சி. மதிவாணன்

அரசியல் முன்னணிகள் குறிப்பாக, புரட்சிகர அமைப்புகளின் முன்னணிகள் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் கூட காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கெல்லாம் பின்னே உள்ளது தமிழக அரசின் கை மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டின் கையும் கூட. ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எடுபிடியாக இருந்த போலீஸ் ஆலை மூடல் அறிவிப்பு வந்த பின்னர் கூட ஸ்டெர்லைட்டின் கையால் இயக்கப்படுகிறது.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இவரைக் காவல்துறை கைது செய்து எங்கோ கொண்டுசென்றுவிட்டது. கையில்லாத இவர் என்ன குற்றம் செய்தார்?
அதனைப் புரிந்துகொள்ள ஸ்டெர்லைட் தொழிலாளர்களை எவ்வாறு கையாண்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இவர் ஸ்டெர்லைட் தொழிலாளி.
ஸ்டெர்லைட் ஆலையில் 1000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். 2500 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இந்த 2500 பேருக்கும் எந்த சட்ட உரிமையும் கிடையாது. ESI போன்ற வசதிகள் கிடையாது. ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, ஆலைக்குள் ஏற்பட்ட விபத்தில் படத்தில் உள்ள கார்த்திபனின் கை போனது. ஏறக்குறைய 75% உற்பத்தித் திறன் போனது. ESI வசதி இருந்திருந்தால் அவர் சாகும் வரை அவர் பெற்ற சம்பளத்தின் கணிசமான பகுதி மாதம் தோறும் கிடைத்திருக்கும். ஆனால், அவர் ஒப்பந்த தொழிலாளி. எனவே, அவருக்கான ESI இல்லை. கடந்த மாதம் வரை ஸ்டெர்லைட்டை அணுகி தனது வாழ்நாள் வரையிலான இழப்புக்கு நஷ்ட்ட ஈடு கேட்டிருக்கிறார். காற்றில் விஷத்தைக் கலக்கும் கிராதகர்களுக்கு இதயம் இருக்குமா என்ன?
வேறுவழியின்றி ஆலை வாயில் அருகே அவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுதான் அவர் நடத்திய ஒரே போராட்டம். ஆலையை மூட வேண்டும் என்றல்ல, சட்டப்பூர்வமான தன் உரிமைக்காக, ESI கட்டாத ஆலை முதலாளி விபத்துக்குள்ளான தொழிலாளியின் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்ற உரிமைக்காகப் போராடினார்… தன்னை எரித்துக்கொள்ள முயன்றார்.
கார்த்திபனுக்கு வயதான தாயும் மனைவியும் பிள்ளையும் இருக்கிறார்கள். தன்னை மட்டுமல்ல அவர்களையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்த கார்த்திபனின் கை போன பின்பு யார் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள்?
இன்று காலை கார்த்திபன் வீட்டுக்கு போலீஸ் வந்தது. அவரை அழைத்துச் சென்றது. கார்த்திபன் உடல் பலவீனமானவர். அங்கக் குறைபாட்டுக்கு ஆளானவர். தனக்கு நேர்ந்த கதியால் சித்தம் பேதலித்தவர். அதனால் என்ன? ஸ்டெர்லைட் போட்ட எலும்புத் துண்டு அல்லவா காவல்துறைக்கு முக்கியம்?
கார்த்திபனின் தாய் காவல்துறையின் காலில் விழுந்து பார்த்தார். கையெடுத்துக் கும்பிட்டார். தன்னைக் காப்பாற்ற வேண்டிய மகனைக் காப்பாற்றும் நிலையில் இருந்த அந்தத் தாய் அழுது புலம்பியும், எந்தப் பயனும் இல்லை.
காவல்துறைக்குக் கடமைதானே முக்கியம்?
இப்போது, கார்த்திபன் கதி என்ன? (பலருடைய விசாரிப்பின் பேரில் தற்போது கார்த்திபன் விடுவிக்கப்பட்டதாக சொல்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன்) சட்டப்பூர்வமற்ற எத்தனையோ கைதுகளில் இதுவும் ஒன்று.
தூத்துக்குடி காவல்துறை ஸ்டெர்லைட் கைக்கூலியாகவும் இருக்கிறது.
புரட்சியாளர்கள் விடுதலைக்குக் குரல் கொடுப்பது போல, கார்த்திபன் போன்ற தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
2500 தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை நடத்திய ஸ்டெர்லைட்டுக்குத் துணைபோன ஆலை ஆய்வாளர் அலுவலகம் முதல் தொழிலாளர் நல அலுவலர்கள் அனைவரையும் விசாரணைக்கு ஆட்படுத்த வேண்டும்.
ஸ்டெர்லைட்டிடம் கையூட்டு பெறும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் கலங்கடிக்க வேண்டும். இவற்றையெல்லாம் யார் செய்வார்கள்?
சி. மதிவாணன், அரசியல் செயல்பாட்டாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..