“வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

தமிழகத்தின் கவனம் கொள்ளத்தக்க ஆளுமையான இரா.முருகவேள் சென்னை வந்திருந்தார். வாசக சாலை சமீபத்தில் நடத்திய காரல் மார்க்ஸ் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தோம். மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட இரா. முருகவேளை எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

இரா.முருகவேள்

கேள்வி : உங்களுக்கு ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் பற்றி சொல்லுங்களேன் ?

பதில்: என் அப்பா ஒரு தமிழ் ஆர்வலர், அம்மா ஆசிரியை. அவர்கள் மூலம் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட பின்பு சோவியத் நூல்கள் அறிமுகமாயின. மனைவி, இரு மகள்களுடன் கோயமுத்தூரில் வழக்கறிஞராக இருக்கிறேன்.

கேள்வி: மிளிர்கல், முகிலினி,செம்புலம் என மூன்று நாவல்களை இதுவரை எழுதியிருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு பிடித்த நாவல் எது ?

பதில்: நான் முதலில் எழுத ஆரம்பித்த நாவல் முகிலினி. ஆனால் மிளிர்கல்தான் முதலில் வெளியானது. முகிலினியில் உள்ள பல பாத்திரங்கள், குடும்பங்கள் எனக்கு நேரடியாக அறிமுகம் ஆனவர்கள். சௌத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் திருட்டு அப்போது பிரபலமானது. அனேகமாக நாளிதழ்களில் இந்த திருட்டு குறித்து தொடர்ச்சியாக செய்தி வரும். ஒரு வழக்கறிஞராக இதில் குற்றவாளிகளாக வரும் பலரை நான் அறிவேன்.அதைத் தொடர்ந்து நான் எழுத ஆரம்பித்ததுதான் இந்த நாவல். எனவே என் மனதுக்கு நெருக்கமான நாவல் முகிலினி.

கேள்வி : இந்த நாவலில் இயற்கை வேளாண்மை வலிந்து சேர்க்கப்பட்ட பகுதியாக ஒரு வாசகனாக எனக்கு தோன்றுகிறதே?

பதில்: இன்றைக்கும் சத்தி முதல் கோபி வரையுள்ள 67 கி.மீ. பகுதியில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. விஸ்கோஸ் எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய விழிப்புணர்வும் அதற்கு ஒரு காரணம். போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் ஈடுபட்ட பலர் பல வழிகளில் பிரிந்து சென்றார்கள். அதில் ஒன்று இயற்கை வேளாண்மை. எனவே நான் எதையும் வலிந்து சொல்ல முயற்சிக்கவில்ல்லை. தென்னிந்தியாவில் சுற்றுச்சூழலை காக்க வெற்றிகரமாக நடந்த போராட்டங்கள் மூன்று. அமைதி பள்ளத்தாக்குப் போராட்டம்; பிளாச்சிமடாவில் நடந்த கோகோ கோலாவை எதிர்த்து நடந்த போராட்டம்; சௌத் இந்தியா விஸ்கோஸ் ஆலை மூடல் போராட்டம். முகிலினி நாவலில் வரும் விஸ்கோஸ் போராட்டத்தை முதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழி நடத்தியது. பின்னர் அது மக்களாலேயே தன்னெழுச்சியாக நடந்து வெற்றி பெற்றது. இது ஒரு முக்கியமான போராட்டம். இந்தப் போராட்டத்தின் விளைவாக பலர் ஏதேனும் ஒரு வகையில் எதாவது ஒரு தளத்தில் இயங்கிவருவதை நாம் இப்போதும் காணமுடியும். நாவலில் சட்டைபோடாமல் வரும் குமரன் பாத்திரம் உண்மையான மனிதர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை எதிர்த்து உணர்வுரீதியாக எதிர்த்து முழுக்க முழுக்க தன் வாழ்வை பரிசோதனைக்கு உட்படுத்திய நபர்கள் உண்டு. ஆனால் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தில் இது போன்ற தாக்கங்களை( traces) நாம் காணமுடியாது. வாழ்க்கையையே விலையாகக் கொடுத்துச் செய்யப்படும் இந்தப் பரிசோதனைகளைப் பதிவு செய்ய இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கே: அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டம் என்று சொல்லுகிறீர்களே அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

பதில்: கோயமுத்தூருக்கும் மன்னார்காட்டுக்கும் இடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் சோலைக்காடுகள்தான் அமைதிப் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. சிறுவாணி, பவானி, குந்தா ஆகிய நதிகள் பாயும் அடர்ந்த பசுமைமாறாக் காடுகளைக் கொண்ட பகுதி இது. இந்தக் காடுகளை அழித்து மலையைக் குடைந்து அனல்மின் நிலையம் ஆரம்பிக்க இந்திரா காந்தி காலத்தில் ஒரு திட்டம் எழுபதுகளின் பிற்பகுதியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அமலானால் காடு அழியும், பாலைவனமாகும் என போராட்டம் நடந்தது. இதுதான் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இதுதான் நவீன இந்தியாவில் முதலில் நடந்த போராட்டம். அறிவுஜீவிகள்,மேல்தட்டு வர்க்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.இவர்களை “ஜோல்னா பையர்கள் வர்க்கம்” என்று அழைத்தார்கள. (அதற்கு முன்பு நக்சலைட்டினர்தான் ஜோல்னாபை அறிவுஜீவிகள் என்றழைக்கப்பட்டனர்)இப்போது அந்த இடத்தில அந்தப் போராட்டம் பற்றி எந்த சுவடுகளும் (traces) இல்லை. ஆனால் இந்தப் போராட்டத்திற்கு பின்பு நர்மதா பள்ளத்தாக்கு போராட்டம் போன்ற பல போராட்டங்கள் வட மாநிலங்களில் நடக்க இதுதான் உந்துதலாக இருந்தது.

கே: 60 ஆண்டுகால கோவை மாவட்ட வரலாற்றை முகிலினி  நாவலாக வடித்து இருக்கிறீர்கள். இதற்கு அரசியல் கட்சிகள், வர்தகர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள் பாராட்டி இருக்கின்றனவா ?

பதில்: இந்த நாவல் குறித்து பேச ஆறு,ஏழு கூட்டங்கள் கோவையிலேயே நடந்தன. கலை இலக்கியப் பெருமன்றமும், த.மு.எ.கசவும் இந்த நாவலுக்கு சிறந்த நாவல் விருது வழங்கி இருக்கிறது. இந்த நாவலைப் படித்துதான் பிளேக் நோய் கோயமுத்தூரில் வந்தது பற்றி தெரிந்து கொண்டதாக பலர் தெரிவித்தனர்.இந்த நாவலில் வரும் சம்பவங்களோடு ஒவ்வொரும் தம்மை ஏதோ ஒருவகையில் சம்மந்தப்படுத்திக்கொண்டு பேசுபவர்கள் இருக்கிறார்கள். விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஸடேன்ஸ் ஆலை போராட்டம் பற்றி சொல்லுவார். இதில் வரும் தொழிலதிபரின் மனைவி சௌதாமினி பற்றி பலர் வியந்து பேசுகின்றனர். திட்டியவர்களும் உண்டு. எனவே எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் சொல்லுவது போல அரசியல் கட்சிகள்,வர்த்தகர் சங்கங்கள் பாராட்டு எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இப்படி ஒரு நாவல் வந்திருப்பது தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நாவல் போதுமான கவனத்தைப் பெற்றிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

கே: நீங்கள் மொழி பெயர்த்த எரியும் பனிக்காடு நாவல்தானே பரதேசி படமாக எடுக்கப்பட்டது. இது வெற்றி பெற்றது என நினைக்கிறீர்களா?

ப: இயக்குநர் பாலா இந்த நாவலை சரிவர உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். இந்தப் படம் ஓடியிருக்கலாம்; பொருளாதார ரீதியாக கூட லாபம் அடைந்து இருக்கலாம். ஆனால் படத்தின் உயிர் போய்விட்டது. இது ஒரு புத்தம்புது களம்.உலக அரங்கில் இதுபோன்ற தேயிலைத் தொழிலாளர்கள் வாழ்வை சித்தரிக்கும் படங்கள் இல்லை. கொஞ்சம் பேசும் ஸ்பானிஷ் படங்கள் உள்ளன.வங்காளத்தில் வெளிவந்துள்ள பத்மா நதிப் படகோட்டி (பத்மா நதிர் மோஞ்சிர்) என்ற படம் ஆளில்லாத தீவுகளில் மக்களைக் குடியேற்றும் முயற்சிகளைப் பற்றியது. ஆனால் முழுமையாக அந்தப் பாழ்நிலங்களின் வாழ்வைப் பற்றிப் பேசவில்லை. பரதேசியில் இதனை சிறப்பாக சித்தரித்து இருக்கலாம். எரியும் பனிக்காட்டில் வரும் மக்கள் முதன்முதலாக புகைவண்டியை அப்போதுதான் பார்க்கிறார்கள். எப்படி இதைக் காட்டியிருக்க வேண்டும். தேயிலை தொழிலாளர்களின் கூரை இரும்புத்தகடால் வேயப்பட்டு இருக்கும். பனியில் நீர்த்திவலைகள் கோர்த்து வீட்டின் உள்ளே மழைபோல பெய்யும். இதையெல்லாம் சித்தரித்து இருக்கலாம். எனக்கு மிகுந்த வருத்தம்தான். மலைகளின் தனித்துவமான இயற்கையமைப்பு, சமவெளிகளில் நிலவிய பஞ்சம், தேயிலைத் தோட்டங்களின் நிர்வாக அமைப்பு தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளில் வாழ்க்கை எதையும் ஒழுங்காகச் சித்தரிக்கவே இல்லை.

கே: உங்களின் மிளிர்கல் நாவலும் திரைப்படமாகப் போகிறது என்கிறார்களே?

பதில்: ஆமாம். ஏற்கெனவே எனக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தினால் வெளிநபர்களுக்கு என் கதையை கொடுக்க தயக்கமாக இருக்கிறது. மீரா கதிரவன் என் நண்பர்; தோழரும் கூட. மிளிர்கல் நாவலை படம் எடுப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை.பார்ப்போம்.

கேள்வி : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலை மொழிபெயர்க்க ஏன் தேர்ந்து எடுத்தீர்கள் ?

பதில்: அப்போதெல்லாம் அடிக்கடி விடியல் சிவாவை நான் பார்க்கப் போவேன். அவர் தமிழும் ஆங்கிலமும் தெரிந்த, படிக்கின்ற ஆட்களை கண்டால் விடமாட்டார். இதைப் படியுங்கள்; அதை மொழிபெயருங்கள் என்று ஊக்கப்படுத்துவார். அவர் காட்டிய புத்தகங்கள் தலையணை போல பெரிதாக இருந்தன. அவர் காட்டிய புத்தக அடுக்கில் இந்த நூல்தான் கையடக்கமாக இருந்தது. இந்த நூல் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் படித்தது இல்லை. பொதுவாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் உளவாளிகளின் நினைவுக் குறிப்புகள் எல்லாம் வருத்தப்படுவது போல தன் புகழ் பாடுவதாகவே இருக்கும்.

தான் செய்த அயோக்கியத்தனத்தை எல்லாம் பெருமையாக விவரித்து இருப்பார்கள. தன்னைத்தானே பாராட்டிக் கொண்டவையாக இருக்கும். ஆனால் இந்த நூல் உண்மைக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன்; ஒரு கதைபோல இருந்தது; வறட்டுத்தனமாக இல்லை. எனவே இந்த நூலை மொழி பெயர்த்தேன். வெற்றி பெற்ற நூலாக அது மாறிவிட்டது. விடியல் பதிப்பகம் ஏழு பதிப்புகளையும் பாரதி புத்தகாலயம் ஆறு பதிப்புகளையும் வெளியிட்டது. உண்மையில் சொல்லப் போனால் இந்த நூல் மேம்போக்கானதாக (populist) இருக்கும் என ஓரிரு நல்ல தோழர்களே சொன்னார்கள். அவர்களின் கணிப்பை இந்த நூல் பொய்யாக்கி விட்டது.

கே: மொழிபெயர்க்கப்பட வேண்டிய வேண்டிய நூட்கள் பற்றிய பட்டியல் ஒன்று கொடுத்து இருந்தீர்கள் ?

ப: கலை கலைக்காகவே என்கிற வாதம் எப்போதும் இருக்கிறது. ஆனால் அப்படி வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை விளக்குவதுதான் மைக்கேல் ஆஞ்சலோ வாழ்க்கையை சித்திரிக்கும் Irwing Stone எழுதிய the agony and ecstasy (வேதனையும் பெருமகிழ்ச்சியும்) என்கிற நூல். மைக்கேல் ஆஞ்சலோ தான் வடிக்கும் சிற்பங்கள் கிரேக்க, ரோமானிய சிற்பங்கள் போல இல்லை என நினைக்கிறார். அதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து , இரவில் பிணங்களை சட்டவிரோதமாக பிணவறையிலிருந்து எடுத்து, அறுத்துப் பார்த்து மனித உடல்களின் இரத்த ஓட்டம், சதை, எலும்புகளின் அமைப்பை ( முப்பரிமாணம்) பார்க்கிறார். அதன் பின்புதான் அவர் புகழ்பெற்ற டேவிட் சிற்பத்தை வடிவமைத்தார். இந்த நூலின் இப்பகுதியைப் படிக்கையில் உங்கள் மீது பிணவாடை வீசும்.இதில் அரசியல் இல்லை.கலையை உண்மையாக நேசிக்கும், முழுமைக்காக (perfection) அலையும் ஒருவனின் பயணம்தான் இது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால். Robert Frisk எழுதிய Pity the Nation என்கிற நூல் படிக்க வேண்டும். அது லெபனானில் இஸ்ரேல் தலையீடு தொடர்பான நூல்; அவரே எழுதிய The Great war of Civilizations போன்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். The new face of war என்ற வியட்நாம் போர் பற்றிய நூல் கொரில்லா போர் பற்றி ஓரளவு ஆழமான பார்வையை அளிக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சி, வாசிப்பின்பம் போன்றவற்றுக்காக ரூத் பவார் ஜாப்வாலாவின் டு ஹூம் ஷி வில் என்ற நாவல், தாகூரின் ஹங்ரி ஸ்டோன்ஸ் என்ற குறு நாடகம் ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன். நூல்கள் மட்டுமல்ல சில நல்ல ஆவணப்படங்களும் கூட மொழிபெயர்க்கப்பட வேண்டும். The crusades என்ற பிபிசி ஆவணப்படம், Silence of the panda என்ற WWF என்கிற NGO வுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்தும் ஆவணப்படம், Soviet storm, Niyamgiri என்று இன்னும் ஏராளம் இருக்கிறது. ஒரு வேளை பின்பு ஒருமுறை பட்டியல் இடலாம்.

கே: உலகமயமாக்கல் எழுத்துலகை எப்படி பாதிக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ப: உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் தொலைக்காட்சி முன்பு , பூங்கா முன்பு , டீக்கடை முன்பு மக்கள் ஒன்றுகூடி கதைத்தார்கள். சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. தொழிற்சங்கங்கள் இருந்தன. மன்றங்கள் இருந்தன. குறைந்த பட்சம் அரச மர, ஆலமர மேடையாவது இருந்தன. எனவே எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில் நிலவும் extreme individuvalism காரணமாக தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.இது குறித்த பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கால்செண்டரில் நடைபெறுவது குறித்து ஒரு அற்புதமான நாவல் வந்துள்ளது. இதுபோன்ற பல படைப்புகள் வந்துள்ளன. ஒருவரை விட்டு ஒருவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கை முறை பற்றி எழுதுகிறார்கள். இவர்கள் எழுத தகவல்களை( input) இங்குள்ள அரசியல் கட்சிகள் , சமூக ஆய்வாளர்கள், அமைப்புகள்தான் தர வேண்டும். புரிவதுபோல சொல்ல வேண்டும் என்றால் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் வரலாறு நூல்தான் பொன்னியின் செல்வனுக்கு ஆதாரம். The Holy Blood , Holy grail என்ற நூல் வந்ததால்தான் Davinci code என்ற நாவல் வந்தது. கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.

கே: தமிழ் மக்களின் கவனம் பெற வேண்டிய நூல் , ஆனால் போதுமான அளவு கவனிக்கப்படாத நூல் என்று எதையாவது உங்களால் சொல்ல முடியுமா?

ப: ம்ம்ம் …. யோசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஒன்று நிச்சயம் சாதாரண மக்கள் நல்ல நூட்களை கண்டுகொள்கிறார்கள். குறைகள் இருந்தாலும் சற்று விட்டுக் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். படித்துவிட்டு போகிற போக்கில் ஓரிரண்டு வரிகளில் முகநூலில் எழுதுகிறார்களே. பேர் பெற்ற எழுத்தாளர்கள் குழு மனப்பான்மையால், தான் என்கிற எண்ணத்தால் பேசாமல் இருக்கலாம். ஆனால் வாசகர்கள் இதைப் பொருட்படுத்துவது இல்லை. ச.பாலமுருகன் சோளகர் தொட்டி எழுதும்போதோ , நக்கீரன் காடோடி எழுதும் போதோ அவர்களை யாருக்கும் தெரியாது. இந்த தமிழ் மக்கள்தானே இந்த படைப்புகளை கொண்டாடினார்கள். நான் எரியும் பனிக்காடு தமிழாக்கம் செய்யும்போது பெரிய எழுத்தாளர்களிடம் மதிப்புரை வாங்கிப்போடலாம் என்பதே எனக்குத் தெரியாது. இதற்கு ராயல்டி வரும் எனத் தெரியாது. ஆனால் இதுவரை பத்து பதிப்புகள் வந்துவிட்டன. நாம் எழுதுவது மக்களுக்கு புரிய வேண்டும், சரியான அரசியலைச் சொல்ல வேண்டும்.உண்மையைச் சொல்ல வேண்டும். முடிந்தவரை அழகாக சுவாரஸ்யமாக, நேரடியாகப் பேச வேண்டும். அவ்வளவுதான்.

கே: என்.ஜி.ஓக்கள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறீர்கள்?

ப: ஆமாம் கார்ப்பரேட் என்ஜிஓக்களும் புலிகள் காப்பகமும். என்ஜிஓக்களால் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தியாவின் பல ரிசர்வ் காடுகள் புலிகள் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு காலங்காலமாக வாழ்ந்த மக்கள் பலவந்தமாக வெளியேற்றபப்டும் சூழல் உருவானது. மனிதனும் விலங்கும் ஒன்றாக வாழ முடியாது என்ற மேற்கத்திய கருத்தாக்கம் தீவிரமாக நமது மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இடையே பரப்பப்பட்டது. இந்த புலிகள் காப்பகம் என்று சொல்கிற அமைப்புக்களின் பொறுப்பாளர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் எலிசபெத் ராணியின் கணவர் பிலிப், நெதர்லாந்து மன்னர் என்று மூன்றாம் உலகைச் சுரண்டிக் கொழுத்த மன்னர் பரம்பரையாக இருக்கிறது. மனிதனும் விலங்கும் ஒன்றாக வாழ முடியாது என்பது போன்ற கருத்துக்களை இவர்கள் ஏன் பரப்புகிறார்கள், மக்களைக் காடுகளில் இருந்து வெளியேற்றுவதால் ஏகாதிபத்தியங்களுக்கு என்ன நன்மை என்று தேடிக் கண்டுபிடிக்கச் செய்யப்பட்ட ஒரு சிறிய முயற்சிதான் அந்தக் கட்டுரைத் தொகுப்பு.

கே: செம்புலம் நாவலில் என்.ஜி.ஓக்கள்,வன்கொடுமை தடுப்புச் சட்டம், உண்மை அறியும் குழு குறித்து பேசி இருக்கிறீர்கள்?

ப: நான் பல உண்மை அறியும் குழுக்களில் பங்குபெற்று இருக்கிறேன்.எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 97 சதம் வழக்குகளில் குற்றவாளி இல்லையென்றே தீர்ப்பு வருகிறது. இப்போது புகார் கொடுத்ததும் சாதிக் கொடுமை இழைத்தவரைக் கைது செய்வதையும் கடினமானதாக ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. செம்புலம் நாவல் சாதி சங்கம் பற்றி பேசும் நாவல் என்பதால் கொஞ்சம் அச்சத்தோடேயே இருந்தேன். நல்லவேளை ஏதும் பிரச்சினை வரவில்லை.

கே: அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள் ?

ப: கொஞ்சம் வரலாறு பற்றி எழுதலாம் என இருக்கிறேன். கொஞ்ச நாள் போகட்டுமே !

Wrapper photo: பெருமாள்சாமி தியாகராஜன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.