சந்திர மோகன்

“கம்யூனிஸ்டுகள் ஏன் மாற மறுக்கிறார்கள்? “இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு லெனினை விட பெர்ன்ஸ்டைன் நல்ல முன்மாதிரி” என்ற சான்றிதழுடன் எழுத்தாளர், காந்திய சோசலிச வகையான வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா இன்று தி இந்து வில் கட்டுரை எழுதியுள்ளார். முக்கியமான கருத்துகள் மட்டும் பின்வருமாறு…
1) லெனின் பழிவாங்கும் எண்ணம் உள்ளவர்… அமைதியான முறையில் தான் ஜனநாயகத்திற்கு மாற வேண்டுமே தவிர வன்முறை மூலம் புரட்சியைக் கொண்டு வரக்கூடாது… என்ற பெர்ன்ஸ்டைன் இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்க முடியும்.
2) லெனின் ரஷ்யாவில் கொடுங்கோலர் ஜார் மன்னரின் ஆட்சியை அகற்றிவிட்டு, அதை விடக் கடுமையான ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்த போல்ஸ்விக்குகளின் ஆட்சியை கடைப்பிடித்தார்.
3) லெனின் கொள்கைப்படியான ‘ஒரு கட்சி ஆட்சிமுறை ‘மீதான நம்பிக்கையை… மார்க்சிஸ்டுகள் விலக்கிக் கொண்டு விடவில்லை… மார்க்சிஸ்டு கட்சியில் லெனினின் விசுவாசிகள் மத்திய குழுவில் இருந்ததால் தான் 1996 ல் ஜோதிபாசு பிரதமராகக் கூடாது எனத் தடை விதித்தனர்.
4) 2004-ல் வரலாற்றுப் பிழையை செய்தனர்… லெனினின் கொள்கைகள் காரணமாக வாய்ப்பு வந்த போதும் கூட… ஐ.மு.கூ அரசில் சேராமல் தவிர்த்தனர்… மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மார்க்சிஸ்டுகள் சேர மறுத்த தவறுக்கான விலையை கொடுத்து விட்டனர்.
5) மன்மோகன் சிங் முதலாவது அரசில் மார்க்சிஸ்டுகள் பங்கேற்று இருந்தால்… நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு நாடு முழுக்க மக்களின் பாராட்டுக்கு ஆளாகியிருப்பார்கள் ; மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் தவிர இந்தி பேசும் மாநிலங்களிலும் எளிதாக செல்வாக்கு பெற்றிருப்பார்கள்.
- இவை எல்லாம் ராமச்சந்திர குஹா முன்வைத்துள்ள கருத்துக்கள்.
சிபிஎம் கட்சி மாநாடு நடைபெறும் தருணத்தில் பிரதிநிதிகளை காங்கிரஸ் கட்சியை_நோக்கித் தள்ளவே ராமச்சந்திர குஹா போன்ற எழுத்தாளர்கள், இந்து பத்திரிக்கை குழுமம் போன்றவை விரும்புகிறது எனத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஆனால், ஒரே வரியில் காங்கிரஸ் உடன் சேருங்கள் என நேரடியாக சொல்வதை விட்டு விட்டு லெனின் மீதான தாக்குதலுக்குள் செல்கிறார் குஹா. “லெனின் எதிர் பெர்ன்ஸ்டைன்” என்ற விவாதத்தை முன்வைக்கிறார். லெனினை கொடுங்கோலனாக சித்தரித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொச்சைப் படுத்துகிறார். மறைமுகமாக பாஜக விற்கு உதவுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது வெறுப்பு அரசியல் தாக்குதலை கட்டமைக்கிறார். அனைத்தும் நாம் விரிவாக விவாதிக்க போவதில்லை. சில அடிப்படையான விவாதங்கள் மட்டும் பரிசீலிப்போம்.
அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்வோம்!
Back To Basics
யார் இந்த பெர்ன்ஸ்டைன்?
மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்தில் வாழ்ந்த ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் தான் பெரன்ஸ்டைன், காவுட்ஸ்கி போன்றோர் ஆவர். பெரன்ஸ்டைனை திரிபுவாதத்தின் தந்தை எனலாம்.
மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் ஏங்கெல்ஸ் உடன் நெருக்கமாக இருந்தனர். 1895 ல் அப்போது ஜெர்மனியில் நிலவிய குறிப்பான சூழலில், பாராளுமன்ற தேர்தலில் ஜெர்மன் கட்சியானது பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்த தருணத்தில், குறிப்பான அய்ரோப்பிய சூழலில், முதலாளித்துவ வளர்ச்சியின் குறிப்பிட்ட தொரு காலத்தில்…. செயல்தந்திரத்தில் tactical மாற்றம் என்ற வகையில் சர்வஜன வாக்குரிமை என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டியதை வலியுறுத்தினார்.
ஆனால், அதே முகாந்திரத்தை முன்வைத்து போர்தந்திரத்தில் Strategy யில் மாற்றத்தை பெர்ன்ஸ்டைன் முன் வைத்தார் ; பரப்புரை செய்தார்.
#மார்க்சிய_மதிப்பீடு களிலிருந்து மாறுபட்டு….உற்பத்தி ஒன்று குவிதல் மிகமிக மெதுவாக நடப்பதாகவும், சிறுவீத தொழில்கள் பெருவீத உற்பத்தியால் ஒழித்துக் கட்டப்படவில்லை எனவும் கருதினார். மேலும், முதலாளித்துவமானது கார்ட்டல்கள், டிரஸ்டுகளை உருவாக்கியதன் மூலம், சுய ஒழுங்கு அமைப்பை உரவாக்கி விட்டதாகவும், ஆகையால் எவ்விதமான தீவிர நெருக்கடியையும் தவிர்க்கும் என்றார். மேலும், சமூகத்தில் இரண்டு வர்க்கங்களுக்கிடையில் மட்டுமேயான அணிசேர்க்கை நடக்க வில்லை, மத்திய தர வர்க்கம் மறையவில்லை, முதலாளிகள், சொத்துடமையாளரகள், பங்குதாரர்கள் எண்ணிக்கை மட்டுமே கூடியுள்ளது …எனச் சொன்னார்.
நவீன தேசங்களின் அரசியல் நிறுவனங்கள் எல்லாம் சனநாயகமாகி விட்டது எனவும், மூலதனத்தின் / முதலாளித்துவத்தின் சுரண்டல் முயற்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்து விட்டதாகவும், வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைகளை களைந்து விட்டதாகவும் கருதினார் ; பாராளுமன்ற ஜனநாயகம் வலுவாக உள்ள இடங்களில், அரசை வர்க்கப்போராட்டத்தின் கருவியாக பார்க்க கூடாது என்றும் சொன்னார். பெர்ன்ஸ்டைன் சொன்னார் : தொழிலாளர்கள் அதிகாரத்தை புரட்சியின் மூலமாக கைப்பற்ற சிரமப்பட வேண்டாம், மாறாக அரசை சீர்திருத்த கவனம் செலுத்த வேண்டும்.
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் உடனான அடிப்படை வேறுபாடு
மார்க்ஸ் மூலதனம் நூலில் கூட்டு பங்கு கம்பெனிகள் Joint stock companies என்ற நிகழ்ச்சிப் போக்குப் பற்றி சொல்கிறார்; எங்கெல்ஸ் அவ் வளர்ச்சியை கார்ட்டல்கள் மற்றும் டிரஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார். கார்ட்டல்கள் Cartels மூலதனக் குவிப்பின் உச்சக் கட்ட வளர்ச்சியை குறிப்பிட்டதுடன், “சுதந்திர போட்டி” என்ற முதலாளித்துவ கோட்பாடு ஓட்டாண்டி ஆகிவிட்டதை அம்பலப்படுத்தியது.
பெர்ன்ஸ்டைன் மூலதனக் குவிப்பு மத்தியத்துவத்தை அகற்றுதல், சுய ஒழுங்கு, சனநாயகம் ஆகியவற்றை தானே கொண்டு வரும் என நினைத்துக் கொண்டார். ஆனால், மூலதன ஒன்றுகுவிப்பானது ஆக்கிரமிப்பு மிக்க காலனித்துவ கொள்கைகளையும், ஏகாதிபத்தியம் ஆக வளர்ந்து உலகப் போர் வரை கொண்டு சென்றது என்பதையும் பார்த்தோம்; லெனின் இந்த வளர்ச்சி பற்றி தனது ” ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ” நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.
திரிபுவாதிகள் குடியரசு அமைப்புகளில் பகைமைக்கான அடிப்படை தகர்ந்து விடுவதாக கருதிய போது, லெனின் தெளிவு படுத்தினார், முதலாளித்துவத்தின் சுய முரண்பாடுகள் வர்க்கப் போராட்டத்திற்கான விளை நிலத்தை வழங்குகிறது.
பாராளுமன்றத்தின் தன்மை பற்றி
மன்மோகன் சிங் அரசாங்கத்தில் சில அமைச்சகங்களை எடுத்து பணியாற்றி இருந்தால் மார்க்சிஸ்டுகள் நாடு முழுவதும் புகழ் பெற்று இருப்பார்கள் என்கிறார், குஹா. அப்படியா ?
பாராளுமன்றம் என்பது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனம் என்றும், பாட்டாளி வர்க்கம் சாதாரணமாக நுழைந்து, பெரும்பான்மையை பெற்று விட்டால், எளிதாக சோசலிசம் நோக்கி கொண்டு சென்று விட முடியும் என்பது வழிவிலகலாகும்; வெறும் சுகமான கற்பனையே ஆகும்.
ஆயிரத்து ஒரு வழிகளில் முதலாளித்துவத்தால் இணைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் தான் பாராளுமன்றம் இயங்குகிறது. உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஆகச் சிறந்த கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள், நிலவுகிற இந்த முதலாளித்துவ அமைப்பில் சில சீர்திருத்தங்களை செய்யலாம். அவ்வளவே! கம்யூனிஸ்டுகள் தனது சோசலிச இலட்சியத்தை அடைவதற்கு ஏற்கெனவே ரெடிமேடாக உள்ள முதலாளித்துவ அமைப்பை பயன்படுத்த முடியாது. பழைய அரசமைப்பு தகர்க்கப்பட வேண்டும். புதிய அரசு பொறியமைவு புதிதாக கட்டி எழுப்பப்பட வேண்டும்!
அமைதி வழியில் புரட்சி!
மார்க்சீய சிந்தனையில், அமைதி வழி புரட்சி என்பது, வர்க்க சக்துகளின் சமன்நிலையில் ஏற்படும் சில குறிப்பிட்ட சிறப்பு நிலைமைகளில் உருவாகிற அரிதிலும் அரிதான, விதிவிலக்கான வாய்ப்பு ஆகும்.
மார்க்ஸ், அமெரிக்காவில் நிலையான ராணுவமும், அதிகார வர்க்கமும் உருவாகாத போது அப்படி ஒரு சாத்தியப்பாட்டை பேசினார்.
லெனின், அத்தகையதொரு சாத்தியப்பாட்டை ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சியின் போது குறிப்பிட்டார்.
சீனாவிலும் கூட, வெற்றிகரமான ஜப்பானிய எதிர்ப்பு போருக்குப் பிறகு, உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர, சியாங்கே சேக் உடன் ஒரு கூட்டணி அரசு உருவாவது என்ற பின்னணியில் அத்தகையதொரு வாய்ப்பு இருந்தது.
ஆனால், உண்மையிலேயே எதுவும் நடைபெறவில்லை. எனினும், இன்னமும் தத்துவ தளத்தில் இத்தகையதொரு வாய்ப்பை மார்க்சீயம் நிராகரிக்கவில்லை. அமைதி வழி புரட்சி பற்றி விவாதிக்கும் போது இந்தோனேசியா, சிலியில் கம்யூனிஸ்டுகள் சிந்திய ரத்தம், அனுபவம் மறந்து விடக் கூடாது.
அமைதி வழிப் புரட்சி என்பது எதிரி எந்தவொரு சண்டையும் இல்லாமல் சரணடைவதற்கு ஒப்பானதாகும். அப்படிப்பட்ட விதிவிலக்கான வாய்ப்பு அது! அதற்கு எந்தளவு கம்யூனிஸ்ட்டுகளின் தயாரிப்பு இருக்க வேண்டும் என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த விதிவிலக்கான வாய்ப்பை மறந்து விட்டு, பெர்ன்ஸடைனை முன்வைத்து பொதுவானதாக்கப் பார்க்கிறார், குஹா.
காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்திற்குள் சென்று நற்பெயர் பெற்று விடலாம் என்றும், அதற்கடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று விடலாம் என்றும், பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படைகளை மாற்றி சோஷலிசத்தை கட்டிவிடலாம் எனவும் நம்பச் சொல்கிறார்.
போகமுடியாத ஊருக்கு வழி சொல்கிறார்
செல்வாக்கு மிக்க மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சியானது, அத்தகைய முதலாளித்துவ அரசாங்கங்களை வர்க்கப்போராட்டத்தை Class struggle வளர்க்க பயன்படுத்துவதா அல்லது நிர்வகிப்பது Governance என்ற அளவில் சுருங்கிப் போய் அவற்றையும் இழந்து விடுவதா என்ற முரண்பாட்டை தீர்க்க தீவிரமாக விவாதிக்க வேண்டிய தருணத்தில், மீண்டும் மார்க்சிஸ்டு கட்சியின் செயல்தந்திர வழியை நீர்த்துப் போய் விடவே அக்கறையுடன் வழிகாட்டுகிறார்.
மார்க்சிஸ்டுகளை வலுப்படுத்த வழி காட்டாத ராமச்சந்திர குஹாவின் கட்டுரையின் அனைத்து கருத்துக்களும் வெறும் குப்பை; மார்க்சிய சொல்லாடலில் அப்பட்டமான திரிபுவாதம். முறியடிக்கப் படவேண்டும்.
சந்திரமோகன், இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர்.