பீட்டர் துரைராஜ்

முகிலினி நாவல் மூலம் கொங்கு மண்டலத்தின் சுதந்திரத்திற்கு பிந்தைய அறுபதாண்டு கால வரலாற்றை படம் பிடித்தவர் முருகவேள். இப்போது அதே கொங்கு மண்டலத்தின் சமகால வாழ்வியலை சுவாரசியமாக செம்புலம் நாவலில் படைத்து உள்ளார்.
பாஸ்கர் என்ற திருமணமாகாத தலீத் இளைஞன் அதிகாலையில், சாலை ஓரத்தில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறான். அவன் கொலைக்கு காரணம் என்ன? சந்தையில் சாதிசங்க தலைவனை அடித்ததா? கட்டைப் பஞ்சாயத்தா? ‘பொம்பள’ விவகாரமா? மில் விவகாரமா? சமூக போராளி என்பதாலா?
காமாட்சிபுரம் காவல் நிலையம் இந்தக் கொலையை விசாரிக்கத் தொடங்குகிறது. அது குற்றவாளியை பிடிக்கிறது; அதைத் தொடர்ந்து அரசிற்காக ஒரு ‘குற்றவாளியை’ சேர்க்கிறது; இதற்கு மேல் சிந்திக்க வேண்டாம் என்று அதிகாரிகள் நினைத்ததால் விசாரணையை அதோடு முடிக்கிறது. ‘சட்டத்தின் ஆட்சி’ இவ்வாறாக பாகம் ஒன்றில் நிலைநாட்டப் படுகிறது.
இரா.முருகவேள் ஒரு வழக்கறிஞர்; காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு அவருக்கு பரிச்சயம் இருந்திருக்கும். எனவே அவரால் அரசியல் புரிதலோடு தெளிவாக விவரிக்க முடிகிறது. காவல்துறை விசாரணையின் போதாமையை உணர்ந்த காவலர் பாலு தனக்குத் தெரிந்த வகையில் எதிர்வினை ஆற்றுகிறான். இப்படி நியாயத்திற்காக நிற்கும் பாலுவால்தான் தன் துறையில் தன்னை ஒத்தவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிகிறது. ‘ ஒரு நாளைக்கு ஒரு காவலருக்கு ஒரு அலுவல் மட்டுமே வழங்க வேண்டும். ‘ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும் போன்ற ஜனநாயக உரிமைகள் வழங்கப்படாததைக் கண்டு பொரும முடிகிறது. பாலுக்களால் ஆள்வோருக்கு பிரச்சினைதான். ‘அத்தனை மனிதர்களும் கெட்டவர்கள் , அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் ‘ என்று பயிற்சிக் கல்லூரியில் தயாரிக்கப்படும் சிறப்பு இளம் ஆய்வாளர் அபு , இன்ஸ்பெக்டர் அன்புசேகர் போன்றவர்கள்தான் அரசுக்குத் தேவை; அரசு சொல்லுவதை கேட்பார்கள்.
கொலைசெய்யப்பட்ட பாஸ்கர் நாவலில் எங்கும் நேரடியாக வரவில்லை; இதுதான் நடந்தது என அவனுக்கு மட்டும்தான் தெரியும். கதையில் சாதி சங்கம் வருகிறது. என்ன சாதியென்று ஆசிரியர் பேசவில்லை; கொங்கு மண்டலம் என்பதால் நாம் கவுண்டர் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இக்கதையில் நடப்பதை தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் பொருத்திப் பார்க்கலாம்; எந்த சாதிக்கும் பொருத்திப் பார்க்கலாம். சாதி சங்க வளர்ச்சி, பரிமாணம், அடையாளச் சிக்கல் இவைகளை ஒரு வர்க்கப் புரிதலோடு பதிவு செய்கிறார் ஆசிரியர். பெரிதாக சாதி அபிமானம் இல்லாத, தலீத் மீது மென்மனம் கொண்ட மனோகரன் தலைமைப் பண்புகளின் காரணமாக தலைவனாகிறான். அவனுக்கு கீழ் வெள்ளியங்கிரி குறுந்தலைவனாகிறான்.
அரசு அமைப்புகளின் ஆதரவோடு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் ஆலைகளில் அடிமையாக வைக்கப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாகும் அமுதா போன்ற பெண் குழந்தைகள்பால் சாதிசங்கத்தின் அணுகுமுறை என்ன ?அவர்கள் சாதிதான். ஆனாலும் ஆலைமுதலாளிகளின் நலனுக்கு முன்னால்….. ” உங்க புள்ளைங்கள ராத்திரி பகலா வைச்சு வேல வாங்குறாம் பாரு . அவங்க கிட்ட போயி உன் வீரத்தைகாட்டு” என்று கொலைசெய்யப்பட்ட பாஸ்கர் இந்த சாதித்தலைவன் வெள்ளியங்கிரியைப் ( விசைத்தறி உரிமையாளர்) பார்த்து கேட்கிறான். ஒரு வேளை இதுதான் முருகவேள் எழுப்பும் கேள்வியோ என்னவோ ?
மனோகரன் மனைவியான பூரணி பாஸ்கரோடு ஒன்றாகப் படித்தவள். பூரணியுடனான தொடர்பு தனது வாழ்க்கை முறை காரணமாக தேவையற்றது என்று தெளிவாகப் புரிந்து கொண்டவன் பாஸ்கர். சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பூரணி வழியாக காட்டுகிறார் ஆசிரியர். அதே சமயம் அவள் சகோதரன் ஜெத்தீஷ் மூலம் ‘ பாரம்பரியம்” பழம் பெருமை’ என்ற பெயர்களில் பிற்போக்கு குணாம்சங்களை காட்டுகிறார் ஆசிரியர். கல்லூரியில் படிப்பதால் எந்த முற்போக்கு எண்ணங்களும் இவனைப் போன்றவர்களிடம் வரும் என்று யாரும் எண்ண வேண்டாம். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்ட அமலாக்கம் எப்படி இருக்கிறது ?
“திருமணமாகிப் போகும் பெண்களுக்கு நிலம் கொடுத்தால் ஊர் நிலங்களின் மீது வெளியூர்காரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் “என்பதுதான் சங்க மனோகரன் நிலை. ‘தேங்காய்க்கு விலை வீழ்ச்சி அடைவது பற்றி’ ‘மின்சாரம் இல்லாதது பற்றி’ எல்லாம் சாதிசங்கம் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆலைமுதலாளிக்கும், விசைத்தறி முதலாளிக்கும் முரண் ஏற்படுகையில் யாருடைய நலனை சங்கம் பாதுகாக்கிறது! வர்க்கப் பார்வையோடு சாதிச் சங்க நிகழ்வுகளை அணுகுகிறார். போகிற போக்கில் ரியல் எஸ்டேட் வியாபாரம், சாக்கலேட் கம்பெனி, போன்றவை எல்லாம் வருகின்றன.
வன்கொடுமைச் சட்ட அமலாக்கம் மூலம் நீதி எப்படி நிலைநாட்டப் படுகிறது என்பதை இந்த நாவல் அற்புதமாக சொல்லுகிறது. பாஸ்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் இயல்பானதா? அரசு யந்திரம் எப்படி இருக்கிறது? வன்கொடுமைச் சட்ட வழக்கை திரும்பப்பெற பாஸ்கர் பணம் வாங்கியதில் என்ன தவறு? இதையெல்லாம் கேள்வியே கேட்காமல் கேள்வி கேட்கிறார். இதுதான் அவரது கலைநயம்.
அமராவதி, அமுதா பாத்திரங்கள் மூலம் கிராமப்புற வறுமை, இடப் பெயர்வு, நூறுநாள் வேலைத்திட்டம், தனியாக வாழும் பெண்கள் பாதுகாப்பு போன்ற அனைத்தையும் நாம் பார்க்க முடியும். அமராவதியோடு சேர்ந்து வாழும் சென்ராயன் அவள் மகளிடம் தவறாக நடந்துகொள்வது பொதுவெளியில் பேசப்படவில்லை. ஆனால் அவன் பாஸ்கரை கோர்த்துவிடுகிறான். அது சிக்கலாகி சந்தையில் பாஸ்கர் வெள்ளியங்கிரியை தாக்குகிறான். ஒருவிதத்தில் அவனது கொலைக்கும் இது காரணமாகிறது.
இந்தக் கொலையை விசாரிக்க உண்மை அறியும் குழு வருகிறது. இதில் வரும் ஷீலா ஒரு நேர்மையான நம்பிக்கைக்கு உரிய பாத்திரம். இதில் என்.ஜி.ஓ.க்களின் ( அரசு சாரா நிறுவனங்கள்) பணி பேசப்படுகின்றது. அவர்கள் உண்மையான மாற்றத்திற்கு நிற்கிறார்களா? அல்லது இது அவர்களுக்கு ஒரு புராஜக்டா!
” செம்புலம் என்ற சொல்லுக்கு பாலை என்ற பொருளும் உண்டு. பாலை என்பது மணல் வெளியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதம் இல்லாத எல்லா நிலமும் சுட்டெரிக்கும் பாழ்வெளிதான்” என நாவலுக்கான பெயர்க் காரணத்தை சொல்லுகிறார் ஆசிரியர்.
ஒரு துப்பறியும் நாவலுக்கு உரிய விறுவிறுப்போடு கதை செல்கிறது. சமூக மாற்றம் வேண்டுவோருக்கு ஒருசில பார்வைகளைக் கொடுக்கிறது; கலைநயத்தோடு, இலக்கிய மதிப்போடு சொல்லுகிறது.
இரா.முருகவேள் தமிழுக்கு கொடுத்துள்ள மற்றுமொரு கொடை செம்புலம். பல பதிப்புகளை இந்த நாவல் சந்திக்கும்.
செம்புலம், பொன்னுலகம் பதிப்பகம் /திருப்பூர்/320 பக்கம்/ரூ.250.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.