எஸ். வி. சேகரின் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு பகிர்வுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வீட்டின் முன் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தின் ஒரு பகுதியாக சில பத்திரிகையாளர்கள் சேகர் வீட்டின் கேட்டின் மீது செருப்பு, கற்களை வீசினர். போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் பத்திரிகையாளர்களின் போராட்டத்தில் வேறு சில அமைப்பினர் கலந்துகொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி சில பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் எழுதினர். இதுகுறித்து எதிர்வினை ஆற்றியிருக்கிறது பத்திரிகையாளர் அமைப்பான ‘குரல்’. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனின் கேள்விக்கு பதிலாக கன்னத்தை தட்டிய ஆளுநரின் சீரழிந்த செயலுக்கு கடுமையன கண்டனம் எழுந்தது. மன்னிப்புக் கேட்டார் ஆளுநர். ஒரு பெண் தன் பணியிடத்தில் தன் விருப்பமில்லாமல் பெண் என்பதற்காகவே ஒரு ஆணால் சீண்டலுக்கு உள்ளாவது தண்டனைக்குரிய குற்றம். மேதகு ஆளுநர் என்ற காரணத்துக்காக மன்னிப்பு கேட்டவுடன் இந்த விவகாரம் கைவிடப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை செய்தியாளரிடம் பாலியல் சீண்டல் பேச்சுக்களை உதிர்த்தபோதும் இதேதான் நடந்தது. ’வருத்தம்’ மட்டுமே தெரிவித்தார் அவர். இதுவே தாராளவாத பத்திரிகையாளர்கள் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் நடந்திருந்தால் தொடர்புடையவர்கள் பதவி விலகலுக்கு உள்ளாகி இருப்பார்கள்.
பாலின சமத்துவம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்நாட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் இரண்டாம்பட்சமான பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒருவேளை, அடுத்தடுத்த நடந்த இந்த இரண்டு பிரச்னைகளையும் பத்திரிகையாளர்கள் மிகத் தீவிரமான எதிர்வினை ஆற்றியிருந்தால், ஆளுநரே மன்னிப்புக் கேட்ட பின்பும், ஆளுநரை நியமித்த பாஜக அரசின் விசுவாசிகள் பெண் பத்திரிகையாளர்களை இத்தனை மோசமாக அவதூறு செய்திருக்க மாட்டார்கள் என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனிடன் ஆளுநர் மன்னிப்பு கேட்டபின் ட்விட்டரில் அவருக்கு எதிராக மிகக் கீழ்த்தரமான பதிவுகள் போடப்பட்டன. பொதுவெளியில் இயங்கும் பெண்கள் பொதுமகளீராகவே இருக்கக்கூடும் என்கிற பழமைவாதிகளின் குரலாக அவை ஒலித்தன. இதையெல்லாம் பாஜகவின் ட்ரோல் படை செய்துகொண்டிருந்தது. இந்த ட்ரோல்களின் குரலை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சினிமா- அரசியல் பிரபலமாக அறியப்பட்ட எஸ். வி. சேகர் அகமகிழ்ந்து பகிர்கிறார். (மன்னிப்பு கடித்தத்தில் படிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சொல்வதை அவர் பகிர்ந்திருந்த மூவர்ணகொடியே காட்டிக்கொடுத்துவிடுகிறது).
பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதற்காக ஆளுநர் தன் கையை கழுவ வேண்டும் என்கிற சாதிய மனோநிலையுடன் தொடங்கும் அந்தப் பதிவு பெண் ஊடகவியலாளர் படுக்கையை பகிர்ந்துகொள்ளாமல் முன்னேற முடியாது என சங்கராச்சாரியின் கருத்தை குமட்டி எடுத்து முடிகிறது. இந்தப் பதிவு சில மணி துளிகளிலேயே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி, தன் முகநூல் கணக்கையே முடக்கிவிட்டுப் போய்விட்டார் எஸ். வி. சேகர். ‘குரல்’ அமைப்பு எஸ். வி. சேகர் கைது செய்யப்பட வேண்டும் என முதல் முழக்கத்தை எழுப்பியது. பல பத்திரிகையாளர்கள் இதே கருத்தை காட்டத்துடன் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பல பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் கொடுப்பதென்றும் முடிவெடுக்கின்றன.
மத்திய அரசிலும் மாநில அரசிலும் எஸ். வி. சேகர் ‘செல்வாக்கு’ குறித்து ஊடகவியலாளர்கள் அறியாமல் இருக்க முடியாது. அவரை கைது செய்ய வேண்டும் என்கிற குரலைக்கூட அழுத்தமாக வைக்காமல் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சில ஊடக அமைப்பினர் திரும்பினர். அரசியல்வாதிகள், சமூக ஊடகங்களில் இயங்குகிறவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பல தளங்களில் இயங்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்துடன் அவதூறு செய்யும் பாஜக-சங் பரிவார கும்பலின் மீதான ஒட்டுமொத்த கோபத்தின் விளைவாக எஸ். வி. சேகரின் வீட்டு முன் சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பேருந்திலோ, அலுவலகத்திலோ பாலியல் சீண்டலுக்கும் அவதூறு சொற்களுக்கும் உள்ளாகும் பெண்கள் இ.பி.கோ சட்டங்களை சிந்திப்பதில்லை. செருப்பை கழற்றி அடிப்பது தான் நடைமுறை. தன்மானமுள்ள செயல். எஸ்.வி.சேகர் வீட்டின்முன் கல் எறியப்பட்டதும் இப்படித்தான் இயல்பாக நடந்தது. அழுதுகொண்டே ஒரு பெண் பத்திரிகையாளர்தான் செருப்பை கழற்றி எறிந்தார். எவருக்கும் காயம் ஏற்படாதபட்சத்தில் இந்தப் போராட்டங்களில் என்ன தவறு இருக்க முடியும்? எஸ். வி. சேகர் வீட்டுக்கு வெளியே எவரும் இல்லை என்பதை அறிந்துதான், தங்களுடைய கடுமையான எதிர்வினையை தெரிவிக்க இரும்பு கேட்டின் மீது கல்லெறிகிறார்கள் போராட்டக்காரர்கள். இரும்பு கேட்டுக்கேகூட வலிக்காதபோது சில லிபரல் ஊடகவாதிகள் அறம் அறுந்துவிட்டதாக கதறுவது எஸ். வி. சேகர் கும்பலுக்குத்தான் சாதகமாக உள்ளது.
போராடுவதுகூட தெரியாமல் போராடி யாருடைய மனதும் புண்படக்கூடாது என்கிற தெளிவுடன் இவர்கள் நடந்துகொள்வது எப்போதும் சங் பரிவார் கும்பலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இப்போதும்கூட இரும்பு கேட்டுக்குக்கூட வலிக்காத நியாமான உணர்வை ‘வன்முறை’யாக சித்தரித்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிறு அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன. இந்த சிறு ஊடகங்கள் செய்யும் பணியை, பெரும் ஊடகங்களில் முதலாளிகளுக்கு பயந்துகொண்டே பணியாற்றுகிறவர்களால் செய்ய முடியாது. நிதர்சனம் இப்படியிருக்க, சிறு ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் ‘தூய்மைவாதம்’ இங்கே கட்டமைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த தூய்மைவாதம் பார்ப்பனியத்தை ஒத்தது!
ஜல்லிக்கட்டில் நடந்த ‘வன்முறை’, ஐபிஎல் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’, பத்திரிகையாளர் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’ என போராட்டக் களங்களில் நடப்பைகளை ‘வன்முறை’ யாக சித்தரித்து காட்டிக்கொடுப்பவர்கள் கூடவே இருக்கிறவர்கள் என்னும்போது இத்தனை நாளும் நீங்கள் பேசிய ‘அறங்கள்’ வீழ்ந்துவிடுகின்றன. ஒடுக்கும் அரசுக்கோ அவதூறுகளை ஓயாது செய்யும் பரிவார கும்பலுக்கோ நீங்கள்தான் குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சகோதரத்துவ முரண்பாடுகளுடன் இதைத் தெரியாமல் செய்கிறீர்களா? அல்லது கும்பல்களுக்கு செய்தி சொல்கிறவர்களாக இருக்கப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.