காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்

‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது.

‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவில்,

“கமல் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் சினிமாவை ஒரு கலையாகவும் சமூகப் பிரச்சினைகளுக்கான ஒரு உரையாடலாகவும் மாற்ற அவர் தொடர்ந்து ஆசைப்பட்டிருக்கிறார். 2000 த்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் மாற்று சினிமாவை உருவாக்கும் பல இயக்குனர்கள் வரிசையாக உருவானதற்கு கமல் போன்ற முன்னோடிகள் வர்த்தக சினிமாவின் எல்லைக்குள் நின்று செய்த பரிசோதனைகளும் ஒரு காரணம். ஆனால் ரஜினியைப்பற்றி யோசித்துப்பாருங்கள். கொடூரமான மசாலா சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை தாண்டி ரஜினி சினிமா என்ற கலை குறித்து ஒரு துளியும் அக்கறை காட்டியதில்லை. பி.வாசுக்களை தாண்டி அவரது சினிமா ஆர்வம் சென்றதில்லை. கமல் தனது வித்தியாசமான முயற்சிகளால் தானும் மூழ்கி தயாரிப்பாளர்களையும் மூழ்கடித்துக்கொண்டிருந்த காலத்தில் ரஜினி தனது பரிசுத்தமான மசாலா வெற்றிகளில் மட்டும் கவனமாக இருந்தார். இதைத்தான் நாற்பது வருடமாக தோற்காத குதிரை என தன்னைப்பற்றி மார் தட்டுகிறார். பட்டை கட்டிய குதிரைகள் எந்த ரிஸ்கும் இல்லாமல் ஓடுவது ஆச்சரியமல்ல.

ஆனால் அப்பேர்பட்ட ரஜினி திடீரெனெ ரஞ்சித் போன்ற தீவிர அரசியல் பார்வைகொண்ட ஒரு இளைஞரை தேர்ந்தெடுக்கிறார். கபாலி மூலமாக ரஜினியின் தலித் பிம்பம் ஒன்று அவசர அவசரமாக கட்டமைக்கப்படுகிறது. ரஜினியின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் எந்த சமூக – அரசியல் பார்வையும் இல்லாதது. எந்த ஒரு மாற்று சினிமா இளம் இயக்குரையும் தன் பக்கம் அண்டவிடாத ரஜினி ரஞ்சித்துக்கு எப்படி அந்த வாய்பை அளித்தார்?

அம்பேத்கரியத்தையும் தலித்தியதையும் விழுங்க முயற்சிக்கும் இந்துத்துவா அரசியல் ரஜினி மூலமாக ரஞ்சித்துகளை பயன்படுத்தி ஒரு இந்துத்துவா ப்ராண்ட் தலித்தியத்தை தமிழகத்தில் வளர்பதுதான் நோக்கமா? ஒரு இயக்குனராக மட்டும் ரஞ்சித் தன் வாழ்வை முடித்துக்கொள்ளக்கூடாது என காலா ஆடியோ ரிலீசில் பேசுவதன் அர்த்தம் இதுதான்.

ரஜினியின் பல அரசியல் முகமூடிகளில் ஒரு முகமூடியாக ரஞ்சித்தும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று எழுதியுள்ளார்.

தமிழ் ஸ்டுடியோ அருண் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் இயக்குநர் ரஞ்சித், ரஜினியுடனான கூடா நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

“இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ஒரு பாலியல் வக்கிரம் என்றால் ரஜினி ஒரு அரசியல் வக்கிரம். இந்த பார்ப்பன அடிவருடி வந்து தலித் அரசியல் பேசிதான் தலித் மக்களுக்கு உண்மையில் விடிவு காலம் வரப்போகுதா? ஒடுக்கப்பட்ட மக்கள் போராடும்போது கூட ஏன் சண்டை போடுகுறீர்கள், மற்றவர்களோடு ஒத்துப்போங்கள் என்று சொல்லக்கூடிய புத்திசாலிதான் ரஜினி. ரஞ்சித் உண்மையில் சினிமாவில் தலித் அரசியல் பேச விரும்பினால் ரஜினியுடனான கூடா நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ரஞ்சித்திற்கு கிடைத்திருக்கும் இந்த் எல்லா அங்கிகாரங்களும் ரஜினியின் பட இயக்குனர் என்பதால்தான். இந்த படம் முடிந்து அடுத்து ரஞ்சித்திற்கு சில காலம் இந்த எபெக்ட் இருக்கலாம். அதன் பிறகுதான் ரஞ்சித் கலை செய்யும் கலகக்காரனா அல்லது பணம் செய்யும் வியாபாரியா என்பது தெரிய வரும். ரஜினி எனும் அரசியல் வக்கிரத்திற்காக காலா படத்தை எதிர்ப்பதுதான் இப்போதைய என் நிலைப்பாடு” என அந்தப் பதிவில் விளக்கியுள்ளார் அருண்.

மற்றொரு பதிவில்,

“உண்மையில் ரஞ்சித் ரஜினி கூட்டணியை விமர்சிக்கும் என்னை போன்றவர்கள்தான் ரஞ்சித் மீதான அக்கறை கொண்டவர்கள். ரஞ்சித்தின் அட்டக்கத்தி மீதோ, ரஞ்சித் சினிமாவில் பேச விரும்பும் தலித் அரசியல் குறித்தோ எனக்கும் பேருவகைதான். ஆனால் அதனை ரஜினி எனும் சினிமா மற்றும் அரசியல் அரைவேக்காட்டு மனிதருடன் சேர்ந்து செய்வதில்தான் பிரச்னை. நண்பர்கள் சொல்வது போல், ரஜினி மூலம் பேசினால் பரவலாக சென்றடையும். உண்மைதான். ஆனால் இந்த பரவலாக என்பதன் பின்னணியில்தான் காலம் காலமாக அயோக்கியத்தனங்கள் நடந்து வருகிறது. நம்முடைய அரசியலில் இருந்துக்கொண்டு, நாம் செய்ய விரும்பும் மாற்றத்தை, பேச விரும்பும் அரசியலை பேசுவதுதான் அறம். ரஜினியோடு ரஞ்சித் கூட்டணி சேர்ந்தால், ரஜினி மூலம் தலித் அரசியல் பரவலாக போய் சேரும் என்பது, மோடி அம்பேத்கரின் கொள்கைகளை பேசினால், அவர் பிரதமர் என்பதால் பரவலாக போய் சேரும் என்பதற்கு சமம். உண்மைதானே. ஒரு பக்கம் அம்பேத்கரின் கொள்கைகளை பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் குஜராத் இனக்கலவரம், மாட்டுக்கறி உண்ண தடை என்கிற எல்லா பாசிசத்தையும் மோடி அரங்கேற்றுவார். ஆனால் நமக்கு தேவை, மோடி அம்பேத்காரின் கொள்கைகளை பேசுகிறார், இதையெல்லாம் மன்னிக்கலாம் என்பதா?

தவிர ரஞ்சித் செய்ய விரும்பும் எல்லா ஆக்டிவிஸத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அதெல்லாம் மக்கள் பணத்தில் நடக்க வேண்டும். ரஜினியை வைத்து படமெடுத்தால் கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக கிடைக்கும். ஆனால் அதில்தான் ரஞ்சித் ஆக்டிவிஸம் செய்ய நினைத்தால் அதை ஆக்டிவிஸமாக கருத முடியாது. விஷமாகத்தான் கருத முடியும். இங்கே முழு விமர்சனமும் ரஞ்சித் ரஜினியோடு கூட்டணி சேர்ந்ததுதான் தவிர, ரஞ்சித் என்கிற கலைஞன் மீதல்ல. நமக்கு பணம் தேவை, பரவலாக நம்முடைய கொள்கைகளை கொண்டு போய் சேர்க்க ஒரு நல்ல மாஸ் தலைவர் தேவை என்று எல்லாவற்றிற்கும் இன்னொருவரை பின்தொடர்ந்துதான் ஆக வேண்டுமா? விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியோடு வைக்கும் கூட்டணியை போன்று அருவருப்பானது, ரஞ்சித் ரஜினி கூட்டணி. ஏன் அரசியலோடு எல்லாவற்றையும் பிணைத்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டால், ஆம், அப்படித்தான் செய்தாக வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்க விரும்பலாம், ரஞ்சித் தலித் அரசியல் பேச விரும்பலாம். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் படத்தை நாங்கள் வெறுமனே படமாக மட்டும்தான் பார்க்க வேண்டுமா என்ன?

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஷங்கர், முருகதாஸ், போன்ற இயக்குனர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நல்ல சினிமா பற்றி நான் பேசினால் அதை விட அயோக்கியத்தனம் வேறில்லை. சில நண்பர்களுக்கு இதிலும் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியாது. ஷங்கர், முருகதாஸிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏன் நல்ல சினிமா பற்றி பேசக்கூடாது. பேசுங்களேன் என்பார்கள். அதைத்தான் நான் எப்போதும் வலியுறுத்தி பேசுகிறேன். அரசியல் என்பது அறம் சார்ந்தது. நான் யாரையெல்லாம் எதிர்க்க விரும்புகிறேனோ, எந்த கட்டமைப்பை எதிர்ப்பு பேசுகிறேனோ அது சார்ந்தவர்களிடம் பெரும் பணம் பெற்று, நான் ஒரு புதிய சினிமாவை உருவாக்குவது என்பது அறம் அரசியல் என்கிற வகையில் மிகுந்த அயோக்கியத்தனம் வாய்ந்தது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் விரிவாக எழுதுகிறேன். ஆனால் இங்கே வந்து கருத்து பதியும் நண்பர்கள், தனிப்பட்ட வன்மம், நீ என்ன செய்த கிழிச்ச, என்கிற ரீதியில் பேசினால் நாட்டம் எனக்கல்ல, உங்களுக்குத்தான். எனக்கு ரஞ்சித்தை ஒரு கலைஞனாக மீட்டெடுக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறது. அதற்காக ரஞ்சித்தின் கூடா நட்பை விமர்சிப்பேன். ரஜினியை எப்போதும் கடுமையாக விமர்சிப்பேன். இந்த சமூகத்திற்கு, சினிமாவிற்கு என எல்லாப்பக்கமும் ரஜினியினால் கேடுதான் விளையும் தவிர, ஒரு நல்ல மாற்றமும் கிடைக்காது. மாற்றம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. ரஜினியினால் கிடைக்க கூடிய எதிர்விளைவுகள் மிக அதிகமானவை. ரஜினி முன்வைத்த ஹீரோயிசம் இன்று வரை பல மட்டங்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அட்டக்கத்தி தினேஷ், நான் கோட் சூட் போடுவேன்டா, என்று சொல்லும்போது ஒரு சமூகம் ஆர்ப்பறிக்குமா? எனில் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அந்த வசனத்தை ரஜினி சொன்னால்தான் ரசிப்பார்கள். கைத்தட்டுவார்கள். காரணம் வசனமல்ல, சொல்வது ரஜினி. நமக்கு தேவை ரஜினி கோட் சூட் போடவேண்டுமா, அட்டக்கத்தி தினேஷ் (இங்கே அட்டக்கத்தி தினேஷ் என்பது தலித் குறியீடு) கோட் சூட் போடவேண்டுமா?” என கேட்கிறார்.

ரஞ்சித் மேல் ஏன் இத்தனை கோபம்? வெறுப்பு? விமர்சனங்கள்? என கேள்விகளை முன்வைக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஸ்மி. அவர் எழுதிய முகநூல் பதிவில்,

“இத்தனை வருடங்களாய் ஆதிக்க சாதிகளின் கூடாரமாய் இருந்த தமிழ் வணிக சினிமாவில் அவர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் பேச முனைகிறார். அது சாதி தந்த சவுகரியங்களில் ஊறிப்போனவர்களுக்கு நமைச்சலை ஏற்படுத்துகிறது சரி.

வெளியில் முற்போக்கு முகமூடிகள் அணிந்தாலும், உள்ளுக்குள் இன்னும் மனுவிற்கு சலாம் போடும், மீண்டும் அந்த சாதி தரும் சவுகரியங்களை அனுபவித்துக் கொண்டே முற்போக்கு பேசும் கூட்டத்திற்கு கருப்பு, சேரி, போராட்டம், உரிமையை மீட்போம் என்ற குரல்கள் மூளைக்குள் புகுந்து எரிகின்றன சரி.

ஆனால் இது எதுவும் இல்லாத சிலருக்கும் ரஞ்சித் மேல் ஏன் கோபம்? விமர்சனம்? தமிழ் சினிமாவின் நடைமுறைகள் தெரிந்துதான் பேசுகிறார்களா? இங்கு அத்தனையையும் முடிவு செய்வது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? இதனூடே இருந்துகொண்டே, அதிலும் தன் அரசியலை பேசிக்கொண்டே, பொதுவெளியிலும் காட்டமாக தன் அரசியலை முன்வைக்கும் ஒரு கலைஞனை இதற்குமுன் தமிழ் சினிமா கண்டதில்லை என்று நான் நம்புகிறேன்.

மெட்ராஸ் வெளிவந்தபோதில் இருந்தே ரஞ்சித்தை ஒழித்துக்கட்ட எத்தனை முயற்சிகள் நடந்தன? இப்போதும் நடக்கின்றன. முகநூலில் சாதி எதிர்ப்பு பேசினாலே நம் தொழிலில் அலுவலகங்களில் எத்தனை எத்தனை தடைகள் வருகிறது? இதில் தமிழ் சினிமாவில், உள்ளேயும் வெளியேயும் ரஞ்சித் பேசும் அரசியலுக்கு எப்பேற்பட்ட தடைகள் வந்திருக்கும்? அதை தெரிந்துகொண்டே, அதற்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல், தான் நம்பும் அரசியலையே படமாக இயக்கியும் தயாரித்தும் பேசியும் செயல்பட்டும் வரும் ஒரு மனிதனை ஆராதிக்க வேண்டாம்… ஆனால் ஆதரிப்பது சமூகக்கடைமை என்று கருதுகிறேன்.

ஆதரிப்பது என்றால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு என்பதல்ல அர்த்தம். ரஞ்சித்தின் திரைப்படங்களை, அரசியலை, செயல்பாடுகளை தாராளமாக விமர்சிக்கலாம். ஏன் அவரிடமே கூட விமர்சிக்கலாம். ஆனால் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை விமர்சிக்கும் அதே தொனியில் காலாவையோ ரஞ்சித்தின் பிற படங்களையோ விமர்சிப்பது நியாயமற்றது.

தமிழ் வணிக சினிமாவின் அத்தனை சட்டகங்களுக்குள் தான் ரஞ்சித் இத்தனையையும் செய்துகொண்டிருக்கிறார். ஒருநொடியில் அதை உடைத்துவிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. வணிக சினிமாவில் இந்த அரசியலை பேசவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. நீங்கள் விரும்பும் சினிமாவில் பேச இன்னும் நேரமெடுக்கும். ஆனால் அதையும் ரஞ்சித் செய்கிறார். பரியேறும் பெருமாள் என்றொரு படத்தை தயாரிக்கிறார். அது நிச்சயம் சமரசமற்ற அரசியல் படமாகத்தான் உருவாகியிருக்கிறது என்று கேள்விப்படுகிறேன். தான் வணிக சினிமாவில் சந்தித்த Limitations, இதுபோன்ற விமர்சனங்களுக்கான முகாந்திரங்கள் அந்த படத்தில் இல்லாமல்தான் அதை உருவாக்குகிறார் ரஞ்சித். இப்படித்தானே மாற்றங்கள் துவங்கும்? இது அடுத்தடுத்து நாம் விரும்பும் சினிமாவிற்கு வழிகோலும். இதை இப்படித்தான் நான் பார்க்கிறேன்.

ரஞ்சித் ரஜினியோடு இணைவதுதான் பிரச்சினை என்றால், அட்டகத்தியும் மெட்ராஸும் வந்தபோது நீங்கள் ரஞ்சித்தை கொண்டாடியிருக்க வேண்டுமே? அந்த படங்களை தயாரித்ததுமே கூட வணிக சினிமா தயாரிப்பாளர்கள்தானே? இவர்கள் சொல்லும் அத்தனை மாற்றங்களும் வரும். படிப்படியாக. ஓவர் த நைட்டில் இல்லை. ரஜினி சார்ந்த விமர்சனங்களையும் அது தன் அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவதையும் ரஞ்சித்தும் உணர்ந்தேதான் இருப்பார். ஆனால் அது சாத்தியப்பட, தீர்மானிக்கும் இடத்திற்கு அவர் வரவேண்டும். உடனடியாக ரஜினியை புறந்தள்ள வேண்டும், இப்படி செய்யவேண்டும் அப்படி செய்யவேண்டும் என்று சொல்வது, ரஞ்சித்தை ஒழித்துக்கட்ட காத்திருக்கும் கூட்டத்திற்கு தான் பயன்படுமே தவிர வேறெதற்குமில்லை.

‘என்ன பெரிய கம்யூனிஸ்ட்டுனு சொல்ற.. ஆனா அமெரிக்க முதலாளி உருவாக்குன ஃபேஸ்புக்ல தான கம்யூனிசம் எழுதிட்டு இருக்க?’ என்று சிலர் கேட்பார்கள். அதற்கு ஒப்பானதாய் இருக்கிறது ரஞ்சித் குறித்த இந்த விமர்சனங்கள் !!” என இயக்குநர் ரஞ்சித் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார் ஹாஸ்மி.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில், “ ‘புகழ்பெற்ற’ நடிகர்களை வைத்துப் படமெடுப்பதில் சிக்கல் இல்லை. ‘சூப்பர் ஸ்டார் பிம்பம்’ கொண்டவர்களை ‘திரும்பத் திரும்ப’ வைத்துப் படம் எடுப்பதுதான் சிக்கல்” என்கிறார்.

அவர் தனது பதிவில், “எ.கா. ஹாலிவுட் எனில் ஆலிவர் ஸ்டோன் படங்களைப் பாருங்கள். அவர் படங்களில் நடிக்காத ஹாலிவுட் ‘புகழ்பெற்ற’ நடிகர்கள் எவரும் இல்லை. அந்தப் படங்கள் அனைத்தும் இயக்குனர் படங்கள். வேறுபட்ட ஜானர்களில் அவரது அரசியலைச் சொல்லும் படங்கள்.

இந்தியாவில் ‘சமாந்தர சினிமா’ இயக்குனர் நிஹ்லானி படங்கள் பாருங்கள். அவரது படங்கள் அனைத்திலும் இந்தியாவின் ‘புகழ்பெற்ற’ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவை அனைத்தும் இயக்குனரின் படங்கள். வேறுபட்ட ஜானர்களில் அவரது அரசியலைச் சொல்லும் படங்கள்.

தமிழில் அப்படி ஒருவரைச் சொல்ல முடியாது. காரணம்? இங்கு நடிகருக்கு ‘உகந்த’, ‘பிம்பக் கட்டமைப்பு’ மற்றும் ‘ஹீரோ வழிபாட்டு’ ஜானருக்குள் ‘புனைவுக் கதை’ செய்து, அதற்குள் ‘மட்டும்தான்’ தமது அரசியலை ‘நுழைக்கும்’ வகையில் இங்கு இயங்க முடிகிறது. இயங்குகிறார்கள்.

தலித் வரலாறும் நாயகர்களும் தமிழில் இல்லையா? ஏன் தாதா ஜானரின் பின்னணியில் தொடர்ந்து தலித் அரசியல் சொல்லும் படங்கள்? இவை தமிழில் பொருளாதார ரீதியில் புரூவ்ட் சப்ஜக்ட் மற்றும் ஜானர். இதனால்தான் இங்கு மாற்றங்கள் இந்த வகையில் நிகழமுடியாது எனச் சொல்கிறோம்.

மலையாளத்தில் இடதுசாரி மற்றும் நக்சலைட் ஓரியன்டட் படங்களில் கூட ‘நட்சத்திர’ நடிகர்கள் நடிக்கிறார்கள். அநேகமாக, இப்படியான படங்களில் நடிக்காத ‘புகழ்பெற்ற’ நடிகர்களே அங்கு இல்லை. காரணம் அங்கு அரசியல் முனைப்புடன் ‘பிம்பங்களைத் தனதாக’ முன்வைக்கிற நடிகர்களின் மரபு இல்லை.

எந்த அரசியல் ஈடுபாடும்-செயல்பாடும் இல்லாமல் சினிமாவை வைத்து ‘ஸ்டிரெயிட்ட்டாக’ முதலமைச்சர் கனவு காணும் ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும்” என்கிற ராஜேந்திரன்,

“மூன்று அடுக்குகளாக ரஞ்ஜித் எனும் பினமினாவைப் பார்க்கலாம்.

1.ரஞ்ஜித் தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.

2.ஒரு திரைஇயக்குனர் கமிட்டட் அரசியல் பேசுகிறார்.

3.தனது நடைமுறை அரசியலுக்கும் திரை அரசியலுக்கும் ஒரு தொடர்ச்சியைப் பேண முயல்கிறார்.

கலை, இலக்கியம், திரை, மேடை, இசைநிகழ்வு, தயாரிப்பு என அனைத்திலும் ஒரு ஓர்மையை விழைகிறார். நிச்சயம் இது தன்னேரில்லாத ஒரு நிகழ்வு.

‘காஸ்ட்லஸ் கலக்டிவ்’ உருவாக்கம் அவரது செயல்பாட்டின் ‘உச்சம்’ எனக் கருதாமல் ரஜினி பட இயக்குனரானது (அதுவும் தொடர்ந்து இரு படங்கள் மற்றும் அதனது பொருள் மதிப்பு போன்றன) ‘உச்சம்’ எனக் கருதுபவர்கள் தான் இங்கு பிரச்சினை.

அவரது ‘உச்சம்’ என்பது அவரது ‘அட்டகத்தி’ எனும் எளிய சினிமாவும் ‘காஸ்ட்லஸ் கலக்டிவ்’ எனும் கலக இசை உருவாக்கமும்தான். பிரம்மாண்டங்களோ தொடர்ந்த தாதா ஜானரோ ஒரு படைப்பாளியின் ‘உச்சபட்சமான’ வெளிப்பாட்டு வடிவங்களாக நிச்சயம் இருக்க முடியாது” எனவும் சொல்கிறார்.

“இதனை போஸ்ட் ட்ருத் யுகம் என்கிறார்கள். அதாவது ‘பின் உண்மை’ யுகம். உண்மை எனப்படும் வஸ்து போயே போச்சு. பொய்யுக்கும் உண்மைக்கும் வித்தியாசம் காணவே முடியாது. இதற்கு பகுதிக் காரணம் ஊடகப் பெருக்கம். இந்தப் பகுதிக்கும் சேர்த்து முழுக்காரணம் இந்த ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல் கம் அரசியல்வாதிகள்.

வெளிநாடுகளுக்குச் சென்று ‘நான் காந்தி பிறந்த மண்ணில் இருந்து வருகிறேன்’ என்று சொல்கிற ஸ்டேட்ஸ்மென் அதே காந்தியைக் கொன்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். அம்பேத்ருக்கு பிரம்மாண்டச் சிலை வைத்து ‘நானும் அம்பேத்கரும் ஒன்று’ எனச் சொல்லும் அதே ஸ்டேட்ஸ்மெனின் மாநில பள்ளிக் கல்வித்துறை அம்பேத்கர் நூற்களைத் தணிக்கை செய்கிறது. இதில் எது உண்மை எது பொய்? இவர் நல்லவரா கெட்டவரா?

ரஜினி படங்கள் உருவாக்கும், முன்வைக்கும் பிம்பங்களை அண்மைக்கால தமிழ்நில உண்மைகளுடன் வைத்துப் புரிந்து கொண்டு, நடைமுறையில் அவர் முன்வைக்கும் ஆன்மீக அரசியலுடன் வைத்துப் பாருங்கள். எது உண்மையான ரஜினி? படங்கள் சொல்லும் ரஜினியா? அல்லது நடைமுறை ரஜினியா? எது உண்மை? எது பொய்? போஸ்ட் ட்ரூத் யுகத்தில் வலதுசாரிகள் ஏமாற்றலாம். இடதுசாரிகள் மயங்கக் கூடாது. மயக்கவும் கூடாது..

ரஜினி-எம்.ஜி.ஆர் குறித்த ‘குறிப்பான’ ஒப்பீட்டை பிறிதொரு தருணத்தில் செய்வோம். தமிழ் சினிமாவில் பிம்பக் கட்டமைப்புக்கும் அரசியல் அதிகாரம் பெறுதலும் என்பதற்குமான சிறந்த எடுத்துக் காட்டு எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருடன் தான் ‘நெருக்கமானவர்’ என்பது முதல் ‘அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்பது வரை நடைமுறையில் எம்.ஜி.ஆராக முனைபவர் ரஜினி.

‘தென்னிந்திய அணைகளை சாவதற்கு முன் இணைப்பது என் கனவு’ என்பது இதில் அடிஷனல் மேடை டயலாக்.

ரஜினி இது வரை உருவாக்கிய பிம்பம். வல்லவன். நல்லவன். ஊழலை ஒழிப்பவன். பெண்களின் காவலன். கடவுளின் குழந்தை. உடைமை மறுப்பாளன் அதனை மக்களுக்குத் தருபவன். காவல்துறை சாகசவாதி. தாதாவானாலும் நல்ல தாதா. அறுதியில் கடவுள் அருளால் இத்தனையும் செய்யும் கடவுளின் வாரிசு.

ரஞ்ஜித் இந்த ஒப்பனையில் தலித் புரட்சியாளன் எனும் சிறகை அவரது தலையில் சொருகலாம்.

சூப்பர் ஸ்டாரின் படங்கள் அவரது படங்களாக அறியப்படுமே அல்லாது ரஞ்ஜித்தின் படங்களாக அல்ல. பாட்ஷாவின் நீட்சியாகவே ரஞ்ஜித்தின் படங்கள் அமையும். பெண்களின் காவலன், ஊழல் ஒழிப்பாளன், கடவுளின் குழந்தை, அடிஷனலாக தலித் மக்களின் கதாநாயகன் என ஒரு சில தலித் மக்களை நம்பச் செய்யலாம். சூப்பர் ஸ்டார் பிம்பம் என்பதன் சமூகச் செயல்பாடு இதுதான்.

சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் வரிசையில் ரஞ்ஜித். இதுதான் யதார்த்தம்.

நடைமுறையில் காலா ஆடியோ மேடையில் ரஜினிதான் ‘நதிகள் இணைப்பு’ அரசியல் பேச முடியும். ரஞ்ஜித் தனது ‘தலித்’ அரசியல் பேச முடியாது. மிஞ்சி மிஞ்சிப் போனால், ரஜினியின் எளிமையில் இருக்கும் ‘பவரை’த்தான் காலாவில் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்ல முடியும். இதுதான் சூப்பர் ஸ்டார் நட்சத்திர அமைப்பும் பிம்பக் கட்டமைப்பும் செயல்படும் எல்லை. இதனை ரஞ்ஜித்தினால் மட்டுமல்ல எவராலும் மீறிச் செல்ல முடியாது.

வித்தியாசமாகச் செய்வதானால் ஒரு அற்புதமான முதியவயதுக் காதல் கதையையோ அல்லது இன்னுமொரு பாசமலர் கதையையோ ரஜினியை வைத்துச் சொல்ல முடியும். எ.கா. மகேந்திரனின் ரஜினி படங்கள்.

புரட்சிகர அரசியலை ரஜினியை வைத்துச் சொல்லவே முடியாது. அது ரஜினியின் ஆன்மீக அரசியலின் கருணாமூர்த்தி எனும் பிம்பக் கட்டமைப்பின் பகுதியாகவே ஆகும்” என வெவ்வேறு பதிவுகளில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் யமுனா ராஜேந்திரன்.

ஜெயச்சந்திர ஹாஸ்மி தன்னுடைய மற்றொரு பதிவு ரஞ்சித் நிலைப்பாடு எத்தகையது என விளக்க முற்படுகிறார்…

“ரஞ்சித் ரஜினி மூலம்தான் தனது தலித் கருத்தியலை சொல்கிறார் எனும் வாதமே தவறு. தனது அத்தனை படங்களில் பேசுபொருளாக தன் அரசியல்தான் இருக்கும் என்பதை ரஞ்சித் பலதடவை மிகத்தெளிவாக விளக்கியபின்னும் கபாலி காலாவில் மட்டும் தலித் அரசியல் பேசுவது போல் கட்டமைக்கப்படுகிறது. அட்டக்கத்தியில் இருந்தே அவர் தனது படங்களில் தலித் கருத்தியல் தான் பேசி வருகிறார். தினேஷ், கார்த்தியை தொடர்ந்து இப்போது ரஜினி. அவ்வளவுதான். நாளை மீண்டும் தினேஷை வைத்து எடுத்தாலும் இதே அரசியல்தான்.

• தலித் அரசியலைத்தான் எடுப்பேன் என்று சொல்லும் இயக்குனர் ஒருவர், ரஜினியை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்ததற்காக அந்த படத்தில் தலித் அரசியலை பேசாமல் தவிர்த்தால் அதுதான் சந்தர்ப்பவாதம். ஆனால் நாயகன் யாராக இருந்தாலும், சூழல் எப்படி இருந்தால், நான் என் படங்களில் பேசும் அரசியலில் இருந்து விலகமாட்டேன் என்று ரஞ்சித் உறுதியாக நிற்பதுதானே அறம்?

• என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள்? ரஜினி உள்ளே வந்தவுடன் ரஞ்சித் தனது அரசியலை மாற்றிக்கொள்ள வேண்டுமா? அல்லது ரஜினியே வேண்டாமென்று ஒதுக்க வேண்டுமா? முன்னது அரசியல்பிழை. பின்னது இருத்தல் பிழை. இந்த அரசியல்தான் பேசுவேன் எனும் இயக்குனருடன் இணைய நாயகர்கள் வருகையில், அவர்களது நிஜவாழ்வு அரசியலை/செயல்பாட்டை பார்த்துதான் ரஞ்சித் அவர்களுடன் இணையவேண்டுமெனில் ஒன்று ரஞ்சித்தே தான் நடிக்கவேண்டும். இல்லை ஒரு புதுமுகத்தை வைத்து படமெடுக்க வேண்டும். அடுத்து, சினிமா எனும் வணிகம் எப்படி இயங்குகிறது என்று தெரிந்தவர்கள் ரஞ்சித் எப்படி கத்தியின் மேல் நடக்கிறார் என்று அறிவார்கள். இங்கு சொல்லும் எந்த அறிவுரையின்படி நடந்தாலும் கத்தி ரஞ்சித் தலைக்குதான். He is playing his cards very carefully.

• முக்கியமாக… ரஞ்சித் ரஜினியுடன் இணைவது குறித்து தி.மு.க நண்பர்கள் மிக காட்டமாக விமர்சிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. திராவிடக் கொள்கைகள் மக்களிடம் பரவ ஒரு நட்சத்திரம் வேண்டும் என்று எம்.ஜி.ஆரை உள்ளே அழைத்து வந்தது அண்ணா தானே? அது அரசியல் சாணக்கியத்தனம், இது மட்டும் அரசியல்பிழையா? எம்.ஜி.ஆரோடு திராவிடக் கொள்கைகள் வளரவில்லையா? ரஜினி ரஞ்சித்தை பயன்படுத்துகிறார் என்றால் எம்.ஜி.ஆரும் அதைத்தானே செய்தார்? சொல்லப்போனால் மொத்தத்தையும் சுவீகரித்துக்கொண்டாரல்லவா எம்.ஜி.ஆர்? வணிக சினிமாவிற்கு அரசியலுக்குமான அத்தியாயமே தமிழகத்தில் அதிலிருந்துதானே துவங்குகிறது?

இதில் எந்த இடத்திலும் ரஜினிதான் தலித்துகளின் விடிவெள்ளி, மீட்பர், அரசியல் விடுதலைக்கான கருவி என்று ரஞ்சித்தோ, ஏன் ரஜினி ரசிகர்களோ கூட கூறி நான பார்க்கவில்லை. சர்காசம் என்ற பெயரில் இவர்களேதான் அதையும் கூறிக்கொள்கிறார்கள். அரசியலிலிருக்கும் ஒரு தலைவர், தனது கருத்துக்களை பரப்ப, சினிமாவில் இருக்கும் ஒருவரை அரசியலுக்கு அழைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால், சினிமாவில் இருக்கும் ஒருவர், சினிமாவில் இருக்கும் இன்னொருவரை தனது அரசியல் பேச பயன்படுத்திக்கொள்ளக் கூடாதா? அண்ணா செய்தது தவறு, மீண்டும் அப்படி நிகழக்கூடாது என்றுதான் விமர்சிக்கிறோம் என்பவர்களன்றி மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என கருதுகிறேன்!!” என்பது அவருடைய கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.