சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
தபஸும் ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தபஸும் வெற்றி கண்டுள்ளார். ‘ஜின்னாவைவிட உணவு நமக்கு முக்கியம்’ என்பதை முழக்கமாக முன்வைத்து ராஷ்ட்ரிய லோக் தள் பிரச்சாரம் செய்தது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீதான மக்களின் கசப்புணர்வு இடைத்தேர்தல் வெற்றியில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டுமே, மதவாத சக்திகளை அப்புறப்படுத்த முடியும் என்பதை உணர்வதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
2014- ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக, இதுவரை நடந்த 27 இடைத்தேர்தல்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பாஜக கோட்டையான உ.பி.யில் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வர் வகித்த மக்களவை தொகுதிகளை இழந்தது குறிப்பிடத்தகுந்தது. பிளவுபடுத்தும் அரசியல் மூலம் கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட கைரானா தொகுதியை இழந்திருக்கிறது பாஜக. இந்தத் தொகுதி பாஜக எம்.பி. ஹகும் சிங் மறைந்ததை அடுத்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஹகும் சிங்கின் மகளான மிராங்கா சிங் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..