சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை.
குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் அனைத்து வேலைகளையும் செய்வது இந்த தினக்கூலி தொழிலாளர்களே.
தங்களை நிரந்தரப்படுத்தக் கோரி வழக்குத் தாக்கல் செய்ததில் 2002 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரம் செய்யுமாறு 30/11/2017 அன்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம் கடந்த நான்கு மாதமாக ஏற்கெனவே வழங்கி வந்த சம்பளத்தையும் வழங்காமல் நிறுத்திவிட்டது.வீட்டுவாடகை கொடுக்க முடியாமலும், உணவுக்குக்கூட வழி இல்லாமலும் தொழிலாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சம்பளத்தையும், போனசையும் உடனே வழங்கக் கோரி இன்று நந்தம்பாக்கம் ஐடிபில் ஆலை முன்பு சங்க செயலாளர் இ. ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
” இன்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடக்கிறது. மக்களுக்கு சலுகைவிலையில் மருந்து தருவதற்காக இருக்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனம் தன் தொழிலாளர்களை நடத்தும் விதம் இதுதான். இது குறித்து இன்று ஆய்வு செய்வாரா மோடி ” என்று கேள்வி எழுப்பினார் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி.