சந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே? ஒரு நேரடி ஆய்வு அறிக்கை

1. முன்னுரை

சந்தையூரில் உள்ள அருந்ததியர் மக்களின் அனுபவத்தை மையமாக வைத்து நாங்கள் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். சந்தையூர் – இந்திரா காலனி, ராஜகாளி அம்மன் கோவில் சுவர் கட்டப்பட்டதன் நோக்கில், பறையர் மக்களால், அருந்ததியர் மக்களுக்கு ஏற்பட்ட சாதிய பாகுபாடுகள் நிறைந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இது “தீண்டாமைச் சுவர்” தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

அதே போன்று, இந்தச் சுவரைப் பற்றி, சந்தையூர் பறையர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் / இயக்கங்கள் / கட்சிகள், பொது வெளியில் வைக்கும் எண்ணற்ற வாதங்களில், “ஆதிக்க சாதித் தமிழர்கள்” பயன்படுத்தும் அதே சொல்லாடல்கள், சரளமாக இங்கும் அருந்ததியர்கள் மீது கொட்டப்படுகிறது. இதை நாங்கள், அருந்ததியர்கள் மீது பறையர்கள் காட்டும் “சாதிய ஆதிக்கம்” என்றே கவனப்படுத்துகிறோம்.

இந்த அறிக்கை ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி, முன்னுரையாகவும். இரண்டாம் பகுதி, ஆய்வு முறை பற்றியும். மூன்றாம் பகுதி, சந்தையூரைப் பற்றிய அறிமுகமாகவும். நான்காம் பகுதி, பிற தீண்டாமை சுவர்கள் பற்றிய ஒரு பார்வையாகவும், ஐந்தாம் பகுதி, தீண்டாமைச் சுவர் மற்றும் அருந்ததியர்களின் அனுபவங்கள் பற்றியும். ஆறாம் பகுதி, பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதத்தை ஒரு திறனாய்வு நோக்கில் அணுகியும். ஏழாம் பகுதி, இந்த பிரச்சினையில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட விசயங்களை தொகுத்தும் தந்திருக்கிறோம்.

2. ஆய்வு முறை

ஆறு நபர்கள் கொண்ட குழு, பல்வேறு கட்டங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். ஆய்வில் கலந்து கொண்டவர்கள்,

a. தோழர். சூர்யா, சமூகப்பணி செயல்பாட்டாளர்.

b. Dr. ரவிச்சந்திரன், தலித் கேமரா நிறுவனர்.

c. தோழர். கதிரவன், பத்திரிக்கையாளர்.

d. தோழர். ராம்குமார், ஆய்வு மாணவர்.

e. தோழர். பிரபாகரன், ஆய்வாளர்.

f. தோழர். பிரபாகர், ஆய்வு மாணவர்.

இக்குழுவில், மூவர் அருந்ததியர்கள் (S.C.), இருவர் பறையர்கள் (S.C.) மற்றும் ஒருவர் கைக்கோளர் (O.B.C). நாங்கள் சில அருந்ததியர்களை, சாதி ஒழிப்புச் செயல்பாட்டாளர்களை / முனைவர்களை / பேராசிரியர்களை அணுகி, சந்தையூர் தீண்டாமைச் சுவர் பற்றிய அனுபவங்களை களஆய்வு செய்து, “நியாயமான” அறிக்கை வெளியிட வேண்டினோம். ஆனால், பயம், அச்சுறுத்தல், பிரச்சினை கண்டு விலகிச் செல்லுதல், தலித் விடுதலையின் மீது அக்கறையின்மை போன்ற காரணங்களினால் யாரும் முன் வரவில்லை. இறுதியில், நாங்களே அந்த பணியை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். இந்தக் குழுவில், போதுமான அளவில் முழுமையான பிரதிநிதித்துவம் இல்லாமைக்கு மேற்குறிப்பிட்ட காரணிகளே முக்கியக் பங்கு வகுக்கின்றன.

இந்த ஆய்வு, “Qualitative Research” என்ற முறையைச் சார்ந்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள, அருந்ததியர்களிடத்தில் நேர்காணல் எடுக்கப்பட்டு உண்மை சாட்சியங்களாக தொகுக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று, சந்தையூர் பிரச்சினையை சார்ந்து, பறையர்களும் / பறையர் சார்பாக பேசிய / பதிவு செய்த / சமூக வலைதளங்களில் எழுதிய சொல்லாடல்களையும் சேகரித்தோம். மேலும், சந்தையூர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் நிலை தரவுகளை தேடி எடுத்தோம்.

சந்தையூர் பறையர்கள், இந்தப் பிரச்சினை தொடர்பாக, நாங்கள் எடுக்க முயற்சித்த நேர்காணலுக்கு எவ்வித ஒத்துழைப்பையும் முதலில் தரவில்லை. ராம்குமார் மூன்று முறை பறையர்களை சந்திக்க முயற்சி செய்தும் அவர்களிடம் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை. ரவிச்சந்திரன் பல முறை முயற்சித்து, தோழர். வெ.பு. இன்குலாப் (தெற்கு மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), தோழர். வெ. கனியமுதன் (துணை பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) மற்றும் தோழர். எவிடன்ஸ் கதிர் (சாட்சியம் நிறுவனம்) நேர்காணல் கொடுக்க சம்மதித்தார்கள். மேற்குறிப்பிட்ட தோழர்களின் பெயர்களை பயன்படுத்திய பிறகே, சந்தையூரில் உள்ள சில பறையர் ஆண்கள் நேர்காணல் கொடுக்க சம்மதித்தனர். அதுவும், கேமராவில் அவர்களுடைய நேர்காணலை பதிவு செய்ய முற்றிலுமாக மறுத்து விட்டனர்.

3. சந்தையூர், ஒரு அறிமுகம்

சந்தையூர் கிராமம், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ளது. அந்த கிராமம், பேரையூரிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு தேவர், செட்டியார், பிள்ளை, ஆசாரி, நாவிதர், வண்ணார், தேவேந்திரர், அருந்ததியர், பறையர் என பல்வேறு சாதிச் சமூகங்கள் வாழ்கிறார்கள்.

அருந்ததியர் மற்றும் பறையர்கள் ஊருக்கு வெளியிலுள்ள சேரியில் வாழ்கின்றனர். இவ்விருவரும் அருகருகே வாழ்ந்தாலும், பறையர் குடி, அருந்ததியர் குடி என்று தனித்தனி உட்பகுதிகளாக இருக்கிறது. அரசு ஆவணத்தில் இந்திரா நகர் என்று இருந்தாலும், பொதுவாக இந்திரா காலனி என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சுமார் 70 லிருந்து 80 அருந்ததியர் குடும்பங்களும், 30 லிருந்தது 35 பறையர் குடும்பங்களும் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் மூன்று தேவர் குடும்பமும் வாழ்கின்றனர். தேவேந்திரர் அருகிலுள்ள கீழப்பட்டி கிராமத்தில் வாழ்கின்றனர். இதர சாதி சமூகங்கள் ஊர்ப் பகுதியில் வாழ்கின்றனர்.

சந்தையூர் கிராமத்தில் நிறையக் கோவில்கள் இருந்த போதிலும், அருந்ததியர் மற்றும் பறையர் மக்கள் வசிக்கும் பகுதியில் ராஜகாளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன. இவற்றில், ராஜகாளியம்மன் கோவில் பறையர் மக்களும், காளியம்மன் கோவில் அருந்ததியர்களாலும் வழிபடுகின்றனர். விநாயகர் கோவிலை இரு சமூதாய மக்களும் வழிபடுகின்றனர்.

காமராஜர் ஆட்சி காலத்தில், இந்த ஊரில் ஆதிதிராவிடர் குடியிருப்பை உருவாக்க, 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை, அரசு தந்தது. அதில், 1 ஏக்கர் 05 சென்ட் நிலம், தனிநபர் பட்டாக்களாக 14 அருந்ததியர் குடும்பத்திற்கும், 7 பறையர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள 55 சென்ட் நிலம், இரண்டு சமூக பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இது பட்டா எண். 193ல் வருகின்றது. ராஜகாளியம்மன் கோவில் சுற்றி உள்ள பொது நிலம் தான் இப்பொழுது பிரச்சினைக்கு உரிய இடமாக அங்கு இருக்கிறது. பறையர்கள் இதை தங்களுக்குரியது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள் / அருந்ததியர்கள் இதை பொது [நத்தம் புறம்போக்கு] நிலம் என்று சொல்கிறார்கள். இது பட்டா எண். 194ல் வருகின்றது.
இந்திரா காலனி, பேரையூரிலிருந்து சந்தையூருக்கு வரும்பொழுது, சந்தையூர் கிராமத்தின் முதல் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது. அந்த நிறுத்தத்தை ஒட்டி ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இக்காலனி இரண்டு பிரிவுகளாக உள்ளது. அருந்ததியர் மற்றும் பறையர் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு நடுவே ராஜகாளியம்மன் கோவில் (மற்றும் ஒரு காலி இடம் உள்ளது). அதைச் சுற்றி ஒரு பெரிய சுவர் (தீண்டாமைச் சுவர்) உள்ளது. அருந்ததியர்கள் வழிபடும் கோவில் மற்றும் விநாயகர் கோவிலைச் சுற்றி எந்த ஒரு சுற்றுச் சுவரும் இல்லை.

ராஜகாளியம்மன் கோவிலுக்குப் பின் புறத்தில் ஒரு சாவடி உள்ளது. அது பறையர் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ராஜகாளியம்மன் கோவிலுக்கு மேற்குப் பக்கத்தில் காளியம்மன் கோவிலும் அதை ஒட்டி ஒரு சாவடியும் உள்ளது. இது அருந்ததியர் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி அருந்ததியர் குடியிருப்புகளும் அதன் பின்புறத்தில் பறையர் குடியிருப்புகளும் இருக்கின்றன. இந்த இரு கோவில்களுக்கும் இடையே ஒரு பொதுவழிப் (சிமெண்ட்) பாதை உள்ளது.

காலம்காலமாக, அருந்ததியர் மற்றும் பறையர் விவசாயக் கூலிகளாக இருந்து வருகின்றனர். அத்துடன், அருந்ததியர்கள் இறப்புச் சடங்குகள் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செய்கின்றனர். பறையர் மக்கள் கூடை பின்னும் தொழில் செய்தனர், ஊர் வேலை அவர்கள் செய்தது கிடையாது. ஒரு காலத்தில், இரண்டு தரப்பு மக்களும், ஏழ்மையான நிலையில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் மாட்டு இறைச்சியும், இறந்த மாட்டு இறைச்சியும் உண்டு வாழ்ந்துள்ளனர். அருந்ததியர், பறையர்களுக்கு மாட்டு இறைச்சியைப் பகிர்ந்து கொடுத்து உள்ளனர். ஒரு காலத்தில், இரண்டு சமூகத்து மக்களும் சுமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனாலும், இரண்டு சமூக மக்களிடையே திருமண உறவு என்பது எப்போதும் இருந்ததில்லை.

கடந்த பதினைந்து வருட காலத்தில், பறையர்கள் கல்வியிலும், பொருளாதார நிலையிலும் முன்னேறி உள்ளார்கள். பலர் அரசாங்கப் பணியிலும் மற்றும் நகரங்களிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சில வருடத்திற்கு முன்னரே, அருந்ததியர்கள் முன்னேற்றத்திக்கான பாதையில் நுழைந்து உள்ளனர். ஒரு அருந்ததியர் ஆசிரியராக வேலை செய்கிறார். பல ஆண்கள் கேரளா மாநிலம் சென்று வேலை செய்கிறார்கள். இன்றளவும், நிறைய தினக்கூலி வேலைக்கும், இறப்பு சடங்குகள் செய்வதற்கு இவர்கள் செல்கின்றனர். அருந்ததியர்கள் வசிக்கும் பெரும்பாலான வீடுகள் அரசால் கட்டப்பட்ட வீடுகளே. வறுமையின் காரணமாக இவர்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. அருந்ததியர் மக்கள் அதிகமாக இருந்தாலும், அவர்கள் சாதியிலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் பறையர்களைவிட கீழான நிலையிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக, பறையர்கள், அருந்ததியர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

4. தீண்டாமைச் சுவர்கள், ஒரு பார்வை

சந்தையூர் தீண்டாமைச் சுவரை புரிந்து கொள்ள மற்றும் ஒரு சுவர் எப்போது தீண்டாமைச் சுவராக பார்க்கப்படுகிறது / கருதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள, அதே போல் இருக்கும் / இருந்த சுவர்களை பற்றி படிப்பது / ஆராய்வது அவசியமானது. கடந்த பத்து வருடங்களில், தமிழகத்திலும் / தென்னிந்தியாவிலும் எண்ணற்ற தீண்டாமைச் சுவர்கள் சார்ந்த பதிவுகளும் / அதை அகற்றுவதற்கு போராட்டங்களும் அவ்வப்போது நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. எடுத்துக்காட்டாக, திருச்சி மேலப்புதூர் கல்லறைக்கு நடுவே கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் (Natarajan, September 2010); சேலத்தில் 42வது வட்டத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் (The Hindu, August 2011), உத்தபுரம் தீண்டாமைச் சுவர், வடயம்பாடி தீண்டாமைச் சுவர் மற்றும் கோவை தீண்டாமைச் சுவர். இவைகளில், இந்த ஆய்வுக்கு, மூன்று தீண்டாமைச் சுவர்களை பற்றி மட்டும் நாம் பார்க்கலாம்.

4.1. உத்தபுரம் தீண்டாமை சுவர்

உத்தபுரம் என்ற ஊர் மதுரை மாவட்டத்தில், தமிழ் நாட்டில் உள்ளது. அந்த ஊரில், “ஆதிக்க சாதிகளுக்கும்,” தலித்களுக்கும் இடையே ஒரு சண்டை 1989ல் ஏற்பட்டது (அதற்கு முன் 1948ல் மற்றும் 1964ல் இந்த இரு சமூகங்களுக்கிடையே சண்டைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளது). அந்தச் சண்டைக்கு பிறகு, ஒரு 600 அடி தீண்டாமைச் சுவரை ஆதிக்க சாதிகள் கட்டி எழுப்பினார்கள். இந்தச் சுவர் காரணமாக, அடுத்த பக்கம் செல்ல, 2.50 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை தலித்துகளுக்கு ஏற்பட்டது (Mathew October, 2015).

அந்த ஊரில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2007ஆம் ஆண்டு ஒரு களஆய்வு நடத்தினார்கள். அந்த ஆய்வில் தீண்டாமையின் பல பரிமாணங்கள் உள்ளதை அவர்கள் பதிவு செய்தார்கள். உதாரணத்துக்கு, முத்தாலம்மன் கோவில் மற்றும் அங்கு உள்ள அரச மரத்துக்குச் சென்று வழிபட தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதே போல, தலித் மக்களின் வீட்டு விழாக்களின் போது, தெருவில் தோரணம் கட்ட, தெருவை அலங்கரிக்க அனுமதி இல்லை (Imranullah March, 2012). தேசிய அளவில், பல ஊடகங்கள், இந்த ஆய்வறிக்கை பற்றி பேசினார்கள் / எழுதினார்கள். அதைத் தொடர்ந்து, தலித் அமைப்புகளின் போராட்டங்கள், சாதி ஒழிப்புக் கொள்கை கொண்ட அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் ஊடகங்களின் நெருக்கடி காரணமாக 2008ம் ஆண்டு ஒரு பகுதி (180 மீட்டர்) சுவரைச் தமிழக அரசு இடித்தது (Mathew October, 2015).

அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதிகள் இதை ஏற்க மறுத்து விட்டனர். சுவர் இடித்த அன்று அவர்களில் பலர் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். பின் அக்டோபர் 1, 2008 அன்று, ஆதிக்க சாதிகள், அந்த ஊரில் வசிக்கும் 70 தலித் குடும்பங்களின் வீடுகள் மீது தங்களுடைய காழ்ப்புணர்ச்சியைக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில், சுரேஷ் என்ற ஒரு தலித் இளைஞர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார் (Ibid.).

பல வழக்குகள் இரண்டு தரப்பினர்கள் மீதும் அரசு பதிவு செய்தது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆய்வு செய்ய, S. திருப்பதி (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களைக் கொண்டு ஒரு-நபர் ஆணையம் ஒன்றை உருவாக்கியது. அவர் கொடுத்த அறிக்கையில், தலித் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்ததை எடுத்துக் காட்டி இருந்தார் (Ibid.).

பின்பு, அக்டோபர் 20, 2011 அன்று, மதுரை S.P. அவர்கள் முன்னிலையில் ஒரு சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இரு சமுதாயப் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். முடிவில், இரு தரப்பும், ஒரு உடன்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். முக்கிய உடன்பாடுகள்: தலித்கள் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபடலாம், ஆனால், கோவில் நிர்வாகத்தை ஆதிக்க சாதிகள் பார்த்துக் கொள்வார்கள், தலித் மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிப்பதால் சுவரை (தீண்டாமைச் சுவரை) முழுவதும் இடிக்க தேவையில்லை, இரண்டு தரப்பு மக்கள் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெற்றுக் கொள்வது (Ibid.).

இந்த உடன்பாடு எட்டிய பிறகு, நவம்பர் 10, 2011 அன்று, அந்த ஊரின் தலித்துகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு முத்தாலம்மன் கோவிலுக்கு உள்ளே சென்றார்கள். சில ஆதிக்க சாதி ஆண்கள் தலித் மக்களை வரவேற்கவில்லை. அதே போல, அந்த சமூகத்தில் உள்ள சில பெண்கள், தலித் மக்கள் நுழைந்து விட்டார்களே என்று வீதியில் அழுதார்கள் (Ibid.).

4.2. வடயம்பாடி தீண்டாமை சுவர்

வடயம்பாடி என்ற ஊர் கேரளா மாநிலம், எர்னாகுளம் மாவட்டத்திலுள்ளது. இறவி ராமன் கர்த என்றொரு நாயர் (உயர் சாதி இந்து) பஜனை பாட ஒரு அறை ஒன்றை கட்டினார், அந்த ஊரில். பல ஆண்டுகளுக்கு பிறகு, அந்த இடத்தை நாயர் சேவை சங்கம் (NSS) சொந்தம் கொண்டாடி, அந்த இடத்தை விரிவு படுத்தி, ஒரு கோவிலை கட்டினார்கள். அதன் பெயர், பஜனை மடம் கோவில். அந்த கோவிலை சுற்றி 95 சதவிகிதம் நிலம், காலி நிலமாக இருந்தது. அதை சுற்றி மூன்று தலித் மற்றும் ஆதிவாசி குடியிருப்புகள் இருக்கின்றது (புலையர் மற்றும் நாயக்கர்). அந்த புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக அங்கு உள்ள தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்கள் (180 இப்போது) பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் சார்ந்த விசயத்திற்காக பயன்படுத்தி வந்தார்கள் (Jayarajan, February 2018).

மார்ச், 2017ல், NSS ஒரு சுவரை அந்த காலி இடத்தை சுற்றி கட்டினார்கள். முதலில், தலித் / ஆதிவாசி மக்கள் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொன்னார்கள். பிறகு, அந்த கோவிலில் தலித் மக்கள் நடத்தும் “தேச விளக்கு” பண்டிகையால், அங்கு உள்ள தெய்வத்தின் புனிதம் கெட்டு போவதாக சொல்லி அந்த பண்டிகையை நிறுத்தினார்கள். மேலும், அந்த காலி நிலம், NSSக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார்கள் (Ibid.).

ஒரு பகுதி சுவரை, தலித் மக்களும் / இயக்கங்களும் ஏப்ரல் 14, 2017 (அம்பேத்கர் பிறந்தநாளன்று) அன்று உடைத்தார்கள். அதன் பின், இந்த சுவரை எதிர்த்து, தலித் மக்களும் / இயக்கங்களும் சுமார் ஒரு வருட காலம் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதன் இடையே, RTI மூலம் தாலுகா அலுவலகத்தில், அந்த நிலம் சார்ந்த அவணங்கள் கேட்கப்பட்டது. எங்களால் அந்த நிலத்தின் பட்டாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று பதில் சொன்னார்கள், அரசு அதிகாரிகள் (Counter Currents, January 2018).
பல மாதங்களாக, ஊடகங்களின் பார்வை போராடும் மக்கள் மீது பெரிதாக இல்லை. ஜனவரி 21, 2018 அன்று, காவல் துறை அதிகாரிகள் போராடும் மக்கள் மற்றும் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான நடவடிக்கையின் விளைவாக, ஊடகங்கள் இந்த பிரச்சினையின் பக்கம் திரும்பியது. தலித் எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் காவல் துறையின் செயலை வன்மையாகக் கண்டித்தனர். மாவோயிஸ்ட் அமைப்பு தூண்டுதல் காரணமாகத் தான் தலித் மக்கள் போராடுகிறார்கள் என்று கேரளா காவல் துறை, கூச்சம் இல்லாமல் குற்றம் சுமத்தியது. R.S.S. அமைப்பு ஒரு படி மேலே சென்று, மாவோயிஸ்ட் மற்றும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள், இந்தப் போராட்டத்தை நடத்துவதாக சொன்னார்கள் (Ameerudheen, January 2018). அந்த மாநிலத்தை ஆளும் CPI(M)ன், ஒரு M.L.A., இது சிவில் பிரச்சினை, சாதி பிரச்சினை இல்லை (தீண்டாமை இல்லை) என்று சொல்கிறார் (Jayarajan, February 2018).

அந்த இடத்தைச் சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை பல அமர்வுகளைத் தாண்டிச் சென்றது. தற்காலிகச் சமரசம் ஒன்று ஏற்பட்டு இருப்பதாக ஆட்சியர் அவர்கள் பிப்ரவரி, 2018ல், அறிவித்தார். “எந்த ஒரு புதிய கட்டமைப்புகளும் கட்ட கூடாது, வழக்கு முடியும் வரை. அந்த பகுதியை தலித் மக்கள் பயன்படுத்த அனுமதி உண்டு,” என்று அதில் குறிப்பிடப்பட்டது (Ibid.).

4.3.கோவை தீண்டாமைச் சுவர்

கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில், வேடபட்டி ஊராட்சியில், நாகராஜபுரம் உள்ளது. அந்த ஊரில், தலித் / ஆதிவாசி இன மக்கள், 600 – 700 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள் – அருந்ததியர், தேவேந்திரர், பறையர், நரிக்குறவர் சமூகத்தினர் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், ஒரு தனியார் நிறுவனம், முக்கிய சாலை பக்கத்தில் உள்ள நிலத்தை வாங்கி, வீட்டு மனைகள் போட்டார்கள். இந்த நிலத்துக்கு பின் புறம், தலித் / ஆதிவாசி இன மக்கள் வசிக்கும் இடம் உள்ளது. வீட்டு மனைகள், தலித் / ஆதிவாசி இன மக்கள் வசிக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருந்தால், மனைகளின் மதிப்பு குறையும் என்று ஒரு சுவரைக் கட்டினார்கள். அந்தச் சுவர், ஒரு மீட்டர் அகளம், 10 அடி உயரம், ஒரு கிலோமீட்டர் நீளம் இருந்தது.

இதனால், முக்கியச் சாலைக்குச் செல்ல, தலித் / ஆதிவாசி இன மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தத் தீண்டாமைச் சுவரைப் பற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஒரு மனு கொடுத்து இருந்தார்கள், பாதிக்கப்பட்ட மக்கள். இந்தச் செய்தி, தினசரி நாளிதழ்களில் வந்து இருந்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு, R.D.O., தாசில்தார் மற்றும் இது சார்ந்த அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்தார்கள். பின், இரண்டு இடங்களில், அணுகு சாலை அமைக்க அந்தச் சுவர்கள் இடிக்கப்பட்டது. மாநகராட்சிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய அணுகு சாலையைக் கொடுக்காமல் அந்தச் சுவரை அவர்கள் கட்டி இருந்தார்கள்.

இப்போது, சந்தையூர் தீண்டாமைச் சுவருக்கும், மேலே குறிப்பிட்ட தீண்டாமைச் சுவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் பார்ப்போம்:

a. உத்தபுரம் தீண்டாமைச் சுவர் மற்றும் வடயம்பாடி தீண்டாமைச் சுவர் ஆகியவை இருந்த இடங்கள், புறம்போக்கு நிலம். சந்தையூர் தீண்டாமைச் சுவர் இருக்கும் இடமும் புறம்போக்கு நிலம்.

b. உத்தபுரத்தில் ஆதிக்க சாதிகள் தலித்களிடம் கையெழுத்து வாங்கிய பிறகே தீண்டாமைச் சுவரை கட்டினார்கள். அதே போன்று, சந்தையூரில் பறையர்கள் அருந்ததியர்களிடம் கையெழுத்து வாங்கிய பிறகே தீண்டாமைச் சுவரைக் கட்டினார்கள். இந்த இரண்டு இடத்திலும், ஆதிக்க சாதியின் அச்சுறுத்தல் காரணமாகத் தான் ஒப்பந்தம் கையெழுத்தானது.

c. இதுநாள் வரை, ஆதிக்கச் சாதியினர் எந்த ஒரு இடத்திலும் தாங்கள் கட்டியது தீண்டாமைச் சுவர் தான் என்று ஏற்றுக் கொண்டதில்லை, சந்தையூர் பறையர்களும் அவ்வாறே நடந்துகொள்கின்றனர்.

d. உத்தபுரத்தில் தலித்துகள் முத்தாலம்மன் கோவிலுக்கு உள்ளே நுழைந்த பிறகு (மற்றும் சாதித் தமிழர்களின் ஆதிக்கத்தை சிறிதளவு உடைத்த பிறகு), தீண்டாமைச் சுவர், சாதாரண சுவரானது (தலித் மக்கள் பார்வையில்). அதே போலத்தான், இரண்டு அணுகு சாலை வந்த பிறகு, கோவையில் இருந்த தீண்டாமைச் சுவர், சாதாரண சுவரானது.

e. வடயம்பாடி தீண்டாமைச் சுவர் பிரச்சினை என்பது கோவிலில் நுழையும் பிரச்சினை இல்லை, கோவிலை சுற்றி உள்ள காலி நிலத்தின் (புறம்போக்கு நிலம்) உரிமைக்கான பிரச்சினை. சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினையும் அதுவே. பல காலமாக, அருந்ததியர்களும், பறையர்களும் சேர்ந்து உபயோகித்த நிலத்தை திடீர் என்று பறையர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் / சாதிய ஆதிக்கத்தை காட்டுகின்றார்கள்.

f. மேலும், வடயம்பாடி தீண்டாமைச் சுவர் பிரச்சினை, ஒரு சிவில் நிலப் பிரச்சினை என்று வாய்கூசாமல் ஒரு CPI(M) M.L.A. ஒருவர் சொன்னார். அதே சொல்லாடலை தான், பறையர்கள் சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினையில் பயன்படுத்துகின்றார்கள். சிவில் நிலப் பிரச்சினை என்று சொன்னால் அங்கு தீண்டாமை இல்லை என்று உறுதிப்படுத்தப்படும்.

g. நாகராஜபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் சொந்த நிலத்தில் கட்டப்பட்டது. சொந்த நிலமாக / புறம்போக்கு நிலமாக இருப்பினும், கட்டப்பட்டதற்கான காரணம் தனக்கு கீழ் உள்ள சாதிய சமூகத்தை ஒதுக்குவதற்காக எனில் அது தீண்டாமைச் சுவரே.

h. தங்கள் கோவிலுக்கு உள்ளே ஆதிக்க சாதியினரை நுழையக் கூடாது என்று, ஒரு வேளை, தலித் மக்கள் ஒரு சுவரை கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது தீண்டாமையா? இல்லை, சாதிய எழுச்சியா? (எங்கள் பார்வையில்) அது சாதிய எழுச்சியே! இந்து வர்ண அமைப்பில், கீழ் உள்ள சாதிகள், தனக்கு மேல் உள்ள சாதிகள் மேல் தீண்டாமையை கடை பிடிக்க முடியாது (reverse discrimination is impossible within the Hindu caste code).

i. சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சினை என்பது இரு பட்டியல் இன சாதிகளுக்கு இடையே நடப்பது (அருந்ததியர் மற்றும் பறையர்). ஆகையால், தீண்டாமைக்கு உள்ளே தீண்டாமை சாத்தியமா? என்று பலர் கேட்கிறார்கள். இந்த கேள்வி, எந்த நிலைப்பாட்டில் இருந்து எழுப்புகிறார்கள் என்றால், “பட்டியல் இன சாதிகள் (மற்றும் பாலினம்) அனைத்தும் சமதளத்தில் இயங்குகின்றது.” இந்து வர்ண அமைப்பு என்பது சாதிய படிநிலைகளால் ஆனது, பட்டியல் இன சாதிகள் அதற்கு விதிவிலக்கில்லை.

j. அதேபோலத்தான், தலித் பெண்ணியமும் (Dalit Feminism), ஆதிக்க சாதித் தமிழர்களுக்கு (ஆண் + பெண்) எதிராக களம் காணும் அதே வேளையில் தலித் ஆண்களின் தீண்டாமை / ஆதிக்கத்துக்கு எதிராகவும் களம் காண்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் தலித் ஆண்கள், தலித் பெண்கள் மீது தீண்டாமையை, ஆதிக்கத்தை கடைப்பிடிக்கின்றார்கள்.

சந்தையூர் தீண்டாமை சுவர்…

5. தீண்டாமைச் சுவரும், அருந்ததியர் மக்களின் அனுபவங்களும்

பறையர்களால், அருந்ததியர்களுக்கு ஏற்பட்ட தீண்டாமை / ஒடுக்குமுறை சார்ந்த எட்டு அனுபவங்களை மட்டும் இதில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். நேரமின்மை, பக்கங்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களால், பல ஒடுக்குமுறை சார்ந்த அருந்ததியர்களின் அனுபவங்களை இங்கு எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. உதாரணமாக, அங்கன்வாடியில் நடக்கும் சாதிய தீண்டாமை, தண்ணீர் தொட்டி கட்ட மறுப்பு தெரிவித்தது, காளியம்மன் கோவில் சுவர் கட்ட மறுப்பு தெரிவித்தது, 11 அடி சாலையில் நடந்த பிற தீண்டாமை அனுபவங்கள். பாதுகாப்பு கருதி, நாங்கள் இந்த அனுபவங்களில் வரும் நபர்களின் பெயர்களை மறைத்து புனைப்பெயர்கள் கொடுத்துள்ளோம்.

5.1. திரு. விக்னேஸ்வரனின் அனுபவம்

அந்த நிகழ்வு, இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது. அப்போது, அவர் சந்தையூரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்ற மாணவராக இருந்திருக்கிறார். படிப்பில், சுமாராகவும் இருந்திருக்கிறார். இதை பார்த்த அவருடைய பள்ளியில் படிக்கும் சில பறையர் மாணவர்களுக்கு சாதிய அடிப்படையில் பொறாமை இருந்தது, “நீ இதை போல் விளையாட்டில் பரிசுகள் வாங்கக் கூடாது,” என்றும், “சக்கிலியனாகிய நீ, எங்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்கள். பல சூழ்நிலைகளில், பள்ளியில் நடக்கும் பச்சைக் குதிரை விளையாட்டின் போது, அருந்ததியர் மாணவர்கள் தாண்டும் நிலை வரும் போது, பறையர் மாணவர்கள் குனிய மறுத்து உள்ளனர்.

அந்த ஆண்டு, அவர் விளையாட்டு போட்டிகளில் அதிக பரிசுகள் பெற்றிருந்தார். கோபம்கொண்ட சந்தையூர் பறையர் மாணவர்கள், ஒரு நாள், விக்னேஸ்வரன் அந்த 11 அடி சாலையை கடக்கும் போது, காளிராஜ் மற்றும் அவரது தம்பிகள், விக்னேஸ்வரனை தாக்கி உள்ளனர். ஒரு கல்லை கொண்டு அவர் முதுகில் தாக்கியதில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த இரண்டு அருந்ததியப் பெண்கள், பறையர் மாணவர்களிடமிருந்து விக்னேஸ்வரனை காப்பாற்றினார்கள். மூச்சு திணறல் காரணமாக, அவர் மூன்று நாட்கள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கு பின், பள்ளிக்கு சென்றால் வேறு ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பள்ளிப் படிப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவிட்டு, ஆந்திர அருகில் ஒரு முறுக்கு கம்பனிக்கு வேலைக்கு சென்று இருந்தார்.

5.2. திரு. ஈஸ்வரன் அவர்களின் அனுபவம்

ஈஸ்வரன் தற்பொழுது சந்தையூர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார். சிறப்பாக படிக்கும் மாணவர் என்று பலரும் இவரை பாராட்டுகின்றார்கள்.
அந்த நிகழ்ச்சி 2016ம் ஆண்டு நடந்தது. ஒரு நாள், அவர் சைக்கிள் ஒட்டிக் கொண்டு அந்த 11 அடி பாதையில் வந்துள்ளார். அப்பொழுது தங்கபாண்டி என்றொரு பறையர் (சுமார் 36 வயது இருக்கும்) ஈஸ்வரனை தடுத்து, “இந்த பாதையில் ஏன்டா நீ சைக்கிள் ஓட்டி வந்த? இது எங்களுடைய பாதை அதனால் தான் இந்த சுவர் கூட கட்டி உள்ளோம்,” என்று மிரட்டி, தாக்கியுள்ளார். ஈஸ்வரன் அழுது கொண்டே அவருடைய அப்பாவான திரு. முனியாண்டி அவர்களிடம் சொன்னார். அவர் ஊர் தலைவர் திரு. குருசாமி அவர்களிடம் நடந்த விசயத்தை சொல்லி முறையிட்டுயிருக்கிறார். முனியாண்டி தற்போது ஊர் வேலை செய்து வருகிறார்.

5.3. திரு. காளிமுத்து அவர்களின் அனுபவம்

இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 2013ல் நடந்தது. ஒருநாள், காளிமுத்து அவர்கள் வீட்டிற்கு அவருடைய உறவினர், குமார், என்பவர் தேனியில் இருந்து வந்திருந்தார், அவர் கொத்தனார் தொழில் செய்து வருபவர். காளிமுத்துவின் மகள் பிறந்தநாள் விழா அழைப்பின்பேரில் அவர் அங்கு வந்து இருந்தார்.

குமார் அவர்கள் அருந்ததியர் பழைய தெருவில் வீடு கட்டும் பணிக்காக அங்கு இரண்டு நாள் தங்கிருந்தார். ஒரு நாள் மதியம், வேலையை முடித்துவிட்டு உணவிற்காக திரும்பி அருந்ததியர் புதிய தெருவுக்கு வரும்போது, அவரும், அதே பகுதியை சேர்ந்த காளிமுத்துவும் முள்வேலி இருந்த இடத்தின் வழியாக எதார்த்தமாக வந்துள்ளனர். முதலில் அமைதியாக இருந்த பறையர்கள், அவர்கள் வேலைக்கு சென்று திரும்பும் போது, அங்கிருந்த பறையர் இளைஞர்கள் சிலர், “நீங்கள் இந்த வழியில் வரக்கூடாது, நீங்கள் வரக்கூடாது என்று தான் நாங்கள் முள்வேலி போட்டோம்,” என்று கூறியுள்ளனர். அதற்கு, குமார் அவர்கள், “நான் வெளியூர் எனக்கு அதைப்பற்றி தெரியாது,” என்று கூற, அருகில் இருந்த காளிமுத்து அவர்கள், “நீங்க அப்படி சொல்ல முடியாது, இது பொது இடம். இதனால் தானே ஏற்கனவே சகாயம் கலெக்டர் அவர்கள் முள்வேலியை எடுத்தார்,” என்று கூறியுள்ளார்.

அதற்கு, பறையர் இளைஞர்கள் காளிமுத்துவை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அதனால், அவருடைய தோள்பட்டை மற்றும் கை பாதிப்புக்குள்ளானது. இதை தடுக்க வந்த காளிமுத்துவின் தம்பி, பழனி அவர்களையும் தாக்கினார்கள். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளது. அருந்ததியர் தரப்பிலிருந்து இந்த கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளது. கருப்பையா அவர்கள் (பறையர்) வீட்டின் மேற்கூரையில் பதுக்கி வைத்து இருந்த கற்களை கொண்டு எரிந்ததில் அருந்ததியர் பெண்களின் மண்டை உடைந்தது.

வேடிக்கை என்னவென்றால், இந்த கலவரத்தை ஆரம்பித்த பறையர்கள் மீது கொலை மிரட்டல் (506) வழக்கும், அருந்ததியர்கள் மீது 307 வழக்கும் (கொலை முயற்சி) பதியப்பட்டது. இன்றும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அருந்ததியர் மாணவர் ஒருவர், இந்த வழக்கு காரணமாக, பள்ளி இடைநிற்றல் செய்து விட்டார்.

5.4. தை பொங்கல் அன்று நிகழ்ந்த சம்பவம்

அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான விநாயகர் கோவில் முன்பு, வாகனங்கள் வழிப்பாதையில் நிறுத்தி இடையூறு செய்யாமல் இருக்க, அருந்ததியர் மக்கள் கற்களை வைத்திருந்தார்கள். பொங்கல் திருவிழா என்பதால் ஒலி பெருக்கியை வைத்துள்ளனர்.

சனவரி 13, 2017ல், தை பொங்கலுக்கு முதல் நாள், விநாயகர் கோவிலுக்கு முன்பு இருந்த கற்களின் மீது பறையர் பெண்கள் அமர்ந்து இருந்தனர். இதை பார்த்த, அருந்ததியர் பெண்கள் அங்கு சென்று, “ஏற்கனவே, நம் இரு சமூகத்திற்கும் பிரச்சினை இருந்து வருகிறது, இந்த சமயத்தில் நீங்கள் இங்கே அமர்ந்து இருப்பதை, அருந்ததியர் ஆண்கள் பார்த்து ஏதாவது சொன்னால், மீண்டும் பிரச்சினை வரும்,” என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட பறையர் பெண்கள் கோவமாக திட்டவே, பிரச்சனை பெரிதாக மாறி, இரு சமூக மக்களுக்குள் மோதல் ஏற்பட்டது. சில நிமிடங்களில், பறையர்கள் அந்த கற்களை அவர்கள் வழிபடும் ராஜகாளியம்மன் கோவிலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். பின் அருந்ததியர் மக்களை இழிவாக வசைப்பாடியுள்ளனர். அதன் பிறகு அந்த கற்களை, ஒலி பெருக்கியை உடைத்து நொறுக்கினார்கள். அந்த கற்கள் மற்றும் ஒலி பெருக்கியின் மொத்த மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும். இது போன்று பல இழப்புகள் பறையர்களால் அருந்ததியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில், அருந்ததியர் மக்கள் மீதும் பறையர் மக்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், இந்த நிகழ்வு நடந்த பொழுது இல்லாத, அருந்ததிய சமூக பட்டதாரி ஒருவர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை நடத்த, அருந்ததியர் மக்கள், குறிப்பாக கருப்பையா அவர்கள் வளர்த்த ஆடுகளையும், சில மாடுகளையும் விற்றுள்ளார்கள். இதனால், இவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

5.5. திருமதி. பாப்பாத்தி அவர்களின் அனுபவம்

பாப்பாத்தி அவர்கள், வயது 46, அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர். இவருடைய கணவர் திரு. பெரிய கணேசன், ஒரு தினக்கூலி. இவருக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர்.

ஒரு நாள், அந்த நாய், பறையர் மக்கள் வழிபடும் ராஜகாளியம்மன் கோவிலை சுற்றியுள்ள காலி
நிலத்துக்கு உள்ளே சென்று விட்டது. இதை பார்த்த ராஜதுரை என்ற பறையர் தன் அரிவாளால் அந்த நாயை தாக்கி உள்ளார். அதனால், அந்த நாயின் காலில் அடி பட்டு உள்ளது. அத்துடன் நிற்காமல், தன் அரிவாளை எடுத்துக் கொண்டு பாப்பாத்தி அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளார். எல்லோரும் வேலைக்கு சென்றிருந்ததினால், வீட்டில் யாரும் இல்லை.

மாலையில் பாப்பாத்தி அவர்கள், வீட்டிற்கு திரும்புகையில், சில பறையர் இளைஞர்களை கடந்து சென்று உள்ளார். அப்பொழுது, ராஜதுரை மற்றும் செல்லபாண்டி இருவரும், “உன் வீட்டு நாய், எங்கள் கோவில் சுவற்றுக்குள் நுழைந்து விட்டது. ஆகையால், உன் மகனை அனுப்பு, நாங்கள் அவனை வெட்ட வேண்டும். ஒருவேளை, அவன் சாவை தடுக்க வேண்டும் என்றால், உன் மகளை அனுப்பு ஒரு நாள் வைத்து இருந்து நாங்கள் அனுப்புகிறோம்,” என்று கேவலமான வார்த்தைகளால் வசை பேசினார்கள். இந்த வார்த்தையை கேட்ட அந்த அம்மா, அந்த இளைஞர்கள் காலில் விழுந்து அழுது, மன்னிப்பு கேட்டு உள்ளார். உடனே அருந்ததியர் மக்கள் கூடி பேசி அந்த பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்கள். மறுநாள் அந்த அம்மா வேலைக்கு செல்கையில், பறையர் இளைஞர்கள், “சக்கிலிச்சி,” என்று அழைத்து வம்புக்கு இழுத்து உள்ளார்கள். இதை பாப்பாத்தி அவர்கள், ஊர் தலைவர், குருசாமி அவர்களிடம் முறையிட்டு உள்ளார்.

5.6. 11 அடி நடை பாதையை கட்ட தடுத்த சம்பவம்

அந்த நடை பாதை, 11 அடி அகலம், 65 அடி நீளம். அது ஒரு பள்ளமான பகுதியில் அமைந்து இருந்தது. அருந்ததியர் மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். அந்தப் பாதையின், ஒரு பக்கம் தீண்டாமைச் சுவரும், மற்றொரு பக்கம், பறையர்களின் வீடுகளும் உள்ளது. மழை நாட்களில், அந்தப் பாதையில் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். அப்பொழுது, ஓரமாக செல்லலாம் என்று சென்று, அந்தத் தீண்டாமைச் சுவரை தொட்டு விட்டால், பறையர் மக்களிடம் வசை வாங்க நேரிடும். சில சமயம், இதனால் பறையர்கள் அடித்தும் இருக்கிறார்கள்.

இப்படி இருக்க, அந்தப் பாதையை உயர்த்தி, ஒரு சாலை அமைத்தால், பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும் என்று அருந்ததியர்கள் எண்ணினார்கள். பின்னர், அரசாங்கத்திடம் சாலை அமைக்க ஒப்புதலும் வாங்கி வந்தார்கள். அந்த முயற்சியைப் பறையர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இது அவர்களுடைய நிலம் என்றும், அருந்ததியர்கள் அதில் நடக்க மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறோம் என்றும், அதை அருந்ததியர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறினார்கள்.

5.7. திரு. கருத்தப்பாண்டி அவர்களின் அனுபவம்

இவர் கூலி வேலைக்காக கேரளா சென்று வருபவர். அதுபோல சென்ற வருட இறுதியில் ஒரு முறை வீட்டிற்கு வந்தபொழுது, இந்நிகழ்வு நடந்துள்ளது. இவருடைய வீட்டு நாய், பறையர் பகுதி நாயுடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்த கருத்தப்பண்டியும் மற்றும் அவரது நண்பர்களும், அவருடைய நாயை கூப்பிட்டுள்ளனர். இந்த சமயத்தில், அவ்வழியே சென்ற இரண்டு பறையர் பெண்கள் தங்களைத் தான் கிண்டல் செய்வதாக எண்ணி, அவர்கள் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கூறினார்கள். அந்த இளைஞர்கள், கருத்தபாண்டி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.

அதற்கு கருத்தப்பாண்டி, “நாங்கள் நாயை தான் அழைத்தோம், அவர்களை கிண்டல் செய்யல,” என்று சொன்னதற்கு, பறையர் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண்கள் புகார் கொடுக்க காவல் நிலையம் வரவில்லை. காவல் நிலையத்தில், வழக்கு பதியாமல், அருந்ததிய இளைஞர்களை அடித்து, பத்து நாள் காவல் நிலையம் வந்து, கையொப்பமமிட கூறியிருக்கின்றனர்.

5.8. திருமதி. முத்துலட்சுமி அவர்களின் அனுபவம்

திரு. காளிமுத்து மற்றும் முத்துலட்சுமி, வயது 27, தம்பதிக்கு ஒரே மகள், செல்வி. சந்திரலேகா, இரண்டரை வயது. இரண்டு வருடம் முன்பு (2016), ஒரு நாள், அவர்களின் மகள், ராஜகாளியம்மன் கோவில் சுற்று சுவருக்கு உள்ளே சென்று விட்டார். இதை பார்த்த முத்துலட்சுமி அவர்கள், உடனே உள்ளே சென்று அவசரம், அவசரமாக அந்த குழந்தையை வெளியே தூக்கி வந்து உள்ளார். சில பறையர் இளைஞர்கள் இதை பார்த்து விட்டார்கள். அவர்களில் காளிராஜ் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் முத்துலட்சுமியை, “ஏண்டி சக்கிலி தேவிடியா, நீங்கெல்லாம் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று தான் சுவரை எழுப்பி உள்ளோம், அதையும் மீறி உள்ளே செல்கிறாய் என்றால் உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்,” என்று வசைபாடினார்கள். உடனே முத்துலட்சுமி மன்னிப்பு கேட்டு உள்ளார். அதை பொருட்படுத்தாமல், காளிராஜ் என்பவர் தொடர்ந்து கேவலமாக திட்டியுள்ளார். உடனே, முத்துலட்சுமி சென்று தலைவர் குருசாமி அவர்களை சந்தித்து முறையிட்டு உள்ளார். சரி நாங்கள் இதற்கு முடிவு கட்டுகிறோம் என்று உறுதி அளித்துள்ளார், குருசாமி.
இந்த அனுபவங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, கீழ்க்கண்ட விசயங்களை நம்மால் உணர முடிகிறது.

a. சாதிய ஆதிக்கம் / தீண்டாமை மனோபாவம் பறையர்களின் குழந்தைகள் வரை பரவி உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

b. சந்தையூரில் உள்ள பெரும்பாலான அருந்ததியர் ஆண்கள் வேலை செய்ய கேரளா செல்கின்றனர். அதனால், பறையர் மக்களால் கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய ஒடுக்குமுறைகள், அருந்ததியர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

c. மேலும், அருந்ததியர் மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரம், இந்த சாதிய ஒடுக்குமுறைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

d. சாதியம், அருந்ததியர்கள் வீட்டு விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. விலங்குகள் மீதும் அருந்ததியர் முத்திரை குத்தப்படுகிறது.

e. பறையர்களின் சமூக மூலதனம் மற்றும் அரசியல் பொருளாதாரம், அருந்ததியர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்த பக்க பலமாக உள்ளது.

அருந்ததிய மக்கள் மலையில் குடியேறி போராட்டம்

6. பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதம், ஒரு திறனாய்வு

எங்கள் பார்வையில், பறையர்கள் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை இரண்டு பிரிவுகளாக பார்க்க முடியும். ஒன்று, கோப்புகள் சார்ந்த வாதம். இரண்டு, சமூகம் சார்ந்த வாதம். முக்கிய நபர்கள் / பொறுப்பில் உள்ளவர்கள் வைக்கப்படும் வாதங்களை மட்டுமே நாங்கள் இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் பார்த்த வரை, பறையர்கள் பல தருணங்களில், கோப்புகள் சார்ந்த வாதத்தையே முதன்மையாக வைக்கிறார்கள்.

6.1. ராஜகாளியம்மன் கோவில் சுவர் உள்ள இடம் 194 / 14 என்ற பட்டாவில் இருப்பதாகவும், அது பறையன் குடியிருப்பு என்று சொல்கிறார்கள்.

 • அருந்ததியர்கள் வாய்மொழி வரலாறை பார்க்கையில், சந்தையூர் – இந்திரா காலனியில் உள்ள அந்த நிலத்தை (i.e., ராஜகாளியம்மன் கோவில் சுற்றி இருந்த காலி நிலம்) பறையர் மற்றும் அருந்ததியர் மக்கள் பல ஆண்டுகளாக சேர்ந்தே பயன்படுத்தி வந்தார்கள்.
 • தோராயமாக, 2007 – 2008 ஆம் ஆண்டில், ஒரு முள்வேலியை பறையர்கள் அந்த காலி நிலத்தை சுற்றி போட்டார்கள். அருந்ததியர் மக்கள் செல்ல, இரண்டு அடி நடைபாதைக்கு இடம் விட்டு அந்த வேலியை அமைத்திருந்தார்கள்.
 • அது பறையன் குடியிருப்பு என்றால் ஏன் இரண்டு முறை அருந்ததியர்களிடம் ஒப்பந்தம் போட வேண்டும்?
 • அரசு ஆவணங்களை பார்த்தால், பட்டா எண். 194 என்பது புறம்போக்கு நிலம் என்றே சொல்கிறது. சென்னை உயர் நீதிமன்ற (மதுரை கிளையில்) வெளியிட்டு உள்ள தீர்ப்பில் அது புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர் என்று கூறியுள்ளது. மேலும், மதுரை மாவட்ட நிர்வாகத்தை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளது.

6.2. பேரையூரில் 2014ல் நடந்த சமாதான கூட்டம் மற்றும் சந்தையூரில் 2015ல் நடந்த சமாதான கூட்டம். இந்த கூட்டங்களில் அருந்ததியர் தலைவர்கள் சுவர் கட்ட சம்மதம் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.

 • இந்த அமர்வுகள், இரு சாதி மக்களும் சில உடன்பாடுகளை எட்ட நடத்தப்பட்ட கூட்டங்கள். பறையர் தலைவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள், இந்த ஒப்பந்தங்கள் சட்ட ரீதியாக செல்லாது.
 • உள்ளூர் அருந்ததியர் தலைவர்களின் தொடர் (சுமார் ஐந்து வருடம்) விண்ணப்பத்தின் / அழுத்தத்தின் விளைவாக, அப்போதைய ஆட்சியர், திரு. சகாயம் அவர்களின் உத்தரவுப்படி, 02/05/2012 அன்று முள்வேலி அகற்றப்பட்டது.
 • அதன் பின், 09/05/2012 அன்று நடைபெற்ற ஒரு சமாதான கூட்டத்தில் (வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட்சியர் முன்நிலையில்) நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்று, முள்வேலி ஆக்கிரமிப்பினை 02/05/2012 அன்று அகற்றப்பட்டதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை. இரண்டு, நத்தம் புறம்போக்கில் யாரும் வேலி அமைக்கக் கூடாது. மூன்று, இரு தரப்பினரும் புறம்போக்கில் உள்ள பாதையை சமமாக பயன்படுத்திக் கொள்ளவும். நான்கு, மேற்படி இந்நிலத்தில், சிமெண்ட் சாலை மற்றும் இதர பணிகள் தொடங்குவதற்கு முன்பாக வருவாய் துறையினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
 • இந்த 2014 மற்றும் 2015 அமர்வுகள் / ஒப்பந்தங்கள், வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் போடப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக உள்ளது. எந்த சூழ்நிலையில், சந்தையூர் அருந்ததியர் தலைவர்கள் இந்த கூட்டங்களை அணுகினார்கள்? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது.
 • இந்த இரண்டு அமர்வுகளின் ஒப்பந்தங்களை எடுத்து பார்த்தால், உடன்பாடுகளில் பெரிய வேற்றுமையில்லை. ஒரு சிறிய வேற்றுமை என்னவென்றால், 2014ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 10 அடி நடைபாதை கொடுக்க முன் வந்த பறையர்கள், 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 11 அடி கொடுக்க முன் வந்தார்கள்.
 • எங்கள் குழுவுக்கு, இதில் உள்ள உடன்பாடுகளை விட, ஒப்பந்தங்கள் போடப்பட்ட விதம், அதில் உள்ள கையெழுத்துகள் சார்ந்தே கேள்விகள் எழுந்தது. ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது, ஆதிக்க சாதித் தலைவர்கள் (பறையர்கள் உட்பட), அருந்ததியர் தலைவர்கள் மேல் அதிக நெருக்கடியை கொடுத்துள்ளார்கள். 2015ம் ஆண்டு, (ஜமின்தார்) விஜய வெங்கடேஷ் பாண்டியன் முன்நிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பறையர் தரப்பில் வைத்துள்ள அசல் ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்தின் எண்ணிக்கையும், அருந்ததியர் தரப்பில் வைத்துள்ள அசல் ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்தின் எண்ணிக்கையும் ஒரே போலில்லை.

6.3. சந்தையூர் போராட்டம் என்பது அருந்ததியரின் 3% உள் இடஓதுக்கீடை 6% ஆக்கும் முயற்சி.

 • அருந்ததியர் இயக்கங்கள் 6% உள் இடஓதுக்கீடை கேட்பது மக்கள் தொகை அடிப்படையில். இந்த விடயத்தில், தீண்டாமை அல்லது சாதிய ஒடுக்குமுறை அடிப்படையில் அவர்கள் உள் இடஓதுக்கீட்டை உயர்த்த கேட்கவில்லை (Alagarsamy, March 2018).
 • அதே போல, இந்த இரண்டு விசயத்தையும் முடிச்சு போடுவது, ஒரு பொருத்தமற்ற வாதமாகும். மேலும், இது சந்தையூர் பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியாகும் (Ibid.).

6.4. ராஜகாளியம்மன் கோவில் சுவர் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை. சிவில் பிரச்சினை என்றால் ஊடகம் திரும்பி பார்க்க மாட்டார்கள் ஆகையால் ஒரு பரபரப்பை (sensationalize) ஏற்படுத்த “தீண்டாமைச் சுவர்” என்று சொல்கிறார்கள்.

 • வடயம்பாடி தீண்டாமைச் சுவர் (கேரளா) பிரச்சினையில், CPI(M) M.L.A. ஒருவர் எந்த நிலைப்பாடை எடுத்தாரோ, அதே நிலைப்பாடை தான் பறையர் அமைப்புகளும் / கட்சிகளும் இங்கு எடுக்கிறார்கள்.
 • இது ஒரு சிவில் பிரச்சினை என்று சொல்லும் போது, தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறை இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
 • “பறையர் சமூகத்தின் மீது ஆதிக்கச் சாதிகளால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகள் மட்டுமே [முக்கிய] செய்தியாக வெளியிடப்பட்டு … ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அதே நேரம், … பறையர்கள், … அருந்ததியர்கள் மீது அரங்கேற்றி வரும் வன்கொடுமைகளை செய்தியாகக் கூட வெளியிட பறையர் சமூகத்தினர் பெருந்தடைக்கல்லாக உள்ளனர்” (ACCA, March, 2018).

6.5. தொண்டு நிறுவனங்கள் தரும் பணத்தை வைத்து தோழர். ஜக்கையன் போராட்டம் நடத்துகிறார்.

 • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் தொண்டு நிறுவனங்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரியும்.
 • சந்தையூர் பிரச்சினையில், ஒரு முக்கியமான நபர், தோழர். கதிர் அவர்கள். அவர் வைத்து உள்ள சாட்சியம், ஒரு தொண்டு நிறுவனம். இதே கேள்வி அவர் மேல் ஏன் வைக்கப்படுவது இல்லை.

6.6. ஆதிக்க சாதித் தமிழர்கள் தூண்டி விட்டு இந்த போராட்டம் நடக்கிறது – ஒருவர் மின்சாரம் கொடுக்கிறார், மற்றொருவர் சாப்பாடுக்கு பணம் கொடுத்தார்.

 • இது எப்படி உள்ளது என்றால், அருந்ததியர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள் சொந்தமாக சிந்திக்க / செயல்பட தெரியாதவர்கள் என்று சொல்வது போல் உள்ளது.
 • ஆதிக்கச் சாதிகளுடன் உறவே இருக்கக்கூடாது என்று இருந்தால், எதற்கு ஜமின்தார் அவர்களிடம் சென்று (2015ல்) பஞ்சாயத்து செய்ய கேட்க வேண்டும்?
 • அதே ஆவணத்தை காட்டி, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம், உடன்பாடு எட்டிய பிறகே, சுவர் கட்டினோம் என்று சொல்ல வேண்டும்.
 • 6.7. சந்தையூரில், ஆதிக்க சாதிகள் தலித் மக்கள் மீது பல தீண்டாமை கொடுமைகளை கடை பிடிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இரட்டை டம்ளர் முறை உள்ளது. இந்த நிலையை எதிர்த்து போராடுவதை விட்டு, உட்சாதி முரண்பாடுகளை கூறு தீட்ட கூடாது.
 • சந்தையூரில், பறையர்கள் செய்யும் சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமையை எப்பொழுது பேசலாம், எப்படி பேசலாம், எப்பொழுது பேசக்கூடாது என்று சொல்ல பறையர்களுக்கு உரிமை இல்லை.
 • ஒரு பொது வெளியில், பறையர்கள் செய்யும் கொடுமையை சொன்னால், தலித் ஒற்றுமை உடைந்து விடும் என்று சொல்வது, வேடிக்கையாக உள்ளது. இந்த அணுகுமுறை, தந்தைவழி மரபாக (paternalistic) உள்ளது.
 • பறையர்களின் சாதி ஆதிக்கத்தின் குறியீடு, அந்த தீண்டாமைச் சுவர். அந்த சுவரின் ஒரு செங்கலைக் கூட எடுக்க முடியாது என்று சவால் விடுவது, தான், தலித் ஒற்றுமைக்கான செயல்பாடா?
 • இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் இருக்கிறது என்றால் பறையர்கள் ஏன் போராட வில்லை?

6.8. இது உட்சாதி முரண்பாடு.

 • பட்டியல் இன மக்களில், தேவேந்திரரும், பறையரும், அருந்ததியரும் மற்றும் புதிரை வண்ணாரும் தனித்தனி சாதிகள்.
 • அருந்ததியருக்கு உட்சாதி என்று சொன்னால், அருந்ததியர், சக்கிலியர், பகடை, மாதிகா போன்றோர் தான். பறையரும், அருந்ததியரும் வெவ்வேறு சாதிகள்.
 • சாதியப் படிநிலையில், பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர்களுக்கு கீழ் தேவேந்திரரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதிக்கு கீழ் பறையரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதி + பறையர் சாதிக்கு கீழ் அருந்ததியரும்; பார்ப்பனர் + ஆதிக்கச் சாதித் தமிழர் + சாதித் தமிழர் + தேவேந்திரர் சாதி + பறையர் சாதி + அருந்ததியர் சாதிக்கு கீழ் புதிரை வண்ணாரும் இருக்கிறார்கள்.
 • உட்சாதி என்று சொல்லும் போது, பட்டியல் இன மக்கள், ஒரு சம நிலையில், வேறுபாடுகளுடன் இருப்பது போல் ஒரு பிம்பம் உருவாகிறது. அது உண்மை இல்லையே.

6.9. சந்தையூர் அருந்ததியர் மக்கள் சொல்வது பொய் / கூட – குறைத்து பேசுகிறார்கள்.

 • அருந்ததியர் மக்கள் பட்ட அனுபவத்தை சொன்னால், அது முழுவதும் பொய் என்று முத்திரையிடுவது, ஒரு கீழ்த்தரமான செயல். இதே தான் ஆதிக்க சாதிகள் PoA Act சார்ந்த விசயத்தில் செய்கிறார்கள் (தலித் மக்கள் போடும் அனைத்து PoA Act வழக்குகளும் பொய் என்கிறார்கள்).
 • அருந்ததியர் / பறையர் மக்கள் கூட – குறைத்து பேசுகிறார்கள், என்று சொல்பவர்கள், எந்த விசயத்தை கூட சொல்கிறார்கள், எந்த விசயத்தை குறைத்து சொல்கிறார்கள், என்று சொல்வது இல்லை. இப்படி ஒரு சொல்லை பயன்படுத்தி விட்டு, கோப்புகள் சார்ந்த விசயங்கள் மட்டும் பேசும் கூட்டமாக இவர்கள் இருக்கிறார்கள்.

6.10. சக்கிலியர் (அருந்ததியர்) மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் / ஊர் வேலை செய்கிறார்கள் – அவர்கள் எங்கள் (பறையர்) கோவில் உள்ளே வந்தால், எங்கள் கோவிலின் புனிதம் கேட்டு விடும்.

 • ஒரு காலத்தில், பறையர்களும், அருந்ததியர்களுடன் சேர்ந்து மாட்டு இறச்சி சாப்பிட்டு உள்ளார்கள்.
 • ஒரு கட்டத்தில், பார்ப்பனியத்தை அந்த காலனி பறையர்கள் ஏற்றுக் கொண்டார்கள் (மாட்டு இறச்சி சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள்). அதன் பிறகு, அருந்ததியர்கள் மேல் தீண்டாமையை (புனிதம் / அசுத்தம் போன்ற நிலைப்பாடு) கடை பிடிக்க தொடங்குகினார்கள்.
 • இங்கு பார்ப்பனியத்தை குற்றம் சொல்வதா? இல்லை, சந்தையூர் பறையர்களை குற்றம் சொல்வதா?

6.11. சந்தையூர் அருந்ததியர் மக்கள் அப்பாவிகள்.

 • அருந்ததியர்கள் தன்மானம், சுய மரியாதை, உரிமைக்காக போராடும் போது அவர்களை சிறுமைப் படுத்தும் விதமாக “அப்பாவிகள்,” என்று முத்திரை குத்துகிறார்கள்.
 • கிட்டத்தட்ட இரண்டு மாதமாக, தேன்மலையாண்டி கோவில் பக்கத்தில் உள்ள மலைப் பகுதியில் குடியேறி போராட்டம் நடத்துகிறார்கள்.
 • வீட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாதுகாப்பற்ற இடத்தில், கூடாரம் அமைத்து, குழந்தைகளை, முதியவர்களை வைத்துக்கொண்டு போராடுகிறார்கள் என்றால் அவர்களின் மன உறுதியை அது காட்டுகிறது. ஒரு திருமணமும், ஒருவரது இறப்பும் போராட்ட களத்தில் நடந்துள்ளது.
 • அருந்ததியர்கள் தங்களுடைய வரலாற்றில், ஒரு முக்கியமான போராட்டத்தை கட்டமைத்து, நடத்திக் கொண்டிருக்கும் அந்த மக்களை “உங்களுக்கு ஒன்றும் தெரியாது,” என்று சொல்வது ஒரு கீழ்த்தரமான வாதம்.

6.12. ஒரு கட்சி (ஆதித்தமிழர் கட்சி) மக்களை (அருந்ததியர்களை) கடத்திச் சென்று மலையில் வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள்.

 • மலையில் போராடிக் கொண்டு இருக்கும் அருந்ததியர் மக்களை சுலபமாக யார் வேண்டுமானாலும் சந்தித்து விடலாம், பேச முடியும்.
 • அவர்களுக்கு யாரும் வாய் பூட்டு போட வில்லை மற்றும் நடிக்க கற்றுக் கொடுக்கவில்லை. சிறு பிள்ளை முதல் வயதான பாட்டி வரை தைரியமாக கேமரா முன்னாள் பேசுகிறார்கள்.
 • பறையர்கள் இந்திரா காலனியிலேயே இருந்தாலும், அவர்களிடம் பேச நுழைவுச்சீட்டு (i.e., தோழர். கதிர், தோழர். இன்குலாப், தோழர். கனியமுதன் அவர்கள் அனுப்பினார்கள்) வாங்கி வர வேண்டியுள்ளது.
 • திருமதி. சின்னத்தாய் என்னும் அருந்ததியர் ஒருவர் சொன்னார்கள், அங்கு (இந்திரா காலனியில்) போராடி ஏதாவது சண்டை அருந்ததியர்களுக்கும், பறையர்களுக்கும் வந்து விட்டால், மறுபடியும் எங்கள் மீது வழக்குகள் போடுவார்கள். வழக்கு நடத்த எங்களிடம் காசு எங்கு உள்ளது. ஏற்கனவே, எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு ஆடுகளை விற்று தான் வழக்கறிஞருக்கு கட்டணம் கட்டுகிறார்கள்.

6.13. தமிழக அரசு, ஒரு வேளை, ராஜகாளியம்மன் கோவில் சுவர் இருக்கும் இடம் புறம்போக்கு நிலம் என்று அதை இடிக்க முயன்றால், நாங்கள் விட மாட்டோம். அந்த ஊரில் உள்ள மற்ற புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவில் சுவர்களை இடித்த பின்பே, இந்த சுவரை அரசு தொட முடியும்.

 • இந்த வாதம், “அவர்களை நிறுத்தச் சொல், நாங்கள் நிறுத்துகிறோம்,” என்பது போல் உள்ளது. அப்படி என்றால், உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வேறுபாடு.
 • ஆதிக்க சாதித் தமிழர்கள் + சாதித் தமிழர்கள், பார்ப்பனர் செய்யும் தீண்டாமையை (மற்றும் சாதிய ஒடுக்குமுறையை) மட்டும் பேசுவார்கள், சுய சாதி விமர்சனம் பெரும்பாலும் செய்ய மாட்டார்கள் / மறுப்பார்கள். கேட்டால், அது R.S.S. / தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டு தமிழர்களை பிரிக்க பார்க்கிறார்கள், என்பார்கள்.
 • அதே சொல்லாடலை, இங்கு (பெரும்பாலான) பறையர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள், அருந்ததியர் மக்கள் / அமைப்புகள் / கட்சிகள் மீது வைக்கிறார்கள். இங்கு கேட்டால், அது ஆதிக்க சாதி தமிழர்கள் / தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டு தலித் மக்களை பிரிக்க பார்க்கிறார்கள், என்கிறார்கள்.

6.14. சந்தையூர் – இந்திரா காலனியில், எண்ணிக்கையில் அருந்ததியர் மக்கள் அதிகம் (சுமார் 80 குடும்பங்கள்), பறையர் மக்கள் குறைவு (சுமார் 35 குடும்பங்கள்). ஆகையால், அருந்ததியர்கள் தான் பறையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

 • இந்த நாட்டில், எண்ணிக்கையில் குறைவானவர்கள் பார்ப்பனர்கள், ஆகையால், அவர்கள் பிற சாதிகள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கூற முடியுமா?
 • சமூக மூலதனம், அரசியல் பொருளாதாரம் யாரிடம் அதிகமாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அதைப் பொறுத்துத்தான் ஆதிக்கம் வெளிப்படும்.

6.15. சந்தையூர் பிரச்சினையில், ஒரு அரசியல் என்னவென்றால், இது ஆதித்தமிழர் கட்சிக்கும், தமிழ்ப்புலிகள் கட்சிக்கும் நடக்கும் யுத்தம் – அருந்ததியர் மக்களை யார் கைப்பற்றுவது.

 • சந்தையூர் பிரச்சினைக்கு யார் காரணம் என்று பறையர் அமைப்புகள் / கட்சிகளிடம் கேட்டால், ஒரு நீளமாக பட்டியில் வைத்துள்ளார்கள். அதில் பரவலாக அனைவரும் வருகிறார்கள், தங்களை தவிர.
 • மார்ச் 22, 2018 அன்று, தமிழ்ப்புலிகள் கட்சி தோழர்கள், அந்த தீண்டாமைச் சுவரை சேதப்படுத்துகிறார்கள் (ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது என்று சொன்ன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்களின் ஆதிக்க பேச்சை ஏளனம் செய்ய). சந்தையூர் பறையர் மக்கள் புகாரை ஆதித்தமிழர் கட்சி தோழர்கள் மீது கொடுத்தார்கள்.
 • சந்தையூர் பறையர்களை வழி நடத்தும் தோழர். கதிர் அவர்களுக்கு நன்கு தெரியும், யார் உடைத்தது என்று. பிறகு ஏன், தோழர். ஜக்கையன் மற்றும் தோழர். பணிச்சாமி மீது வழக்கு? அது தான் கதிர் அவர்களின் 21 வருட கள அனுபவம் கற்றுக் கொடுத்த, ஒரு சாணக்கிய நகர்வு!
 • நான்கு – ஐந்து நாட்களுக்கு பிறகு, நெல்லை நீதிமன்றத்தில் தமிழ்ப்புலிகள் தோழர்கள் சரணடைந்தனர்.
 • ஆதித்தமிழர் கட்சிக்கும், தமிழ்ப்புலிகள் கட்சிக்கும், இந்த சந்தையூர் பிரச்சினையில் வெவ்வேறு அணுகுமுறை இருக்கலாம். ஆனால், அது தீண்டாமைச் சுவர் தான் என்பதிலும், அதை இடித்தே தீர வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

6.16. பறையர் கோவிலுக்கு ஒரு அருந்ததியர் பூசாரியாக இருக்கட்டும், அருந்ததியர் கோவிலுக்கு ஒரு பறையர் பூசாரியாக இருக்கட்டும்.

 • அங்கு அருந்ததியர் மக்கள் நடத்துவது கோவில் நுழையும் போராட்டம் இல்லை.
 • கோவிலை சுற்றி உள்ள காலி நிலத்தை (நத்தம் புறம்போக்கு நிலம்), பறையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அருந்ததியர்கள் மேல் தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறையை கையாள்கிறார்கள். அதனை எதிர்த்து தான், அருந்ததியர்கள் போராடுகிறார்கள்.

7. நாங்கள் கற்றுக்கொண்டவை

a. தலித் அமைப்புகளின் / கட்சிகளின் கருத்தியல் சார்ந்த புரிதலும், கள எதார்த்த நிலவரமும், வெவ்வேறாக உள்ளது. மக்களை அரசியல்படுத்த தவறி இருப்பது, இதன் மூலம் தெரிகிறது.

b. நிலைமை இப்படி இருக்க, சந்தையூரை, களஆய்வு செய்தவர்கள் முன் கண்டிப்பாக இரண்டு கேள்விகள் எழுந்து இருக்கும். ஒன்று, கள எதார்த்த நிலையை பதிவு செய்வதா? இரண்டு, பரந்த தலித் ஒற்றுமைக்கான வேலை திட்டங்களை முன்னெடுப்பதா?

c. பெரும்பாலான பறையர் அமைப்புகள் / களஆய்வு செய்தவர்கள் / கட்சிகள், முதல் கேள்விக்கு முக்கியத்துவம் தந்தால், இரண்டாவது கேள்வி பாதிக்கப்படும் என்று பதிவு செய்கிறார்கள். முதல் கேள்விக்கு விடை தேடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றும், கொம்பு சீவி விடுபவர்கள் என்றும், ஆதிக்கச் சாதிகளால் ஆட்டு வைக்கும் பொம்மைகள் என்றும் பெயரிடுகிறார்கள். முதல் கேள்வியை தவிர்த்து விட்டு, இரண்டாவது கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்த பணி என்று சுய சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறார்கள்.

d. எங்கள் குழு இந்த தர்க்கத்தை மூன்று காரணத்திற்காக ஏற்க மறுக்கிறோம். ஒன்று, முதல் கேள்வியின் தேடலில், இரண்டாவது கேள்வியின் பதில் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டு, தலித் ஒற்றுமைக்கான சுமையை அருந்ததியர்கள் மேல் சுமத்துவது தவறு. மூன்று, பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீது மறுபடியும் குற்றம் சுமத்துவது போல் உள்ளது.

e. தமிழர் ஒற்றுமையைப் / விடுதலையைப் பற்றி பேச / தலைமையேற்க ஒடுக்கப்பட்ட மக்களே / தலைவர்களே தகுதியானவர்கள். அதே போல, தலித் ஒற்றுமையை / விடுதலையைப் பற்றி பேச / தலைமையேற்க அருந்ததியர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

f. பறையர் அறிவுசார் மக்கள், நாங்கள் அனைவரும் (தலித் மக்கள்) ஒரே குடும்பம் என்று சொல்லும் போது, உள்ளே இருக்கும் வெவ்வேறு சாதிகளுக்கு இடையில் இருக்கும் முரண்பாடுகளும் / ஏற்றத்தாழ்வுகளும் / சாதிய ஆதிக்கமும் பூசி மறைப்பது தெரிகிறது. இந்த சொல்லாடல், பறையர் ஆதிக்கத்தை தொடர உதவியாக இருக்கும். களத்தில், நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று இரு சமூகமும் தெளிவாக சொல்கிறார்கள்.

g. கல்வி, சமூக மூலதனம் (social capital), அரசியல் பொருளாதாரம் (political economy) போன்ற கூறுகள், பறையர் சாதி எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு உள்ளது. பறையர் மக்களின் சாதிய எழுச்சி, ஒரு பக்கம், ஆதிக்கச் சாதி தமிழர்களின் ஆதிக்கத்தை குறைத்துள்ளது என்றாலும், மறுபக்கம், அதே பறையர் சாதி எழுச்சி, அருந்ததியர் மக்கள் மீதான சாதிய ஆதிக்கமாக மாறி உள்ளது.

h. அம்பேத்கரிய / பெரியாரிய பொதுவுடைமை தத்துவங்களை கடந்து, சந்தையூர் பிரச்சினையில் சாதி வென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனியத்தை / நில ஆதிக்கச் சாதித் தமிழர்களின் பண்புகளை உள்வாங்கிய சந்தையூர் பறையர் மக்களை பாதுகாக்க பெரும்பாலான பறையர்கள் / பறையர் அமைப்புகள் / கட்சிகள் அணிதிரண்டுள்ளனர்.

i. சாதி எழுச்சி அரசியலை, ஆண்ட / வீர பரம்பரை அரசியலை முன்னெடுப்பதால் வந்த விளைவின் ஒரு வெளிப்பாடே சந்தையூர் தீண்டாமைச் சுவர். சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுக்க தவறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

j. தொடர் போராட்டங்கள், சந்தையூர் அருந்ததியர்களை அரசியல்படுத்தி உள்ளது. “தலித் எழுச்சி” என்னும் பறையர் சாதி எழுச்சி அரசியலில் சிக்கிக்கொள்ளாமல், சாதி ஒழிப்பு அரசியல் தான் தங்கள் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று உணர்ந்துள்ளார்கள். சாதி ஒழிப்பு அரசியலுக்கு ஒரு வழிமுறையாக உள்ள மதமாற்றத்தை தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள், அதுவே பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். புத்தமா? இஸ்லாமா? கிருத்துவமா? என்ற தேடலில், இஸ்லாம் என்ற முடிவு நல்ல முடிவாக தெரிகிறது. புத்த மதத்தை தழுவி பறையர் ஆளுகைக்குள் மீண்டும் சிக்க மறுத்திருப்பது இந்த சூழலில் முக்கியமான அரசியல் நிலைப்பாடாகும்.

Reference list

ACCA, March 2018, சந்தையூர் தீண்டாமைச் சுவர் – ஆய்வின் அறிக்கை, Keetru, <https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34767-2018-03-18-02-56-14&gt;

Alagarsamy, P March 24, 2018, Facebook Post, accessed on March 28, 2018, <https://m.facebook.com/story.php?story_fbid=1325401300937227&id=100004021101835&gt;

Ameerudheen, TA January 31, 2018, Police action against Dalit villagers protesting a ‘caste wall’ bares old fissures in Kerala, Scroll, accessed on March 10, 2018, <https://scroll.in/article/866524/police-action-against-dalit-villagers-agitating-against-a-caste-wall-bares-old-fissures-in-kerala&gt;

Counter Currents, January 25, 2018, A Caste Wall In ‘Progressive’ Kerala, accessed on February 22, 2018, <https://countercurrents.org/2018/01/25/caste-wall-progressive-kerala/&gt;

Imranullah, M March 21, 2012, Uthapuram wall is no Berlin wall, The Hindu, Madurai, accessed on March 1, 2018, <http://www.thehindu.com/news/cities/Madurai/uthapuram-wall-is-no-berlin-wall/article3024288.ece&gt;

Jayarajan, S February 5, 2018, Dalits protesting against Kerala ‘caste’ wall to move protest to Secretariat, The News Minute, accessed on March 3, 2018, <https://www.thenewsminute.com/article/dalits-protesting-against-kerala-caste-wall-move-protest-secretariat-75949&gt;

Mathew, P October 21, 2015, Uthapuram ‘wall’ demolished years ago, still no peace between Dalits and caste Hindus here, The News Minute, accessed on March 3, 2018, <https://www.thenewsminute.com/article/uthapuram-%E2%80%98wall%E2%80%99-demolished-years-ago-still-no-peace-between-dalits-and-caste-hindus-here&gt;
Natarajan, S September 14, 2010, Indian Dalits find no refuge from caste in Christianity, BBC News – South Asia, accessed on March 5, 2018 <http://www.bbc.com/news/world-south-asia-11229170&gt;

The Hindu, August 10, 2011, Demolish ‘untouchability wall of Salem’ immediately: Front, accessed on March 5, 2018, <http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/demolish-untouchability-wall-of-salem-immediately-front/article2341701.ece&gt;

பதிவு 6-04-2018 அன்று வாசிப்புக்காக மேம்படுத்தப்பட்டது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.