ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஈழ விவகாரத்தில் சீமான் மக்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள் அம்பலமாகத் தொடங்குகின்றன, ஆனால் நாம் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம் இதில் இருக்கிறது. அது சீமானின் பொய்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்ததில் வைகோ நெடுமாறன் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்பதுதான். ஏனெனில் உணர்வுத்தளத்தில் நின்று மக்களிடம் நிறைய பொய் சொன்னவர்கள் இந்த இரண்டு பேரும். அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்த மேடையில் நின்றுகொண்டுதான் சீமான் ஈழ வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். ஆனால் இன்று சீமான் மட்டும்தான் பொய்யர் போலவும் இந்த இரண்டு பேரும் உத்தமர்கள் போலவும் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

வைகோவைக் கூட பொய்யர் என்பதை ஒரு பகுதி மக்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் நெடுமாறன் பொய்யர் என்றால் துணுக்குறுவார்கள். ஏனெனில் பொய் என்பதன் வரையறை, இங்கு எல்லாரும் நினைப்பதைப் போல “உண்மைக்கு மாறான ஒன்றை உரைப்பது” என்பதாக அறியப்பட்டிருக்கிறது. அல்ல. அரசியலில் பொய்யின் பரிமாணம் என்பது வேறு. அது உண்மையைச் சொல்லாமல் இருப்பது, மக்களிடம் பரவும் பொய்யை அற்ப அரசியல் காரணங்களின் அடிப்படையில் அனுமதிப்பது, கள்ள மவுனம் சாதிப்பது என்பதாக அதன் அலகுகள் விரிவடைகின்றன.

மேலும் ஒரு பொய்யின் வழியாக ஒருவர் அடைய சாத்தியம் உள்ள பொருளியல் ஆதாயம் ஒரு கணக்கீடாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் தவறு. அந்த அடிப்படையில்தான் வைகோவும் நெடுமாறனும் புனிதர்களாகக் கட்டமைக்கப்படுகிறார்கள்.

நேரடியான பொய்களுக்கு உதாரணம், சீமானுக்கு பிரபாகரன் துப்பாக்கி சுட பயிற்சியளித்தது, இந்தியா ராணுவத்திடமே இல்லாத நவீன துப்பாக்கிகளை பிரபாகரன் சீமானுக்குக் காண்பித்தது, ஆமைக்கறி உணவளித்தது போன்ற சீமானின் சில்லரைப் பொய்கள். நாம் தமிழர் தம்பிகளைத் தவிர மீதி இருக்கும் தமிழக சிறுவர்கள் அனைவரும் இதைக் கேட்கையில் சிரித்துவிட்டுக் கடந்துவிடுவார்கள். இதெல்லாம் சீக்கிரம் வெளுக்கும் என்று சீமான் சொல்லும்போதே எல்லாருக்கும் தெரியும். இப்போது வெளுக்கிறது. அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

கொஞ்சம் ஆழமான பொய்களுக்கு உதாரணத்தைப் பார்ப்போம். ஈழ மக்கள் மீது அன்பு கொண்டிருந்த தமிழ் மக்களை உணர்வு ரீதியாகச் சுரண்டியதில் வைகோவுக்குப் பெரும் பங்கு உண்டு. கொஞ்சம் உற்று கவனித்தாலொழிய வைகோவின் பொய் தெரியாது. இன்று ஈழத்தில் விடுதலைப் புலிகள் முழுக்கவும் ஒழிக்கப்பட்டிருக்கும் சூழலில், பிரபாகரன் உள்ளிட்ட அதன் தலைமைகள் யுத்த நெறிகளுக்கு மாறாக குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கும் சூழலில் இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயலும் வைகோவின் செயலில் மறைந்திருப்பது இந்த சீமான் ரக பொய்யின் பண்பட்ட வடிவம்தான். (இப்போது போய் பாருங்கள். சங்கே முழங்கு யூடியூப் வீடியோவில் அவர் பிரபாகரன் பற்றி சொன்னது மட்டும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.)

நான் பிரபாகரனுடன் ஒரு மாதம் தங்கி போர்ப் பயிற்சி எடுத்தவன் என்று வைகோ அன்று சொன்னதன் நீட்சிதான் இன்று சீமான் சொல்லும் பொய்கள். அப்போது யாரும் வைகோவைப் பார்த்து சிரிக்கவில்லை. ஏனெனில் அப்போது வைகோவின் அரசியல் சமரசங்கள், வெற்று வாய் ஜாலங்கள், புரட்டு முஸ்தீபுகள் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு அம்பலப்பட்டிருக்கவில்லை. ஆனால் மநகூ காலத்தில் அவர் முழுக்கவும் வெளிப்படுத்திக்கொண்டார். அதனால்தான் “தம்பி… செயல்தலைவர் ஸ்டாலின்…” என்ற அவரது இப்போதைய கர்ஜனை வெறும் ஊளையாக மக்கள் பரப்பை எட்டுகிறது.

மிகவும் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில், பிரபாகரன் இறந்ததை வைகோதான் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்திருக்கவேண்டும். ஒரு போராளியின் மரணமாக அதை கவுரவப்படுத்தியிருக்கவேண்டும்.

வைகோவால் அதை ஏன் செய்யமுடியவில்லை, அதைத் தடுப்பது எது என்கிற கேள்விக்குள் நுழையும்போது அது நம்மை நெடுமாறனின் பொய்யில் கொண்டுபோய் நிறுத்தும். அது என்ன?

புலிகள் விவகாரத்தில் நெடுமாறனின் அரசியல் நிலைப்பாடு என்ன? புலிகள் இந்திய அரசுடன் இணக்கமாகப் போகவேண்டும். இல்லையெனில் சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இலங்கை புலிகளை அழித்துவிடும். அது இந்திய இறையாண்மைக்கும் ஆபத்தாக முடியும். மேலும் ஈழ விடுதலை என்பது புலிகள் இந்தியாவுடன் கொண்டிருக்கும் நல்லுறவின் அடிப்படையிலேயே சாத்தியம் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. போர் உச்சத்தில் இருந்த அதன் இறுதி காலத்தில் கூட நெடுமாறன் எழுதிய தினமணி கட்டுரை இந்த சாராம்சத்தையை பேசியது.

ஆனால் எதார்த்தம் என்ன? இந்தப் போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான் என்றார் ராஜபக்சே. அதை இந்தியா இதுவரைக் காத்திரமாக மறுக்கவில்லை. எங்கெல்லாம் தனது போர்க்குற்றங்களுக்காக சர்வதேசப் பரப்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டதோ, தனிமைப்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அந்நாட்டை முழு மூச்சில் காப்பாற்றும் வேலையைச் செய்து அந்த உண்மையை இந்தியாவும் உறுதி செய்தது. இப்போதும் செய்கிறது.

இந்த அரசியல் உண்மையை நெடுமாறன் கும்பல் எங்ஙனம் தமிழர்களிடம் இருந்து மறைத்தது. அன்றைய கருணாநிதியின் பதவி வெறி பிடித்த ஊழல் அரசை, “ஈழ துரோக அரசாக” மக்கள் முன் கட்டியமைத்தது. அதனால் விளைந்த மக்கள் வெறுப்பை தனது அரசியல் வாழ்வு முழுக்கவும் ஈழத்திற்கு எதிர்நிலை எடுத்திருந்த ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியாக மாற உதவி செய்தது. மேலும் மன்மோகன் சிங்கைச் சுற்றி இருக்கும் மலையாள அதிகாரிகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளே இத்தகைய சீரழிவுக்குக் காரணம், அவர்கள்தான் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த திசையில் வழிநடத்துகிறார்கள் என்று இந்த விவகாரத்தை மிகவும் எளிமைப்படுத்தி அந்த இன அழிப்பின் பின்னிருந்த சர்வதேச சக்திகளின் பங்களிப்பு மக்கள் மத்தியில் விவாதமாக மாறாமல் பார்த்துக்கொண்டது.

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது. ஈழ வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில்தான் இப்போது எவ்வளவு மலைப்பாக இருக்கிறது. எப்படியெல்லாம் மனம் கசிகிறது. ஆனால் இவர்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் உலவுகிறார்கள். கிஞ்சித்தும் கூச்சமின்றி ம. நடராசனைக் கூட விடுதலைப் போராளியாக விதந்தோதுகிறார்கள்.

இந்த விவகாரத்தில், இறுதியாக வியாபாரத்துக்கு வந்த சீமான் குளத்து ஆமை என்றால் வைகோவும் நெடுமாறனும் கடல் ஆமைகள் அவ்வளவே!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.