கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி.
அவர் பேசியதிலிருந்து…
“நீங்கள் கவனித்தீர்களா? கர்நாடக விதான் சபையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் தேசிய கீதம் முழுவதும் இசைத்து முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டதை… அதிகாரத்தில் இருந்தால் எல்லா அமைப்புகளையும் அவர்கள் அவமதிப்பார்கள் என்பதையே இது காட்டுகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்த அவமரியாதையை செய்வார்கள் இதை எதிர்த்துதான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிகாரத்தில் இருக்கும் மமதையில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் அவமதிக்கலாம். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதை மீண்டும், மீண்டும், மீண்டும் செய்கின்றன..
ஜனநாயக விதிகளை தளர்த்தி முறையற்ற வழிகளில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள். கர்நாடகத்தில் நடந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அன்றி வேறில்லை. அதை காங்கிரஸும் ம.ஜ.த.வும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
எம்.எல்.ஏக்களை வாங்க பிரதமரே நேரடியாக அங்கீகரிக்கிறார் என்பதை நேரடியாக பார்த்திருப்பீர்கள் என்பதை நான் இந்திய மக்களுக்கு , குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சொல்ல விரும்புகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்பதெல்லாம் சுத்த பொய். அவரே ஊழல்மயமானவர்தான். நாட்டின் அமைப்புகளை சீர்குலைக்கும்படியாகவே அனைத்தையும் அவர் செய்கிறார். பாஜகவினர் எம்.எல்.ஏக்களை விலைபேசும் தொலைபேசி பேச்சுக்கள் உள்ளன. அவையெல்லாம் டெல்லி மேலிடத்தின் மேற்பார்வையில் நடந்தவை.
கர்நாடகா, கோவா, மணிப்பூரில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள் அமதிப்பார்கள். அதிகாரமும் பணமும் அனைத்தையும் சாதித்துவிடாது என அவர்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களின் விருப்பமே அனைத்தையும் தீர்மானிக்கும்.
மோடியும் அமித் ஷா அனைத்து அமைப்புகளையும் அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தருகிறார். இந்திய அமைப்புகள் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை.
மக்களைவிட பிரதமர் பெரியவரல்ல. இந்திய அமைப்புகளைவிட தான் பெரியவர் என நினைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸால் வாழ்க்கை முழுவதும் பயிற்சி தரப்பட்ட அவர் அப்படித்தான் நடந்துகொள்வார் என நான் சந்தேகிக்கிறேன்.
உங்கள் அகந்தைக்கு அளவு உண்டு. நீங்கள் இந்த நாட்டை எப்படி நடத்த விரும்புகிறீர்கள் என்பதற்கு ஒரு எல்லை உண்டு. நாட்டின் அமைப்புகளை அவமதிக்க முடியாது என்பதை ஆர்.எஸ். எஸ். புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன். பிரதமரின் ஆட்சி, ஜனநாய முறையிலானது அல்ல, எதேச்சதிகாரமானது. இது அனைவருக்கும் தெரியும். ஏன் பிரதமரும் அறிவார்.
ஆளுநருக்கு வேறு வழியில்லை. அவருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் பிரதமரிடத்திலும் ஆர்.எஸ்.எஸ்ஸிடமும் இருக்கிறது. அவர் ராஜினா செய்தால் நல்லது, ஆனால் அந்த இடத்துக்கு வரும் வேறு நபர் இதையேதான் செய்வார்.
ஊடகங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மீதான பெரும் தாக்குதல், மக்கள் மீது நிகழ்த்தப்படும் நேரடி தாக்குதலாகும்!”
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்...