கென்ய திரைப்பட இயக்குநர் வனூரி கையூ இயக்கிய இரு பெண்களின் ஓரின பால் ஈர்ப்பை பேசும் ‘ரொபிஃகி’ (Rafiki) கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கென்யா சார்பில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் படம் ‘ரொபிஃகி’. ஆனால், கென்யாவில் இந்தப் படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இயக்குநர் வனூரி கையூவை கைது செய்து சிறையிலடைக்க முயற்சி நடந்துவருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஓரின பால் ஈர்ப்பை இயல்பான விஷயமாக காட்டிய குற்றத்துக்காக இந்தத் திரைப்படம் கென்யாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸ் வந்துள்ள வனூரி, கைதுக்காக தான் கவலைப்படவில்லை என்றும் சட்டப்படியாக தான் எந்த தவறும் செய்யவில்லை என நிரூபிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு வெவ்வேறு அரசியல் நிலைபாடுகள் கொண்ட தலைவர்களின் மகளான நாயகிகள் இருவரும் ஒருவர் மீது மற்றொரு காதல் கொள்வதே ‘ரொபிஃகி’ படத்தின் கதை.

இந்தப்படத்தின் பின்னணி குறித்து இயக்குநர் வனூரி கையூ அளித்த நேர்காணல்:
இந்தப் படத்தை உருவாக்கக் காரணமாக இருந்தது எது?
“நான் எப்போதும் நவீன, ஆப்பிரிக்க காதல் கதையை சொல்ல விரும்பினேன். வளரும்போது, எப்போதாவது இளம் ஆப்பிரிக்கர்களின் காதலை மையப்படுத்திய சினிமாவைக் கண்டோம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களும் மீண்டும் மீண்டும் காதல் வயப்படுவதை திரையில் கண்டோம், எங்களை அல்ல. பதின்பருவத்தின் இறுதிப் பகுதியில் இருந்தபோது, இளம் ஆப்பிரிக்க ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்வதை திரையில் கண்டேன். நான் இப்போது அந்த வியப்பளித்த விஷயத்தை நினைவில் வைத்திருக்கிறேன். அந்தப் படம் காதல் குறித்த எனது கருத்தை பாதித்தது. முன்பெல்லாம், இத்தகைய ஈர்ப்பு வெளிநாட்டினருக்குள் மட்டுமே சாத்தியமாகியிருந்தது.”
படப்பிடிப்பு தளத்தில் உங்களின் பணிபுரியும் தன்மை பற்றியும் அந்த சூழ்நிலை பற்றியும் விவரிக்க முடியுமா?
“ஒருபால் ஈர்ப்பு கென்யாவில் தண்டனைக்குரிய குற்றம். 14 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனைக்குரியது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். LGBTIக்கு எதிர்ப்பான மனநிலை கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ளது. இங்கே உருவான படங்கள், சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாற்றுப் பாலின-ஒரு பாலின காட்சிகளுக்காக தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆழமாக வேறூன்றியுள்ள மனநிலைக்கு எதிரான இந்தப் படத்தை இயக்குவது சவாலான விஷயம் என்பதை நாங்கள் அறிந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன் ஜாக்கிரதை உணர்வுடன் இந்தப் படத்தில் நடிப்பது பற்றியும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெறவேண்டியிருந்ததையும் நடிகர்களிடம் எடுத்துச் சொன்னோம். பெரும்பான்மையினர் ஒப்புக்கொண்டனர், ஒரே ஒருவர் மறுத்தார்.
அசைக்க முடியாத நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க முடியும் என நம்பினோம். ‘ரொபிஃகி’யின் உருவாக்கம் காதல், தேர்வு, சுதந்திரம் பற்றிய கருத்தாடலை எங்கள் குழுவினருடனும் குடும்பத்துடனும் உருவாக்கியது. சுதந்திரத்தைப் பற்றி பேச எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது. காதலிப்பதற்கான சுதந்திரம் மட்டுமல்ல, மாறுபட்ட கதைகளை உருவாக்குவதற்கான சுதந்திரத்தையும்கூட”.
உங்களுடைய நடிகர்களை பற்றி சொல்ல முடியுமா?
“முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா முகட்ஸியா, இதற்கு முன் படங்களில் நடித்ததில்லை. ஷீலா முன்யியா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். என்னுடைய நண்பரின் விருந்தொன்றில் சமந்தாவை கண்டுபிடித்தேன். முதன்மையான கீனா கதாபாத்திரத்தின் தோற்றத்தையும் சில பண்புகளை அவர் பெற்றிருந்தார். விருந்துக்குப் பின் அவருடைய தொடர்பு எண்ணைப் பெற்று, தேர்வுக்கு அழைத்தேன்”.
திரைப்பட உருவாக்கத்தினை எங்கு படித்தீர்கள்?
“திரைப்பட உருவாக்கம் அளவில்லாத வெகுமதியை அளிக்கிறது. என்னுடைய உள்ளுணர்வை நம்புவதை நான் மிகப்பெரும் பாடமாக கற்றிருக்கிறேன். படத்தின் பார்வைக்கு உதவுகிற, அதைப் பார்த்து பயம் கொள்ளாத, என்னை நம்புகிறவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். மற்ற படங்களைக் காட்டிலும், காதல் கதையின் முக்கியத்துவம் உணர்ந்து இந்தப் படத்துக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு கொடுத்தார்கள்.”
கென்ய திரைப்படத் துறையின் நிலை குறித்து உங்களுடைய பார்வை என்ன?
“எங்களுடையது இளம்துறை, ஆனால் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இரண்டு, மூன்று சர்வதேச படங்கள் வெளியாக உள்ளன. எதிர்பாராதவிதமாக எங்களுடைய சிறந்த முயற்சிகள் சட்டத்தின் முன் தோற்று போயிருக்கின்றன. ‘ரொபிஃகி’ கென்யாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. படைப்பாளர்களின் படைப்புச் சுதந்திரமும் வெளிப்பாட்டு சுதந்திரமும் மதிக்கப்படாதபோது ஒரு சினிமா துறை வளர முடியாது. வயதுவந்தவர்களின் திரைப்படம் பார்க்கும் உரிமைகளை அனுமதிக்காதபோது அதை வளர்க்க முடியாது. இந்த கொள்கை எதிர்காலத்தில் மாற்றமடையும் என நம்புகிறோம்”.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..