குட்டிரேவதி
ஆஷிஃபா (8 வயது) வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொண்டாட்டம் போலவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று சமீபத்தில் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிறைய சிறுமிகளின் பெயர்களை நமக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் ஆவேசப்பட்டுவிட்டுத் தளர்ந்து போய்விடுகிறோம். இனியேனும், பிரச்சனை உண்மையில் எங்கு இருக்கிறது என்று புரிந்துகொள்வதிலும் அதைக் களைவதிலும் நமது முயற்சியை செலவழிக்கலாம் என்று நம்புகிறேன்.
ஆணிலும் பெண்ணிலும்,”சாதி – இந்து” மனநிலை என்பது காலம் தோறும் கட்டமைக்கப்பட்டு வரும் ஒன்று. சென்ற நூற்றாண்டின் தமிழ், இந்திய திரைப்படங்கள் முழுக்க, ஆண் சாலையில் செல்லும் பெண்ணை ‘பாலியல் சீண்டல்’ செய்வதாகவும், பின்பு அதே ஆணை அந்தப்பெண்ணே காதலிப்பதாகவும், அல்லது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஆணையே திருமணம் செய்வதாகவும் தாம் கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக, இவை நியாயம் என்றே இண்டு இடுக்களில் எல்லாம் உணர்த்தப்பட்டிருக்கின்றன. எவ்வளவு பெரிய இயக்குநரும் தனது இந்தச் சாதி – இந்து மனநிலையிலிருந்து தப்பித்ததாகத் தெரியவில்லை. திரைத் துறையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரி. திரை இயக்குநர்கள் பெரும்பாலும் ஆண்கள் தாம். இவர்கள் கட்டமைக்கும் கதைகள், கதைமாந்தர்கள், காட்சிகள் தாம் காலங்காலமாக, அடுத்தடுத்த தலைமுறை ஆண்களுக்குக் கடத்தப்படுகின்றன. இப்படித்தான் பெண் என்பவளின் உடல் பார்க்கப்படவேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும், காயப்படுத்தப்படவேண்டும் என்பதாக. எந்த ஆணும் இந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதில்லை.
இளம் தலைமுறை இயக்குநர்கள் பலரின் திரைக்கதைகள் என் வாசிப்பிற்கு வரும்போது, இந்த விடயத்தில் வெகுவான மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். சாலையில், நாற்பது – ஐம்பது வயது பெண்களை இளம் ஆண்கள், எந்தச் சுயமரியாதை உணர்வும் மனித மாண்பின்றி சீண்டல்களையும் கமெண்டுகளையும் வெளிப்படுத்தும்போது, எப்படி அவர்கள் சிந்தனைக்குள் இவை காலங்காலமாகத் திணிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதை உணரமுடிகிறது. உடலல்லாமல் பெண்ணைப் பார்க்கும் ஆண்களைச் சந்திக்க நேரும் தருணங்கள் என்னளவில், மிகவும் அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன. இதற்குக் காரணமாக, ஆண்களை மட்டுமே சொல்லமுடியாது. பெண்களும், தம் மகன்களை ‘ஆண்’ என்று சொல்லி வளர்க்கும் விதமும், அதற்காக அவர்கள் அடையாளம் காட்டும் விடயமும், ‘வன்முறை’ தான். இன்றும், பெண்கள் நமக்குக் கிடைக்கும் சுய விடுதலையுணர்வை, தன் உடலுக்குத் தாமே அனுமதிக்கக் கிடைக்கும் கேளிக்கையை, தன் உடலுக்குக் கிடைக்கும் அபரிமிதமான சுதந்திர, காட்சி வெளிப்பாட்டை மட்டுமே உண்மையான விடுதலை என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், இது தனித்த அளவில் அப்படி ஓர் உணர்வைக் காட்டலாம். பொதுவெளியில், பெண்கள் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் மிக நெருக்கமாக, அதே சமயம் கட்டாயமான இடைவெளியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை.
ஒருவரின் வாழ்வில் நிகழும் அதே வன்முறையும் துயரும் தான் இன்னொரு பெண்ணின் வாழ்விலும் நிகழ்கிறது. இருந்தாலும், இதை மாற்றியமைக்கும், இதிலிருந்து விடுதலை பெறும் முயற்சிகளை நாம் கற்றுக்கொள்வதில்லை.
இதற்கு உதாரணமாக, இரண்டு வகையான பெண் எழுத்தாளர்களை இந்தியத் தரப்பில் பார்த்திருக்கிறேன். சுய அங்கீகாரங்கள், சுய பாலியல் விடுதலைகள் இவற்றையே கொண்டாட்டம் என்று எழுதிய சாதி -இந்துப்பெண்கள், ஒரு வகை. இவர்கள் அல்லாமல், தாம் முன்வைக்கும் விடுதலைகள், எல்லோருக்கும் ஆனதாக எங்கேயேனும் மாறுகிறதா என்று கூர்ந்து பார்த்து எல்லோருக்காகவும் தம் எழுத்து வழியாக அன்பைக் கொட்டியவர்கள். இதையெல்லாம் பெண்ணியம் என்று உயர்ந்த டைட்டிலுக்குள் திணித்து ஒவ்வாமை காட்டவேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் பெண்ணும் ஆணும் இன்பம் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை இப்படி ஏன் வன்முறையைத் திணிக்கும் வாழ்சாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஆதங்கத்தில் மட்டுமே எழுதுகிறேன்.
பல நேரங்களில், ஆஸிஃபா, ஹாசினி போன்றோருக்காகப் பொதுவெளியில் ஆதங்கப்பட்டுவிட்டுத் தனித்த வாழ்வில் இன்னொரு பெண்ணுக்காக சகோதர அக்கறை இன்றி, அதற்கான எந்த முயற்சியும் இன்றி கழிக்கும் பெண்களால் இத்தகைய பாலியல் வன்முறைகள் இன்னும் தீவிரப்படும் என்பதுதான் என் கணிப்பு. பெண்களிடம் தென்படும் சிறிய முரண்பாடுகளைக் கூடப் பெரிதாக, பூதாகரமாக ஆக்கும் வன்மை சாதிக்கு மட்டுமே உண்டு. பெண்கள் ஏதோ பெயருக்கு, ‘பெண்கள், பெண்கள்’ என்று எழுதினாலும், அடியில் ஓடும் சாதிய நீரோட்டங்களும், ஆண்களிடையே போலவே பெண்களிடையேயும் அது வன்மமாய் மாறிச் செயல்படுவதும் நாம் அறியாததல்ல. இது மாறாமல், பெண் பாலியல் வன்புணர்வு பற்றியெல்லாம் பேசிச்செல்வதில் எழுதிச் செல்வதில் எந்த நியாயமுமில்லை. நமக்கெல்லாம் நம் தனித்த நுகர்வு இன்பங்களும், நமக்குள்ளேயே நாம் கட்டமைத்து வளர்க்கும் ஆல்டர்- ஈகோக்களும் தான் முக்கியம், எனும்போது, ஆசிஃபா போன்ற பாலியல் வன்முறைகள் தொடரவே செய்யும்.
ஆண்களும் இம்மாதிரியான பாலியல் வன்புணர்வுகள் குறித்து அலட்சியம் காட்டலாம். நாளை இதே வன்கொடுமை தங்கள் மகளுக்கு நிகழாது என்பது என்ன நிச்சயம். தன் மகனை வளர்க்கும் விதத்தில், தன் மகன் முன் தான் நடந்துகொள்ளும் விதத்தில் அவனும் ஒரு குற்றவாளியாக நாளை மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சாதி – இந்து ஆண்களுக்கு, அவர்களின் படிநிலைக்கு ஏற்றாற் போன்ற காட்சி, பார்வை அதிகாரத்தை பெண்கள் உடல் மீது வழங்கியிருக்கிறது. பெண்கள் இடுப்பில் குடம் தூக்காமல் தலையில் தான் தூக்கிச் செல்லவேண்டும் என்ற விதிகளே கூடப் பட்டவர்த்தமான பாலியல் நுகர்வும் வன்முறையும் திணிக்கப் பட்டிருந்ததைத் தான் காட்டுகிறது. உண்மையில், பெண் – ஆண் மரபணுக்கள் வரை சென்று, வாஷிங்பவுடர் போட்டுக் கழுவும் அயர்ச்சியான வேலை நமக்கு இருக்கிறது. ஆனால் எளிய வழி ஒன்றும் இருக்கிறது. கலை, இலக்கியப்படைப்புகள் வழியாக இதை காலத்தின் எந்த அழுத்தமும் இன்றி நம்மால் செய்துவிட முடியும். மிகவும் விழிப்போடும், கவனத்தோடும் தீவிரத்தோடும் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம், தமிழ் சினிமா, கலை வழியாகவேனும் இவற்றை மாற்றி அமைக்கலாம்.
இதையெல்லாம், இவ்வளவு நுட்பமாகப் பொது ஊடகங்களில் பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை. இதுவெல்லாம் யாருக்கு முக்கியம். அன்றன்றைய பாடுகள், அந்தந்த நிமிடத்துய்ப்புகள் கழிந்தால் சரி. உண்மையில், இந்த வகையில் முகநூலுக்கும், முகநூலில் என் எழுத்தைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையாகவே!
குட்டிரேவதி, எழுத்தாளர்; இயக்குநர்.