சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

அண்மையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நீங்க போட்டிருக்க கண்ணாடி ரொம்ப நல்லா இருக்கு’ என மூன்றாம் தர பொறுக்கி போல நடந்துகொண்டார். ‘பொறுக்கி’ என்பது கடுமையான வார்த்தையாக இருக்கலாம்.  சற்று விளக்கமாகவே பார்க்கலாம். நீங்கள் ஒரு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மதிக்கத்தக்க தோற்றத்துடன் உள்ள ஒருவரிடம் பஸ் எப்போது வரும் என கேட்கிறீர்கள். அவர் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் ‘நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. தினமும் பார்க்கிறேன், இன்னைக்கு உங்களுக்கு கண்ணாடி சூப்பரா இருக்கு’ என்கிறார். அவருடைய நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்? தினமும் பார்க்கிறவர்; கண்ணியமிக்கவர் என சிரித்துவிட்டு போவீர்களா? அல்லது பொறுக்கி போல நடந்துகொள்கிறாரே என எரிச்சல் அடைவீர்களா?  சட்டப்படி இது பாலியல் தொல்லை தருவதன் கீழ் வரும். பத்திரிகையாளர் தன் பணி இடத்தில் பாலியல் ரீதியிலான பேச்சுக்களை எதிர்கொள்கிறார். அப்படிப் பேசியவர் மேதகு அமைச்சர்!

இந்த விவகாரத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள், அமைச்சர் தவறான அர்த்ததில் சொல்லவில்லை என விளக்கம் கொடுத்தார். ஒரு ஆண் நிருபரிடம் ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என அமைச்சர் சொல்லியிருப்பாரா? பெண் நிருபரிடம் ‘அழகு’ என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் உள்ளார்ந்த நோக்கம், அவர் பெண் என்பதால் தானே சாத்தியமானது. விசாகா கமிட்டியின் பரிந்துரையின் படி, இதுவும் தண்டனைக்குரியதே. ஆனால், தொடர்புடைய அந்த நிருபர் சார்ந்த தொலைக்காட்சி அமைச்சரின் விளக்கத்தில் ’திருப்தி’ அடைந்துவிட்டது. அல்லது இதுவே போதுமென்று விட்டுவிட்டது.

இந்த சம்பவம் நடந்துமுடிந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாக மற்றொரு அவமானத்துக்குரிய சம்பவம், மேதகு தமிழக ஆளுநரால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை ஆளுநரின் கை நீண்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் ஆளுநர் குறித்து பேச்சு வந்துபோக, சமூக வலைத்தளங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தன்னுடைய நிலையை விளக்கி ஆகவேண்டிய நிலையில், செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து கேள்விகளை பூசி மெழுகி கேட்டுக்கொண்டிருக்க, த வீக் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர், லட்சுமி சுப்ரமணியன் முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.  அதில் ஒன்று, உள்துறை அமைச்சகத்திடம் தென்னிந்திய ஆளுநர் ஒருவர் ஆளுநர் மாளிகை பெண்களை பாலியல் ரீதியிலான இச்சைகளுக்குப் பயன்படுத்திய புகார் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தமிழக ஆளுநர் மாளிகை பற்றியதுதானா என்று கேட்டார்.  கேள்வியை முடிக்கும் முன்பே ஆதாரம் அற்றது; முட்டாள்தனமானது என்றார் ஆளுநர்.

ஆளுநராக பதவியேற்று ஆறு மாதங்கள் ஆனதை ஒட்டியும் இதுவரை அப்பதவியில் இருந்த ஆளுநர்கள் செய்யாத ‘ஆய்வு’ப் பணிகளை செய்தமைக்காகவுமே பத்திரிகையாளர் சந்திப்பு, நிர்மலா பேரிலான விவகாரம் இரண்டாம் பட்சமே என்கிற ‘தெளிவு’ படுத்தலுடம் பத்திரிகையாளர் சந்திப்பு முடிவுக்கு வந்தது.

ஆளுநரின் தமிழ் மொழி ஆர்வம் குறித்து சில தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி எழுப்ப, லட்சுமி ‘உங்களுடைய தமிழ் ஆசிரியர் யார்?’ என கேட்டிருக்கிறார். அதே கேள்வியை மற்றொரு ஊடகத்தின் பெண் நிருபரும் கேட்டிருக்கிறார். ஆனால், பன்வாரிலால் அதற்கான பதிலை அளிக்காமல் லட்சுமியின் கன்னத்தை தட்டிக் கொடுத்து சிரிக்கிறார்.

லட்சுமி அந்த சந்திப்பில் மிக முக்கியமான கேள்விகளை எழுப்பிய பத்திரிகையாளர். அவர் ஆளுநரின் குடும்ப விழாவில் கலந்துகொண்ட உறவுக்காரரும் அல்ல. தன் பணியை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண், எந்த வகையில் ‘தாத்தா’வைப் போன்ற உணர்வை லட்சுமியின் செயலின் மூலம் பெறுகிறார். சமூக ஊடகங்களில் ஆளுநரின் செயலுக்கு ‘தாத்தா’ வின் செயல்போன்றது என பூசிமெழுகும் நபர்களின் புரிதல் எந்த வகையில் ஏற்புடையதாகும். தன் கடமையைச் செய்யும் ஒரு பெண்ணை அவமதிக்கும் செயலாக அவர்களுக்குப் படவில்லையா? ஆளுநர் என்ன மனநிலையில் இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பார்?

‘என்வாழ்நாளில் பெண் பத்திரிகையாளர்களேயே பார்த்ததில்லை… நீங்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறீர்களே’ என தன் பாராட்டுதலை தெரிவிக்கிறாரா? அல்லது ‘யார் கேட்காத கேள்வியெல்லாம் கேட்கிறாய்; ஜாக்கிரதையாக இருந்துகொள்’ என்கிற எச்சரிக்கையை தட்டிக்கொடுத்து விடுக்கிறாரா? அல்லது பெண்ணின் செயலைப் பார்க்காமல் அவளை உடலாகப் பார்க்கும் திமிர்த்தனமா? என்ன விளக்கம் சொன்னாலும் ஆளுநரின் செயல் மன்னிக்கமுடியாத அழுக்கு!

சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஆளுநரின் செயலை கண்டித்திருக்கிறது.  இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 354 பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என சுட்டிக்காட்டுகிறது. ஆளுநரின் இச்செயல் பாராட்டத்தக்கதல்ல என்கிறது. ஆளுநரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவோம் இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவோம் என்கிறது அந்த அறிக்கை.

பத்திரிகையாளர் சங்கம் சுட்டிக்காட்டிய பிரிவின் கீழ் ஆளுநரின் செயலும் மேலே விவரித்த அமைச்சரின் செயலும் மூன்றாண்டு சிறை தண்டனைக்குரியவை. ஆனால், இங்கே மன்னிப்பு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. சில சமயங்களின் விளக்கம் மட்டுமே கூட போதும்.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன், ஆளுநரின் செயல் அருவருப்பாகவும் ஆவேசமூட்டக்கூடியதாகவும் உள்ளது என்கிறார். ஒரு ஆணுக்கு உள்ளதைப் போன்ற வெளியுடன் சுதந்திரத்துடன் தன் பணியைச் செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் இதையேதான் உணர்வார். ஆனால் ஆண்மைய சிந்தனையில் ஊறிய ஊடக நிறுவனங்களுக்கும் சங்கங்களுக்கு ‘மன்னிப்பு’ என்கிற வார்த்தையே போதுமானதாக இருக்கிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் ‘வெறும்’பெண்கள். கருணைமிக்க பெண்கள். எல்லா அத்துமீறல்களுக்கும் இனி ‘மன்னிப்பு’ மட்டும் போதுமானது. காஷ்மீரத்துச் சிறுமியிடம் கூட மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.