அன்னையர் தின கட்டவிழ்ப்பு: கொற்றவை

கொற்றவை

கொற்றவை

இந்த அன்னையர் தினத்தில் (எனக்கு) அவசியமானதோர் கட்டவிழ்ப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இக்கட்டவிழ்ப்பு என் நலம் விரும்பிகளுக்கு சற்று அதிர்ச்சிகரமானதாகவும் என்னைத் தங்களின் எதிரிகளாக கட்டமைத்துக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாட்டம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

எவ்வகையிலேனும் இச்சமூகத்திற்கும்… ‘எதிரிகளுக்கும்’ என்னால் மகிழ்ச்சியளிக்க முடியுமெனில் எனக்கு அது பெரும் மகிழ்ச்சியே.
என்னுடைய முகநூல் செயல்பாடுகளில் சமீப காலங்களில் சில மாற்றங்கள் தென்படுவதை ஒட்டி, ஒரு சில நண்பர்களுக்கு குழப்பம், வெறுப்பு… நீங்களுமா இப்படி போன்ற கேள்விகள்…

அந்த நீங்களுமா என்பதில் உள்ள அக்கறையை நான் மதிக்கும் அதேவேளை இதுபோன்ற கேள்விகள் என் மீது ஏற்றி வைக்கும் பிம்பத்தையும் நான் தகர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவும் ஒருவித தூய்மைவாத கண்ணோட்டமாக – ‘மார்க்சியர்’ / ‘பெண்ணியவாதி’ / ‘போராளி’… என்பதற்கு அவர்கள் கொடுத்துக்கொள்ளும் முட்டாள்தனமான புரிதலாக இருக்கிறது.

அத்தகைய பிம்பங்கள் எனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்கக்கூடியதாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. அவரவர் என்னை (என் போன்ற பெண்களை) தங்களின் விருப்பம் போல் வடித்துக்கொள்ளும் அவசியமின்றி நான் முன்னமே சொன்னது போல் என் சுயசரிதையை எழுதும் அவசியம் ஏற்படுமெனில், அதை நானே எழுதுவேன்.

தனிப்பட்ட வாழ்வை ஏன் பொதுவெளியில் வைக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம். பொதுவெளியில் இயங்குவதால் என் போன்ற பெண்களின் வாழ்வு மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் ’கற்பிக்கவும்’, கற்பிதங்களை முறியடிக்கவும் உதவுகிறது. அதோடு இங்கு ஒரு சில ‘குடிகார மகான்களுக்கு’ கம்யுனிஸ்டுகள் / சமூக மாற்றத்திற்காக இயங்க விரும்பும் ஆர்வலர்கள் பற்றி – கோட்பாட்டு அறிவற்ற காரணத்தால் – ஏற்படும் புரிதலில் (தன்னுணர்வின்றி?!) பல்லிளிக்கும் ஆணாதிக்க எக்காளத்தை காரி உமிழவும் இது தேவைப்படுகிறது.

என்னைப் பற்றிய சுய குறிப்பில் மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
நான் ஆகச்சிறந்த காதலி, ஆகவே சகியாக் காதலை துறப்பவள்

தனியுடைமையின் உடலரசியல் அறிந்தவள்
ஆகவே ஆணாதிக்க கருத்தாயுத வாளினை
வீசுபவர்களின் அமிலக் குறிகளை நோக்கி திருப்பிவிட்டு
பொருள் போற்றி
வாழ்வைப் பொருளோடு
சமூக மாற்றத்திற்கான சிறிய வினையூக்கியாக செயல்படுவது
என்று எனக்கு நான் கட்டளையிட்டுக்கொண்ட பொருளோடு
அறிவாயுதம் ஏந்தி வாழ்பவள்.

பெண் உடல் என்பது யோனி மட்டுமல்ல….
ஆண் உடல் என்பது குறி மட்டுமல்ல
பெண் உடலும் ஆண் உடலும் கூடுவது புணர்ச்சிக்காக மட்டுமல்ல
இணைதல் என்பது அறிவுச் சேர்க்கை
இணைதல் என்பது மனத்துணை*

இப்படியெல்லாம் தெளிவாகப் பேசும் பெண்கள் குறித்த ‘பொதுக் குறிப்பு’ – திமிர் பிடித்தவள், கேடுகெட்ட பெண்ணியவாதி, தேவடியா… புரட்சிகர வேஷம் போடும் வேசி … இதை சுயக் குறிப்பாக தேர்வு செய்யும் வசதியை முகநூல் APP வழங்காத காரணத்தால் ….

என்னைப் பற்றிய சுய குறிப்பில் இப்போது மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்

அறிவைத் துற உடலாக இரு
என்னும்
ஆண் சிலந்திகளுக்கு
ஒரு போதும் நான்
ஈயாவதில்லை

(*மனத்துணை – அனுபவத்திலும், கற்றலில் ஈடுபடுவதன் மூலம் ஏற்படும் எண்ண ஓட்டங்கள், விருப்பங்களின் தேக்கம் மற்றும் அசைபோடும் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள, ஊற்றெடுக்கும் அன்பை இறைக்க, இறைப்புக்கு ஈடாக பன்மடங்காய் திரும்பப் பெற.. இப்படியாக)

முகப்பு ஓவியம்: வருணா

கொற்றவை, எழுத்தாளர்; பெண்ணிய செயல்பாட்டாளர். சமீபத்தில் இவர் தமிழாக்கம் செய்திருக்கும் நூல் ‘ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்’ (சிந்தன்புக்ஸ் வெளியீடு).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.