போலீஸாரால் தேடப்படும் பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகர் இரண்டு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இரண்டு முறையும் முன் ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இரண்டாவது முறையாக ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ராமதிலகம், “எஸ். வி. சேகர் உள்நோக்கத்துடன் முகநூல் பதிவை பகிர்ந்திருப்பதாக தெரிகிறது. அந்த கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிரான கருத்து. பணிபுரியும் பெண்களை அந்தப் பதிவில் சொன்னதைவிட கடுமையாக சொல்ல முடியாது. இதுபோன்ற கருத்துக்களால் பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வரமுடியாத நிலை ஏற்படும்” என தெரிவித்திருந்தார்.
போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ். வி.சேகரும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து உரையாடுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த விழா இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழா என்பதும் விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர் என்பதும் பின்னர் தெரியவந்தது. போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், போலீசாரால் தேடப்படும் எஸ்.வி சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மைதான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொன்.ராதாகிருஷ்ணனின் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல” என்று தெரிவித்ததோடு, “எஸ்.வி. சேகர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்” எனவும் கூறினார்.