
வி.களத்தூர் எம்.பாரூக்
‘கல்லூரி பருவத்தில் நான் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். நான்தான் அதை நடத்துகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.
இங்கு எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பேற்றாக வேண்டும். பொய் செய்திகள், தேர்தல்களில் பிறநாடுகளின் தலையீடு, வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள் போன்ற தீமைகளும் எங்களது சமூகவலைத்தளத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்பது தற்போது தெளிவாக புரிகிறது. எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அகன்ற தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது மிகப்பெரிய தவறு. அது என்னுடைய தவறு. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அமெரிக்க மூத்த பாராளமன்ற உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க பாராளுமன்ற குழுவிடம் ஏப்ரல் 10, 11 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்ற விசாரணையில் மார்க் ஜுக்கர்பர்க் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஃபேஸ்புக் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டதோ இன்று அந்த அளவிற்கு வெறுக்கவும் படுகிறது. ஃபேஸ்புக் வழியாகவே அந்த நிறுவனம் பலத்த எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து தனது பயனர்களுக்கு செய்த துரோகத்தினால் மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது.
யார் இந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா :
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா லண்டனை மையமாக வைத்து இயங்கிவரும் அரசியல் பிரச்சார நிறுவனமாகும். சுமார் 200 நாடுகளுக்குமேல் தனித்தும், வேறு நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறது. தன்னை அணுகும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றியை பரிசளிப்பதற்கு எந்த எல்லைக்கும் இந்த நிறுவனமாக இது இருந்து வருகிறது.
கேம்ப்ரிட்ஜ்அனாலிடிகா என்ன செய்தது :
2016 ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வைப்பதற்கு இந்நிறுவனம் தீவிரமாக களம் இறங்கியது. ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரம்பிற்கு ஆதரவான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அப்போது 5 கோடி அமெரிக்கர்களின் ஃபேஸ்புக் விவரங்களை பயனர்களுக்கே தெரியாமல் திருடி முறைகேடான வழியில் பயன்படுத்தியதாக சேனல் 4 என்ற செய்தி நிறுவனம் கள ஆய்வுகள் மூலம் நிரூபித்து அந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனமும் உடந்தையாக இருந்துள்ளதை ஆய்வுகள் படம்பிடித்து காட்டியுள்ளன.
எப்படி செய்தது :
‘Psycho Graphic Modelling Technique’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. தான் சேமித்த தகவல்களை கொண்டு ஒவ்வொரு பயனரின் ஃபேஸ்புக் ஃபீட் முழுக்க குறிப்பிட்ட வேட்பாளர் குறித்த நல்ல செய்திகளையும், இவரின் போட்டி வேட்பாளர் குறித்த தவறான, எதிர்மறையான செய்திகளையும் அதிகம் தெரியும்படி செய்திருக்கிறது. இந்த திட்டமிட்ட கருத்துருவாக்கத்தின் மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு வெற்றியை தருவித்திருக்கிறது.
அமெரிக்க மண்ணிற்கு சற்றும் பொருந்தாத டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றதில் இருந்தே எதிர்க்கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் அவரின் வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் தலையீடும், ஏதோ ஒரு முறைகேடும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளை அடுக்கின. அக்குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
இந்த முறைகேடு எப்படி வெளியே வந்தது :
இந்த கூட்டுச்சதி வெளியானதுமே கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ. அலெக்சாண்டார் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் சேனல் 4 ல் ரகசிய வீடியோ பதிவில் உண்மைகளை பேசியவர். ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து ஆம் தவறு நடந்தது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறது. அதற்காக மன்னிப்பையும் கேட்டிருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான உறவையும் அது முறித்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் நடக்கா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம் என்ற உறுதிமொழியை அது கொடுத்திருக்கிறது. இருந்தாலும் அதன் நம்பகத்தன்மை முற்றிலும் இன்று அடிப்பட்டுப்போயுள்ளது.
ஃபேஸ்புக்கின் வீழ்ச்சி :
பதினான்கே ஆண்டுகளில் 200 கோடி பயனர்களின் நன்மதிப்பை பெற்ற ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வரலாற்றில் அதிக எதிர்ப்பை சந்தித்துள்ளது. அதன் பிரதிபலிப்புதான் பங்கு சந்தையில் ஒரே நாளில் 6.8% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் தனது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு இந்நிறுவனம் கூடுதல் முக்கியத்துவம் வழங்குவது கட்டாயமாகியுள்ளது. இல்லையென்றால் அதற்கான விலையை அது கொடுக்க வேண்டியிருக்கும். வாட்ஸ்அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் சொன்னதுபோல் ‘ஃபேஸ்புக் டெலீட் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று அனைவரும் முடிவு செய்து பேஸ்புக்கிலிருந்து வெளியேறுவார்கள்.
இந்தியாவிலும் முறைகேடு :
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் மோசடி அமெரிக்காவில் மட்டுமல்ல பல நாடுகளில் அரங்கேறி இருக்கின்றன. இந்தியாவில்கூட அரங்கேறி இருக்கின்றன. இந்தியர்களின் 5,62,455 பயனர்களின் தகவல்கள் முறைகேடாக இந்நிறுவனம் பயன்படுத்தி இருக்கிறது. (உலகம் முழுவதும் தகவல் பகிரப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை மட்டும் 8.7 கோடி) 2010 ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில்போது தாங்கள் பணியாற்றி இருப்பதாக இந்நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் இந்திய கூட்டாளியாக ஒவ்லின் பிசினெஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தைதான் 2009 ம் ஆண்டு தேர்தலில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத்சிங் பயன்படுத்தி இருக்கிறார் என்ற தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
கேம்ப்ரிட்ஜ்அனாலிடிகா நிறுவனதிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் இந்திய தேர்தலில் மூக்கை நுழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். இதை மறுக்கும் காங்கிரஸ் கட்சி பாஜக தான் இம்முறைகேடுகளுக்கு துணைபோவதாக விமர்ச்சித்துள்ளது.
பெரும் ஆபத்து :
இந்திய தேர்தல்களில் ஏற்கனவே பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடக்கின்றன என்று ஆளும் கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆதார் தகவல்கள் கசிவதாக வரும் தகவல்களால் ஏற்கனவே மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட முறைகேடுகளும் தலைதூக்கும் பட்சத்தில் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவேண்டிய சூழலை அது உருவாக்கி சென்றுவிடும். மக்களின் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் திருடப்படுவதும், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக நவீன முறைகேடுகள் மூலம் தேர்தல் முடிவுகள் அமைக்கப்பெறுவதும் ஜனநாயத்திற்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் பெரும் ஆபத்தாகவே முடியும்.
கட்டுரையாளர் வி.களத்தூர் எம்.பாரூக் தொடர்புக்கு thasfarook@gmail.com