி விபரங்களில் பல தகவல்கள் திரையில் வருகிறது, ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் இதே தகவல்களைத் தான் தங்களின் உடல்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் வாயிலாக கூற முற்பட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் வேதியியல், பொறியியல், புள்ளியியல் படிக்காதவர்கள் என்பதால் தங்கள் பாணியில் தண்ணிய குடிக்க முடியல, மஞ்சக் கலரா மூத்திரம் போகுது, கால் எல்லாம் வெடிப்பா வருது, குழந்தைகளுக்கு தோல் எல்லாம் சுருங்கி போகுது, சிறுநீரகத்தில் கல் அடைக்குது, சிறுநீரகமே இயங்காமல் போகுது, கடுமையான இருமல் வருது, மூச்சு திணறல் வருது என்று தங்கள் வெளிப்பாட்டு மொழியில் உலகிற்கு புரிய வைக்க கடந்த 20 ஆண்டுகளாக மன்றாடி வருகிறார்கள்.

4. ரஜினியின் குரல்:

ஆனால் இந்த காணொளி முன்வைக்கும் அரசியல் தான் கவனிக்கப்பட வேண்டியவை, அது பல கேள்விகளை நமக்கு எழுப்புகிறது.

ஏசி அறையில் இருந்து யாரோ சிலர் உங்களை தூண்டிவிட்டு பாருங்கள் நீங்கள் தான் குண்டடிபட்டு செத்துப் போகிறீர்கள், அடிபட்டு கிடக்கிறீர்கள் என்பதன் மூலம் அதே ரஜினி-பொன்.ராதாகிருஷ்ணன் வகையறாக்களின் அதே குரலை பிரதிபலிக்கிறது இந்த காணொளி.

ஒரு புறம் ஆமாம் சூழல் மாசு பட்டுள்ளது கிராம மக்களுக்கு இந்த சிரமங்கள் எல்லாம் இருக்கிறது என்று கூறும் இவர்கள், அதே வேளை இந்த பாதிப்புகளால் போராடும் போராட்டக்காரர்களை உங்களை யாரோ சிலர் தூண்டிவிட்டு தான் போராடுகிறீர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள் LMES குழுவினர்.

5. ஆற்காட்டு அரசியல்:

ஸ்டெர்லைட் போராட்டத்தையும் அது தொடர்பாக இயங்கிய இருவரையும் குறிபார்த்து கொச்சைப்படுத்துகிறது. ஸ்டெர்லைட் தொடர்பாக ஃபாத்திமா பாபுவும், நித்தியானந்த ஜெயராமும் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள், இவர்கள் தான் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இலக்காக இருந்திருக்கிறார்கள், இந்த காணொளியின் இலக்கும் கூட இவர்கள் இருவரே.

வெறும் ஐந்து நாட்களிலேயே இவர்களுக்கு எல்லாம் தெளிவாக தெரிந்தது என்று அறிவிக்கும் LMES குழுவினர் ஏன் இதே இணையதளத்தில் GOOGLEல் சென்று நித்தியானந்த ஜெயராம் என்று ஒரு தேடுதலை செய்து அவர் எழுதிய கட்டுரைகளை வாசிக்கவில்லை, பேசிய பேச்சுக்களை கேட்கவில்லை என்பது நமக்கு புரியவில்லை.

இந்த LMES குழுவினர் ஏன் இதே இணையத்தில் கூகுலில் சென்று தாது மணல் கொள்ளை, தாது கொள்ளைக்கு எதிரான போராட்டம், Beach Sand Mineral Exporter, S. Vaikundarajan, perils of investigating illegal beach sand mining என்று ஒரு சிறு தேடுதலைக்கூட மேற்கொள்ளவில்லை என்பது இந்த குழுவினரின் பெரு ஆய்வின் தரத்தை வெளிப்படுகிறது.

இவர்கள் ஏன் அதை செய்யவில்லை,
இதை செய்யவில்லை என்பது LMES குழுவினர் ஏன் ஆம்பூர் தோல் தொழிற்சாலை, கூடங்குளம், நெடுவாசல், திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள், அனல் மின் நிலையங்கள், கடலூர் சிப்காட், பற்றி இதே மாதிரி கருத்து தெரிவிக்கவில்லை என்று கேட்பது போல் சிறுபிள்ளைதனமானது.

6. விவி மினரல்சுக்கு எதிரான போராட்டம்:

1990களில் தான் தாது மணல் தொடர்பான பாதிப்புகளை மக்கள் உணரத்தொடங்கினார்கள். 1990 முதல் நடந்த போராட்டங்களின் ஒரு நுனிப்புல்லையாவது அறிந்து கொள்ள LMES குழுவினர் முயன்றார்களா. எத்தனை போராட்டங்கள், குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள், தடியடிகள், பேருந்து எரிப்புகள் என ராமநாதபுரம் மாவட்டம் முதல் குமரி வரை நான்கு மாவட்டங்களின் மீது வைகுண்டராஜனுக்கு இருக்கும் இரும்புப் பிடியை இந்த உலகமே அறியும்.

4 மாவட்டங்களில் உள்ள 150 கிமீ கடற்கரையில் உள்ள கிராமங்களில் செயல்படுகிற தனியார் உளவுத்துறை முதல் இந்த கிராமங்களில் குழுக்களிடையே வாள்-ஈட்டி சகிதம் நடந்த மோதல்கள் எப்படி வெடி குண்டு கலாச்சாரமாக மாற்றப்பட்டது என்பதும், இந்த கிராமங்களின் கமிட்டிகள் எப்படி விலைக்கு வாங்கப்பட்டன என்பது வரை ஒரு முழு புத்தகமே எழுதலாம். கிராமங்கள் மட்டும் அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் அரசு நிர்வாகம் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை யாரின் செல்லப்பிள்ளையாக இயங்கினார்கள் என்பது உலகம் அறிந்த ரகசியங்கள்.

இந்த மாஃபியாக்களின் இரும்புப் பிடியை பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் ஓராயிரம் கட்டுரைகள் வெளிப்படையாக இலவசமாக இணையதளங்களில் கிடைக்கிறது. தோழர் முகிலன் அவர்கள் எழுதிய “தாது மணல் கொள்ளை” நூல் இந்த மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் தோல் உரித்துக் காட்டுகிறது.

1995ல் தாது மணலுக்கு எதிரான போராட்டத்தில் தோழர் புஷ்பராயன் அவர்கள் கை முறிக்கப்பட்டு, மண்டை உடைந்தது கிடந்தது அன்றைய ஜான்கிட் நிகழ்த்திய காட்டுதர்பார் எல்லாம் நம் காலத்து வரலாறு தான்.

2001ல் நாகர்கோவில் பொன்னார் திடலில் மரிய ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடந்த பொதுக் கூட்டம் முக்கியமானது. 2002ல் தாதுமணல் கொள்ளை பற்றி புது தில்லலியை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் வி.பி.ராபர்ட் அவர்களின் ஆவணப்படம் இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது, இந்த பிரச்சனைக்கு புதிய கவனத்தை ஏற்படுத்தியது. தாதுமணல் கொள்ளை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் சிபிஎம் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் பேசிய பேச்சு இங்கே குறிப்பிடத்தகது. சுப. உதயகுமார் அவர்கள் தொடக்கம் முதலே தாது மணல் கொள்ளை பற்றி பேசி வருகிறார், காலச்சுவடில் இவர் தாது மணல் பற்றி எழுதிய கட்டுரையும் முக்கியமானது.

ஆவணப்பட இயக்குனர் அமுதன் அவர்கள் RADIATION STORIES என்கிற திரைப்பட வரிசையில் தாது மணல் கொள்ளை மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாக படம் பிடித்துள்ளார். 2012 முதல் வெளியான இந்த ஆவணப்பட வரிசையைப் பார்த்த யாவரும் மனம் கனத்துப் போவார்கள்.

ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அவர்கள் தாது மணல் கொள்ளை பற்றிய எழுதிய Dancing With the Mining Cartel என்கிற கட்டுரையால் அவர் சந்தித்த கொலை மிரட்டல்கள் அவருக்கு ஆதரவாக நடந்த இயக்கங்கள், கட்டுரைகளை LMES குழுவினர் ஏன் வாசிக்க முற்படவில்லை, அறிந்து கொள்ளவில்லை. இல்லை இதை எல்லாம் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்று யாரும் அவர்களுக்கு கட்டளையிட்டார்களா??

7. பங்காளி தகராறு:

ஸ்டெர்லைட் மற்றும் விவி மினரல் ஆகிய இரு நிறுவனங்களிடையே உள்ள போட்டி மனப்பான்மையை இந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சிகள் முதல் அரசதிகாரிகள் வரை கச்சிதமாக பயன்படுத்தினார்கள். இரு பக்கங்களிலும் பணம் பெற்றுக் கொண்டு இதை ஒரு தீரா பங்காளித் தகராறாகவே மாற்றி குளிர் காய்ந்தார்கள். ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆதாரங்களை உருவாக்குவது வெளியிடுவது காலகால நடைமுறை.

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, என் பங்காளிக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்கிற ஸ்டெர்லைட்டின் குரல் மட்டுமே துள்ளியமாக இந்த காணொளியில் ஒலிக்கிறது. என்னை அனுமதிக்காவிட்டால் நான் யாரையும் இங்கு தொழில் செய்ய அனுமதிக்க மாட்டேன், நிம்மதியாக இருக்க மாட்டேன் என்கிற ஸ்டெர்லைட்டின் மனசாட்சியின் குரலாகவே இந்த காணொளி அப்பட்டமாக ஒலிக்கிறது. முதலாளித்துவம் இப்படித்தான் ஒன்றையொன்றை விழுங்கும்/வீழ்த்தும் என்று நாங்கள் அறியும் சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது ஸ்டெர்லைட்டின் இந்தப் போக்கு.

8. யாரை நோக்கி:

இந்த காணொளி தூத்துக்குடியில் இயங்குவதிலேயே ஸ்டெர்லைட் தான் குறைவாக மாசு ஏற்படுத்தும் ஆலை, அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா, அவர்களின் கழிவு கையாளும் திறன் எவ்வளவு தரமானது தெரியுமா என்று நம் மனங்களில் ஸ்டெர்லைட் மேல் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்துகிறது. YOUTUBEல் இந்த காணொளி யாரை நோக்கி எடுக்கப்பட்டுள்ளது (targetted audience) என்பதும் இந்த காணொளி எத்தகைய விளைவுகளை (conceived results) ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் அங்கே பதிவு செய்யப்படுகிற ஒவ்வொரு பின்னூட்டமும் (comments) உறுதிப்படுத்துகிறது.

ஸ்டெர்லைட் மட்டும் அல்ல இந்த பகுதியில் தாது மணல் கொள்ளை ஏற்படுத்தும் மாசுபாடுகள், ஸ்பிக் நிறுவனம் வெளியிடும் மாசு, அனல் மின் நிலையங்கள் கக்கும் சாம்பலால் ஏற்படும் உடல் நலம் மற்றும் நிலம் சார்ந்த பாதிப்புகள், ஸ்டெர்லைட்டினால் ஏற்பட்டிருக்கும் மாசுபாடுகள் என இவை அனைத்துமே மனிதர்கள் வாழ லாயக்கற்ற நிலமாக தூத்துக்குடியைச் சுற்றிய பகுதிகளை மாற்றி வருகிறது அதே வேளை மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இவை பொன் முட்டையிடும் வாத்துகளாகவும் திகழ்கிறது.

ஸ்டெர்லைட் வெற்றி, மாசுபாடு ஏற்படுத்தும் எல்லா நிறுவனங்களையும் நாம் நம் நிலத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்கிற உத்வேகத்தை தமிழகத்திற்கே ஊட்டியுள்ளது. ஆனால் இந்த காணொளியோ அப்பட்டமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளம்பரம் என்பது பார்க்கும் எவருக்கும் புரியும், ஒரு முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியாது என்பது விஞ்ஞானம் அல்ல எளிய கிராம பழமொழி. தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மிக சுலபமாக உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் உடைத்துவிடும் ஏனெனில் அந்த அரசாணையில் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அழுத்தமான காரணங்கள் இல்லை என்று கிராம மக்களே பேசும் இந்த சூழலில், அடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள் நோக்கி படித்தவர்களை, நகர வாசிகளை, வளர்ச்சி மட்டுமே வேண்டும் என்கிற மத்திய தர வர்க்கத்தை தயார் செய்யும் வேலையை தான் இந்த காணொளி செய்கிறது. கடந்த ஒருவார காலமாக தமிழ்-ஆங்கில ஊடகங்கள் முழுவதுமே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் PAID NEWS-தான் என்பதை வாசிக்கும் அனைவரும் அறிவர்.

இதுவும் கூடPAID NEWS தானா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது, உங்களுக்கு????

அ. முத்துகிருஷ்ணன், செயல்பாட்டாளர்; எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.