“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

தன்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைவதாக  சாதி ஆவணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் செயல்பாட்டாளருமான கௌசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு…

திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சாதி ஒழிப்பாளர்களாக இருக்கலாம். இவை அனைத்தும் வேறு. சமூகநீதி சார்ந்து திமுக செய்திருக்கிற சில நல்ல நடவடிக்கைகளையும் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதேநேரம் எனக்கிருக்கும் மையமான கேள்விகள்:

இத்தனை காலம் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகளில் திமுக வின் நிலைப்பாடு என்ன? முரணின்றி தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக அது ஒலித்துள்ளதா? சாதி கேட்டும் சாதி பார்த்தும் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சி வன்கொடுமை நிகழ்வுகளில் யார் பக்கம் நிற்கும்? நின்றிருக்கிறது? காங்கரசோடு இணைந்து இந்துத்துவத்தை ஒழிப்பது எப்படிச் சாத்தியம்? ராமராஜ்ய கனவு காங்கிரசுக்கும் உரியதா இல்லையா?இந்தக் கேள்விகளுக்குத்தான் விடை வேண்டும்.

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் ஈழ உணர்வாளராக ஈழத்திற்கு தீவிர ஆதரவாளராக இருக்கலாம், அதை நானும் நம்புகிறேன். ஆனால் 2009 ம் ஆண்டில் திமுக எடுத்த நிலையைத்தான் நாம் கருத்தில் கொள்ள முடியும். இதுதான் சமூகநீதியில் நான் முன்வைப்பதற்கும் அடிப்படை.

மு.க.ஸ்டாலின் அவர்கள் சங்கர் படுகொலை நிகழ்வு குறித்துத் தெரிவித்திருக்கிற கண்டனத்தை எடுத்துக்கொள்வோம். அதில் அவர் சங்கர் எதற்காக இறந்தான். நான் எதற்காகப் தாக்கப்பட்டேன் என்ற உண்மையை கூறாமல் வெறுமனே படுகொலை என்று கூறியிருக்கிறார். எங்களை தாக்குவதற்குக் காரணம் சாதியம், நடந்தது ஆணவப் படுகொலை. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவிக்க முடியும் என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார். அந்தக் கண்டனம் யாரைக் காப்பாற்ற? அந்தக் கண்டனம் இறுதி விளைவாக யாருக்குச் சாதகம்? நீங்களே சொல்லுங்கள்.

இதேபோல் பல சாதிய வன்கொடுமைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை பட்டியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன். அதையும் எடுத்து வைத்துப் பேசுவோம். சளைக்காமல் அதேநேரம் பொறுமையாக விவாதிக்க அணியமாக இருக்கிறேன். இனி நான் பின்வாங்கப் போவதில்லை.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வளவு காலம் பதில் தராமல் தாழ்த்தியதற்குக் காரணம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக ஒன்று. நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள். இது என் சுயமரியாதையைச் சீண்டுவதாக உள்ளது. என்னை வழிநடத்த சில மூத்த தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் பேச்சை எழுத்தை சரிபார்த்து வழிநடத்துகிறார்கள். மற்றபடி நான் எழுதுவதும் பேசுவதும் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் என்னுடைய சுயமே. யாரோ ஒருவர் என்னை இயக்க நான் இயந்திரம் அல்ல. எதையும் ஆராய்ந்து தெளியும் சுயசிந்தனை கூட இல்லாதவராக எனைக் கருதுவது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. கருத்தைப் பேசுங்கள். இனி திமுக குறித்து நான் கொடுக்கும் பட்டியல் சார்ந்தும் பேசுங்கள். இனி அவதூறுகளை உதறிவிடுவேன். கருத்துகளுக்கு மட்டுமே பதில். விரைவில் பதிவிடுகிறேன். அன்பு மாறாது சாதி ஒழிப்பு இலக்குக்கு உண்மையாக நின்று விவாதிப்போம். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.