நீட் தேர்வு மைய குளறுபடி: தெரிந்தே புறக்கணிப்படுகிறதா தமிழகம்?

குமார் துரைசாமி

குமார் துரைசாமி

நீட் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற மார்ச் 09 கடைசி நாள் என்ற அறிவிப்பை பிறகு மார்ச் 13 வரை நீடித்தது நீட் தேர்வை நடத்தும் மத்திய கல்வி துறை. இந்த வருடம் நாடு முழுவதும் 13 .36 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். விண்ணப்பப் படிவத்தில் எந்த மையத்தில் தேர்வை எழுத மாணவர்கள் விரும்புகின்றனர் என்று மூன்று விருப்பங்களை கேட்டுள்ளனர், அதில் மாணவர்கள் தங்களின் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பங்களை பதிவு செய்வர்.

ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுத அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்த மாணவர்கள் பலர் தாங்கள் விருப்பம் தெரிவித்த 3 மையங்களை தவிர்த்து வேறு மாநிலத்தில் உள்ள மையம் ஒதுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பாதிக்கப்பட்டவர்கள் மத்திய கல்வி துறையை தொடர்பு கொண்டு முறையிட்டபொழுது 18 ஏப்ரல் அன்று ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது மத்திய கல்வித்துறை அதில் தேர்வு மையம் மாற்றம் கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் வருகிறது அதற்கான சாத்தியம் இல்லை எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என அறிவிக்கப்படுகிறது.அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படுகிறது அதில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு உயர்நீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் மையம் ஒதுக்க சொல்லி உத்தரவை பிறப்பிக்கிறது .

உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்கிறது மத்திய கல்வி துறை .உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்து மத்திய கல்வி துறையின் ஏப்ரல் 18 அறிவித்த படி தேர்வு மையங்களை மாற்ற இயலாது என உத்தரவை பிறப்பிக்கிறது, குறைந்த கால அவகாசத்தில் மாற்றங்களை செய்ய இயலாது என்று காரணத்தை சொல்லி. எங்கே தவறு நேர்ந்தது எல்லாம் சரியாக தானே நடந்துள்ளது; இதில் ஏன் அரசை குறை கூற வேண்டும் அனைத்தும் கணினி மையம் செய்யப்பட்ட செயல்பாடுகள் இதில் மனித தலையீடு இல்லையே என்பது பிரதான வாதமாக வைக்கப்படுகிறது. ஆதரவு வாதத்தை முன்னெடுப்பவர்கள் கீழ்கண்ட கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள்,

மார்ச் 14 அன்று கணினி எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்விற்கு பதிவு செய்திருக்கின்றார்கள் என மாநில , மொழி மற்றும் பாலின வாரியாக தகவல்களை தந்திருக்கும் அல்லவா, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட மையத்திலும் எவ்வளவு மாணவர்கள் எழுத வசதி உள்ளது , தேவை எனில் மையங்களை அதிகரிக்க போதுமான அவகாசம் இருந்ததே, அதை செய்திருக்கலாமே. இங்கே கணினி மையம் எனவே மனித தலையிடு செய்ய இயலாது என வாதத்தை முன் வைப்பீர்களேயானால் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட நேர்ந்தால் அந்த மாணவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்கனவே அறிவித்த படிவத்தில் அல்லாத புதிய மையத்தில் எழுதலாம் என மத்திய கல்வி துறை அறிவித்திருக்கலாம் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் இன்னும் 100 மையங்களை ஏற்படுத்தும் வசதியும் உள்ளது. விசாலமான பார்வையும் அரசிற்கு அவப்பெயர் வரக்கூடாது எனவும் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். தமிழகம் தானே வழக்கம் போல புறக்கணிக்கலாம் என்ற முடிவோடு செயல்பட்ட தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சரி அதையும் தாண்டி அடுத்த கட்டமாக வழக்கு தொடுக்கப்பட்டது சென்னை உயர் நீதி மன்றத்தில், அரசிற்கு எதிராக தொடுக்கப்படும் எந்தவொரு வழக்கும் உடனடியாக துறை செயலர் வாயிலாக அத்துறையின் அமைச்சர் மற்றும் முதல்வர் அல்லது பிரதமர் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு அரசு வழக்கறிஞர் அதிகாரிகளுடன் ஆலோசித்து அமைச்சரின் கருத்தை பெற்ற பிறகே வழக்கின் மீதான வாதத்தை வைப்பார்கள். இந்த வழக்கிலும் அந்த நடைமுறைதான் பின்பற்றிருப்பார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய கல்வித்துறை தங்களால் குறுகிய காலத்தில் மையத்தை மாற்றம் செய்ய இயலாது; ஏனெனில் வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களுடன் பெற்றவர்களில் ஒருவர் பயணிக்க உரிய அனைத்து பயண ஏற்பாடு, உணவு மற்றும் தங்குமிட வசதியை செய்து தருகிறோம் என பதிலளித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் நிச்சயம் மாணவர்களும் பெற்றவர்களும் ஆறுதல் அடைந்திருப்பார்கள், அரசின் மீதான மதிப்பும் உயர்ந்திருக்கும்.

தமிழகம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகிறதா இல்லையா என உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன், நான் முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் என்று இன்னும் தேசியத்தின் அதன் ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலரின் நம்பிக்கையை சிதைத்துவிட வேண்டாம் என்பதே வேண்டுகோள். குறைகளை களைந்து நிறைவாக செயலாற்றுவதே மக்களின் நம்பிக்கையை பெரும் செயலாகுமே தவிர ஒரு தவறை தவறென்று தெரிந்தும் அதற்கு ஆதரவாக நிற்பது சரியல்ல. ஏனெனில் நமக்கு வரும்வரை எல்லாமே வேடிக்கைதான் என்ற மனப்பான்மையை குழந்தைகளின் கல்வியிலாவது மாற்றிக்கொள்ளலாமே.

குமார் துரைசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்.  சமூகம் தொடர்பாக எழுதிவருபவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.