பீட்டர் துரைராஜ்

குங்குமம், விகடன், தினகரன் போன்ற இதழ்களில் பத்திரிக்கையாளரான மு.வி.நந்தினி சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். 2007-ம் ஆண்டு முதல் எழுதிய கட்டுரைகள் இந்த 165 பக்க நூலில் இடம் பெற்றுள்ளன.
நகர்மயமாக்கல் வெகுவேகமாக நடந்து வருகிறது; விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப் படுகின்றன; நீர்நிலைகள் தூர்க்கப்படுவதால் குடிநீருக்கு கோடையில் அலைவதும், மழைக்காலத்தில் நகரங்கள் மூழ்குவதும் வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. புவி வெப்பமயமாதல் என்ற பிரச்சினைகள் புதிய விவாதங்களை உண்டாக்குகின்றன. சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவது பரவலாகிவருகிறது. பசுமைத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகள் உருவாகின்றன.
இந்த நூல் அப்படி ஒரு தேவையிலிருந்து எழுகிறது. சூழலியல் இதழ்களுக்கு தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வரும் மு.வி.நந்தினி “காணாத்தைக் கண்ட ஆமான்” என்ற பெயரில் ஆமான் என்று சங்க இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் காட்டுமாடு பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.அதுவே இந்த நூலின் பெயராயிற்று. இந்த நூலில் பல்வேறு பொருளில் 43 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஓரிரண்டு பக்கங்களில் எளிமையாக உள்ளது.
இந்த நூல் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்; பருந்துப் பார்வையைக் கொடுக்கும். சுற்றுச்சூழல் குறித்த தமிழ்நாட்டின் தற்போதைய முக்கிய ஆளுமைகள் இந்த நூல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் விரவிக் கிடக்கின்றனர்; அதேபோல பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் கோடிட்டு காட்டப்படுகின்றன. இந்த நூலை பள்ளிகளில் துணைப்பாட நூலாக வைக்கலாம்.
விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் இயற்கை உழவாண்மை முன்னோடி கோ.நம்மாழ்வாரைச் சந்தித்து எழுதிய கட்டுரை, ‘அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை, வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது’ என்று இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி ஏதும் தெரியாது என்ற சொல்லும் ச.முகமது அலி கட்டுரை, மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் பற்றிய கட்டுரை, சூழலியல் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் பற்றிய கட்டுரை, ஒரு நகரத்துக்கு குறைந்தது 20 சத பசுமைப் பரப்பு தேவை என்று சொல்லும் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் குறித்த கட்டுரை, பாதரசக் கழிவு, அணு ஆயுதக் கழிவு பற்றி ஆவணப் படம் எடுத்த ஆர்.பி்.அமுதன் பற்றிய கட்டுரை என பல அத்தியாயங்கள் வருகின்றன. இதுதவிர ஜீவசுந்தரி, ச.பாலமுருகன், மாலதி மைத்ரி, ஆதவன் தீட்சன்யா, தமயந்தி, ரவிக்குமார், ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ், பேரா.முருகவேள், ஜோதி மணி, பாரதிதாசன், கோவை சதாசிவம், ப.ஜெகநாதன் என பல ஆளுமைகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.
சிட்டிசன் சைண்டிஸ்ட் , காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், பறவைகள் ஒளிப்படக் கலைஞர் என பல புதிய புதிய வார்த்தைகள் நமக்கு இந்த நூல் மூலம் அறிமுகமாகின்றன. “அணுகுண்டு தயாரிக்கத் தெரிந்தவர்களுக்கு பனியன் தயாரிக்கத் தெரியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார் இரா.முருகவேள்.
இது தவிர காவிரி டெல்டாவில் மீதேன், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், வேடந்தாங்கல், பாம்பு, புலி போன்ற பல பிரச்சினைகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் அது வெளியான தேதி குறிப்பிட்டு இருக்கலாம். வெகுஜன இதழ்களில் ஓரிரு பக்கங்களில் வந்து இருப்பதால் கட்டுரைகளில் ஆழமில்லை; ஆனால் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை இது கண்டிப்பாக கொடுக்கும்.
பெட்ரிகோர் பதிப்பகம் ( தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்பு) , 7 மேற்கு சிவன் கோவில் தெரு,வடபழனி,சென்னை -26/ரூ.160/பக்கம் ரூ.165/வெளியீடு 2018.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..