மனுஷ்யபுத்திரன்

நடிகையர் திலகம் படம் பார்த்தேன். என் இளம் வயதில் நான் கண்ட மறக்க முடியாத புகைப்படங்களில் ஒன்று நடிகை சாவித்ரி கோமா நிலையில் எலும்புக்கூடாக கிடக்கும் கோலம். அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்ச்சி இப்போதும்கூட மனதில் மிஞ்சியிருக்கிறது. சாவித்ரியின் கதையை காட்டுகிறது நடிகையர் திலகம். நான் வெகுநாட்களுக்குப் பிறகு கண்டு மனம் கசிந்த ஒரு திரைப்படம். இது ஒரு ஒரு நடிகையின் கதை அல்ல. வாழ்வில் எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு சென்று அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்த ஒரு கலைஞரின் கதை. இந்திய சினிமாவில் பல கலைஞர்களின் கதையும் இதுதான்.. போராட்டம், வெற்றி, காதல், துரோகம், அவமானம், சுய அழிவு என சாவித்ரி கடந்துவந்த அத்தனை பரிமாணத்தையும் இந்தப்படம் தொட முயற்சிக்கிறது. தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு பெரும் ஆதிக்கங்களின் நடுவே தன் தனித்துவமான இருப்பை நிறுவியர் சாவித்ரி.
சாவித் ரியின் கதையை அந்தக் காலகட்டத்தின் துல்லியமான பின்புலத்தில் இயக்குனர் சொல்ல முயற்சிக்கிறார். சாவித்திரி யின் படங்களின் காட்சிகளோடு திரைக்கதையும் எடிடிங்கும் நகர்ந்தது செல்கிறது . ‘ சிவக்குமார் என்ற ஒரு புதுப்பையன் நடிக்க வந்திருக்கான்’ என்ற வசனத்தைக் கேட்கும்போது காலம் குறித்த ஒரு மெல்லிய அதிர்ச்சி புன்முறுவலை ஏற்படுத்துகிறது. சாவித்திரி போன்ற ஒரு ஆற்றல் மிகுந்த நடிகையின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு சவால். கீர்த்தி சுரேஷ் அந்த சவாலை ஏற்று சாவித்ரியை மறுவார்ப்பு செய்கிறார். துல்கர் சல்மான் தன் அழுத்தமான நடிப்பால் ஆக்ரமிக்கிறார். ஆனால் துல்கரின் குரலும் உடல்மொழியும் அதிகப்படியான ஆண்மைத்துவம் கொண்டது. பெண்மை மிளிரும் ஜெமினி கணேசன் குறித்த நம் பிம்பத்தோடு துல்கரை பொருத்திக்காண முடியவில்லை.
சாவித்ரி போன்ற ஒரு புகழ்படைத்த பெண்ணின் கணவனாக இருப்பதன் மனச்சிக்கல்கள் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் வழியே துல்லியமாக பதிவாகிறது. ஜெமினி கணேசன் கலை வாழ்வில் சிவாஜி கணேசனிடம் தோல்வியடைகிறார். சாவித்திரியிடம் ஆளுமை சார்ந்து தோல்வியைச் சந்திக்கிறார். சாவித்ரி யானைமேல் ஏறி ஊர்வலம்போகும்போது ஜெமினியைப் பார்த்து ‘ யானையேற பயப்படுகிறார்’ என பெண்கள் கேலி செய்வதும் சாவித்ரி ‘ என்னால்தான் நீங்கள் குடிக்கிறீர்களா?” என்று கேட்கும்போது ‘ என் தோல்விக்கும் நீதான் உரிமை கோருவாயா? ‘ என்று ஜெமினி பொங்குவதும் நேர்த்தியான இடங்கள். ஜெமினியும் சாவித்திரியும் ஒருவர் மற்றவரின் மனோரீதியான வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள். இது அப்படித்தான் நிகழ முடியும்.
படத்தில் சாவித் ரியின் போதை மறுவாழ்வு மையம் தொடங்கும் முயற்சிகள், சாவித் ரியின் கதையை தேடிச்செல்லும் பத்திரிகையாளரின் காதல் கதை எல்லாம் படத்தை சற்றே நலிவடையச் செய்கின்றன. சாவித் ரியின் கதையை ஒரு காவிய துயரமாக காணும் க்ளைமாக்ஸை நோக்கிச் செல்வதற்குப் பதில் இயக்குனர் பிற்பாதியில் சற்றே தடுமாறுகிறார்.
சாவித்ரியின் வெற்றி ஆண்களால் ஆளப்பட்ட ஒரு துறையில் மேல் எழுந்து வந்த ஒரு பெண்ணின் வெற்றி. சாவித்ரியின் தோல்வி மாபெரும் கலைஞர் ஒருவர் வாழ்வின் தீவினைகளோடு ஆடிய சூதாட்டத்தின் தோல்வி.
நடிகையர் திலகம் நீண்ட காலம் நெஞ்சில் நிற்கும் ஒரு படமாக இருக்கும்.
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.