நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை!: பேரா. டி. தருமராஜ்

டி. தருமராஜ்

டி. தருமராஜ்

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும், நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் உண்டு என்றால் அது ‘அந்த நான்கு மாணவிகளின் துணிச்சல்’. அந்தத் துணிச்சலின் மூலம் அவர்கள் மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் – ஒழுக்கம் ஒற்றைத்தன்மையானது!

அந்த உரையாடலைக் கேட்டுப் பாருங்கள்.

‘வேண்டாம்!’ என்று மறுக்கிற அந்த மாணவிகளுக்கு நிர்மலாதேவி தொடர்ந்து ஆசை காட்டுகிறார்.

எந்த முயற்சியும் இல்லாமலேயே அவர்களால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும்; கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்; மாதா மாதம் வரும்படி வரும்; நிரந்தர வேலை என்ற உத்தரவாதமும் உண்டு. அதாவது அவர்கள் ஒரு பொன்னுலத்தினுள் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள். இதற்காக அந்தப் பெண்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் – சுய ஒழுக்கத்தை மாற்றி யோசிக்க வேண்டும்.

இருபது நிமிடங்கள் போல நிர்மலாதேவி பேசியதன் சாராம்சம் இவ்வளவு தான் – அறம், இடத்திற்கு இடம், நபருக்கு நபர், சூழலுக்கு சூழல் மாறக்கூடியது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்று போதிக்கிறார் நிர்மலாதேவி; அதனால் விழுமியங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பது அவரது வாதம்; இந்த காலத்தில் இப்படிச் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை.

அவரே மேற்கொண்டும் இப்படி சொல்கிறார்: எல்லாவற்றையும் நேர்மறையாக (‘பாஸிட்டிவ்’ என்பது தான் அவர் பயன்படுத்தும் வார்த்தை) யோசித்துப் பழக வேண்டும்.

அதாவது, ‘ஒழுங்கீனம்’ என்பது அவரைப் பொறுத்த வரையில் எதிர்மறைச் சொல். அதை நேர்மறையாக ‘இன்னொரு ஒழுக்கம்’ என்று யோசிப்பதே சரியாக இருக்கும். அதனால் ஒழுக்கம் ஒருபடித்தானது இல்லை; அது, பன்முகத்தன்மை கொண்டது. ஒரு ஒழுக்கம் இன்னொரு ஒழுக்கத்திற்கு எந்த விதத்திலும் இளைத்தது இல்லை.

நிர்மலாதேவியும் அந்த நான்கு மாணவிகளும் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். வயது முதிர்ந்த நிர்மலாதேவிக்கு நவீனப் பெண்மணி வேடம்; பாவம், அந்த சிறு மாணவிகள், கட்டுப்பெட்டிகள்.

‘வேண்டாம்! இது எங்களுக்கு ஒத்து வராது!’ என்று வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது அதிருப்தியை அந்த மாணவியர் தெரிவித்துக் கொண்டிருந்த போதும், நிர்மலாதேவிக்கு அதில் சம்மதமே இல்லை.

தனது தரப்பும் ஒழுக்கசீலமானதே என்பதை அவர் வெவ்வேறு தோரணைகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதாவது, இரண்டு பேருமே ஒழுக்கத்தின் பக்கம் தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த நான்கு மாணவிகளும் ‘இது சரி வராது மேடம்!’ என்று சொல்வதன் மூலம், ‘நீங்கள் சரி இல்லை மேடம்’ என்றே சொல்ல வருகிறார்கள். நிர்மலாதேவி கடைசி வரையில் இந்த முரணை ஒத்துக் கொள்ளவே இல்லை.

அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்திய படியே இருக்கிறார். ஒரு கட்டத்தில், இந்த விஷயத்தை பெற்றோர் அனுமதியுடன் செய்தாலும் கூட தனக்கு ஆட்சேபணை இல்லை என்று கோடிட்டு காட்டுகிறார். அதாவது, நிர்மலாதேவியின் செயல்பாடுகளும் கூட அறத்தின் பாற்பட்டது தான் என்பதையே அவர் நிரூபிக்க விரும்புகிறார்.

நிர்மலாதேவியின் அறப்பட்டியலும், அந்த மாணவியரின் அறப்பட்டியலும் வேறு வேறாக இருப்பது எப்படி?

ஒழுக்கக்கேடான விஷயத்தை நிர்மலாதேவியால் ‘ஒழுக்கம்’ என்று சாதிக்க முடிவது எப்படி?

மீண்டுமொரு முறை அந்த உரையாடலை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையில், அந்த உரையாடல், எந்தவொரு புதிய விஷயத்தையும் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை.

வதந்திகளாகவும், கிசுகிசுக்களாகவும் பரவியிருந்த ரகசியமான ஊழல் நடவடிக்கைகளின் ஒரு சிறு பகுதியை முதல் முறையாக அந்த உரையாடலில் நீங்கள் நேரில் சந்திக்கிறீர்கள். கல்வி நிறுவனங்கள், பொருளாதார லாபங்களை ஈட்டும் அதிகார மையங்களாக நெடு நாளைக்கு முன்பே மாறிவிட்டன என்பது பொதுவான அபிப்பிராயம். ஒவ்வொருவரும், தத்தம் உள்வட்டங்களில் கேள்விப்பட்ட, வெளிச்சொல்ல ஆதாரங்களற்ற ரகசிய தரவுகளின் அடிப்படையில் இந்தப் பொது அபிப்பிராயத்தை ரொம்ப காலமாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். முதல் முறையாக, அந்த ரகசியத்தின் சிறு பகுதியை நிர்மலாதேவி உரையாடலில் நாம் சந்திக்கிறோம்.

அந்த உரையாடலில் உடனடியான, தற்காலிகக் கவர்ச்சியை ஏற்படுத்தும் சங்கதிகளும் வெளிப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களின் ஊழல் கண்ணியில் அரசாங்கத்தின் தலைமை பீடம் (கவர்னர்) வரைக்கும் தொடர்பிருக்கிறது என்பது அப்படியொரு கவர்ச்சி.

வெகுஜனத்திற்கு இதுவும் கூட புதிய செய்தி அல்ல. நீரா ராடியா உரையாடலை ஞாபகம் வைத்திருந்தால், இது உங்களுக்கு விளங்கக்கூடும். பொது சமூகம், பிற அதிகாரங்களை விட அரசு அதிகாரத்தையே பெருத்த சந்தேகத்தோடு பார்க்கப் பழகியிருக்கிறது. அப்படியானால், சமூக ஊடகங்கள், நிர்மலாதேவி உரையாடலில் எதைக் கண்டு இத்தனை தூரம் பதறின?

அந்த உரையாடலில் எந்தவொரு சட்ட ரீதியான குற்றமும் இழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதைக் கவனமாகப் பாருங்கள். கல்வி போதிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கீழ்த்தரமான விஷயத்தைப் போதிப்பது சரியா என்பது தான் அந்த உரையாடலின் மீது வைக்கப்படுகிற விமர்சனம்.

செய்தி ஊடகங்களும் சட்ட நடவடிக்கைகளும் நிர்மலாதேவி மாணவர்களைத் ‘தவறாக வழி நடத்தினார்’ என்றே அந்தக் குற்றத்தை விவரிக்கின்றனர். அதாவது, அந்த ஆசிரியர் தவறான பாடத்தை மாணவர்களுக்குப் போதித்தார் என்பது தான் குற்றமாகச் சொல்லப்படுகிறது.

வேடிக்கை என்னவென்றால், ஒரு பாடத்தை தவறாகப் போதித்தார் என்பது எந்த சட்ட விதிகளின் படியும் குற்றம் அல்ல. அப்படியானால், சமூக ஊடகங்கள் இந்த விஷயத்தைப் பதட்டத்தோடு கையாண்டதன் காரணம் என்ன? வழக்கமாய் சிலர் சொல்வது போல, சமூக ஊடகங்கள் இந்த விவகாரத்திலும் வீணாக உணர்ச்சிவசப்பட்டு விட்டதா? வேடிக்கையாகச் சொல்லப்பட்டாலும் ‘பொங்கியது’ என்ற பிரயோகம் இந்த இடத்தில் எனக்கு மிகப் பொருத்தமாகப் படுகிறது.

சட்டரீதியாய் எந்தவொரு மீறலும் இல்லாத விஷயத்திற்கும் சமூகம் ஏன் ‘பொங்குகிறது’?

அந்த உரையாடல் முழுக்க நிர்மலாதேவி ஆசை காட்டிக் கொண்டே இருக்கிறார். மதிப்பெண்கள், உதவித்தொகை, மேற்படிப்பு, வருமானம், முடிந்தால் வேலை வாய்ப்பு என்று ஒரு உயர் கல்வி நிறுவனத்திலிருந்து பொருளாதார ரீதியாய் எதை எதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமோ அத்தனையையும் அவர் ஆசையாகக் காட்டுகிறார். இதனை அவர் சொல்லக் கேட்கும் பொழுது அத்தனை கிளுகிளுப்பாகவும், காமம் நிரம்பியதாகவும் இருக்கிறது.

அவர் பேச்சின் மூலமாக விவரிக்கக்கூடிய அந்தப் பொருள் விடைத்துக் கொண்டு நிற்கிறது. அதன் சகல பரிமாணங்களையும் அவர் அணுஅணுவாக ரசனையோடு வர்ணிக்கிறார். எல்லோரும் ஆசைப்படும் அந்தப் பொருளை தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் பேச்சினூடே அவர் தெரிவிக்கிறார். அதற்கான சான்றுகளையும் அவர் மாணவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

அந்தப் பொருள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்து விடாது என்பதையும் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தரிசிப்பதற்கு (ஆமாம், தரிசனம் தான்!) தான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் அவர் படிப்படியாக விவரிக்கிறார். அதற்காக தான் கடக்க வேண்டியிருந்த சோதனைகளையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அவ்வளவு தூரம் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் அது. அவ்வளவு எளிதாய் யாருக்கும் வாய்க்காதது. நிர்மலாதேவி சன்னதம் வந்து அப்பொருளைப் பற்றி விவரிக்கும் ஒவ்வொரு நொடியும், திரைக்குப் பின்னே பூரண அலங்காரத்துடன் வீற்றிருக்கும் மூலவரை சூட ஒளியில் பார்த்துப் பரவசமாவது போல இருக்கிறது. அவரது தொனியில் காமம் சொட்டுகிறது.

அனுபவமிக்க, முதிர்ந்த ஒரு பெண், குறு மகளிர் சிலருக்கு பாலுறவின் கவர்ச்சியை விவரிப்பது போலவே அது தெரிகிறது. அந்த முதிர் பெண்ணின் குரல், இச்சமூகத்தில் உடலுறவு குறித்து காலங்காலமாக பெண்ணின் பார்வை என்று சொல்லப்பட்டு வரும், ‘ஆண்குறிக்காக ஏங்குதல்’ என்ற விஷயத்தையே முன்னிலைப்படுத்துகிறது. அதாவது, கல்வி நிலையம் ஒரு பெரிய லிங்கம். அதைத் தழுவிக் கொள்ளும் வாய்ப்பு அந்தச் சிறு மகளிருக்கு தெய்வாம்சம் போலத் தரப்படுகிறது.

நிர்மலாதேவி அந்த மாணவியருக்குக் கற்பிக்க விரும்பியது இவ்வளவு தான். இதுவொரு தெய்வ காரியம். பல்கலைக்கழகம் கல்விக் கோவில் என்று தானே சொல்லிப் பழகியிருக்கிறோம். அங்கே வசிப்பவர்கள் தேவர்கள்! அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு அடியார்கள் தேவைப்படுகிறது. தேவதாசியாக தேர்ந்தெடுக்கப்படுவது தெய்வ சங்கல்பம். அது ஒழுக்கத்திலெல்லாம் உயர்ந்த ஒழுக்கமாக பார்க்கப்படுகிறது. மானுட அறம் இங்கே பயனற்றுப் போகிறது. கோவில் தனக்கென்று தனியான அற விதிகளைக் கொண்டிருக்கிறது. அதாவது, ஒழுக்கம், பன்முகத்தன்மை கொண்டது. இது தான் நிர்மலாதேவியின் ஒட்டுமொத்த வாதமும்.

கல்வியையும் அதனால் கிடைக்கக்கூடிய லாபங்களையும் ஆண்மையாகக் கற்பனை செய்வதிலுள்ள அயோக்கியத்தனம், கல்வி நிலையங்களை கோவிலாகச் சித்தரிப்பதிலிருந்து தொடங்குகிறது என்று சொன்னால் எல்லோருக்குமே கோவம் தான் வரும். ஆனால், உண்மை என்னவோ அப்படித்தான். அவற்றைக் கோவில் என்று சொல்லத் தொடங்கினால், அங்கே தேவ புருசர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை; அவர்களுக்கு தாசிகள் தேவை என்பதையும் மறுப்பதற்கில்லை.

தேவதாசி ஒழிப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன; அம்முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்றே நம்பி வந்தோம். ஆனால், கல்வி நிலையங்கள் என்ற புதிய கோவில்களில் இன்னமும் தேவதாசி முறை நடைமுறையில் இருக்கிறது என்ற விஷயத்தை தான் நிர்மலாதேவி உரையாடல் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அவ்வுரையாடலைக் கேட்டதும் சமூக ஊடகங்கள் பொங்கியதன் காரணமும் இதனால் தான்.

இப்பொழுது நம் முன் இருக்கும் பிரச்சினை இது தான். இந்த கல்விக் கோவில்களையும், அதில் உறையும் தேவர்களையும், அவர்களின் அடியார்களையும் என்ன செய்வது?

என்னைக் கேட்டால், அடிமடியில் தான் கைவைக்க வேண்டும் என்பேன்.

கல்வி நிலையங்களின் கோவில் என்ற கட்டமைப்பை மாற்றியமைப்பதிலிருந்து இது ஆரம்பிக்க வேண்டும். அதாவது, நுழைவாயில், சுற்றுப்பிரகாரம், கொடிமரம், பல்லக்குகள், மண்டபங்கள், உற்சவ மூர்த்திகள், மூலவரின் ஆண்குறி, மறைமூர்த்தி, பூசகர்கள், பட்டர்கள், கர்ப்பக்கிரகம், ஓதுவார்கள் என்று ஒவ்வொன்றாக மறுபரிசீலினை செய்தால் ஒழிய இந்த நவீன தேவதாசி மரபை அழிக்க முடியாது.

டி. தருமராஜ், பேராசிரியர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நூல் ‘நான் ஏன் தலித்தும் அல்ல’.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.