பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) குற்றம் சாட்டப்பட்டுள்ள நவீன்குமாருக்கு எதிராக 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நவீன் மீது கொலை, குற்றவியல் சதித்திட்டம் மற்றும் ஆதாரங்களை அழிக்க முற்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு கன்னட எழுத்தாளர் பகவானை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய பிரவீனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அதற்கு உடந்தையாக இருந்த அமோல்கால், அமித் தேகிவேக்கர் மற்றும் மனோகர் எடவ் ஆகியோரையும் விசாரிக்க எஸ்.ஐ.டி திட்டமிட்டுள்ளது. பிரவீனை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.யின் துணை ஆணையர் அனுசெத் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
650 பக்க குற்றப்பத்திரிக்கையில் 130 சாட்சிகளைத் தவிர, நவீன் தனது நண்பரிடம் கௌரியின் கொலையை பெருமையாக பேசிய தொலைபேசி உரையாடலையும் ஆதாரமாக சமர்பித்துள்ளது. 2017-ல் இருந்து பல்வேறு கட்டங்களாக பல்வேறு குழுக்கள் இணைந்து திட்டம் தீட்டி கவுரியை கொலை செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.