ப. ஜெயசீலன்
ரஜினியின் சமீபத்திய நிலைப்பாடுகளாலும், பேச்சுகளாலும் காலாவை புறக்கணிக்கவேண்டும் என்ற குரல்கள் கேட்க தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை குறித்த அவரின் பார்வையும், கருத்தும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய ரஜினியின் கருத்து என்பது என்ன? தமிழக முதல்வர் சட்டசபையில் வாசித்த அறிக்கையின் அச்சு அசல் நகல் வடிவம். அதாவது தமிழகத்தின் முதல்வராக அரசியல் சாசனத்தின்படி பதவி வகிக்கும் ஒருவரின் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் உள்ள செய்திகளை வரிக்கு வரி ஆமோதிக்கும் வகையில் ரஜினியின் பேச்சு அமைந்துள்ளது. இப்பொழுது by any common sense நமது கோபம் கண்டனம் எல்லாம் யாரை நோக்கியதாக இருந்திருக்க வேண்டும்? சினிமா பிரபலம் என்ற ஒற்றை அடையாளத்தை தவிர தனக்கென்று மதிக்கத்தக்க எந்த அடையாளமும் அற்ற ரஜினியை நோக்கியதாக இருக்க வேண்டுமா அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள தமிழக முதல்வரையும் அவருடைய அரசாங்கத்தையும் நோக்கியதாக இருக்கவேண்டுமா??
பெரும்பாலானோரின் கோபம் இன்னமும் அரசியல் கட்சியை கூட தொடங்காத political or intellectual nobody என்று வகைமைக்குள் அடங்கும்.. வெறும்… மீண்டும் சொல்கிறேன்… வெறும் சினிமா பிரபலமான ரஜினியை நோக்கி திரும்பியிருக்கிறது. சரி இருக்கட்டும். ரஜினியை இவர்கள் எதிர்க்க சொல்லும் காரணம் என்ன? அவர் பிஜேபி’யின் குரலாகவும் rssன் குரலாகவும் ஒலிக்கிறார் என்பது. பிஜேபி- rss குரல் என்பது என்ன? பிராமணர்கள் மணியாட்டும் ஹிந்துத்துவமும், அதன் கோட்பாட்டு வடிவமான சாதியமும். ரஜினி பிஜேபியின் குரலாக ஒலிக்கிறார் என்று ஊளையிடும் சான்றோர் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஹிந்துத்துவம் குறித்தும் சாதியம் குறித்தும் தாங்கள் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் வாழ்வியல் தேர்வுகள் குறித்து யோசிக்கவேண்டும். பட்டையும் கொட்டையும் மாட்டிக்கொண்டு, சாதகம் பார்த்து சொந்த சாதியில் திருமணம் செய்துகொண்டு, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிந்துத்துவத்தின் முன், சாதி அமைப்பின் முன் மண்டியிட்டுக்கொண்டே, தனது குடும்பமும் சுற்றமும் சாதி என்னும் மலத்தில் பன்றிகளை போல உழன்றுகொண்டிருப்பதை மௌனமாக நியாப்படுத்திக்கொண்டு, பிஜேபி rssன் ஹிந்துத்துவ கோட்பாட்டை அறிந்தும் அறியாமலும் அனுதின வாழ்வில் கடைபிடித்துகொண்டே இவர்கள் ரஜினியின் நிலைப்பாடுகள் குறித்து பேசுவது கேலிக்குரியது. உண்மையில் இவர்கள் பிஜேபியின் rss கோட்பாடுகளின் மீதும் கருத்துக்களின் மீதும் கடுமையான முரண்களை கொண்டவர்களாயிருந்தால் இவர்கள் கச்சாநத்தம் சாதிய படுகொலை குறித்தல்லவா எழுதி, கண்டித்து தள்ள வேண்டும்? சாதிய முரண்களும் சாதிய வன்முறைகளும்தானே ஒருவகையில் ஹிந்துத்துவ கோட்பாடுகளை வலிமைப்படுத்தும்? சாதிய படுகொலைகள்தானே எல்லோருக்கும் மேலே பார்ப்பான்..மற்றவர்கள் அடுத்தடுத்த படிநிலை என்கின்ற கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தும்? ஆனால் இவர்கள் யார் மயிரை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள் என்றால் இயக்குனர் ரஞ்சித்தின் தாடி மயிரை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஹிந்துத்துவ ரஜினியை ஒரு போராளியாக சித்தரித்து படம் எடுத்து அப்பாவி தலித் மக்களிடம் ரஜினிக்கு தலித் காவலன் முகவரி தருவதாகவும், இதன் மூலம் போராளியாக தன்னை காட்டி கொள்ளும் ரஞ்சித் பணத்திற்காகவும், புகழுக்காகவும் ரஜினியின் தீய நோக்கங்களுக்கு துணைபோகாதாகவும் கொட்டாவி வர வைக்கக்கூடிய காரணங்களை சொல்கிறார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஏற்கனவே தனுஷ் லைக்காவிற்கு நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டதாய் சொல்லப்படும் காலாவை புறக்கணித்து ரஜினிக்கு பாடம் புகட்டப்போவதாய் சபதம் எடுத்திருக்கிறார்கள்.
ஒரு படத்தை புறக்கணியுங்கள் என்று எதோ ஒரு காரணம் சொல்லி அவர்கள் பரப்புரை செய்வது அவர்கள் உரிமை. ஆனால் இதற்குமேலும் காலாவை பார்க்கப்போகிறவர்கள் தமிழின விரோதிகள் போலவும், இந்த விஷயத்தில் ரஞ்சித்தை defend செய்கிறவர்கள் எல்லோரும் சாதிவெறியர்கள் போலவும், அல்லது விவரம் தெரியாத கோமாளிகள் போலவும், ரஜினி என்னும் உச்சநட்சத்திரத்தை வைத்து சமூகத்தை சீர்கெடுக்கும் நோக்கத்தோடு ரஞ்சித் படமெடுத்திருப்பதை போன்றும் தான்தோன்றித்தனமாக கருத்துக்களை பரப்புகிறார்கள். உதாரணத்திற்கு மனுஷ்யபுத்திரன் முகநூலில் ” ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி” என்று எழுதியிருக்கும் ஒரு பதிவை எடுத்துக்கொள்ளலாம். தான்தோன்றித்தனமான, இன்னும் வெளிப்படையாக சொன்னால் திமிர்த்தனமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவில் ” அம்பேத்கரைகூட விமர்சித்துவிடலாம். ரஞ்சித்தை தொட முடியாது போலும்” என்று முடிக்கிறார். இங்கு சீமான் கேட்ட “ரஞ்சித் என்ன அம்பேத்கரா” என்ற கேள்வியை நினைவுகூர்வது முக்கியமானது. இரண்டு பேரின் வார்த்தைகளும் வெவ்வேறாயினும் அர்த்தம் ஒன்றுதான். ரஞ்சித் என்னும் தலித் பெரிய மயிராண்டியா? என்பதுதான் அந்த வாசகங்களின் உள்ளார்ந்த அர்த்தம்.
மனுஷ்யபுத்திரன் எனதுமனதிற்கு நெருக்கமான பல கவிதைகளை எழுதிய கவிஞர்தான். ஆனால் அவர் தன்னை ஒரு கோமாளியாக வெளிப்படுத்தி வெகுகாலமாகிறது. coming soon poster போல இந்த தலைப்பில் ஒரு கவிதை எழுதி கொண்டிருக்கிறேன் இன்னும் அரைமணிநேரத்தில் போடுகிறேன் என்று ஸ்டேட்டஸ் போடுவதாகட்டும், ஒருவர் செத்தவுடன் அவர் என்ன ஏது என்று கூட தெரியாமல் குபீர் என்று சிரிப்புமூட்டும் வகையில் இரங்கல் கவிதை எழுத்துவதாகட்டும்(ஸ்டிபன் ஹோக்கிங்ஸ்), தனது கவிதை 100 பேரால் ஷேர் செய்யப்பட்டால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த வீரனை போல் அதை screen ஷாட் எடுத்து போடுவதாகட்டும், அனிதாவின் மரணத்தை தொலைபேசியில் சொல்ல அவர்களிடமே அனிதாவை பற்றி விசாரித்து மரத்தடியில் காரை நிறுத்தி சோகத்தை பிழியும் இரங்கல் கவிதை எழுதியதாக அவரே பதிவிட்டதாகட்டும், நடுயிரவில் “நீல திமிங்கலத்தை” பற்றிய உலகின் முதல் கவிதையை தான் தமிழில் எழுத்துவிட்டதாக அவரே ஸ்டேட்டஸ் போட்டு சொல்வதாகட்டும், கூச்சப்படாமல் ஸ்டாலின் மனைவியின் “நானும் அவரும்” புத்தகத்தை கலைஞரின் குறளோவியும் அளவிற்கு buildup பண்ணி வெளியிட்டதாகட்டும், தன்மானத்தோடு கிளர்ந்தெழுந்த பத்திரிகையாளர்களை “வெற்று சாகசக்காரர்கள்” நிஜமான சாகசக்கார ஸ்டாலின் முன்னெடுத்த மனித சங்கிலி அதிரடி போராட்டத்தில் இருந்து கவனம் திருப்பிவிட்டார்கள் என்று ஆவேசப்பட்டதாகட்டும்,தான் ஆய்போனத்திலிருந்து தூங்கும் முன் சீரக தண்ணி குடிப்பதுவரை எதைப்பற்றி தான் கைப்பட எதை எழுதினாலும் அது கவிதையாய் மாறிவிடும் என்னும் நம்பிக்கையில் வெறித்தமனாக ரெஜிஸ்டர் ஆபீஸில் எழுதப்படுவதை விட அதிகமாக கவிதை எழுத்துவதாகட்டும் என்று அவர் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அது அவரது தனிப்பட்ட வாழ்வியல் தேர்வுமுறை. இவர் ஒரு உதாரணம்தான். இவரை போன்றே உள்ள பலரும் காலாவை பற்றியும் ரஞ்சித்தை பற்றியும் வைக்கும் கருத்துக்கள் விஷமத்தனமானவை, கோமாளித்தனமானவை.
கவிஞர் சொல்கிறார் “ரஞ்சித்தை தோற்கடித்துவிடாதீர்கள்” என்று அழுகுரல்கள் ஒருபுறம் என்று. மேலும் சொல்கிறார் ” ரஜினியினால் ரஞ்சித் ஆதாயம் அடைகிறார் எனில் ரஜினிக்கு ஏற்படும் இழப்புகளிலும் ரஞ்சித் பங்குபெறுவதுதான் நியாயமானது.” என்று. ரஞ்சித் ஒரு தொழில்முறை வணிக சினிமா இயக்குனர். ரஞ்சித்துக்கு அம்பேத்தகரிய கோட்பாட்டின் மீதும், அரசியல் சித்தாந்தங்களின் மீதும் ஆழமான புரிதலும், பார்வையும் இருக்கிறது. அதை தனது படங்களின் மூலமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற வேட்கையிருக்கிறது. இந்நிலையில் இயல்பாக தனது கருத்துக்கள் வெகுமக்களை சென்றடைய ஒரு வலிமையான கருவியாக அவர் ரஜினியை பார்க்கிறார், பயன்படுத்த விழைகிறார். “கபாலி” பார்த்த யாருமே அது ரஜினி படம் என்று சொல்லமாட்டார்கள். அது இயக்குனர் ரஞ்சித்தின் படம்தான். இதை ரஜினியே “காலா” பாடல் வெளியீட்டு விழாவில் தனது பேச்சில் குறிப்பிட்டார். “மெட்ராஸ்” நடிகர் கார்த்திக்கின் படம் என்று யாராலுமே சொல்லமுடியாது. அதுவும் இயக்குனர் ரஞ்சித்தின் படம்தான் என்று படம் பார்த்த எல்லோரும் ஒற்றுக்கொள்வார்கள். இப்படி தான் யாரை இயக்கினாலும் அந்த திரைப்படத்தில் தனது கருத்துக்களை தமிழ் சினிமாவில் முன்னெப்போதும், யாரும் பேச துணியாத அளவில் தன்னால் பேச முடியும் என்று நிருபித்த இயக்குனர்தான் ரஞ்சித். சாதி ஹிந்துக்கள் “என்னா பெருசா பேசிடாப்ல, அம்பேத்கர் படத்த நாலுதடவ காட்டுனா அது தலித் சினிமாவா” என்று கேட்கிறார்கள்.
சாதி ஹிந்துக்களால், சூத்திரர்களால் ஒருபோதும் தலித்துகளின் sensibilities யை உள்வாங்கமுடியாது. தலித்துகளின் கலை இலக்கிய செயல்பாடுகளை புரிந்துகொள்ளமுடியாது. எனது நண்பரோடு நான் மெட்ராஸ் படத்தை பார்க்க சென்றிருந்தேன். படம் முடிந்த பிறகு அவரிடம் படம் எப்படி என்று கேட்டதற்கு என்னா நண்பா just another action drama என்று சொன்னார். ஆனால் எனக்கு அந்த படம் நெடுகையிலும் என்னோடு ஒரு உள்ளார்ந்த உரையாடலை நிகழ்த்தி காட்டியது. எனது கோபத்தை, எனது ஆற்றாமையை, அநீதிக்கு எதிரான சீற்றத்தை மிகவும் அந்தரங்கமாக பிரதிபலித்தது. வேறு சில தலித் நண்பர்களிடம் பேசும்போதும் அவர்களும் இதையேதான் சொன்னார்கள். மார்ட்டின் லூதர் கிங் வெள்ளையர்களிடம் நீதி கோரியினார். மால்கம் கருப்பினதவரிடம் புரட்சியை வலியுறுத்தினார். ரஞ்சித்தின் சினிமா என்பது சாதி ஹிந்துக்களிடம் எந்த நேரடியான உரையாடலையும் நிகழ்த்துவதில்லை. எந்த சாதி ஹிந்துக்களிடமும் ஏன் ஜி இப்படி பண்றீங்க என்று தர்க்கம் பேசுவதில்லை. சாதி ஹிந்துக்களிடம் தர்க்கம் பேசுவதும், நீதி கோருவதும் விஷ பாம்பின் இல்லாத காதில் ஊதும் மகுடி என்று ரஞ்சித்துக்கு புரிந்திருக்கிறது. அதனால் அவர் தனது உரையாடலை அவருடைய படங்களின் ஊடாக தலித்துகளிடம் பிரேத்யேகமாக நிகழ்த்துகிறார். அவர்களின் கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்க வலியுறுத்துகிறார், கல்வியின், அரசியல் அதிகார பங்கேற்பை வலியுறுத்துகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா தளங்களிலும், ஒன்றிணைவதும்,எதிர் தாக்குதலும் சாத்தியம் மற்றும் தேவை என்று ஆணித்தரமாக தலித்துகளின் மனதில் விதைக்கிறார். என்னையும் சேர்த்து பெரும்பாலான தலித்துகளிடம் ரஞ்சித் இந்த அடையாளத்துடன்தான் தன்னை நிறுவிக்கொண்டுள்ளார். ரஞ்சித்தின் சினிமா இரண்டு தளங்களில் விரிகிறது. ஒன்று எல்லா பார்வையாளனுக்குமான தளம். இரண்டாவது தளம் ரஞ்சித் அந்தரங்கமாக தலித் மக்களிடம் மட்டுமே நிகழ்த்தும் விவாத தளம்.
தொடரும்
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..