மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி மகாராஷ்டிர நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மாற்றுத்திறனாளியான சாய்பாபா, மிகக் கடுமையான உடல்நல பிரச்னைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பேரா. சாய்பாபாவின் மனைவி வசந்தா தன்னுடைய முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பேரா.சாய்பாபாவுக்கு அடிப்படையான மருத்துவ சிகிச்சையைக்கூட நாக்பூர் சிறை நிர்வாகம் அளிக்க மறுப்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கிறார் வசந்தா.
அன்புள்ள நண்பர்களே…
பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து வழக்கறிஞர்கள் தந்த தகவலின் அடிப்படையில், அவரை நாக்பூர் சிறையிலிருந்து நாக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது தொடர்பாக நாக்பூர் சிறைக்கு 2018 ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று சென்றேன்.
பேரா. ஜி. என். சாய்பாபாவால் தன்னிச்சையாக பரிசோதனைகளையோ சிகிச்சையோ எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் அவரை அழைத்துச் செல்ல சிறை மேற்பார்வையாளரிடம் அனுமதி கோரினேன். சிறிது நேரம் கழித்து, ஜி. என். சாய்பாபா மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்படுவார் என வாய்மொழியில் சொன்னார்கள்.
நான் சிறைச்சாலையின் வாசலில் காத்திருந்தேன், அவர்கள் என்னுடைய அனுமதி கோரும் கடிதத்தை வாங்கிக்கொள்ளவில்லை. அவர்கள் எதையும் சொல்லவில்லை. திடீரென்று, பேரா. சாய்பாபாவை சிறையிலிருந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. பதட்டமும் கவலையும் என்னை சூழ்ந்துகொண்டது. பேரா.ஜி. என். சாய்பாபாவை நாக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை பிறகு அறிந்தேன். கடுமையான காவலுடன் அவர் சிறையிலிருந்து வெளியே செல்லும்போதுதான், அவர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வப்படுவதை யூகத்தில் தெரிந்துகொண்டேன்.
நான் மருத்துவமனைக்குச் சென்றேன், பேராசிரியரை சந்திக்க அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டது. காவல் அதிகாரிகள், பெண் காவலர்கள், நுண்ணறிவு பிரிவினர் என மிக பெரிய அளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்பாபாவை அழைத்துச் சென்றிருந்த நுரையீரல் மருத்துவ பிரிவின் வார்டில்கூட என்னை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் சில பரிசோதனைகள் நடந்துகொண்டிருப்பதாக பிறகு சொன்னார். ஒரு காவல் அதிகாரி, அங்கிருந்த மருத்துவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்து மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது. ஜி. என். சாய்பாபாவை சந்திப்பதற்கோ அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை சந்திப்பதற்கோ என்னை அனுமதிக்கவேயில்லை. அன்று மாலை சாய்பாபாவை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போதுகூட அவரிடம் பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு பெண் காவலர் என்னை வெளியே தள்ளினார். நான் நாளை அவரை சிறையில் சந்திப்பதாக என்னால் முடிந்தமட்டும் குரலை உயர்த்தி கத்தினேன்.
அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 3, 2018 அன்று காலை சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்திப்பதற்காக பதிவு செய்துகொண்டேன். அவரிடம் நான் காத்திருக்கிறேன் என அவர்கள் சொல்லவேயில்லை. சிறைக்கைதிகளை உறவினர்கள் சந்தித்து பேசக்கூடிய இடத்துக்குக்கூட அவரை அழைத்து வரவில்லை. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டார்கள். சாய்பாபா, என்னை சந்தித்த பிறகே மருத்துவமனைக்கு வருவேன் என அவர்களிடன் உறுதியாக சொல்லியிருக்கிறார். இறுதியாக, மதியம் 12 மணியளவில், அவரை என்னால் ஜன்னல் தடுப்பின் வழியாக சந்திக்க முடிந்தது. தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்போகிறார்களா இல்லையா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார் அவர். தனக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை பற்றி சொன்னார். தன்னுடைய குடும்ப உறுப்பினரை அனுமதிக்க வேண்டும் அல்லது மருத்துமனையின் துறைத் தலைவரிடம் பேசவாவது அனுமதிக்க வேண்டும் என அவர்களின் கேட்டுக்கொண்டதை சொன்னார். எழுத்துப்பூர்வமாக எழுதியும் கொடுத்திருக்கிறார். அதிகாரிகள் இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்திருக்கிறார்கள்.
“என்னுடைய உடல் நலம் முன்பைக் காட்டிலும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலியும் அடி வயிற்றில் கடுமையான வலியும் உள்ளது. ஆண்டி பயோடிக் மருந்துகள் குறிப்பிட்ட காலம் வரைக்கும் முழுமையாக எடுத்துக்கொண்ட பிறகும், வலி குறையவில்லை. மேலும், சிறுநீரகத்தில் துல்லியமான வலி தொடங்கியுள்ளது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சீறுநீரக துறை போதிய கவனம் எடுத்து மருத்துவம் செய்யவில்லை. மார்ச், 21-ஆம் தேதி எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் குறைந்த அளவு தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதன்பின் வலி கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. மருத்துவமனைக்குச் செல்வது நரகத்துக்குச் செல்வது போல உள்ளது. இதுபோன்று பயணிக்கும் நிலையில் நான் இல்லை” என என்னிடம் சொன்னார்.
மேலே நடந்த சம்பவங்களைச் சொல்லி, சாய்பாபாவுக்கு பரிசோதனை செய்யும்போது என்னை(குடும்ப உறுப்பினர்) அவருக்கு உதவுவதற்காக அனுமதிக்கும்படி, எங்களுடைய வழக்கறிஞர்கள் மூலம் நாக்பூர் உயர்நீதிமன்ற அமர்வு முன் அஃபிடவிட் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறேன்.
கடந்த ஆண்டு, கடுமையான வலிக்குப் பின்னும், அடிக்கடி மயங்கி விழுவது நடந்தபோதும் பேரா. சாய்பாபாவுக்கு எவ்வித மருத்துவ உதவியும் அளிக்கப்படவில்லை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் இல்லை. உயர்நீதிமன்ற அமர்வில் பிணைக்கு விண்ணப்பித்த பிறகு, காவல் அதிகாரிகள் பேரா. சாய்பாபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக சில மருத்துவ ஆவணங்களை காட்டுகிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள அவருடைய உடல்நிலையை நினைத்து நான் மிகவும் பயந்துபோய் இருக்கிறேன்.
வசந்தா
5.4.2018

“நான் மரணிக்க மறுக்கிறேன்” என்கிற தலைப்பில் பேரா. சாய்பாபா எழுதிய கவிதை…
“நான் மரணிக்க மறுக்கிறேன்”
என்னுடைய சங்கிலிகளை தளர்த்தியபோது
நான் மரணிக்க மறுத்தேன்
பரந்த புல்வெளியில்
புல்லின் நுனிகளைப் பார்த்து புன்னகைத்தபடி
நான் வெளியே வந்தேன்
என் புன்னகை அவர்களுக்கு சகிப்பின்மையைத் தந்தது
நான் மீண்டும் கட்டப்பட்டேன்
வாழ்க்கையில் சோர்வுகண்டு
நான் மீண்டும் மரணிக்க மறுத்தபோது
என்னை சிறைபிடித்து வைத்திருந்தவர்கள் விடுவித்தார்கள்
சூரியனின் உதயத்தில் பச்சை பசேல் புல்வெளியில்
புல்லின் கூர்மையான முனைகளில் புன்னகைத்தபடி
நடந்து வந்தேன்
மரணிக்காத என் புன்னகையால் சினமுற்ற அவர்கள்
என்னை மீண்டும் சிறைப்பிடித்தார்கள்
நான் இன்னும் பிடிவாதமாக மரணிக்க மறுக்கிறேன்
வருத்தம் என்னவெனில்
என்னை எப்படி மரணிக்க வைப்பதென்பது அவர்களுக்குத் தெரியவில்லை
ஏனெனில், துளிர்க்கும் புல்லின் ஓசைகளை
நான் மிகவும் நேசிக்கிறேன்.
அக்டோபர் 1917 புரட்சியின் நினைவையொட்டி, 2017 நவம்பர் 7-ஆம் தேதி பேரா. சாய்பாபா எழுதிய கவிதை.