சாவித்திரி என்னும் ஆளுமையை வீழ்த்திய காதல்: குட்டிரேவதி

குட்டிரேவதி

குட்டி ரேவதி

‘நடிகையர் திலகம்’ படத்தில் என்னை அசத்தியது, நடிகை சாவித்திரியின் வள்ளல் குணத்தை நிறுவியிருந்தது தான். கொடை, ஈகை என்பது அவரது வாழ்வின்
அந்தரங்கப் பகுதியாக இருந்திருக்கிறது. இது சமீபத்தில் நான் கண்ட அபூர்வமான சிறப்பம்சம். பொதுவாக, இம்மாதிரியான தனியம்சங்களைப் புறக்கணித்து விடுவார்கள். சாவித்திரியின் கலைத்திறமை, ஆளுமை இவற்றைத் தாண்டியும் அவரது கொடையுணர்வு மனதில் உயர்ந்து நிற்கிறது.

இரண்டாவது, காதல். தமிழ் சினிமா வழியாகக் கட்டமைக்கப்படும், பெண்-ஆண் ‘காதல்’ பிம்பங்கள் குறித்து எப்பொழுதுமே எனக்கு எரிச்சலான, சங்கடங்கள் நிறைந்த எதிர்வினைகள் உண்டு. இத்தகைய ஓர் ஆளுமையை வீழ்த்தியது, அவருடைய காதல் தான். மதுப்பழக்கம் இல்லை.

ஓர் உறவிலிருந்து இன்னோர் உறவிற்கு நகரும் வாய்ப்புகளும் சலுகைகளும் ஆண்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், ஒற்றைக்காதலை மனதில் உயர்த்தி வைத்து அதனடியிலேயே சரணடைந்து கிடைக்கும் பெண்களின் தன்மை, ஒரு கலையரசியையே வீழ்த்தியிருக்கிறது என்பது என்னை நிறைய சிந்திக்க வைத்தது. நமக்கு சினிமா வழியாக காட்டப்படும், கட்டமைக்கப்படும் காதல் உதாரணங்கள், பெண்கள் வாழ்விற்கு உதவுவதே இல்லை. ஆண்களுக்கும் தான்.

தண்ணீரில் எண்ணெயாகத் தனித்து விடப்படும் பெண்ணின் காதல் உணர்வுகள், இப்படத்தின் இயக்குநர் சொல்ல வந்து அதை தொட்டும் தொடாமல் சொல்லியிருக்கிறார். இந்த அளவிற்கு அது காதலின் நவீனத்தை எட்டியதற்குக் கூட, அந்த இயக்குநர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவராய் இருந்தது தான் காரணம் என்று உறுதியாகச் சொல்வேன்.

இதையெல்லாம் காதல் என்று இனியும் பார்க்கவேண்டுமா என்ற சந்தேகமும் மேலோங்குகிறது. பெண் – ஆண் உறவின் வெவ்வேறு நிலைகளை நாம் விரிவாகப் பேச, புரிந்துகொள்ள சினிமா இன்னும் அதிகவாய்ப்புகளைத் தரவேண்டும்.

சாவித்திரி – சிவாஜி இணையாக அல்லது வேறு வேறு உறவு நிலைகளில் நின்று நடித்த நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பதிந்த கதாபாத்திரங்கள் வழியாக, இருவரும் நமக்குக் கொடுத்த வாழ்வியல் சிந்தனைகள் (விமர்சனத்துக்கும் உரியனவும் உள்ளடங்கும்) முக்கியமானவை. அவை, இவர்களை மையப்பாத்திரங்களாக வைத்து அதன் இயக்குநர்கள் கையாண்ட கதைத்தளங்கள் சம்பந்தப்பட்டவை.
அறம் நோக்கியும், உறவுகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் செயல்பாடுகள் நோக்கியும் பேசும் கதைக்களங்கள். அந்த வகையில், நடிகையர் திலகம் படத்தில், தமிழ் வாழ்வியலோ, உணர்வு வெளிகளோ இல்லாதது பெரும் குறை.

மற்றபடி, படத்தில் சாவித்திரியின் நடிப்பு, அந்தக்காலகட்டம் மற்றும் அவர் நடித்த சினிமாக்களின் அதிகாரப்பூர்வத்தன்மையை எல்லோரும் வியந்திருக்கின்றனர். எனக்கு அதில் வியப்பு இல்லை. சினிமா என்றால் அது தான். பொதுவாக, சினிமாவிற்கு வெளியே இருந்து அதை நோக்குபவர்களுக்கு இது வியப்பாகத் தெரியும். உழைப்பு, அதன் பிரமாண்ட வடிவம் இவற்றால் தான் இது சமூகத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் கலை வடிவமாக இருக்கிறது, என்று நினைக்கிறேன். இலக்கிய வெளியிலிருந்து சினிமாவிற்கு நகர்ந்த பல பேருக்கே இந்த உழைப்பும் அது கோரும் திறமையும் புரிவதில்லை என்பதால் தான் சினிமா மீதான இந்த வியப்பும், அன்னியத்தன்மையும் சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கிறது.

திறமை என்பதை புத்தர் மனிதனின் முக்கியமான செல்வம் என்று எப்பொழுதும் குறிப்பிடுவார். இந்தப்படத்தில், கவனிக்க வேண்டிய அவசியம், நடிகை கீர்த்தி இந்தப் படத்தின் வழியாக வளர்த்துக்கொண்ட திறமை. இருபத்தைந்து வயதில் இத்தகையை திறமை வளர்க்கும் பணிக்குத் தன்னை உட்படுத்திக்கொள்வது, இளைய தலைமுறை ஒன்று முன்னணிக்கு நகர்வதையும் அவர்கள் மீது தனித்த மரியாதையையும் எழுப்புகிறது.

வெறும் செல்ஃபிகளாலும், நான்கு வரிகளால் அவதூறுகளை இறைக்கமுடியும் தன் சுதந்திரத்தாலும் இளம்தலைமுறை, தனிப்பட்ட தம் திறமை நோக்கி கவனம் குவிப்பதில்லையோ என்று நினைப்பேன். கீர்த்தியின் நிறைய நேர்காணல்களைப் பார்த்தேன். அழகான முதிர்ச்சியை எட்டியிருக்கிறார்.

‘நடிகையர் திலகம்’, என்ற டைட்டில் மேலே எனக்கு விமர்சனம் உண்டு. கடுமையான ‘ஜெண்டர்’, முத்திரை இது. சாவித்திரியின் திறமைக்கும், அவர் நடிப்புத்துறையைக் கையாண்டு முன்னகர்ந்து கொண்டே இருந்த தீவிரத்திற்கும் நடிகையர் திலகம் என்ற டைட்டில் எல்லாம் பொருந்தவே பொருந்தாது.

குட்டி ரேவதி, எழுத்தாளர்; திரை இயக்குநர்; பாடலாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.