மாதவராஜ்

அந்த இளைஞன் ஹெல்மெட் அணியவில்லை, மூன்று பேர் ஒரே வண்டியில் வந்திருக்கிறார்கள், என்பதெல்லாம் சட்டங்களுக்குப் புறம்பானது என ஒப்புக் கொள்வோம். மொபைலில் ரெகார்ட் செய்ததை அந்த இளைஞனின் அம்மா தட்டி விட்டார்கள் என்று சொல்லப்படுவதையும் கூட நம்புவோம். அதற்காக?
வண்டி நம்பரை குறித்து வைத்து, உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாதா?
பொதுவெளியில் அந்த இளைஞனை கம்பத்தில் பிடித்து வைத்துக்கொண்டு, காவல்துறையினர் அடிக்கிற காட்சியும், அந்த இளைஞனின் தாயும் தங்கையும் கதறுகிற காட்சியும் கடும் கோபத்தை நமக்கு அந்த காவல்துறையினர் மீது ஏற்படுத்துகிறது. தாங்க முடியாமல் உள்ளுக்குள் ஒரு வேகம் எழுந்து அந்த போலிஸ்காரர்களை பிடித்து வைத்து நாலு சாத்து சாத்த வேண்டும் எனத் தோன்றுகிறது. இது சாதாரண மனிதனாக, ஒரு பிரஜையாக எழும் கோபமே.
ஏன் இந்த கோபம் நமக்கு இயல்பாக வருகிறது? அன்பும், இரக்கமும், மனிதாபிமானமும் கொண்டதாக காவல்துறை இல்லை. எதிர்ப்படும் மக்களையெல்லாம் போலீஸ்காரர்கள் கிரிமினல்களாக பார்ப்பதையும், மரியாதைக்குறைவாக நடத்துவதையும் காலமெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களிடம் உருவாகி இருக்கிற எதிர்ப்புணர்வு.
போலீஸ்காரர்கள் உங்களிடம் எவ்வளவு கேவலமாகவும் பேசலாம், சட்டென்று கைநீட்டி அடிக்கலாம், அரசு அதுகுறித்து கண்டுகொள்ளவேச் செய்யாது. ஆனால் ஒரு போலீஸ்காரனை நீங்கள் எதிர்த்தோ, சட்டையைப் பிடித்து விட்டாலோ அவ்வளவுதான், மொத்த காவல்துறையும், அரசும் சேர்ந்து உங்களைப் போட்டுத் தள்ள தயாராகும்.
இந்த நிலைமைக்கு அந்த போலீஸ்காரனையும், அரசையும் மட்டும் குறை சொல்லி விட முடியாது. இவை யாவுமே அதிகார அமைப்பின் ஏற்பாடு. மொத்த சமூகத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டவர்களின் கருவிதான் இந்த அரசு. அவர்களுக்கான காவல்தான் காவல்துறை.
அந்த காவல்துறையில் ஒருவனை எதிர்த்தாலும், தனது அதிகாரத்தை கேள்வி கேட்பதாய் சதைகளாட பீடங்களில் இருப்பவர்கள் துடிப்பார்கள். தனக்கு எந்த மூலையிலிருந்தும், ஒரு அணுவிலிருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பக் கூடாது, உடனே அதனை இரக்கமற்று அழித்தொழி என ஆணையிடும். அதுதான் நடு ரோட்டில் தாய் சகோதரி முன்னிலையில் ஒரு இளைஞனை, இந்த தேசத்தின் பிரஜையை அடிக்கவும், அவமானப்படுத்தவும் செய்கிறது.
போலீஸுக்கே இப்படியொரு அராஜகம் செய்வதற்கான சுதந்திரம் இருக்கிற போது, ஒரு இராணுவத்திற்கு எவ்வளவு இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தனிப்பட்ட முறையில் வீரர்கள் குடும்பத்தை விட்டு எங்கோ நாட்டுக்காக இருக்கிறார்கள் என்ற பிம்பங்களை, செண்டிமெண்ட்களை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு, ஒரு இராணுவத்தின் குணம் என்ன என்பதை நாம் அறியத் தலைப்படுகிறோமா? எல்லையில் மட்டுமா இராணுவம் இருக்கிறது?
இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்கு இடையே பல ஆண்டுகளாய் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் மாநிலங்களில், மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. சகலமும் உன்னிப்பாக, சந்தேகமாக கண்காணிக்கப்படும் நிலத்தில் சிரிப்பும், சந்தோஷமும், கொண்டாட்டங்களும் எங்கே இருக்கும்.
தி.நகரில் ஒரு இளைஞனை போலீஸ்காரன் அடித்தால் செய்தியாகிறது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் காஷ்மீரில், மணிப்பூரில் ஒரு இராணுவ வீரன் பொதுமக்களிடம் செய்யும் வம்புகளும், வரம்பு மீறல்களும் யாருக்குத் தெரியப் போகிறது. சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பவே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்களது மனைவிகள், இராணுவக் கூடாரத்திற்குள் கதறித் தொலைத்தது யாருக்கு கேட்கும். தி..நகரில். குரோம்பேட்டையில், காஞ்சிபுரத்தில் என நாம் பார்க்கும் இந்த காட்சிகள் மிகச் சாதாரணமானவை.
அந்த நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு இராணுவத்தின் மீது என்ன உணர்வு இயல்பாக இருக்கும்? எவ்வளவு வன்மமும், பகையும், கோபமும் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரியும். அவ்வப்போது அவர்கள் வெடிக்கத்தான் செய்வார்கள்.
உடனே அவர்கள் தீவிரவாதிகள், வன்முறையளர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என இந்திய அரசும், ஊடகங்களும் முத்திரை குத்துகின்றன. நாம் அவர்கள் மூலம்தான் காட்சிகளைப் பார்க்க முடிந்தால் உண்மைகளை பார்க்கவே முடியாது.
நேற்று ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி அர்னாபின் ரிபப்ளிக் டிவியில் இராணுவத்தை நோக்கி காஷ்மீரில் மக்கள் கல்லெறியும் காட்சிகளைக் காட்டப்படுகிறது. அதற்கு கீழே #PakPeltIndia என எழுத்துகள் ஓடுகின்றன. எறிந்தவர்கள் பாகிஸ்தான்காரர்களா? தீவீரவாதிகளா? என்ன அடையாளம் இது? எப்படி கட்டி எழுப்பப்படுகிறது?
கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி, “காஷ்மீரில் அப்பாவிகள் தாக்கப்படுகிறார்கள்” என ட்விட் செய்திருக்கிறார். உடனே அவருக்கு எதிராக இந்தியாவே பொங்கி எழச் செய்கிறார்கள்.
“தீவிரவாதிகளை எப்படி அப்பாவிகள் எனச் சொல்லலாம்?” என மதிகெட்ட மக்களும் கொந்தளிக்கிறார்கள். இப்படியாக போராடுகிறவர்களை பாகிஸ்தான்காரர்களாக இந்திய அரசும், ஊடகங்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாவிகள் என்றால் யார்?
காவல்துறைக்கு கட்டுப்பட்டு, இராணுவத்துக்குக் கட்டுப்பட்டு, அவர்களின் அராஜகங்களுக்குப் பணிந்து, எந்த கேள்வியும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் அடங்கி ஓடுங்கி வாழ்பவர்கள்.
அனைத்துத் தரப்பு மக்களையும் இப்படி அப்பாவிகளாக்கத் துடிக்கிறது அரசு. அது அதன் இயல்பு.
இந்த அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் தீவீரவாதிகளாவார்கள். அது மக்களின் இயல்பு.
மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..