ஜி. கார்ல் மார்க்ஸ்

இம்மாதம் இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் அமைப்பது குறித்த ஒப்பந்தம் அது. முதலில் இதன் பின்னுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது எவ்வளவு இந்திய ரூபாய்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம் . அப்போதுதான் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். நாம் நிறைய சைபர்களை ஊழல்களில் எண்ணிப் பார்த்துதானே வெறுப்படைந்திருக்கிறோம். இப்போது ஒரு பெரிய தொகையில் முதலீடு. அதனால் சந்தோஷமாக சைபர்களை எண்ணலாம். ஒரு பில்லியன் டாலர் என்பது 6,500 கோடி ரூபாய். ஆக மொத்த மதிப்பு 2860000000000 ரூபாய்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் மதிப்பு அதல பாதாளத்திற்குப் போயிருக்கிறது. 2013 ல் நூற்று பத்து டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, 2016 ன் தொடக்கத்தில் 30 டாலர் அளவுக்கு வீழ்ந்தது. (2009ல் ஒரு பேரலின் விலை 160 டாலராக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான் இந்த விலை வீழ்ச்சி எவ்வளவு கொடூரமானது என்பது புரியும்.) கிட்டத்தட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் திவாலாகும் நிலைக்குச் சென்றன. இன்று கொஞ்சம் கொஞ்சமாக பேரல் 70 டாலருக்கு உயர்ந்திருக்கிறது. அது மேலும் உயரக்கூடும் என்பதே நிபுணர்கள் கணிப்பு. உலக எண்ணெய் சந்தைக்கும் உலக அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நிறைய தகவல்கள் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கின்றன. குப்பைகளை ஒதுக்கிவிட்டு உண்மைகளைத் தேட நிறைய பொறுமை வேண்டும் என்பதே அதைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்.
நாம் இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்துக்கு வருவோம். இந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதியும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் மாற்றுப் பொருளாதார வழிமுறைகளில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு சவூதி ஆளாகியிருக்கிறது. அதன் திட்டங்களில் ஒன்றாக ஆசிய நாடுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஒப்பந்தத் தொகையில் ஐம்பது சதவிகிதம் வரை சவுதியின் முதலீடு இருக்கும் என்று தெரிகிறது. நாம் ஈராக்கிடம் இருந்துதான் அதிக அளவிலான எண்ணையை இறக்குமதி செய்கிறோம். சவுதி அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் சவுதி இங்கு கவனம் குவிக்க விரும்புகிறது. அமைய இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் உலக அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்பது தகவல். நம்மிடம் ஏற்கனவே இருக்கும் reliance refinery அந்த வகையினங்களில் உலகில் இருக்கும் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தியதில் மோடியின் பங்கு இருக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒப்பந்தம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கிறபோதுதான் முழு விபரம் தெரியும். அம்பானி, அதானி போன்றவர்கள் நிச்சயம் இதன் உள்ளே வருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதன் பின்னுள்ள பொருளாதார நலன்கள் என்ன?
முதலில் இந்த சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மாணிக்க அதை design செய்யும் எஞ்சினியர்களுக்கான வேலை வாய்ப்பு. இப்போதும் கூட இந்தியப் பொறியாளர்கள் இந்த திறனில் அட்டகாசமானவர்கள். உலகில் இருக்கும் எல்லா மிகப்பெரிய Engineering கம்பெனிகளும் இந்தியாவில் அலுவலகம் வைத்திருக்கிறார்கள். சென்னை அதில் முக்கியமான கேந்திரம்.
அதனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் நிறைய பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும். அது சார்ந்த கம்பெனிகள் சுறுசுறுப்படையும். இரண்டாவது கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள். Pipes, flanges, plates, valves என தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு. எப்படியும் முப்பது சதவீதத்தில் இருந்து ஐம்பது சதம் வரை உள்ளூரிலேயே பொருட்களை கொள்முதல் செய்ய இந்த கூட்டமைப்பு திட்டமிட்டாலே, அது manufacturing sectorக்கு மிகப்பெரிய சந்தையைத் திறந்துவிடும். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதுமான தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பாய்ச்சலை இது வழங்கும். நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரும். இருக்கும் நிறுவனங்கள் நிச்சயம் போதாது. After Sales Service நிறுவனங்கள் அடுத்த கட்டத்துக்கு விரிவடையும்.
மேலும், சுத்திகரிக்கட்டப்பட்ட எண்ணெயை விட கச்சா எண்ணெயை வாங்கி இங்கேயே சுத்திகரிப்பதன் மூலம் மக்களுக்கு இப்போது தருவதை விட குறைந்த விலையில் எண்ணையை அரசு விற்க முடியும். ஆனால் அதை செய்யாமல், வழக்கம் போல நம்மைக் குனியவைப்பார்கள் என்று நம்புவதற்கே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு சுத்திகரிக்கப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் அதனால் வரும் பொருளாதார நலன்கள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு இருக்கும். சுற்றுச் சூழலுக்கு வரும் பாதிப்பு என்று பார்த்தால் நிச்சயமாக அதன் பாதிப்புகள் உண்டுதான். ஆனால் அவற்றைக் குறைக்க முடியும். அதில் கவனம் செலுத்தவேண்டியது அரசின் பொறுப்பு.
வலதுசாரி ஆட்கள் மேல் எனக்கு இந்த விஷயத்தில் நம்பிக்கை உண்டு. கலாச்சார விஷயத்தில் இந்தியர்களிடம் மட்டும் அவர்கள் கறாராக இருப்பதைப் போல மாசுக் கட்டுப்பாடு விஷயத்திலும் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் இது நடப்புக்கு வரும்போது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கும் என்றும் நினைக்கிறேன். பிஜேபி ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்களும், மற்ற மாநிலங்களில் அவர்களது கவர்னர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளும் இனி பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்க கண்ணும், கருத்தும், குறியுமாக உழைப்பதைப் பார்த்தால் இந்த எண்ணம் நாளுக்கு நாள் உறுதியாகிறது.
இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. ஆனாலும் கூட ஆளும் பிஜேபி அரசு இதன் சாத்தியத்துக்கு உரிமை கோரமுடியும். ஏனெனில் பொருளாதார திசையில் ஒரு அரசின் சாதனை என்ற வகையில் இது ஒரு மைல்கல். சென்ற ஆண்டு சவுதி சென்ற போது L&T யின் construction site க்கு போயிருந்தார் மோடி. ஒரு பிரதமர் தனது நாட்டு தொழில் நிறுவனம் ஒன்றின் இடத்திற்கே போனதும் தொழிலாளர்களுடன் உணவருந்தியதும் இந்திய அளவில் முன்னுதாரணம் இல்லாதது. மேற்கத்திய நாடுகளில் இது சர்வ சாதாரணம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் மேற்கத்திய அரசியல் தலைவர்கள் தங்களது நாட்டு நிறுவனங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகமூட்டுவார்கள். இந்தியத் தலைவர்கள் அதில் சோம்பல் மிகுந்தவர்கள்.
மோடி அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார். இந்திய மக்களை இந்தியாவில் சந்திப்பதில்தான் அவருக்கு ஒவ்வாமை. குறிப்பாக உள்நாட்டில் போகுமிடங்களில் எல்லாம் சங்கிகளைப் பார்த்துத் தொலையவேண்டுமே என்று கடுப்பாவார் போல. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் எல்லாம் அப்படித்தான். இந்தியர்களைத் தவிர மீதி எல்லோரிடமும் அவர்கள் கனிவாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் இந்தியராக இருந்தால், அவர்களுக்கு சோறு கூட போடாமல் தேச அபிமானத்தைக் காப்பார்கள்.
இப்படியெல்லாம் வெளிநாட்டு முதலீடுகள் வருகிறபோது, இப்போது அணிவதைப் போன்ற போலியான கலாச்சார முகமூடிகளை அணியமுடியாது என்பது மோடிக்குத் தெரியும். குஜராத்தில் மது விலக்கு அமலில் இருந்தாலும், தொழில் நிமித்தமாக நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் எல்லா ரக மதுவும் கிடைக்கும். நுனி நாக்கு ஆங்கிலத்துடன் ஊற்றித் தருவதற்கு குஜாராத்தி பெண்கள் உண்டா என்பது நீங்கள் அவர்களது நிறுவனத்திற்கு உறுதி செய்யப்போகும் லாபத்தைப் பொறுத்தது. இப்போதும் எனது நண்பர்கள் குஜராத்துக்கு தொழில் முறைப் பயணம் என்றால் ஆர்வமாகத் தான் போகிறார்கள்.
அதனால் நான் மோடியை நம்புகிறேன். அவர் நிறைய முதலீடுகளை இதியாவிற்கு ஈர்க்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். சர்வதேசப் பரப்புடன் இந்தியா எவ்வளவு விரைவாக பிணைக்கபடுகிறதோ அவ்வளவு விரைவாக அது தற்போதைய பாசிச நடைமுறையில் இருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொள்ள முடியும் என்கிற கனவே இதற்கு அடிப்படை. எப்போதும் துயரமான சம்பவங்களையே சமூக ஊடகங்களில் படிக்க வேண்டியிருக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து படித்து சந்தோஷப்படலாம். அந்த அளவுக்கு அது தகுதி வாய்ந்ததுதான்.
ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)
, சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள்.
360° ( கட்டுரைகள்) தற்போது வெளியாகியுள்ள நூல்.